பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும்
உரிய, தமிழினத்தின்
உண்மைத் தலைவர்களான வை.கோ, சீமான், பழ.நெடுமாறன்,
தமிழருவி மணியன், விடுதலை
இராசேந்திரன், கொளத்தூர்
மணி, பெ.மணியரசன், தோழர்
தியாகு ஆகியோருக்கும் சேவ் தமிழ்சு இயக்கம், மே பதினேழு இயக்கம், தமிழீழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகியோருக்கும் நேசமிகு வணக்கங்கள்!
ஈழப் பிரச்சினை பற்றியும் தமிழினத்தின்
இன்ன பிற பிரச்சினைகள் பற்றியும் நீங்கள் யாரும் நான் சொல்லித் தெரிந்துகொள்ள
வேண்டியதில்லை. ஆனால், நாடாளுமன்றத்
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் உங்களில் சிலருடைய நடவடிக்கையும் பேச்சும்
ஏற்படுத்தியுள்ள கவலையே இந்தக் கோரிக்கை மடலுக்குக் காரணம்! இது, ஞானப்பிரகாசன்
எனும் தனி மனிதனின் வேண்டுகோள் இல்லை; தலைவர்களான உங்களிடம்
உலகத் தமிழர்கள் அனைவர் சார்பிலும் முன்வைக்கப்படும் தேர்தல் நேரத்துப் பணிவார்ந்த
விண்ணப்பம்! எனவே, கனிவு
கூர்ந்து நீங்கள் அனைவரும் உங்கள் பொன்னான நேரத்தைச் சற்று ஒதுக்கி இதை
முழுமையாகப் படித்துப் பார்க்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
ஒரு புறம் பார்த்தால், மேலே
கண்டபடி, ஈழத்
தமிழர்களுக்காகப் பல தலைவர்களும் அமைப்புகளும் இன்று உண்மையாகப் போராடி வரும்
வேளையில், இவர்கள்
யார் கருத்தையும் கேட்காமல் தலைவர் வை.கோ அவர்கள் தனியாகப் போய் பா.ஜ.க-வுடன்
கூட்டணி பேசுகிறீர்கள்!
அவர் அங்கு போய்ச் சேர முதன்மைக்
காரணராக விளங்கிய ஐயா தமிழருவி மணியன் அவர்களோ, மேற்கொண்டு அந்தக்
கூட்டணியில் நீங்கள் சேர்க்க இருக்கும் கட்சிகள் பட்டியலில் மேற்படி உண்மைத்
தமிழுணர்வுக் கட்சிகள் எதையுமே குறிப்பிடாமல், இன்றும் காங்கிரசுடன்
கூட்டணி வைக்க அலையும் பா.ம.க-வையும் தே.மு.தி.க-வையும் போய்க்
குறிப்பிடுகிறீர்கள்!
அண்ணன் சீமான் அவர்களோ, “காங்கிரசு, பா.ஜ.க
ஆகியவற்றுடன் யார் கூட்டணி வைத்தாலும் துரத்தித் துரத்தித் தோற்கடிப்போம்” எனச் சூளுரைக்கிறீர்கள்!
கருணாநிதியைத் தமிழினத் தலைவனாகக்
காலங்காலமாக நம்பி இனத்தையே வாரிக் கொடுத்துவிட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு இந்தக்
காட்சிகள் எந்த அளவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவையாக இருக்கின்றன என்பதைத்
தலைவர்களே உங்களால் உணர முடிகிறதா?