வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்!
பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக்
கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்
போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள
பெரிய கேள்வி.
தெருவில் கிடக்கிற
சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல்
நாம் நடத்தி வரும் போராட்டங்களை இதுவரை செருப்பளவுக்காவது மதித்திருக்கிறதா இந்த இந்திய அரசு? இப்பொழுது கூட, இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக மூன்று முறைகளுக்கு மேல் திருத்தி விட்டு, அப்படியும் அந்த இற்றுப் போன தீர்மானத்துக்கு வாக்களிக்கக் கூட விருப்பமில்லாமல் அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து விட்டுத்தான் நம்மிடம் வாக்குக் கேட்க வருகிறார்கள் காங்கிரசார்!
இதை விட ஓர் இனத்தை
அவமானப்படுத்த முடியுமா?
இப்படிப்பட்ட
அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?
இனி தமிழர்களிடம்
வம்பு வைத்துக் கொண்டால் நாம் இந்திய அரசாட்சியை நினைத்துப் பார்க்கவே முடியாது
எனும் பீதியை இந்தக் காங்கிரசுக்காரர்களுக்கு ஏற்படுத்த வேண்டாமா?
தமிழர்களைப்
பகைத்துக் கொண்டதால் காங்கிரசு அடையவிருக்கும் படுதோல்வியைப் பார்த்து இனி வரும்
இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களை எண்ணி மிரள வேண்டாமா?
மண்ணுலகிலேயே நரகத்தை
அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் மீள வேண்டாமா?
அப்படியானால், வரும்
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நம் வாக்குகளைத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்!
அதற்கு ஒரு கூர்மையான திட்டத்தை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்!
யாருக்கு
வாக்களிப்பது?
இத்தனை ஆண்டுகளாக
இல்லாத அளவுக்கு இந்த முறை இது கொஞ்சம் சிக்கலான கேள்வியாகத்தான் ஆகி விட்டது
தமிழ்நாட்டில்.
கடலில் தூக்கிப்
போட்டாலும் கட்டுமரமாக மிதந்து வந்து காப்பாற்றுவார் என்று தமிழர்கள் நாம்
காலங்காலமாய் நம்பிய கருணாநிதி, தமிழர்களையே பிணமாக்கிக் கட்டுக் கட்டாக அடுக்கிச்
சிங்களர்கள் எரித்தபொழுதும் மரம் போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால்,
இப்பொழுது அந்தக் காங்கிரசைக் கழற்றி விட்டுத் தேர்தலைச் சந்திக்க
வந்திருக்கிறார்.
அதே நேரம், ‘போர்
என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற,
அதுவரை உலகில் யாருக்குமே தெரியாத பேருண்மையை () நமக்கு உணர்த்த முயன்ற ஜெயலலிதா இன்று அனைத்து விதங்களிலும்
ஈழ ஆதரவாளராய் மாறி நிற்பதாகக் கூறுகிறார்!
சரி, தமிழர்
பிரச்சினைகள் அனைத்துக்காகவும் தொடக்கக் காலம் முதல் போராடி வரும் வை.கோ
அவர்களுக்கு வாக்களிக்கலாமா எனப் பார்த்தால் அவர் போட்டியிடுவதோ வெறும் எட்டே
தொகுதிகள்!
ஆகவே, இவர்களில் யாரை
நம்பி அல்லது யாரை எதிர்த்து எப்படியென வாக்களிப்பது என்பது இந்த நாடாளுமன்றத்
தேர்தலில் நம்மைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கியிருப்பதில் வியப்பில்லை. இந்தக்
குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டு தெளிவாக வாக்களிக்க நமக்குத் தேவை ஒரு பன்னோக்குத்
திட்டம் (Master Plan). ஏன், கட்சிகள் மட்டும்தான் கூட்டணி, வாக்கு
வங்கி எனப் பலவற்றையும் பற்றி ஆராய்ந்து திட்டமிட்டுத் தேர்தலைச் சந்திக்க
வேண்டுமா? வாக்காளர்களான நாமும் ஒவ்வொரு கட்சி, கூட்டணி பற்றியும் அவர்களின்
நிலைப்பாடு, கொள்கை, உறுதிமொழி, குறிப்பிட்ட பிரச்சினைகளில் அவர்களின் கடந்த கால
நடவடிக்கை, எதிர்காலப் போக்கு என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசி ஒரு முடிவுக்கு
வரலாம் வாருங்கள்!