.

வெள்ளி, ஏப்ரல் 11, 2014

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான தேர்தல் திட்டம் (இறுதிப் பகுதி)


Parliament Election-2014

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கலாம் என்பது பற்றி அலசும் இந்தத் தொடரில் தி.மு.க-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஏன் வாக்களிக்கக்கூடாது என்பது பற்றிக் கடந்த பதிவில் பார்த்தோம். மிச்சக் கட்சிகள் பற்றி இந்த இறுதிப் பதிவில்...

தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரியா காங்கிரசு?
Avoid Congress!

காங்கிரசு எதிர்ப்பு என்பதே தமிழ்ப் பற்றின் காரணமாக எழுவதுதான் என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். தவறு! அதுவும் ஒரு காரணம்; அது மட்டுமே காரணமில்லை.

தமிழர்கள் மட்டுமில்லை, இந்தியாவில் எந்தப் பகுதியில் எத்தனை மக்கள் செத்தாலும் அது பற்றிக் காங்கிரசுக்கு எந்த வித அக்கறையும் கிடையாது என்பதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டுதான் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதல். அது மட்டுமா?
See the Cruelty of Endosulfan!
கருவிலிருக்கும் குழந்தைகள் உட்பட வருங்காலத் தலைமுறையையே அழித்துவிடக்கூடிய எண்டோசல்பான் போன்ற தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக அரங்கில் குரல் கொடுப்பது, சொந்த நாட்டு மக்களின் நிலங்களைப் பிடுங்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, அயல்நாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் சீரழிப்பது, அதைத் தட்டிக் கேட்கும் மக்களை இராணுவத்தை வைத்துக் கொல்வது, குப்பையில் தூக்கிப் போட வேண்டிய தரத்திலுள்ள போர்க் கப்பல்களையும், விமானங்களையும் வாங்கி அந்த இராணுவ வீரர்களையும் அழிப்பது எனக் காசு கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொடூரத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காத காங்கிரசு, தமிழர்களுக்கோ, இந்திய மக்களுக்கோ மட்டுமில்லை, மனித இனத்துக்கே, உலக உயிரினங்கள் அனைத்துக்குமே தீங்கு விளைவிக்கும் கட்சி!!

ராகுல் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே புரட்டிப் போட்டு விடுவார் என இங்கே சில இளைஞர்கள் எதிர்பார்க்கிறீர்கள். தமிழர் பிரச்சினைகளில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் நினைப்பது போல் அவர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கும் நல்லவர், வல்லவர் என்றே வைத்துக் கொள்வோம். ஒன்றா, இரண்டா, மூன்றா... கடந்த பத்து ஆண்டுகளாக அவருடைய கட்சிதானே இங்கே ஆண்டது? புதிதாக என்ன செய்தார் அவர்? சிந்தித்தீர்களா? கேட்டால் அவர் கையிலா அதிகாரம் இருந்தது என்பீர்கள். அவர் அம்மாதானே நாட்டையே வழிநடத்தினார் இந்தப் பத்தாண்டுகளில்? பெற்ற தாயையே தன் வழிக்குக் கொண்டு வர முடியாதவர் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள் அத்தனை பேரையும் தன் வழிக்குக் கொண்டு வந்து, தன் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி ஒரு சிறப்பான நல்லாட்சியை வாரி வழங்கி விடுவார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 67 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு மக்களைச் சீரழித்த, நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஓர் ஆட்சியை இந்தியா சந்தித்ததே கிடையாதே, அப்படிப்பட்ட இந்த ஆட்சியைத் திருத்தவோ, இதன் மனித விரோதப் போக்குக்கு எதிராகவோ ஒரு வார்த்தையாவது அவர் வாய் திறந்து இதுவரையில் பேசியதுண்டா? அப்படிப்பட்டவர் தான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் கிழித்துக் கீரை விதை நட்டு விடுவாரா? கொஞ்சமாவது சிந்தியுங்கள் நண்பர்களே!

“உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்எனக் கேட்டால் பெண் எனும் ஒரே காரணத்துக்காக சோனியாவின் பெயரைச் சொல்லும் இளம்பெண்களே! சோனியா என்ன செய்தார் என்பது தெரியுமா? ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது அவர் நடந்து கொண்ட விதம் உங்களுக்குத் தெரியுமா? ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியபொழுது, “அதெல்லாம் அந்த நாட்டு உள்விவகாரம். அதில் நாம் என்ன செய்ய முடியும்?என்று கூறி விட்டு இரண்டாயிரம் கோடியையும், அளவற்ற இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து அந்தக் கொடுமை தொடர வழி செய்தவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஈழ இனப்படுகொலையை நிறுத்த அமெரிக்கா களமிறங்கத் தீர்மானித்தபொழுது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதைத் தடுத்து நிறுத்தியவர் அவர் என்பது தெரியுமா? தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு எதிராகவும், மனிதநேயத்துக்கு எதிராகவும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த, செய்கிற ஒருவருக்குப் பெண் என்னும் ஒரே காரணத்துக்காக வாக்களிக்கப் போகிறீர்களா? சிந்தியுங்கள்!

தமிழர்கள் மட்டுமில்லை, ஆறாம் அறிவு கொண்ட எந்த மனிதப் பிறவியும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்!

பொதுவுடைமைக் கட்சிகள் (எ) காங்கிரசு! (Communists alias Congress)

Communism with Capitalism

நேர்மை, அர்ப்பணிப்பு, கொள்கையில் உறுதி, மக்களுக்காகக் களமிறங்கிப் போராடுதல் என இந்திய அரசியலில் வழக்கொழிந்து விட்ட அரிய குணங்களையெல்லாம் இன்றும் கடைப்பிடிப்பவர்கள் நம் சிவப்புத் துண்டுத் தோழர்கள்! ஈழத்து இனப்படுகொலையின்பொழுது கூட அதற்காக இங்கே முதன்முதலில் குரல் எழுப்பிய கட்சி இந்தியப் பொதுவுடைமைக் (இந்தியக் கம்யூனிஸ்டு) கட்சிதான் என்பது எக்காலத்திலும் தமிழர்கள் மறக்கக்கூடாத ஒன்று!

ஆனால், மூன்றாம் அணிக்கு வாக்களிப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கிற ஒரே காரணம் அவர்களுடைய காங்கிரஸ் ஆதரவு!

மதச்சார்பின்மை எனும் ஒரே ஒரு காரணத்துக்காக, காங்கிரஸ் எப்பேர்ப்பட்ட மோசமான ஆட்சியை நடத்தினாலும் பொதுவுடைமைக் கட்சிகளின் (Communists) அவர்களுக்குத்தான் ஆதரவளிக்கின்றன!

2004 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான தொகுதிகளை வென்ற பொதுவுடைமைக் கட்சிகள், காங்கிரசோ பா.ஜ.க-வோ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மக்கள் தங்களுக்கு அளித்த அந்தப் பெரும் வெற்றியைக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவே பயன்படுத்தின.

ஆனாலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் மக்கள் இவர்களை நம்பி வாக்களித்தார்கள். ஆனால், மறுபடியும் பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் ஆதரவைக் காங்கிரசுக்குத்தான் வழங்கின. இதற்கு எதற்காக மூன்றாவது அணி? நேரடியாகக் காங்கிரசுக்கே வாக்களித்து விடலாமே?

இது விதயத்தில் தி.மு.க-வுக்கும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பதும் காங்கிரசுக்கு வாக்களிப்பதும் ஒன்றேதான். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாரும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு, மூன்றாவது அணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்!

வாக்களிக்கலாமா ஆம் ஆத்மிக்கு?

தேசிய அளவில் பார்க்கும்பொழுது காங்கிரசு, பா.ஜ.க இரண்டுக்கும் சரியான மாற்று ஆம் ஆத்மிதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், எந்தத் தமிழ்க் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இந்தத் தேர்தலைச் சந்திக்கும் அவர்களுக்கு நாம் வாக்களித்தால், நாளை ஆட்சிக்கு வந்த பின், தமிழர் பிரச்சினைகளில் அவர்கள் தவறான போக்கைக் கையாண்டால் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார், தமிழர் சார்பாக அவர்களுடன் பேசுவது யார் என்பது பெரிதும் அச்சுறுத்துகிற கேள்வி.

இதையும் மீறி நாம் அவர்களுக்கு வாக்களித்தாலும், முதன்முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிற அவர்கள், அதுவும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடும் அவர்கள், தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றாவிட்டால் அவர்களை நம்பி வாக்களிக்கும் நம் நிலைமை?... ஈழப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, வேளாண் நிலத்தில் எரிகுழாய் பதித்தல் எனத் தமிழர் பிரச்சினைகள் அனைத்தும் உச்சத்தில் இருக்கும் வேளையில் வெல்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத ஒரு கட்சிக்கு வாக்களித்து, நடுவணரசைக் கைப்பற்ற ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடலாமா?

The two Musketeers!அதே நேரம், இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும்!
தமிழர் பிரச்சினைகளில் மிக முக்கியமான, மேற்கண்ட பட்டியலில் இல்லாத ஒன்று ‘கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை!அதை வழிநடத்துகிற சுப.உதயகுமாரன் அவர்கள் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதை நாம் மறக்கக்கூடாது!

இந்தியாவில் காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக இந்த அளவுக்குக் கூடுதலான எண்ணிக்கையிலான மக்களை, இப்படி ஆண்டுக்கணக்காக ஒரே இலக்கை நோக்கிச் சிந்தாமல், சிதறாமல் அறப் போராட்டத்தில் ஈடுபட வைத்த மாமனிதர் சுப.உதயகுமாரனைத் தவிர வேறு யாரும் கிடையாது! ஆனால், மூன்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகும் அணுமின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி நம் மக்களுக்குத் துளியும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதுதான் வேதனை! பல் முளைக்காத பச்சைக் குழந்தை கூட ஒருமுறை சுட்டுக்கொண்டால் மறுபடியும் நெருப்பைத் தொடாது. ஆனால், செர்னோபில், புகுஷிமா என அடுத்தடுத்து அணு உலைகளின் கோர முகத்தைப் பார்த்த பின்னும் நாம் அணு உலைகள் பாதுகாப்பானவை என நம்புகிறோம் என்றால் என்ன சொல்வது!

“கூடங்குள அணுமின் நிலைய அணுஉலை ரியாக்டர்களில் நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. குளிரூட்டும் முறை பழுதடைந்தால் அதைச் சரி செய்துகொள்ளக்கூடிய பாதுகாப்புகள் முறையாக வடிவமைக்கப்படவில்லை. புக்குஷிமா அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கு இந்தக் குறைபாடுதான் முக்கிய காரணம். குளிரூட்டும் சாதனங்களின் முக்கிய கருவிகள் மிகவும் பலவீனமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமியதிர்வுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கவனத்தில் கொள்ளப்படாமல்தான் இந்த அணுஉலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேர்ந்தால் தானாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் இதில் இல்லை!” -  இப்படியெல்லாம் கூறுவது நான் இல்லை,
சுப.உதயகுமாரன் இல்லை, ரஷ்ய அறிவியலாளர்கள்!!! ஆம்! எந்த ரஷ்யாவுடன் இணைந்து இந்திய அரசு இதை நிறுவி வருகிறதோ அதே ரஷ்ய நாட்டு அறிவியலாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை இது. கூடங்குளம் அணுஉலைத் திட்டம் பாதுகாப்பானது என்ற ரஷ்யாவின் உறுதியை மறுத்து அந்நாட்டு அறிவியலாளர்களே அளித்த இந்த அறிக்கையை, ரஷ்ய அரசு ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்ததை நார்வே நாட்டின் நம்பகத்தன்மையுள்ள இணையத்தளம் ஒன்று வெளியிட, 21.10.2011 அன்று வெளிவந்த பிரண்ட்லைன்இதழும் பதிவு செய்துள்ளது! (இது பற்றி உயர்திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இங்கே).

ஆக, கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது தமிழ்நாட்டுக்கே வைக்கப்பட்டுள்ள உலை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இது தொடர்பாக நாம் தொடுக்கும் எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முதற்கொண்டு எல்லா நீதிமன்றங்களும் மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி, அரசின் இந்த முடிவைக் கொள்கைரீதியாகத் திரும்பப் பெறச் செய்வதே ஒரே வழி! அதற்கு உதயகுமாரன் அவர்கள் இந்தத் தேர்தலில் வென்றே ஆக வேண்டும்!

காங்கிரசு, பா.ஜ.க, இருவருமே அணுமின் நிலையத் திட்டத்தை ஆதரிக்கும் சூழலில், சுப.உதயகுமாரன் அவர்கள் உறுதியளிப்பது போல், உள்ளூர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் அதை நிறைவேற்றுவது தங்களுக்கு விருப்பமில்லை எனும் நிலைப்பாட்டைக் கொண்ட ஆம் ஆத்மிதான் நமக்கு இருக்கும் ஒரே தேர்வு! எனவே, அந்தக் கட்சியில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாக உதயகுமாரன் அவர்கள் முடிவெடுத்திருப்பது மிகவும் சரியானது, சிறப்பானது! அந்த முடிவை நாம் ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தலையில் தாங்களே அணுகுண்டு போட்டுக்கொள்ள விரும்பியதாக நாளைய வரலாறு கூறும்!

மோடி = ராஜபக்ச!

Gujarath Genocide!
இதுவும் இனப்படுகொலைதான்!
ஈழத் தமிழர் நலன் கருதிக் காங்கிரசைப் புறக்கணிக்கக் கோரும் நாம், நம் கூடவே வாழும் இசுலாமிய உடன்பிறப்புக்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது!

இராஜபக்ச லட்சக் கணக்கில் தமிழர்களைக் கொன்றான் என்றால், மோடி ஆயிரக்கணக்கில் இசுலாமியர்களைக் கொன்றான். இந்த எண்ணிக்கை தவிர இருவருக்குமிடையில் என்ன வேறுபாடு?

ஆட்சி மாற்றம் வேண்டும்தான்! ஆனால், அதற்காக இந்தியா முழுக்க உள்ள இத்தனை கோடி இசுலாமியர்களின் பாதுகாப்பை நாம் கேள்விக்குறியாக்கி விட முடியாது! எனவே, போட்டியிடும் எட்டு தொகுதிகளிலும் பா.ஜ.க-வைத் தோற்கடிப்போம்! இந்த மோடி வித்தையெல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதைப் பறைசாற்றுவோம்!

அப்படியானால், அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள்?...
அவை பற்றித் தனித் தனியாகப் பார்க்கலாம் வாருங்கள்!

இராமதாசு மட்டும் தமிழனா?

Ramadoss

தமிழினப் படுகொலையின்பொழுது பா.ம.க ஏற்படுத்திய ஈழப் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வும், பன்னாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் சார்பிலான ஒற்றைக் குரலாகத் தன் ‘பசுமைத் தாயகம் மூலம் ஈழப் பிரச்சினைக்காக இன்று வரை வாதாடுவதும் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க தமிழ்ச் சேவைகள் என்பது மறுக்க முடியாத உண்மைதான்!

ஆனால், ஈழப் பிரச்சினை தேர்தல் வெற்றிக்கு ஒருமுறை உதவாமல் போனவுடனேயே, அடுத்த (2011) சட்டமன்றத் தேர்தலிலேயே அதே தமிழினக் குருதி படிந்த காங்கிரசுடன் துளியும் வெட்கமின்றிப் பா.ம.க கூட்டணி சேர்ந்த கண்ணறாவியை மறக்க முடியுமா? கருணாநிதி - திருமாவளவன் ஆகியோருக்கும் ராமதாசுக்கும் என்ன பெரிய வேறுபாடு? தமிழர்களைக் காங்கிரஸ் அழித்துக் கொண்டிருந்தபொழுதே கூட்டணியில் இருந்தார்கள் அவர்கள். ராமதாஸ் அப்போதைக்கு விலகி நல்ல பெயர் எடுத்துக்கொண்டு, பிறகு மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார், அவ்வளவுதான்! மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின், தேவைப்பட்டால் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேரக்கூட நொடியும் தயங்க மாட்டார் ராமதாஸ் என்பதுதான் உண்மை!

தே.மு.தி.க பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பா.ஜ.க-வுடனான கூட்டணி எதிர்பார்த்தபடி அமையாவிட்டால் காங்கிரசுடன் கை கோக்கக் கடைசி நிமிடம் வரைக்கும் ஆயத்தமாக இருந்தவர்தான் அவர் என்பது இங்கே பச்சைப் பிள்ளைக்குக் கூடத் தெரிந்ததுதான்.

Eels!ஆட்சி மாற வேண்டுமானால், பா.ஜ.க கூட்டணிக்குத்தான் வாக்களித்தாக வேண்டும் என நம்புபவர்கள் கூட இந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிப்பது பற்றிப் பரிசீலிக்க வேண்டும்! காரணம், நாளைக்கே பா.ஜ.க-வுடனான அமைச்சரவைப் பங்கீடு விரும்பியவாறு அமையாவிட்டால் அடுத்த நிமிடமே இவர்கள் காங்கிரசுக்குத் தங்கள் ஆதரவை வழங்கத் தாமதிக்க மாட்டார்கள்!

தேர்தல் களத்திலிருக்கும் ஒரே தமிழன் வை.கோ!

Tamil Leader Vai.Ko!

ஆம்! உண்மையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலிருக்கும் ஒரே தமிழன் வை.கோ அவர்கள்தாம்!

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் பிரச்சினை, முல்லைப் பெரியாற்று விவகாரம் எனும் வேளாண் தமிழர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் எனும் நகரத் தமிழர்கள் பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் மீனவத் தமிழர்கள் பிரச்சினை, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் ஆபத்தாய் விளங்கும் அணு உலைப் பிரச்சினை என எல்லாத் தரப்புத் தமிழ்   மக்களின் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து, இடைவிடாமல் போராடி வரும் வை.கோ-வை விடச் சிறந்ததொரு தமிழர் தலைவனைத் தமிழன்னை இதுவரை கண்டதில்லை!

கடந்த ஐம்பதாண்டுக்காலமாக அரசியலில் இருக்கிறார். ஆனால், ஊழல், கையூட்டு (லஞ்சம்) என ஒரே ஒரு குற்றச்சாட்டாவது உண்டா? இப்பேர்ப்பட்ட தலைவருக்கு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நாம் தோல்வியை மட்டுமே பரிசளிக்கப் போகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

ம.தி.மு.க மட்டும் தமிழ்நாட்டில் குறைந்தது முப்பது தொகுதிகளிலாவது போட்டியிடுவதாக இருந்தால், பா.ஜ.க கூட்டணிக்கு நாம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்திருக்கலாம், வை.கோ-வை நம்பி ஆட்சி செய்யும் அப்படியொரு நிலைமையில் சிறுபான்மையருக்கு எதிராக மோடியால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது எனும் திடமான நம்பிக்கையில். ஆனால், ம.தி.மு.க போட்டியிடுவதோ வெறும் எட்டு இடங்களில்.

ஆனால், அந்த எட்டு இடங்களிலாவது அவரை வெல்லச் செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை! காரணம், ஈழப் பிரச்சினைக்காகக் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் தமிழ் மக்கள், ஈழத்தில் பிரச்சினை தொடங்கிய காலத்திலிருந்து அதற்காக இங்கே குரல் கொடுத்து வரும் வை.கோ அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்தால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவுமே இருக்க முடியாது!

சுருங்கச் சொன்னால், மதவெறித் தாமரையைப் புறக்கணிப்போம்! சேற்றிலிருக்கும் செந்தாமரையாக அதில் இணைந்திருக்கும் ம.தி.மு.க-வை மட்டும் ஆதரிப்போம்!

அ.தி.மு.க!

கன்னியாகுமரியில் ஆம் ஆத்மியும், எட்டு தொகுதிகளில் ம.தி.மு.க-வும் நமது தேர்வு என்றால், மிச்சமிருக்கும் தொகுதிகளில் நமக்கு மிஞ்சியிருக்கும் ஒரே தேர்வு அ.தி.மு.க-தான்!

சலித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! வேறு வழி இல்லை. இதை நான் விரும்பிச் சொல்லவும் இல்லை.

ஜெயலலிதா திருந்தி விட்டதாகவோ, முழுக்க முழுக்க ஈழ ஆதரவாளராய் மாறி விட்டதாகவோ நம்பும் அளவுக்கு நான் குழந்தை இல்லை. ஆனாலும் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் சொல்வதன் காரணம் மற்றவர்களெல்லாரும் அவரை விட மோசமாக இருப்பதுதான்!

ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜெயலலிதா ஈழ ஆதரவாளராய் நடிப்பதாகவே வைத்துக் கொள்வோம்; மற்றவர்களெல்லாரும் அப்படி நடிப்புக்காகக் கூட ஈழத்தை ஆதரிக்கவில்லையே!

அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழர் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பாரா என்பது அப்புறம். ஆனால், இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பற்றி தெளிவான உறுதிமொழிகளையாவது அவர் கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் அப்படி வாயளவில் ஒப்புக்கொள்ளக் கூட முன் வராத நிலையில் இவர்களில் யாருக்கு வாக்களிப்பது அறிவுடைமை என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

Jayalalitha with Arputhammallஅட, இந்த உறுதிமொழிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தனி ஈழத்துக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை மீட்டுத் தந்தது, சாந்தன் - முருகன் – பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழ்நாட்டின் சார்பாக வாதாடியது என்று தமிழர் பிரச்சினைகளுக்காக ஜெயலலிதா இதுவரை மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளைக் களத்திலிருக்கும் மற்ற நான்கு கூட்டணிகளில் வேறு எதனிடமாவது நாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆக, இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க-வை விட நல்ல தேர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை!

“ஏன், ஜெயலலிதா மட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் காங்கிரசுக்கு ஆதரவளிக்க மாட்டாரா என்கிறீர்களா? கண்டிப்பாக மாட்டார்!

மூன்றாவது அணி, ஆம் ஆத்மி, பா.ஜ.க என மூன்று வாய்ப்புகள் இருக்கும்பொழுது இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எப்பொழுதுமே தனக்கு ஆகாத சோனியாவின் முகாமுக்கு ஜெயலலிதா போவதற்கு வாய்ப்பில்லை.

மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஜெயலலிதாவின் அடுத்த குறி கருணாநிதியின் ‘தமிழினத் தலைவர் பீடம்!

தமிழ்நாட்டில், கருணாநிதிக்குக் கிடைத்த அத்தனையும் ஜெயலலிதாவுக்கும் கிடைத்து விட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலேயே வளர்ந்தும், வாழ்ந்தும், மூன்று முறை முதல்வராக இருந்தும் கூட அவரைத் தமிழினத் தலைவராக இல்லாவிட்டாலும், குறைந்தது தமிழராகக் கூட ஏற்றுக்கொள்ள இங்கு யாரும் ஆயத்தமாக இல்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஈழப் பிரச்சினை, மூவர் தூக்குத் தண்டனைப் பிரச்சினை எனத் தமிழ் மக்களின் இனநலன் சார்ந்த பிரச்சினைகள் பலவற்றிலும் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அவரைத் தமிழினத் தலைவர் அரியணைக்கு இப்பொழுது மிக அருகில் கொண்டு வந்து விட்டன. வெண்ணெய் திரளும் இப்படியொரு வேளையில் தாழியை உடைத்துக் கொண்டாவது காங்கிரசுக்கு ஆதரவளிக்க அவர் என்ன சோனியாவுக்குச் சொந்த பந்தமா, ராகுலுக்கு ரத்தச் சொந்தமா?

அப்படியானால், அ.தி.மு.க மூலம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் வரவேற்கலாம் என்கிறாயா, மேலே நீ காட்டிய பா.ஜ.க எதிர்ப்பெல்லாம் வெறும் கண்துடைப்பா எனக் கேட்பீர்கள்.

இல்லை! பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லைதான். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். நம் மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் எனத் திடமாக நம்புகிறேன். எனவே, அவர்களுக்கு ஒரு நல்ல தேர்வை (choice) அடையாளம் காட்ட விரும்புகிறேன், அவ்வளவுதான்.

இதுவரையான நமது அலசலில் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, தே.மு.தி.க, கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி ஆகிய அனைத்துமே தேர்தல் முடிந்த பின் காங்கிரசுடன் சேரக்கூடியவைதான் என்பதைப் பார்த்தோம். எனவே, மிச்சமிருக்கும் பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டில் எது நல்ல தேர்வு என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் அந்த மதவெறிக் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்பது உறுதி. மாறாக, அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தாலோ அ.தி.மு.க ஆதரவுடன் மூன்றாவது அணியோ, ஆம் ஆத்மியோ, அ.தி.மு.க-வே கூட ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது. எனவே, இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது நல்லது எனச் சிந்தியுங்கள்!

ஒருவேளை, இந்த மூன்று வாய்ப்புகளும் அமையாமல் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியே அமைந்தாலும், சிறுபான்மையர் விரோதப் போக்கையோ, தமிழர் விரோதப் போக்கையோ பா.ஜ.க கையிலெடுத்தால் ஜெயலலிதா அதற்கு ஆதரவாக இருக்க மாட்டார் என நாம் நம்பலாம்.

காரணம், தொடர்ந்து இரண்டு முறை வாஜ்பாய் அரசுக்குப் பேராதரவளித்த தமிழ் மக்கள், மோடி நடத்திய குஜராத் கோரத் தாண்டவத்தால் இன்று எந்தளவுக்கு அந்தக் கட்சி மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அவருடைய இதே ஆட்சியில்தான் மோடியின் வருகைக்கு எதிராக இங்கே கறுப்புக் கொடிப் போராட்டங்களும் முற்றுகைகளும் நாம் நடத்தினோம். எனவே, பா.ஜ.க-வின் சிறுபான்மை மக்கள் நலனுக்கெதிரான நடவடிக்கை எதற்காவது துணை நின்றால் அடுத்த ஆண்டு ரமலான் பெருநாள் கஞ்சி குடிக்கக் கூட இசுலாமியர் முகத்தில் விழிக்க முடியாது என்பது அவர் அறியாததில்லை.

அதே போல, காலங்காலமாகத் தமிழினத் தலைவனாகக் கருணாநிதியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ் மக்கள் அவருடைய தமிழினத் துரோகத்துக்குப் பின் எந்த அளவுக்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமான ஒன்று. எனவே, ஜெயலலிதா மட்டுமில்லை, கொஞ்சமாவது அடிப்படை அறிவுள்ள யாருமே இவ்வளவையும் பார்த்துவிட்டு இனியும் சிறுபான்மையர் நலனுக்கோ, தமிழர் நலனுக்கோ எதிரான நடவடிக்கைகளுக்குத் துணை போகத் துணிய மாட்டார்கள்!

சரி, அப்படியே ஜெயலலிதாவுக்கு வாக்களித்தாலும் அவர் ஆதரவில் ஆட்சியைப் பிடிக்கும் மூன்றாவது அணியோ, ஆம் ஆத்மியோ, பா.ஜ.க-வோ, அல்லது ஜெயலலிதாவே பிரதமரானால் கூட அதனால் தமிழீழம் கிடைத்துவிடுமா எனக் கேட்பீர்கள்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே! இந்த நால்வர் மட்டுமில்லை, ம.தி.மு.க-வையும் நாம் தமிழரையும் தவிர, இந்தியாவில் வேறு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் நமக்குத் தமிழீழத்தைப் பெற்றுத் தர மாட்டார்கள்! இந்தியா எனும் இந்தப் பலபட்டறைத் தேசிய அமைப்பை வைத்துப் பிழைக்கும் இந்திய தேசியக் கட்சிகளால் நம் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு தனி தேசிய அடையாளம் கிடைப்பதை ஒருநாளும் பொறுத்துக்கொள்ள முடியாது!

எனவே, இவர்கள் யாராவது ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் கிடைக்கும் என்பதற்காகவோ, இலங்கை மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை தொடங்கும் என்பதற்காகவோ நான் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. ஆனால், காங்கிரசுடன் ஒப்பிடும்பொழுது இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் அந்த அளவுக்குத் தமிழர்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. எனவே, புதிதாக ஆட்சிக்கு வருவோர் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக எதிராகச் செயல்பட வாய்ப்பில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பன்னாட்டு முயற்சிகளைத் தடுப்பது, இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களைத் திருத்தச் சொல்வது போன்ற குள்ளநரித்தனங்களைச் செய்ய வேண்டிய தேவை இந்தியாவில் காங்கிரசைத் தவிர வேறெந்தக் கட்சிக்கும் கிடையாது. எனவே, காங்கிரசைத் தவிர வேறு எந்தப் பேய் வந்து நடுவணரசில் அமர்ந்தாலும் தமிழர்களுக்கு அது நல்லதுதான்; காங்கிரசை முதலில் அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான் முக்கியம் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!

ஆக, ‘வாக்காளர்களுக்கான திட்டம்என்று தலைப்பில் சொன்னது இதுதான்:

தமிழர், இந்தியர், மனிதர் என எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும் தீங்கு விளைவிப்பதாகவே தென்படுகிற காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றியே ஆக வேண்டும்!

அதற்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, தே.மு.தி.க, கம்யூனிஸ்டுகள் ஆகிய காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகள் அனைத்தையும் நாம் இந்தத் தேர்தலில் கூண்டோடு புறக்கணிக்க வேண்டும்!

அதற்காகப் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அவர்கள் மீண்டும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆட்டம் போடும் வாய்ப்பு இருப்பதால் அதையும் நாம் தவிர்க்க வேண்டும்!

The Choice of Tamils in 2014 Parliament Election!எனவே, மிச்சமிருக்கும் ஒரே கட்சியும், காங்கிரஸ் அளவுக்குத் தமிழர் விரோதமோ, பா.ஜ.க அளவுக்குச் சிறுபான்மையர் விரோதமோ இல்லாத கட்சியுமான அ.தி.மு.க-வுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்!

அதே சமயத்தில், எந்தத் தமிழர் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு நாம் இந்த முடிவை எடுக்கிறோமோ அதே பிரச்சினைகளுக்காகத் தொடக்கக் காலத்திலிருந்து போராடி வரும் வை.கோ, சுப.உதயகுமாரன் ஆகியோரை ஆதரிப்பதும் நமது கடமை என்பதை உணர்ந்து, குறிப்பிட்ட எட்டு தொகுதிகளில் ம.தி.மு.க-வையும், கன்னியாகுமரியில் ஆம் ஆத்மியையும் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்!
இதுதான் திட்டம்!

இதன் மூலம் காங்கிரசையும் ஆட்சியிலிருந்து அகற்றலாம்!

பா.ஜ.க ஆட்சிக்கு வருகிற வாய்ப்பையும் குறைக்கலாம்!

தவறி பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை மக்களுக்கோ, தமிழர்களுக்கோ எதிராக எதுவும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்கும்படியாகவும் செய்யலாம்!

படங்கள்: நன்றி Yes Punjab.Com, தமிழ்த்தேசியம், ஆயுத எழுத்து, GGN, ஒன் இந்தியா கோகுல் மனதில், தினமணி, தேடிப் பார், தூது ஆன்லைன், ஒன் இந்தியா, சத்யம் தொலைக்காட்சி, மதிமுக இணையதள நண்பர்கள் | கூகுள் பக்கம், Manorama online.com

(இந்தப் பதிவு பின்னால் அகரமுதல தனித்தமிழ் இதழிலும் வெளியானது).

தொடர்புடைய பதிவு:

பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் சரி எனத் தோன்றினால், இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து இந்தத் தேர்தலிலாவது காங்கிரசுக் 'கை'ப்பிடியிலிருந்து மக்கள் தப்ப வழி செய்யுங்களேன்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி ஐயா! நீங்கள் தொடர்ந்து கருத்தளிப்பது எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது! நன்றி!

      நீக்கு
  3. என் போன்ற முதல்முறை வாக்களர்களுக்கு ஏற்ற மிகச்சரியான தெளிவான வழிநடத்தல் கட்டுரை!!!
    மிக்க நன்றி!!!
    இது போன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் உளமார்ந்த நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  4. நண்பரே,
    ஆதிமுகவிற்கு அளிக்கும் வெற்றி வீணானது. தான் பிரதமராக முடியாவிட்டால் தான் வழங்கும் ஆதரவை எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்வார். நிலையான ஆட்சி கிடைக்காது. நிச்சயம் காங் உடன் சேரமாட்டார். எதிர்க்கட்சியாக மட்டுமே அமர விரும்புவார். எனவே காங் ஆதரவோடு ஆட்சி அமையும். காஷ்மீர் பண்டித்கள் வெளியேற்றமும், பங்களாதேஷ் ஊடுருவல் அதிகமாக நிகழும்.


    பாஜ மதவாதக் கட்சியாக அடையாளப்படுத்துவது ஏற்பில்லை, எத்தனையோ பிற கட்சிகள் தங்கள் மதத்தை முன்னிலைப் படுத்தி பிரச்சாரம் செய்யும் போது பாஜ வளர்ச்சியை வைத்துதான் பிரச்சாரம் செய்கிறது. மோடியின் உரைகளில் வளர்ச்சிக்கான சிந்தனையே மேலோங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தில் எங்காவது மதக் கலவரம் நிகழ்ந்ததுண்டா? ராஜபட்சே உடன் ஒப்பிடுவது ராஜபட்சேவுடன் ஒப்பிடுவது அபத்தம். இது இலங்கை அரசின் கொடூரத்தை நீர்த்து போகச் செய்யும் சூழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரைப் பார்த்து என்ன பேசுகிறாய்? மரியாதை கெட்டுவிடும், எச்சரிக்கிறேன்! இலங்கையின் கொடூரத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி சூழ்ச்சியாக எழுதுவதற்கு நான் என்ன, இங்கே சிங்கள ஆதரவு வலைப்பதிவா நடத்திக் கொண்டிருக்கிறேன்? எல்லாரும் விடுதலைப்புலிகளை ஆதரித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் மீதான பன்னாட்டு அமைப்புகளின் குற்றச்சாட்டுக்கே பதிலடி கொடுத்தவன் நான். 'விடுதலைப்புலிகள் குற்றவாளிகளா' எனும் தலைப்பில் இதே பதிவில் உள்ள கட்டுரையைப் படித்துப் பார்! பெயரைத் தெரிவித்துக் கருத்திடக் கூடத் துணிவில்லாத நீ என்னைப் பார்த்து இராசபக்சே ஆதரவாளன் என்கிறாயா? ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவித்து, நூற்றுக்கணக்கான பெண்களை நட்டநடுத் தெருவில் அவமானப்படுத்திய மோடிக்கு வால் பிடிக்கும் நீ என்னைச் சொல்ல வந்துவிட்டாயா?

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்