.

வெள்ளி, ஜூன் 21, 2013

மணிவண்ணனும் பாப்லோ நெருடாவும்




மணிவண்ணன்! தமிழ்த் திரையுலகின் ‘நையாண்டி நாயகர்! படைப்பு, நடிப்பு, அரசியல் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்! உண்மையான கலைஞர்! உண்மையான மனிதர்!

தீவிரமான கருத்துக்களைக் கூட நகைச்சுவை கலந்து எடுத்துச் சொல்லும் அங்கதச் சுவையை மணிவண்ணனுக்கு முன்பே தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தி விட்டார் சோ அவர்கள். ஆனால், அவருடைய அந்த அற்புதமான ‘முகமது பின் துக்ளக் திரைப்படம் முழுத் தோல்வியைத்தான் அடைந்தது. அதனாலேயே அதன் பிறகு, அப்படிப்பட்ட படங்களை எடுக்க சோ மட்டுமின்றி, யாருமே முன்வரவில்லை. ஆனால், அதே பாணியைத் தான் கையிலெடுத்துப் பெரும் வெற்றியைச் சாதித்துக் காட்டிய மணிவண்ணன் அவர்கள் தமிழ்த் திரையுலகுக்கு அங்கதச்சுவைக்கான புது வாசலைத் திறந்துவிட்டவர் என்றால் அது மிகையாகாது. ‘அமைதிப்படை அதன் உச்சம்!

அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என்று இவர் கதை, உரையாடல் எழுதிய திரைப்படங்களோ என்றுமே நம் நினைவை விட்டு நீங்காத காவியப் படைப்புகள்!

இப்படி, படைப்பாளியாகச் சாதித்தவை போதாதென்று நடிகராகவும் இவர் பதித்த முத்திரைகள் ஏராளம்! அப்பாவாக நடித்தால் அப்பா, அண்ணனாக நடித்தால் அண்ணன், வில்லனாக நடித்தால் கிலியூட்டும் வில்லன் என்று தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் அந்தந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தார் மணிவண்ணன்! இத்தனைக்கும், பெரும்பாலான படங்களில் இவர் கதாப்பாத்திரத்துக்குப் பெயரே இருக்காது. ஆனாலும், பெயரில்லாத அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முள் ஏற்படுத்திய தாக்கம் மறக்க இயலாதது! அதற்குக் காரணம், அவருடைய வெகு இயல்பான உடல்மொழி. அப்பாவாக வந்தால், நம்முடைய அப்பா நம்மிடம் எப்படிப் பேசுவாரோ அதே உடல்மொழியில் பேசினார்; அண்ணன், குடும்ப எதிரி என அனைத்திலும் அப்படியே! நினைத்துப் பாருங்கள், ‘காதலுக்கு மரியாதை படத்தில் வரும் நண்பனின் அப்பாவையோ, ‘முகவரி படக் கடைக்கார அண்ணனையோ என்றைக்காவது நம்மால் மறக்க முடியுமா?

பெரிய கதாநாயகர்களின் படங்களில் கூட, அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என நம்மால் ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால், மணிவண்ணன் அவர்களின் கதாபாத்திரங்களில் அவருக்குப் பதிலாக மற்றொருவரை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! அதுதான் மணிவண்ணனின் சிறப்பு! எனக்குத் தெரிந்து, பழம்பெரும் நடிகர் பாலையா அவர்களுக்குப் பிறகு, மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த குணச்சித்திர நடிகர் மணிவண்ணனாகத்தான் இருப்பார்!

“அட இதெல்லாம் எங்களுக்குத் தெரியாததா என்ன? தலைப்பில் ஏதோ பாப்லோ நெருடாவையெல்லாம் வம்புக்கிழுத்திருக்கிறாயே, அது என்ன சங்கதி? என்கிறீர்களா? பொறுங்கள் பொறுங்கள்! அடுத்து அதைத்தான் சொல்ல வருகிறேன்.

மணிவண்ணனை விடத் திறமையான படைப்பாளிகள், சிறப்பான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால், அவரைப் போல உண்மையான கலைஞர்கள் இருக்கிறார்களா என்றால்... என் கண்களுக்குத் தென்பட்ட வரை அப்படி யாரும் இல்லை. (அண்ணன் சீமான், கவிஞர் தாமரை போன்றோர் விதிவிலக்குகள்).

ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், ஒரு கலைஞருக்குண்டான முதல் தகுதி ‘சமூகப் பொறுப்பு! அது வேறு யாருக்கு இருக்கிறதோ இல்லையோ கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும்! காரணம், அவர்கள்தாம் சமூகத்துக்குக் கருத்து சொல்லும் இடத்தில் இருப்பவர்கள். உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளான பாப்லோ நெருடா, பெர்னாட்ஷா முதலான பலரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இது. இவர்கள் வெறும் படைப்பாளிகளாக மட்டும் தங்கள் வாழ்வைக் கழிக்காமல், தம் சிந்தனைகளையும் புரட்சிக் கருத்துக்களையும் தங்கள் படைப்புகளில் மட்டும் வெளிப்படுத்துபவர்களாக இல்லாமல் வெளியேயும் பேசினார்கள். தங்கள் சமூகமும், மக்களும் பாதிக்கப்பட்டபொழுது அதைக் கண்டித்து வெளிப்படையாகக் குரல் கொடுத்தார்கள். தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சரியான தலைவரை மக்களுக்கு அடையாளம் காட்டினார்கள்.

உண்மையான கலைஞருக்குண்டான இந்தப் பண்புகளை, அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது கொண்டிருந்த ஒரே தமிழ்க் கலைஞர் மணிவண்ணன் அவர்கள்! அண்மையில், தமிழீழம் கோரித் தமிழ்நாடு முழுவதும் இளைஞர் படை கொந்தளித்து எழுந்தபொழுது, காலம் காலமாகத் தமிழ், தமிழ் எனப் பேசிக்கொண்டிருக்கும் கமலோ, உலகத் தரம் மிகுந்த சமூக அக்கறைப் படங்களைத் தொடர்ந்து வழங்கும் ஷங்கரோ, சமூக நலன் சார்ந்த படங்களை எடுப்பதில் முன்னோடியான பாலசந்தரோ, இந்த மண்ணின் இயக்குநர் எனப் புகழப்படும் பாரதிராஜாவோ... யாருமே வாய் திறக்காத அந்தச் சூழ்நிலையில் முதல் ஆளாக முன்வந்து அந்த மாணவப் புலிகளை ஆதரித்தார் மணிவண்ணன்.

தொலைக்காட்சிகள், இன்ன பிற பொதுமேடைகள் என்று அனைத்திலும் மாணவர்களின் இந்தப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துப் பேசினார்! அவர்களின் போராட்டமுறைகளில் இருந்த சிறு சிறு குறைகளை எடுத்துச் சொல்லி, முன்னோடி என்ற முறையில் அவர்களுக்கு வழிகாட்டினார்! மேலே நாம் பார்த்த மேல்நாட்டுப் படைப்பாளிகளைப் போல் சமூகப் பொறுப்புள்ள உண்மையான கலைஞராகத் தன் கடமையை நிறைவேற்றினார்!

இப்பொழுதுதான் என்றில்லை, எப்பொழுதுமே மணிவண்ணன் இப்படித்தான். இன்றைக்குப் போலில்லாமல், தமிழ்ப் பற்றாளர்கள் என்றாலே கருணாநிதி ஆதரவாளர்கள்தான் என்ற நிலைமை உலகத் தமிழ்ச் சமூகமெங்கும் நிலவிய தொண்ணூறுகளிலேயே கருணாநிதிக்கு மாற்றாக வை.கோ-வை அடையாளம் காட்டியவர் மணிவண்ணன்! அதன் பிறகு, இன்றைய சூழலுக்கான சரியான அரசியல் தேர்வாகச் சீமானை இனங்காட்டவும் அவர் தவறவில்லை!

இப்படி, சிறப்பான படைப்பாளியாக, அருமையான நடிகராக, உண்மையான கலைஞராகத் திகழ்ந்த மணிவண்ணன் இடையில் உடல்நலம் குன்றியிருந்த சிலகாலம் தவிர, கடைசி வரை திரையுலகிலும், அரசியலிலும் இயங்கிக் கொண்டிருந்தார். இளைஞர்களுக்கான அரசியல் வழிகாட்டியாக இன்னும் அவருடைய தேவை தீர்ந்தபாடில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் மறைந்திருப்பது தமிழ்ச் சமூகத்துக்கு உண்மையிலேயே பெரிய இழப்பு!

அவரைப்போலவே உணர்வுள்ள தமிழராக, உண்மையான கலைஞராக, சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியாக வாழ்வதும், ஈழப் பிரச்சினை முதலான தமிழர் பிரச்சினைகளில் அவர் காட்டிய வழியைக் கடைப்பிடிப்பதும்தான் அந்தச் சிறந்த மனிதருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!

ஞாயிறு, ஜூன் 16, 2013

பண்பு முன்னேற்றம்! - மனித இனம் விரும்பாத ஒரே முன்னேற்றம்!


Character Development

முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் உலகில் யாருமே கிடையாது. நாம் எல்லோருமே முன்னேற்றத்தை விரும்புகிறோம். ஆனால், அதை எல்லாவற்றிலும் விரும்புகிறோமா?...

இல்லை! ஒன்றே ஒன்றில் மட்டும் நாம் ஒருபோதும் முன்னேற்றத்தை விரும்புவதில்லை. அதுதான் ‘பண்பு நலன்!

எதையுமே போதும் என நினைக்காத மனித உள்ளம், தன்னிடம் இருக்கும் நல்ல பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் மட்டும் ஒருபோதும் அப்படி நினைப்பதே கிடையாது. இருப்பதே போதும், இந்த அளவுக்கு நல்லவனாக வாழ்வதே பெரிது எனத்தான் எப்பொழுதும் நினைக்கிறான் மனிதன்.

ஒப்பிடும்பொழுது கூட, “ஊர்ல அவனவன் எப்படியெப்படியோ இருக்கான். நாம எவ்வளவோ தேவலாம் என்பதுதான் எப்பொழுதுமே நம்மைப் பற்றிய நமது நினைப்பு. ஏன், நம்மை விட நல்லவர்கள் யாருமே இல்லையா? அவர்களோடு ஏன் நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது? அப்படி ஒப்பிட்டால் நாம் கெட்டவனாகி விடுவோமே! நமக்கு எப்பொழுதும், நம்மை நல்லவனாகக் காட்டிக் கொள்ளத்தான் விருப்பமே தவிர, நல்லவனாக ஆவதில் விருப்பம் இல்லை.

நேர்மை, அடக்கம், உதவும் தன்மை, விட்டுக் கொடுத்தல், சமூகச் சேவை என எத்தனையோ நற்பண்புகள் இருக்கின்றன, வாழ்வில் கடைப்பிடிக்க. ஆனால் நாமோ, நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதை விடக் கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே போதும், நாம் நல்லவர்தான் என நினைத்துக் கொள்கிறோம். போதும் எனும் மனப்பான்மை நமக்கு இது ஒன்றில்தான் வாய்த்திருக்கிறது!

இந்த ஒன்றைத் தவிர, வாழ்வில் வேறு எதையாவது நாம் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் அணுகுகிறோமா என்றால், இல்லை!

இன்று ஆறு மாடி வீடு கட்டி ஆடி காரில் போனாலும், பத்து மாடி வீடும் பென்சு காருமாக வாழ்பவரோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம். இன்றைக்கு ஒரு மாநிலத்துக்கே முதல்வராக இருந்தாலும், நாளைக்குப் பிரதமர் நாற்காலியை அடைவது எப்படி என்றுதான் சிந்திக்கிறோம். அதுவும் வந்து விட்டால், அடுத்து ஒபாமா போல உலகளவிலான பெரும்புள்ளியாவது எப்பொழுது என்றுதான் ஏங்குகிறோம்.

இப்படிப் படிப்பு, பணம், பதவி, பட்டம், பெயர், புகழ் என எல்லாவற்றிலும், எப்பொழுதும் நம்மை விட மேலே இருப்பவர்களோடு மட்டுமே நம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் நாம் (Superior Comparison), இருப்பது போதாது இன்னும் இன்னும் வேண்டும் என விரும்பும் நாம், ‘பண்பு நலன் (Character) என வரும்பொழுது மட்டும், எப்பொழுதும் நம்மை விடக் கீழே இருப்பவர்களோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம் (Inferior Comparison); இருப்பதே போதும் எனத்தான் நினைக்கிறோம்.

அதனால்தான், கற்காலம் முதல் தற்காலம் வரையான இந்த நீண்ட நெடிய வரலாற்றில், மக்களின் சிந்தனைத் திறன், செயல் திறன், வாழ்க்கை முறை, வசதி வாய்ப்புக்கள் என எல்லாமே வளர்ந்திருந்தும் பண்பு நலனில் மட்டும் பெரிய முன்னேற்றம் இல்லை.Computer Era Barbarians 

அடுத்தவரைத் துன்புறுத்துவது, தனக்குப் பிடித்தது அடுத்தவர் பொருளாக இருந்தாலும் அடையத் துடிப்பது, விருப்பமில்லாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைய முயல்வது, பிறர் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வது என விலங்குத்தனமான (விலங்குகள் மன்னிக்க!) எல்லாப் பண்புகளும் இன்றும் மனிதனிடம் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. காரணம், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை விரும்பும் நமக்கு இதில் மட்டும் முன்னேற விருப்பமே இல்லாதிருப்பதுதான்!

இந்த உளப்போக்குதான் நம் சமூக அவலங்கள் அனைத்துக்குமே காரணம் எனச் சொன்னால் அது மிகையாகாது.

சனி, ஜூன் 08, 2013

சிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்



Poontalir - Tamil Children Magazine
ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டுமானால் அது தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்ந்துகொண்டே வேண்டும். ஆனால் நாம், அடுத்த தலைமுறையினரான குழந்தைகளுக்கு நம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பதில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறோம் எனப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது! அதில் நாம் முழுத் தோல்வி அடைந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்! 

ஒரு மொழியின் அடிப்படை வடிவமே அதன் எழுத்து வடிவம்தான். மொழியை அப்படிப்பட்ட எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்துக்கு அடுத்தபடியாக முதன்மைப் பங்கு வகிப்பது 'சிறுவர் இலக்கியம்'! அப்பேர்ப்பட்ட சிறுவர் இலக்கியத்துறை இன்று தமிழில் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஏறத்தாழப் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுவர் இதழ்கள் தமிழ்நாட்டில் விற்றுக் கொண்டிருந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழில் சிறுவர் இதழ் நடத்துவது என்பது நல்ல இலாபமீட்டக்கூடிய ஒரு தொழிலாக இருந்தது. ஆனால் இன்று, பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுகிற ஓரிரு சிறுவர் இதழ்களைத் தவிர மற்ற அனைத்தும் முற்றிலும் அழிந்து விட்டன. இருக்கிற அந்த ஓரிரு இதழ்கள் கூடச் சேவை மனப்பான்மையில், வீழ்ச்சியில்தான் இயங்குகின்றன. சிறுவர்களுக்கான இதழ்த்துறையே இப்படி என்றால் பதிப்புத்துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்ப் பதிப்பகங்கள் குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டு வந்தன. ஆனால், இன்று அப்படி ஒரு முயற்சியே இல்லை. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியிட்ட சிறார் நூல்களே இன்னும் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. 

அடுத்த தலைமுறைக்கு மொழியையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமான சிறுவர் இலக்கியத்தின் இந்த மாபெரும் வீழ்ச்சி தமிழ் மொழிக்கே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து! 

எப்படியெனில், தமிழின் முன்னணி இதழ்கள் இன்றும் பல்லாயிரக்கணக்கில் விற்கின்றன என்றால், ஆண்டுதோறும் நூல் கண்காட்சியில் இலட்சக்கணக்கான தமிழ் நூல்கள் விற்பனையாகின்றன என்றால் அதற்குக் காரணமே இன்றும் மக்களிடையே காணப்படும் படிக்கும் பழக்கம்தான். இந்தப் படிக்கும் பழக்கம் என்பது சிறு வயதிலேயே ஏற்பட்டால்தான் உண்டு. ஏனெனில், பொழுதுபோக்குகளிலேயே மிகவும் கடினமான பொழுதுபோக்கு படித்தல்தான். மற்ற எல்லாப் பொழுதுபோக்குகளையும் விடக் கவர்ச்சி குறைவான, ஆனால் பொறுமை கூடுதலாகத் தேவைப்படுகிற பொழுதுபோக்கு இது. அப்படிப்பட்ட பொறுமையையும், எழுத்தின் மீதான ஈர்ப்பையும், இலக்கிய ரசனையையும் சிறு வயதிலேயே மக்கள் உள்ளங்களில் ஊட்டும் அரும் தொண்டைத்தான் சிறுவர் இலக்கிய உலகம் வெற்றிகரமாகச் செய்து வந்தது. இளைஞர் முதல் முதியவர் வரை, இன்றைய மக்கள் அனைவரும் சிறுவர்களாயிருந்தபொழுதே இப்படிச் சிறுவர் இதழ்கள் அவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதால்தான் அவர்கள் பெரியவர்களான பின் இன்றும் படிக்கும் பழக்கம் அவர்களிடம் இருக்கிறது. சுருங்கச் சொன்னால், தமிழ்ச் சமூகத்தில் இன்றும் படிக்கும் பழக்கம் அழியாமலிருக்கக் காரணமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறைதான். ஆனால், இன்றைக்கு அந்தத் துறையே இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அடைந்திருக்கும் சூழலில், இன்றைய தமிழ்ச் சிறுவர்களிடம் படிக்கும் பழக்கம் இந்த அளவுக்கு அருகியிருக்கும் நிலையில், இன்றைக்குச் சிறுவர்களாக இருக்கும் இவர்கள்தாம் நாளைய தமிழ்ச் சமுதாயம் என்பதால், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் படிக்கும் பழக்கமும் இதே அளவுக்குக் குறைந்து போகும் என்பது தெளிவு. இன்றைக்கு இலட்சக்கணக்கில் விற்கும் முன்னணி இதழ்களெல்லாம் அப்பொழுது இன்றைக்குச் சிறுவர் இதழ்கள் அடைந்திருக்கும் அளவுக்குக் கடும் வீழ்ச்சியை அடையக் கூடும்! தமிழ் இதழ்த்துறையே இப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை அடைந்தால் அதை விட வீச்சுக் குறைந்த தமிழ்ப் பதிப்பகத்துறை என்னாகும் எனச் சொல்ல வேண்டியதில்லை!

மொழியின் அடிப்படை வடிவமான எழுத்து வடிவத்தையும் அதன் பேரிலான ரசனையையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரே ஊடகமான அச்சு ஊடகம் இப்படி அழிவது அந்த மொழியே அழிவதற்கு நிகராகும். அதுவும் தமிழைப் பொறுத்தவரை, தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயன்படுவதே ஒரே ஒரு வகையில்தான்; அதாவது படிப்பதற்கு! தமிழ் இதழ்களையும், நூல்களையும், இணையத்தளங்களையும் படிப்பதற்கு மட்டும்தான் தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயனாகிறது. எழுத்தாளர்கள், ஊடகத்தார்கள், எழுத்தார்வமுடைய சில தனியாட்கள் ஆகிய சிலரைத் தவிர, மற்றபடிப் பொதுமக்கள் யாரும் தமிழின் எழுத்து வடிவத்தை இன்று எழுதுவதற்குப் பயன்படுத்துவதில்லை. அதற்கான தேவையும் நம் சமூகத்தில் இல்லை. 

இந்நிலையில் இதழ்த்துறை, பதிப்பகத்துறை எனத் தமிழ் அச்சு ஊடகத்துறை இப்படி ஒட்டுமொத்தமாக அழிந்து போனால், தமிழின் எழுத்து வடிவத்துக்குப் பொதுமக்களிடையே இருக்கும் ஒரேயொரு பயன்பாடான படிக்கும் பயன்பாடும் இல்லாமல் போய்விட்டதாகப் பொருளாகும். இப்படித் தமிழின் எழுத்து வடிவம் பயன்பாடற்றுப் போனால், அஃது எழுத்துத் தமிழே அழிந்து போனதற்கு இணையாகும். எழுத்துத் தமிழ் ஊடகமும், எழுத்துத் தமிழுமே இப்படி அழிந்து போனால், அதன் பின் வெறும் பேச்சுத் தமிழ் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவை மட்டும் எத்தனை நாட்களுக்கு நிலைத்து விட முடியும் என்பதை மக்களும் அந்தந்த ஊடகத்தினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! 

இற்றை நாளில் தமிழ் பயன்படுவதே வெறும் ஊடக நுகர்ச்சிக்குத்தான்! அறிவியல், தொழில், வணிகம் என எல்லாத் துறைகளிலும் இங்கு ஆங்கிலமே கோலோச்சும் நிலையில் தமிழ் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிகளுமே இன்று வெறும் ஊடக மொழிகளாகப் போய்விட்டன! அப்படியிருக்க, அந்த ஊடகத்துறையும் தமிழில் இப்படி அழிந்து போனால் அது தமிழ்மொழியே அழிந்து விட்டதற்கு ஒப்பாகும். எனவே, எல்லாவற்றுக்கும் அடிப்படையாகத் திகழும் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையைப் புனரமைக்கும் பணியில் உடனடியாகத் தமிழுலகம் இறங்கியாக வேண்டிய நேரம் இது! 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு முதலானவை இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சங்கத்தினர், எழுத்தாளர்கள், இதழ்த்துறையினர், திரைப்படத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும்!

என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால்:

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்