ஒரு பழைய கணக்கெடுப்பின்படி, தமிழில் மொத்தம் 9,578 பிளாகர் வலைப்பூக்கள் இருப்பதாகச் சொல்கிறார் தலைசிறந்த தமிழ் வலைப்பதிவர்களுள் ஒருவரான நீச்சல்காரன் அவர்கள். (பார்க்க: சொடுக்குக). ஆனால் நான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம்’ என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம். (பெரிய கண்டுபிடிப்பு!).
தமிழில் எழுத வேண்டும் என விரும்பி முன்வந்திருக்கும் நம் பதிவுலகத் தோழர்கள் தங்கள் வலைப்பூ மொழியை மட்டும் ஆங்கிலத்தில் வைத்திருக்க முதற்பெரும் காரணம் பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி (Blogger Follower widget) என அழைக்கப்படும் கூகுள் ‘நண்பர் இணைப்பு’ச் செயலி (Google Friend Connect)!
சமூக வலைத்தளங்கள் வழியாகவும், திரட்டிகள் வாயிலாகவும் எத்தனை பேர் நம் வலைப்பூவைப் பின்தொடர்ந்தாலும் வலைப்பூவைப் பின்தொடர்வதற்கெனவே பிளாகர் வழங்கும் இந்தச் செயலி மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைதான் ஒரு வலைப்பூவின் அதிகாரப்பூர்வமான நேயர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது இன்றளவும். இதனால் இது பிளாகர் வலைப்பூக்களின் ஒரு மதிப்புக்குரிய அடையாளமாகிவிட்டது. மேலும், குறிப்பிட்ட வலைப்பூவை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தல், தான் தொடர்ந்து படிக்கும் மற்ற வலைப்பூக்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலுதல் என மற்ற பின்தொடர்ச் செயலிகளில் இல்லாத சில வசதிகளும் இதில் இருக்கின்றன.
இப்படிப் பல வகைகளிலும் முதன்மை பெறுகிற, பிளாகர் வலைப்பூக்களின் அதிகாரப்பூர்வப் பின்தொடர்ச் செயலியான இதை, நம் வலைப்பூவின் மொழி அமைப்பு ஆங்கிலத்தில் இருந்தால்தான் வலைப்பூவில் இணைக்க முடியும் என நம்பப்படுவதுதான் மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் வலைப்பூ மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கக் காரணம்.
ஆனால், இந்த நம்பிக்கை தவறானது! ‘பிளாகர் பின்பற்றுபவர்கள் செயலி’ தமிழிலும் கிடைக்கிறது! Yes! Blogger Follower widget is available in Tamil also.
அண்மையில், ஓரிரு பிளாகர் வலைப்பூக்களில் இந்தச் செயலி தமிழில் காட்சியளித்ததைக் கண்டு வியந்தேன். (பார்க்க masusila.com). பிளாகருக்குள் தேடிப் பார்த்தேன். பெருவியப்புக்குரிய வகையில் கிடைத்தே விட்டது! இதோ இனி, எப்படி நம் வலைப்பூவில் இந்தச் செயலியைத் தமிழில் நிறுவலாம் எனப் பார்க்கலாம்.