.

செவ்வாய், நவம்பர் 11, 2014

கலையுலகில் கமலியல்! (Kamalism in Tamil Cinema!) - கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் முழுமையான உரையுடன் (with full script)!


Kamalism in Tamil Cinema! - Kamalhaasan Diamond Jubilee Birthday Documentary!

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் கலைமணம் கமழ்த்தி வரும் உயர்திரு.கமல்ஹாசன் அவர்கள் வைர விழாப் பிறந்தநாள் காணுவதை முன்னிட்டு, நான் துணையாசிரியராகப் பணியாற்றும் யுவா தொலைக்காட்சியின் நிறுவனரும் என் ஆருயிர் நண்பருமான பிரகாஷ் அவர்கள் எங்கள் தொலைக்காட்சி சார்பாக விழியம் ஒன்றை வெளியிட்டு அந்த மாபெரும் கலைஞரைச் சிறப்பிக்க விரும்பினார். அதற்கு நான் எழுதிக் கொடுத்த படைப்பு இதோ உங்கள் கண்முன்! 

கமல்ஹாசன்!
தமிழ்த் திரையுலகம் எனும் அற்புத விளக்கைத்
தன் பொற்கரங்களால் உயிர்ப்பிக்கப் பிறந்த அலாவுதீன்!
தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்திய புகழ் ஏணி!
உலகநாயகன் எனத் தமிழ் மக்கள் கொண்டாடும் கலைஞானி!

இந்திய சினிமாவின் வயதில் பாதி
இவருடைய அனுபவம்!
பேச்சு மூச்சு இரத்தம் சதை என
ஒவ்வோர் அணுவிலும் கலைத்தாயைக் கருச்சுமக்கும்
இந்தத் தமிழ்க்குழந்தையின் பயணம்
ஆறு வயதில் தொடங்கியது!

1960இல் ஆளவந்த அந்தக் குழந்தை நட்சத்திரம், தமிழ்த் திரைவானின் துருவ நட்சத்திரமாய் இன்று அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இதோ அவருடைய விசிறிகளின் ஒரு சிறு காணிக்கை!

திங்கள், நவம்பர் 03, 2014

மீண்டும் அகச் சிவப்புத் தமிழ்! | Aga Sivappu Thamizh is back!



Welcome!

ன்பார்ந்த நண்பர்களே! தமிழார்ந்த நெஞ்சங்களே! ‘அகச் சிவப்புத் தமிழ்’த் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம்!

நான் கற்பனை கூடச் செய்யவில்லை, மீண்டும் இந்த வலைப்பூவின் வழியே உங்களையெல்லாம் சந்திப்பேன் என்று. முதலில் எல்லோரும் என்னை மன்னியுங்கள், அறியாமல் இந்த வலைப்பூவை அழித்ததற்காக! தவறான ஒரு புரிதல் காரணமாக அப்படிச் செய்து விட்டேன்.

நடந்தது என்ன?

சொல்லி விடுகிறேன் அந்த மர்மத்தை.

அண்மையில், என் கூகுள் கணக்கு கொந்தப்பட்டது (hacked)!!

என் மேல் விழுந்த விருதுத் துளியே!’ பதிவின் கருத்துரைப் பகுதியில், இரண்டு நாட்களாக ‘அகச் சிவப்புத் தமி’ழை அணுக முடியவில்லை என்று பெருமதிப்பிற்குரிய நண்பர் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜு அவர்கள் கூறியதை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் (பார்க்காவிட்டால் பார்க்க: இங்கே). அதற்குக் காரணம் அந்தக் கொந்தத் தாக்குதல்தான். ஆம்! உள்ளே நுழைந்த முகம் தெரியாத அந்த ‘நலம் விரும்பி’ என் கூகுள் கணக்கு மொத்தத்தையும் முடக்கி விட்டுச் சென்று விட்டார். அல்லது, வழக்கத்துக்கு மாறான இடத்திலிருந்து (ஸ்பெயின்) கணக்கு கையாளப்பட்டதால் கூகுளே ஐயப்பட்டுக் கணக்கை முடக்கி விட்டதோ என்னவோ, நானறியேன்!

ஆனால், சிக்கல் அஃது இல்லை. ஒரு சொடுக்கில் நான் என் கூகுள் கணக்கை மீட்டுவிட்டேன். கணக்கை மீட்டவுடன் வலைப்பூவும் தானாகவே சரியாகி விட்டது. அதனால், நானும் இதைப் பெரிதாக நினைக்கவில்லை. போகட்டும் என்று கடவுச்சொல்லை மாற்றிவிட்டு வாளாவிருந்து (சும்மா) விட்டேன். ஆனால் மறுநாள், இன்னோர் அதிர்ச்சி! வார்ப்புரு மாற்றங்களைச் செய்து பார்ப்பதற்கெனவே நான் சோதனை வலைப்பூ ஒன்று வைத்துள்ளேன். மறுநாள், அந்த வலைப்பூவில் நான் வெளியிட்டிருந்த சோதனை இடுகைகள் அனைத்தும் ஒரே நாளில் மறுவெளியீடு ஆகியிருந்தன. ஆக, யாரோ அந்த வலைப்பூவிலும் கை வைத்திருப்பது தெரிந்தது! கடவுச்சொல்லை மாற்றிய பிறகும் நடந்த இந்தத் தாக்குதல் என்னைத் திகைக்க வைத்தது.

தொழில்நுட்பம், சட்டம் எல்லாம் அறிந்த நண்பர் ஒருவரை அணுகி இதற்குத் தீர்வு கேட்டேன். ஆனால், அவர் இந்தச் சிக்கலை வேறு கோணத்தில் பார்த்தார். ஏற்கெனவே நான் வலைப்பூவில் மிகவும் தீவிரமான பதிவுகளை எழுதி வருகிறேன். இப்பொழுது தளத்தின் பாதுகாப்பும் இப்படிக் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், இனி நான் கடவுச்சொற்களை மாற்றி எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஒருவேளை யாராவது மீண்டும் அதில் நுழைந்து சட்டத்துக்குப் புறம்பாகவோ, சமூகத்துக்குக் கேடு விளைக்கக்கூடிய வகையிலோ எதையேனும் வலைப்பூவில் வெளியிட்டு விட்டால் என்னாகும் என்று அவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். மாற்றுக் கருத்துக்காக அவரை விடத் தொழில்நுட்பத்தில் சிறந்த நண்பரான இன்னொருவரைக் கலந்தாலோசித்தேன். அவரும் இதையே ஆமோதிக்கவே நான் கொஞ்சம் மிரண்டுதான் போனேன்.

இது மட்டுமில்லாமல், கணினியில் நல்ல நச்சுநிரல் தடுப்பான் (Anti-Virus) இல்லாதது, மேலும் பல தனிப்பட்ட சிக்கல்கள், காக்காய் உட்காரப் பனம்பழம் விழுவது போல் நடந்த சில நிகழ்வுகள் என்று எல்லாமாகச் சேர்ந்து தளத்தை அழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதாக என்னை நம்ப வைத்து விட்டன. அதனால்தான், தாள முடியாத வேதனையோடு நான் அப்படியொரு முடிவெடுத்தேன்.

ஆனால், முடிவைச் செயல்படுத்திய பிறகுதான் தெரிந்தது, சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சில நிகழ்வுகளுக்கும் கூகுள் கணக்குத் தாக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று. தொழில்நுட்பத்தை முழுமையாக அறியாமல், நுனிப்புல் மேய்ந்ததன் விளைவாக நான்தான் சில நிகழ்வுகளைத் தவறாக முடிச்சுப் போட்டுப் புரிந்து கொண்டேன் என்பதும், அந்தத் தவறான புரிதலின் அடிப்படையில் நான் சிக்கலை விளக்கியதால்தான் நண்பர்களும் தளத்தை அழிக்குமாறு பரிந்துரைக்க நேர்ந்திருக்கிறது என்றும் பிற்பாடுதான் புரிய வந்தது.

அவற்றுள் சில காரணங்கள் என் தலைக்கு மேல் கத்தியாக இன்றும் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், ஓரளவுக்கு முதன்மையான சில தடைகள் நீங்கிவிட்டதால் மீண்டும் வலைப்பூவை மறுமலர்த்தியே தீருவதெனத் துணிந்து, இதோ மறுபடியும் உங்கள் முன் தோன்றி விட்டேன். இனி, வழக்கம் போல் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ தொடர்ந்து வெளிவரும்! இப்படியொரு தவறான முடிவை எடுத்து உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்ததற்குத் தண்டனையாய் முன்பை விடக் கூடுதல் பொலிவுடனும், சுவையுடனும், வீரியத்துடனும் பதிவிடுவதாக உறுதியளிக்கிறேன்!

இதனால் பெற்ற பட்டறிவு! (experience)

கொந்தத் தாக்குதலுக்கு ஆளான தளத்தை மீண்டும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் நுட்பம் பற்றி இணையத்தில் தேடினேன். சில கட்டுரைகள் சில புதிய வழிகளைக் காட்டின. அவற்றுள் முதன்மையானது கணினி, இணையம் ஆகியவற்றைச் சார்ந்திராமல் நம் கைப்பேசியின் துணைகொண்டே நம் கூகுள் கணக்கைப் பாதுகாக்கும் இரட்டைப் பாதுகாப்பு முறை (Two step verification). இது பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும், தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். 

இரட்டைப் பாதுகாப்பு முறை என்பது ஒவ்வொரு தடவை நாம் கூகுள் கணக்குக்குள் நுழையும்பொழுதும் இரண்டு முறை சோதிக்கும் வசதி. இதை நீங்கள் செயல்படுத்தி விட்டால், அதன் பின் வழக்கத்துக்கு மாறான கணினியிலிருந்து நீங்கள் கூகுள் கணக்குக்குள் நுழைய முனைந்தால், உடனே உங்கள் கைப்பேசிக்கு ஒரு கமுக்க எண் (secret number) அனுப்பப்படும். கடவுச்சொல்லுக்கு அடுத்தபடியாக அந்தக் கடவு எண்ணையும் (pass code number) கொடுத்த பின்னரே நீங்கள் அந்தப் புதுக் கணினியின் மூலம் கணக்குக்குள் நுழைய இயலும். ஆக, உங்கள் கணினி தவிர உலகில் வேறு எங்கிருந்தும், எவராலும் – ஏன், உங்களாலுமே கூட – உங்கள் கூகுள் கணக்கை உங்கள் கைப்பேசியின் துணையின்றித் திறக்க இயலாது! உங்கள் கணக்கை இனி எவனா(ளா)வது கொந்த (hack) வேண்டுமானால் உங்கள் கடவுச்சொல் மட்டும் தெரிந்தால் போதாது, உங்கள் கைப்பேசியையோ, கணினியையோவே தூக்கிக்கொண்டு ஓடினால்தான் முடியும். (LOL!) இஃது ஏறத்தாழ இயலாத ஒன்று என்பதால் இது மிகவும் சிறந்த வழிமுறையாகவே தென்படுகிறது. இதைச் செயல்படுத்தும்படி தொழில்நுட்பர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே, அனைவரும் – குறிப்பாக வலைப்பதிவர்கள் – இந்த இரட்டைப் பாதுகாப்பு முறையைச் செயல்படுத்தி விடுமாறு பரிந்துரைக்கிறேன். இதைச் செயல்படுத்துவது எப்படி என்பது முதலான விரிவான தகவல்களுக்கு நம் பேரன்புக்குரிய நண்பர் ‘கற்போம்’ பிரபு கிருஷ்ணா அவர்களின் இணைய இதழில் வெளிவந்திருக்கும் Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification எனும் கட்டுரையைப் படிக்கலாம். இரட்டைப் பாதுகாப்பு முறை பற்றி மட்டுமில்லை, மேலும் சில பாதுகாப்பு வழிமுறைகளும் அதில் விளக்கப்பட்டுள்ளன.

அந்தக் கட்டுரையில் இல்லாத மேலும் சில தலையாய தகவல்கள் இந்த ஆங்கிலக் கட்டுரையில்! இதைப் படிக்கத் தவறாதீர்கள் எனச் சொல்ல மாட்டேன், தவறியும் படிக்காமல் விடாதீர்கள் என்பேன்!

ஆனால், இந்தக் கட்டுரைகள் மூலம் நான் அறிந்தவையெல்லாம் இணையத்தில் நானாகத் தேடிக் கற்றறிவு (கற்ற + அறிவு). இந்த நிகழ்விலிருந்து நான் பெற்ற பட்டறிவு என்பது வலைப்பூ நடத்துவதற்கு அதற்குண்டான தொழில்நுட்பங்கள் மட்டும் தெரிந்திருந்தால் போதாது என்பதுதான்! நுனிப்புல் மேய்வது எப்பொழுதுமே ஆபத்து என எத்தனையோ முறை பல நூல்களில் படிக்கிறோம்; பெரியவர்களின் பட்டறிவுக் கதைகளில் கேட்கிறோம். ஆனாலும், நாம் பலரும் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! வார்ப்புருவைத் திருத்துவது, வலைப்பூவை விதவிதமாக அழகுபடுத்துவது, பட்டியலிடுதளங்கள் (directories) பலவற்றிலும் தேடித் தேடி இணைப்பது, பின்னிணைப்புகள் (back links) உருவாக்குவது போன்ற தேடுபொறி உகப்பாக்க (SEO) வேலைகள் மட்டும் தெரிந்திருந்தால் போதாது! துறையில் இறங்கி விட்டோம்; இனி முழுமையாகவே தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள முயல்வதே நல்லது! அதிலும், அவ்வப்பொழுது நம்மை இற்றைப்படுத்திக் கொண்டே (update) இருக்கவும் வேண்டும்! தவிர, இது சார்ந்த சட்ட நுணுக்கங்களையும் அறிந்திருத்தல் இன்றியமையாதது.

நம் தளத்தை நாம் மட்டும்தான் பயன்படுத்துகிறோமா அல்லது நாம் அறியாமல் வேறு யாராவதும் அதைப் பயன்படுத்துகிறார்களா? நம் தளம் திடீரெனக் காணாமல் போய்விட்டால், அஃது என்ன ஆனது? அதற்கு உண்மையில் நேர்ந்தது என்ன? அழிந்து போனதா, அல்லது முடக்கப்பட்டதா, அல்லது சிதைக்கப்பட்டதா? இப்படிப்பட்ட அடிப்படை விதயங்கள் நமக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருத்தல் வேண்டும்! எனவே, வெறும் பதிவர் உதவிக்குறிப்புகள் (blogger tips) படிப்பதோடு நில்லாமல் இப்படிப்பட்ட நுணுக்கமான தொழில்நுட்பங்களையும் அனைவரும் தேடிப் படியுங்கள் எனக் கேட்டுக் கொள்வதோடு, இணையப் பாதுகாப்பு (Cyber safety), இணையச் சட்டம் (Cyber law) தொடர்பான பதிவுகளையும் நிறைய எழுதுமாறும், குறிப்பாக, இவை பற்றிய ஆங்கிலப் பதிவுகளைத் தமிழ்படுத்தித் தருமாறும் தொழில்நுட்ப, சட்டப் பதிவர்களை அன்புடன் கோருகிறேன்!


Thanks for your Love!

நான் வலைப்பூவை அழிப்பதாகச் சொன்னதும் நண்பர்கள் சிலர் உடனே வந்து தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து, அன்பையும் கொட்டினர். குறிப்பாக, நண்பர்கள் ஜோசப் விஜு ஐயா, ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரி ரங்கன் ஆகியோரை நெஞ்சம் நெகிழ்வில் வழிய இப்பொழுது நினைவு கூர்கிறேன்.

மைதிலி அவர்களே! நான் மீண்டும் வர வேண்டும் என்று நீங்கள் கேட்டபொழுது கண்டிப்பாக வருவேன் என்று நான் பதிலளித்தது வேறொரு வலைப்பூ மூலம் வருவேன் என்ற பொருளில்தான்; ‘அகச் சிவப்புத் தமி’ழை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நான் ஆணையாக நினைக்கவில்லை! ஆனால், ஜோசப் விஜு அவர்களின் நம்பிக்கை பலித்து விட்டது.

ஆம் ஐயா! நீங்கள் கூறினீர்கள், அவ்வளவு எளிதில் என்னை விட்டுவிடப் போவதில்லை என்றும், அந்த நம்பிக்கை உங்களுக்கு இருப்பதாகவும், உங்கள் நம்பிக்கை எதுவும் இதுவரை பொய்த்ததில்லை என்றும். அப்பொழுதும் நான், இன்னொரு வலைப்பூ மூலம் நான் மீண்டும் பதிவுலகுக்கு வருவதன் மூலம்தான் உங்கள் நம்பிக்கை நனவாக முடியும் என்றுதான் நினைத்தேனே தவிர, இப்படி நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், உள்ளத்து வலிமை (Power of Mind) பற்றி அறிவியலார்ந்து நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், நேரடியாகவும் பார்த்திருக்கிறேன். அதனால், அதன் மீது கொஞ்சம் நம்பிக்கை உண்டு. இப்பொழுது அது சரிதான் என மீண்டும் ஒருமுறை உங்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது!

இவர்கள் மட்டுமின்றி, “பதிவுக் குழந்தையை அழிக்க வேண்டாம்” என்று உருக்கத்தோடு வலியுறுத்திய நண்பர் உலகளந்த நம்பி அவர்கள், வருத்தம் தெரிவித்த ‘தளிர்’ சுரேஷ் அவர்கள் என அனைவரின் நேசத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அனைவரும் தொடர்ந்து வருகை புரிந்து வழக்கம் போல் உங்கள் செம்மையான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்!

முதன்மைக் குறிப்பு: 'அகச் சிவப்புத் தமி'ழை மின்னஞ்சல், ஊட்டம் (feeds) ஆகியவற்றின் வழியாகப் பின்பற்றுபவர்கள் மட்டும் கனிவு கூர்ந்து மீண்டும் புதிதாகப் பின்தொடரப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்! சிரமத்திற்கு வருந்துகிறேன்!


கைதுறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இணையக் கணக்குப் பாதுகாப்பு வழிமுறைகள் சமூகப் பகைவர்களிடமிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் நோக்கிலானவை மட்டுமே! அரசு நினைத்தால் நீங்கள் இரட்டைப் பாதுகாப்பு முறையென்ன அதைவிட எப்பேர்ப்பட்ட பூட்டுப் போட்டாலும், எந்த விதத் தடயமும் இல்லாமல் உள்புகுந்து பார்த்து வெளியேற இயலும். தேவைப்பட்டால் உங்கள் கணக்குகளை முடக்கவும் அவர்களால் இயலும். இவற்றுக்கான சட்டப்பூர்வ அதிகாரமும் அவர்களுக்கு உண்டு என்பதை மறக்க வேண்டா! எனவே, முழுமையான பாதுகாப்பில் இருக்கிறோம் எனும் துணிவில் சட்டப்புறம்பான எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டா எனக் கேட்டுக் கொள்வதோடு அப்படிப்பட்ட செய்கை எதையும் தூண்டும் நோக்கில் இஃது எழுதப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்!

❀ ❀ ❀ ❀ ❀ 
படங்கள்: நன்றி ௧.Catscanman.net, ௨.சுடர் எப்.எம், ௩.மாணவன்
உசாத்துணை: கற்போம், nakedsecurity.sophos.com


என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்