தொழில்நுட்பப் பதிவு எழுதுவதற்கு நான் ஒன்றும் பெரிய பிரபு கிருஷ்ணாவோ, அப்துல் பாசித்தோ, பொன்மலரோ கிடையாது. ஆனாலும், தமிழ்ப் பற்றாளன் எனும் முறையில் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட வேண்டிய தமிழ் சார்ந்த மாறுதல்களை எடுத்துச் சொல்ல எனக்குள்ள உரிமையால் இதை எழுதுகிறேன்.
நீங்கள் முகநூலைத் தமிழில் பயன்படுத்துபவரா?
அல்லது, நீங்கள் வலைத்தளம்/வலைப்பூ நடத்துபவரா? அப்படியானால், குறிப்பாக உங்கள்
கவனத்துக்காகத்தான் இந்தப் பதிவு! கனிவு கூர்ந்து முழுக்கப் படியுங்கள்!
அண்மையில், முகநூலின் ‘விருப்பம்’
பொத்தானில் ஏற்பட்டுள்ள ஒரு மாறுதலைத் தமிழில் முகநூல் பயன்படுத்தும் அனைவருமே
பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முகநூல் தமிழ்ப் பயனர்களுக்கு இத்தனை
நாட்களாக ‘விருப்பம்’ என்று காட்சியளித்து வந்த
முகநூல் பொத்தான், கடந்த சூலை 24ஆம் நாள் முதல் ‘பிடித்திருக்கிறது’ எனக்
காட்சியளிக்கிறது. இதனால் முகநூல் பொத்தான்கள் அனைத்திலும் ஒரு சிக்கல்
ஏற்பட்டுள்ளது!