விருது பெறுவதற்கு மட்டுமில்லை,
வழங்குவதற்கும் தகுதி என்பது வேண்டும். ஆனால், நம் தமிழ் ஆளுமைகள் அதைப்
பற்றியெல்லாம் துளியும் கவலைப்படுவதில்லை. யார், என்ன விருது கொடுத்தாலும்
வாங்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.
தமிழ் இனத்தையே அழித்தொழித்த இந்திய அரசு
தரும் விருதுகளை ஏற்க வேண்டாம் என எவ்வளவுதான் சொன்னாலும் யாரும் இங்கு காதில்
போட்டுக் கொள்வதாக இல்லை. அந்த வரிசையில் இப்பொழுது புதிதாகச் சேர இருக்கிறார்கள்,
காலமெல்லாம் “தமிழ்... தமிழ்...”
என்று பேசிக் கொண்டிருக்கிற கலைஞானியும் கவிப்பேரரசுவும்!
பத்மபூஷண் விருது அறிவிப்பு வந்த அதே
நாளேட்டில், அந்தச் செய்தியை ஒட்டியே இவர்களின் நன்றி அறிவிப்பும் வருகிறது!
அதுவும், அறிவிப்பில் ஓரிடத்தில் கூட நம் இனத்தையே கொடூரமாகப் பலி வாங்கியவர்களின்
கைகளால் இந்த விருது பெற இருக்கிறோமே என்கிற வருத்தம் அணுவளவும் இல்லாமல்!
ஈழத்தில் இந்தியா
செய்த அட்டூழியங்கள் எதுவும் இவர்களுக்குத் தெரியாதது இல்லை. ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை கொண்ட இந்திய அரசு, மாறாக அவர்களை அழிப்பதற்குத் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்தது!
- நேரடியாகவே பணமும் ராணுவத் தளவாடங்களும் வழங்கி உதவியது.
- தரைப்படைத் தளபதியை அனுப்பிப் போர் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தது.
- ரகசியமாக ஆயுதங்களும் அனுப்பியது.
- இனப்படுகொலையை நிறுத்த ஐ.நா மூலமாக மேற்குலக நாடுகள் செய்த முயற்சிகளைத் தன் அரசியல் செல்வாக்கால் முறியடித்தது.
- இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தோற்கடித்து இனப்படுகொலை நிற்காமல் தொடர வழிவகுத்தது.
- எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக, கடைசி நேரத்தில், முள்ளி வாய்க்கால் பேரழிப்புக்கு முன்பு அதைத் தடுக்க நேரடியாகவே அமெரிக்காவும் பிரிட்டனும் களமிறங்கத் தீர்மானித்திருந்த நேரத்தில் அதையும் நிறைவேற விடாமல் தடுத்து ஒரே நாளில் நாற்பதாயிரம் தமிழர்கள் மிகக் குரூரமாகச் சாக வகை செய்தது இந்தியா! (சான்று: விக்கிலீக்ஸ்).
இவ்வளவும் போதாதென்று, நடந்தது வெறும் போர் இல்லை. ஓர் இனத்தையே அழிப்பதற்காக நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று ஐ.நா விசாரணைக் குழு அறிவித்த பின்னும், இப்பொழுதும் தற்போதைய இந்திய அரசு இலங்கைக்குத்தான் ஆதரவாக நிற்கிறது! ஐ.நா விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை பற்றி ஐ.நா பாதுகாப்பு அவையில் விவாதித்து அதன் பேரில் முடிவெடுக்கலாம் என்று உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முதல் ஆளாக எதிர்ப்புத் தெரிவித்தது இந்திய அரசுதான்.
தமிழர்களுக்கு எதிராக இத்தனை உலக மகா அக்கிரமங்களையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற இந்திய அரசின் கையால் தங்கள்
தமிழ்சார் சாதனைகளுக்கான விருதைப் பெறுவதில் இவர்களுக்கு அப்படி என்ன பெருமை
இருக்க முடியும் என எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை! சராசரி மனிதர்களை விடப் பல
மடங்கு அறிவுக் கூர்மையும், திறமையும் படைத்த இவர்களுக்கு இந்த அடிப்படை முரண்பாடு
கூடவா தெரியவில்லை? தாங்கள் செய்த தமிழ்ச் சேவைக்கான விருதைத் தமிழர்களையே
அழித்தவர்களின் கையாலா பெறுவது என உள்ளத்தில் ஒரு சிறு வேதனை கூடவா இவர்களுக்கு
எழவில்லை? என்ன வகையான மொழி உணர்வு இது?!
சிலர் கேட்கலாம், “இது தனிப்பட்ட முறையில்
அவர்களின் திறமைகளைப் பாராட்டித் தரப்படும் விருதுதானே? இதற்கும் ஈழப்
பிரச்சினைக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்? ஏன் இவை இரண்டையும் நாம்
தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்”
என.
அப்படியில்லை நண்பர்களே!