.

சனி, ஜூன் 08, 2013

சிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்Poontalir - Tamil Children Magazine
ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டுமானால் அது தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்ந்துகொண்டே வேண்டும். ஆனால் நாம், அடுத்த தலைமுறையினரான குழந்தைகளுக்கு நம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பதில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறோம் எனப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது! அதில் நாம் முழுத் தோல்வி அடைந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்! 

ஒரு மொழியின் அடிப்படை வடிவமே அதன் எழுத்து வடிவம்தான். மொழியை அப்படிப்பட்ட எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்துக்கு அடுத்தபடியாக முதன்மைப் பங்கு வகிப்பது 'சிறுவர் இலக்கியம்'! அப்பேர்ப்பட்ட சிறுவர் இலக்கியத்துறை இன்று தமிழில் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஏறத்தாழப் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுவர் இதழ்கள் தமிழ்நாட்டில் விற்றுக் கொண்டிருந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழில் சிறுவர் இதழ் நடத்துவது என்பது நல்ல இலாபமீட்டக்கூடிய ஒரு தொழிலாக இருந்தது. ஆனால் இன்று, பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுகிற ஓரிரு சிறுவர் இதழ்களைத் தவிர மற்ற அனைத்தும் முற்றிலும் அழிந்து விட்டன. இருக்கிற அந்த ஓரிரு இதழ்கள் கூடச் சேவை மனப்பான்மையில், வீழ்ச்சியில்தான் இயங்குகின்றன. சிறுவர்களுக்கான இதழ்த்துறையே இப்படி என்றால் பதிப்புத்துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்ப் பதிப்பகங்கள் குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டு வந்தன. ஆனால், இன்று அப்படி ஒரு முயற்சியே இல்லை. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியிட்ட சிறார் நூல்களே இன்னும் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. 

அடுத்த தலைமுறைக்கு மொழியையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமான சிறுவர் இலக்கியத்தின் இந்த மாபெரும் வீழ்ச்சி தமிழ் மொழிக்கே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து! 

எப்படியெனில், தமிழின் முன்னணி இதழ்கள் இன்றும் பல்லாயிரக்கணக்கில் விற்கின்றன என்றால், ஆண்டுதோறும் நூல் கண்காட்சியில் இலட்சக்கணக்கான தமிழ் நூல்கள் விற்பனையாகின்றன என்றால் அதற்குக் காரணமே இன்றும் மக்களிடையே காணப்படும் படிக்கும் பழக்கம்தான். இந்தப் படிக்கும் பழக்கம் என்பது சிறு வயதிலேயே ஏற்பட்டால்தான் உண்டு. ஏனெனில், பொழுதுபோக்குகளிலேயே மிகவும் கடினமான பொழுதுபோக்கு படித்தல்தான். மற்ற எல்லாப் பொழுதுபோக்குகளையும் விடக் கவர்ச்சி குறைவான, ஆனால் பொறுமை கூடுதலாகத் தேவைப்படுகிற பொழுதுபோக்கு இது. அப்படிப்பட்ட பொறுமையையும், எழுத்தின் மீதான ஈர்ப்பையும், இலக்கிய ரசனையையும் சிறு வயதிலேயே மக்கள் உள்ளங்களில் ஊட்டும் அரும் தொண்டைத்தான் சிறுவர் இலக்கிய உலகம் வெற்றிகரமாகச் செய்து வந்தது. இளைஞர் முதல் முதியவர் வரை, இன்றைய மக்கள் அனைவரும் சிறுவர்களாயிருந்தபொழுதே இப்படிச் சிறுவர் இதழ்கள் அவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதால்தான் அவர்கள் பெரியவர்களான பின் இன்றும் படிக்கும் பழக்கம் அவர்களிடம் இருக்கிறது. சுருங்கச் சொன்னால், தமிழ்ச் சமூகத்தில் இன்றும் படிக்கும் பழக்கம் அழியாமலிருக்கக் காரணமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறைதான். ஆனால், இன்றைக்கு அந்தத் துறையே இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அடைந்திருக்கும் சூழலில், இன்றைய தமிழ்ச் சிறுவர்களிடம் படிக்கும் பழக்கம் இந்த அளவுக்கு அருகியிருக்கும் நிலையில், இன்றைக்குச் சிறுவர்களாக இருக்கும் இவர்கள்தாம் நாளைய தமிழ்ச் சமுதாயம் என்பதால், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் படிக்கும் பழக்கமும் இதே அளவுக்குக் குறைந்து போகும் என்பது தெளிவு. இன்றைக்கு இலட்சக்கணக்கில் விற்கும் முன்னணி இதழ்களெல்லாம் அப்பொழுது இன்றைக்குச் சிறுவர் இதழ்கள் அடைந்திருக்கும் அளவுக்குக் கடும் வீழ்ச்சியை அடையக் கூடும்! தமிழ் இதழ்த்துறையே இப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை அடைந்தால் அதை விட வீச்சுக் குறைந்த தமிழ்ப் பதிப்பகத்துறை என்னாகும் எனச் சொல்ல வேண்டியதில்லை!

மொழியின் அடிப்படை வடிவமான எழுத்து வடிவத்தையும் அதன் பேரிலான ரசனையையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரே ஊடகமான அச்சு ஊடகம் இப்படி அழிவது அந்த மொழியே அழிவதற்கு நிகராகும். அதுவும் தமிழைப் பொறுத்தவரை, தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயன்படுவதே ஒரே ஒரு வகையில்தான்; அதாவது படிப்பதற்கு! தமிழ் இதழ்களையும், நூல்களையும், இணையத்தளங்களையும் படிப்பதற்கு மட்டும்தான் தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயனாகிறது. எழுத்தாளர்கள், ஊடகத்தார்கள், எழுத்தார்வமுடைய சில தனியாட்கள் ஆகிய சிலரைத் தவிர, மற்றபடிப் பொதுமக்கள் யாரும் தமிழின் எழுத்து வடிவத்தை இன்று எழுதுவதற்குப் பயன்படுத்துவதில்லை. அதற்கான தேவையும் நம் சமூகத்தில் இல்லை. 

இந்நிலையில் இதழ்த்துறை, பதிப்பகத்துறை எனத் தமிழ் அச்சு ஊடகத்துறை இப்படி ஒட்டுமொத்தமாக அழிந்து போனால், தமிழின் எழுத்து வடிவத்துக்குப் பொதுமக்களிடையே இருக்கும் ஒரேயொரு பயன்பாடான படிக்கும் பயன்பாடும் இல்லாமல் போய்விட்டதாகப் பொருளாகும். இப்படித் தமிழின் எழுத்து வடிவம் பயன்பாடற்றுப் போனால், அஃது எழுத்துத் தமிழே அழிந்து போனதற்கு இணையாகும். எழுத்துத் தமிழ் ஊடகமும், எழுத்துத் தமிழுமே இப்படி அழிந்து போனால், அதன் பின் வெறும் பேச்சுத் தமிழ் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவை மட்டும் எத்தனை நாட்களுக்கு நிலைத்து விட முடியும் என்பதை மக்களும் அந்தந்த ஊடகத்தினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! 

இற்றை நாளில் தமிழ் பயன்படுவதே வெறும் ஊடக நுகர்ச்சிக்குத்தான்! அறிவியல், தொழில், வணிகம் என எல்லாத் துறைகளிலும் இங்கு ஆங்கிலமே கோலோச்சும் நிலையில் தமிழ் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிகளுமே இன்று வெறும் ஊடக மொழிகளாகப் போய்விட்டன! அப்படியிருக்க, அந்த ஊடகத்துறையும் தமிழில் இப்படி அழிந்து போனால் அது தமிழ்மொழியே அழிந்து விட்டதற்கு ஒப்பாகும். எனவே, எல்லாவற்றுக்கும் அடிப்படையாகத் திகழும் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையைப் புனரமைக்கும் பணியில் உடனடியாகத் தமிழுலகம் இறங்கியாக வேண்டிய நேரம் இது! 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு முதலானவை இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சங்கத்தினர், எழுத்தாளர்கள், இதழ்த்துறையினர், திரைப்படத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும்!

என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால்:

 • புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பெரியவர்களுக்காக மட்டும் எழுதாமல் சிறுவர்களுக்காகவும் எழுத முன்வர வேண்டும். குறிப்பாகச் சிறுவர் இதழ்களில் எழுத முன் வர வேண்டும். இவ்வளவு பெரிய எழுத்தாளர் சிறுவர் இதழில் எழுதுகிறாரே என வியந்து முதலில் பெரியவர்கள் படிக்கத் தொடங்கிப் பின் பிள்ளைகளையும் படிக்கத் தூண்டுவார்கள்.

 • இதே போல் எழுத்துத் திறமையுள்ள தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் முதலானோரும் சிறுவர்களுக்காக எழுத முன் வர வேண்டும். 

 • தமிழ் மொழியின் அருமை பெருமைகளை, தனித்தன்மைகளைச் சிறுவர்களுக்குப் புரியும்படியும் அவர்கள் விரும்பும் வகையிலும் எளிமையாக எழுதத் தமிழறிஞர்கள் முன் வர வேண்டும். இதனால் சிறுவர்களுக்குப் பிஞ்சுப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது மதிப்பும், ஈர்ப்பும் ஏற்படும். 

 • தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சிறுவர் இதழ்களையும், நூல்களையும் வீடுகள்தோறும், பள்ளிகள்தோறும் கொண்டு சென்று பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். யாரும் இந்தக் காலத்தில் பிள்ளைகளுக்குக் கதை சொல்வதில்லை. எனவே, தமிழ் ஆர்வலர்கள் சிறார்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களுக்குக் கதை சொல்லி, கதை கேட்பதிலும், கதை படிப்பதிலும் உள்ள சுவையை -கதைச்சுவையை- முதலில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பின், அப்படிப்பட்ட கதைகளைத் தொடர்ந்து படிக்கச் சிறார் இதழ்களும், நூல்களும் உதவும் என அவர்களுக்குப் புரிய வைத்து அவற்றைப் படிக்க அவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும். சிறுவர் இலக்கியம் படிப்பதால் குழந்தைகளின் கற்பனைத்திறன் வளர்வதையும், அதனால் அவர்களின் அறிவுத்திறன் (I.Q) உயர்வதையும் பெற்றோர்களிடம் ஆதாரப்பூர்வமாக விளக்கிச் சிறுவர் இதழ்களையும், நூல்களையும் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து வாங்கிக் கொடுக்கும்படி வலியுறுத்த வேண்டும். இன்றைய இளைஞர்கள் நல்ல தொண்டுள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகள் நிறையப் பெருகி இருக்கின்றன. இவற்றை நடத்துபவர்கள் பெரும்பாலும் சாதாரண நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள்தாம். அப்பேர்ப்பட்டவர்கள், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட படிப்பு இன்றி மாணவச் சமூகத்தின் வளர்ச்சி முழுமையடையாது என்பதையும், அப்படிப்பட்ட படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துவதும் ஒரு வகையில் கல்வித் தொண்டுதான் என்பதையும் உணர்ந்து மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபட முன் வர வேண்டும். குழந்தைகளிடம் தமிழைக் கொண்டு சேர்ப்பதுதான் இன்றைய நாளில் தலையாய தமிழ்த் தொண்டு என்பதை இளைஞர்கள் மட்டுமின்றித் தமிழார்வலர்களும் உணர வேண்டியது இன்று இன்றியமையாதது. 

 • தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டங்களில் அடிக்கடிக் கலந்து கொண்டு, குழந்தைகள் சிறுவர் இலக்கியம் படிப்பது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் உளவியல் நலனுக்கும் எந்த அளவுக்கு நலம் பயக்கும் என்பதை விளக்க வேண்டும். குழந்தைகள் கதை படிப்பது தேவையற்றது, பயனற்றது, நேர விரயம் எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கொண்டிருக்கும் பொதுக் கருத்தை மாற்ற வேண்டும். இதற்காகப் புகழ் பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், குழந்தை உளவியலாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அழைத்து வந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடையே பேச வைக்க வேண்டும். 

 • முன்பெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களே நாடகம் போடுவது வழக்கமாக இருந்தது. இப்பொழுது மறைந்து விட்ட அந்தப் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரச் சொல்லிப் பள்ளி முதல்வர்களிடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் முதலானவை வலியுறுத்த வேண்டும். பெரியவர்களை வைத்து நடத்துவது போல் பள்ளிகள்தோறும் சென்று குழந்தைகளிடையேயும் தமிழ் மாநாடுகள் நடத்த வேண்டும். 

 • இன்று சிறுவர்களின் தலையாய பொழுதுபோக்காகத் திகழ்வது காணொலி விளையாட்டு (வீடியோ கேம்). அவற்றைத் தமிழில் தயாரிக்கத் தமிழார்வமுடைய மென்பொருள் நிறுவனங்கள் முன் வர வேண்டும். தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி என எல்லா வகையிலான காணொலி விளையாட்டுகளும் தமிழிலும் இலவசமாக வெளியிடப்பட வேண்டும். இவை தமிழில் இருப்பது மட்டுமின்றித் தமிழ் ஆர்வத்தையும் தமிழ் மொழி பற்றிய பெருமிதத்தையும் பிள்ளைகள் உள்ளத்தில் ஊட்டுவதாக அமைய வேண்டும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள் என்பதால் இந்தத் தமிழ்க் காணொலி விளையாட்டுகளுக்கு மிகப்பெரும் சந்தை உருவாகும் என நம்பலாம். 

 • இன்று நகரங்களில் வாழும் குழந்தைகள் பலர் இணையத்தில் நிறைய நேரத்தைச் செலவிடுகின்றனர். எனவே, சிறுவர்களுக்கான தமிழ் இணையத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவை குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், அதே நேரம் அவர்களுடைய கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும் உதவும் வகையிலும் திகழ வேண்டும். 

 • இதழ்த்துறையினர், சிறுவர் நூல்களும் சிறுவர்களுக்கான தமிழ்க் காணொலி விளையாட்டுகள் கிடைக்கும் இணையத்தளங்களும் பற்றிய விளம்பரங்களை ஆகக் குறைந்த கட்டணத்திலோ முடிந்தால் இலவசமாகவோ வெளியிட முன் வர வேண்டும். 

 • தமிழ் வானொலிகள், தமிழ்த் தொலைக்காட்சிகள் ஆகியவை, சிறுவர் இலக்கியத்துறை நல்ல நிலையில் இருந்தால்தான் வருங்காலத்தில் தாங்கள் இருக்க முடியும் என்பதை உணர்ந்து சிறுவர் இதழ்கள், சிறுவர் நூல்கள், சிறுவர்களுக்கான தமிழ்க் காணொலி விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஆகக் குறைந்த கட்டணத்திலோ முடிந்தால் இலவசமாகவோ விளம்பரம் செய்ய முன் வர வேண்டும். 

 • தமிழ்த் திரையுலக நடிகர்கள் தங்களைக் கதாநாயகர்களாக வைத்துத் தமிழில் சிறுவர்களுக்கான கதைநூல்களும், தொடர்கதைகளும், காணொலி விளையாட்டுகளும் வெளியிட ஏற்பாடு வேண்டும். 

 • எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் விடத் தமிழ்நாடு அரசு தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையைக் காப்பாற்ற முன் வர வேண்டும்! பழைய சிறுவர் நூல்களை அரசுச் செலவில் மீண்டும் பதிப்பித்து நூலகங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்கலாம். சிறுவர் நூல்கள் வெளியிடப் பதிப்பகங்களுக்கு மானியம் வழங்கலாம். சிறுவர் இதழ்களை அரசு நூலகங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்கலாம். இருக்கும் ஓரிரு சிறுவர் இதழ்களை இழப்பு நிலையிலிருந்து மீட்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பிலான அறிக்கைகளையும் விளம்பரங்களையும் அவ்வப்பொழுது சிறுவர் இதழ்களுக்கு வழங்கி, அரசு விளம்பரங்கள் மூலமான வருவாய் அவர்களுக்குக் கிடைக்கும்படிச் செய்யலாம். தனியார்ப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சிறுவர் நூல்களைப் படிக்க வைக்க வேண்டும் எனவும், தேர்வுகளில் தமது நூலக அனுபவம் பற்றியும் தான் படித்த ஒரு சிறுவர் நூல் பற்றியும் ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக ஒரு சிறு கட்டுரை எழுத வேண்டும் எனவும் சட்டம் பிறப்பிக்கலாம். இவை போல் இன்னும் எவ்வளவோ செய்யலாம்; செய்ய வேண்டும்! 

சுருக்கமாகச் சொன்னால், அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்குத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துக்கு வளமூட்ட முன் வர வேண்டும். 

இன்று தமிழில் நாள்தோறும் புதுப் புது இதழ்களும், தொலைக்காட்சிகளும், வானொலிகளும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. டிஸ்கவரி தொலைக்காட்சி போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் தங்கள் சேவையைத் தமிழில் வழங்க விரும்பி முன்வருகின்றன. தமிழ்த் திரையுலகின் வளர்ச்சியும் உலகத்தரத்துக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இணையத்திலும் நாளுக்கு நாள் தமிழின் எல்லை விரிந்து கொண்டே செல்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து நாம் தமிழ் மொழி மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை எல்லாவற்றுக்குமான ஆணி வேர் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை! அடுத்த தலைமுறைக்கு ஒரு மொழி சென்று சேராவிட்டால் அஃது இன்று எவ்வளவுதான் வளமாக இருந்தாலும், எந்த அளவுக்குப் பயன்பாட்டில் இருந்தாலும் நிலைபெறாது என்பதுதான் உலக வரலாறு. 

எனவே தமிழ் மொழியின் இன்றைய நன்னிலை நீடிக்க வேண்டுமானால், ஒன்பதாயிரம் ஆண்டுகாலத் தமிழ் மொழி இந்தத் தலைமுறையோடு அழிந்து விடாமல் இனியும் தொடர்ந்து வாழ வேண்டுமானால் தமிழ்ச் சிறுவர் இலக்கியம் புத்துயிரூட்டப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர வேண்டும்!

(நான் கீற்று இதழில் எழுதி, அந்த இதழால் பரிந்துரைக்கப்பட்ட கட்டுரை).

படம்: நன்றி விக்கிப்பீடியா.

**********
இனியவர்களே!

பதிவு பிடித்திருக்கிறதா?

அப்படியானால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளில் ஒரு சொடுக்கு சொடுக்குங்களேன்! அப்படியே, மறவாமல் உங்கள் கருத்துக்களையும் வழங்குங்கள்! தமிழில் கருத்திட மென்பொருள் இல்லாதவர்கள் கீழே உள்ள ‘தமிழ்ப் பலகையைப் பயன்படுத்துங்கள்!


பதிவுகள் உடனுக்குடன் மின்னஞ்சலில் வந்து சேர...

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

 1. சரியான கருத்தை முன்னிருத்து இருக்கிறீர்கள் பால்யத்தை நினைவு படுத்தும் இலக்கியம் இவை ..........இவைகள் தான் என் கற்பனையை வளர்த்தவை என்று சொன்னால் மிகையாகாது நன்றி பதிர்விர்க்கு இனி படைக்க ஆரமிப்போம் சிறுவர் இலக்கியத்தை

  பதிலளிநீக்கு
 2. நன்றி அம்மணி! நானும் சிறுவர் இலக்கியத்தின் மாறா விசிறிதான். அவைதாம் இன்று நான் எழுதக் காரணம். மனக் குதிரைக்குக் கற்பனைச் சிறகு முளைக்க வைத்த பூந்தளிர் போன்ற இதழ்களும், சிறுவர்கள் என்ன எழுதினாலும் வெளியிட்டு ஊக்குவித்த 'கோகுலம்' இதழும் இல்லாவிட்டால் இப்பொழுது நான் ஒரு பதிவராக வளர்ந்திருக்க மாட்டேன். இந்தப் பதிவை அதற்கான ஒரு நன்றியறிதலாகவும் எடுத்துக் கொள்ளலாம்! உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவுகளைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஐயா... கட்டுரை அருமை.

  நான் தற்போது சிங்கையில் இருக்கின்றேன்.

  சிறுவர் இலக்கியம் தொடர்பான சிந்தனை நீண்ட காலமாகக் காயாக இருந்து இப்பொழுது கனியத் தொடங்கியுள்ளது... அதற்காகச் சில முயற்சிகளை எடுத்து வருகின்றேன்...

  ஆங்கிலத்தில் இருப்பது போல் வயதுக்கேற்ற நூல்கள் தமிழில் இல்லை... அவற்றினை ஆக்குவதற்கான முயற்சியில் (ஆய்வு என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம்) இறங்கியுள்ளேன்... உங்களது ஆலோசனையும் தேவை.

  சூன் மாதம் 15 தேதியளவில் சென்னை வருகின்றேன். தங்களைச் சந்திக்கவியலுமா? 9965010008 இது என்னுடைய தமிழக அலைபேசி எண்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா... கட்டுரை அருமை.

  நான் தற்போது சிங்கையில் இருக்கின்றேன்.

  சிறுவர் இலக்கியம் தொடர்பான சிந்தனை நீண்ட காலமாகக் காயாக இருந்து இப்பொழுது கனியத் தொடங்கியுள்ளது... அதற்காகச் சில முயற்சிகளை எடுத்து வருகின்றேன்...

  ஆங்கிலத்தில் இருப்பது போல் வயதுக்கேற்ற நூல்கள் தமிழில் இல்லை... அவற்றினை ஆக்குவதற்கான முயற்சியில் (ஆய்வு என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம்) இறங்கியுள்ளேன்... உங்களது ஆலோசனையும் தேவை.

  சூன் மாதம் 15 தேதியளவில் சென்னை வருகின்றேன். தங்களைச் சந்திக்கவியலுமா? 9965010008 இது என்னுடைய தமிழக அலைபேசி எண்.

  பதிலளிநீக்கு
 5. பாராட்டுக்கு நன்றி நண்பரே!
  ஆனால், உங்களைப் போன்ற ஆய்வாளர்களுக்கு ஆலோசனை கூறுமளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே! இருந்தாலும், நீங்கள் விரும்பினால் தாராளமாக வந்து என்னை என் வீட்டிலேயே சந்திக்கலாம். ஊருக்கு வந்ததும் 9043585723 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்! தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவுகளைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

  பதிலளிநீக்கு
 6. கட்டுரை நன்று அவசியமானது, இலங்கையில் பண்டத்தரிப்பில் காலையடி மறுமலர்ச்சி மன்ற இளைஞர்கள் வாசிப்பு ஊக்கிவிப்பதற்க்காக கடந்த இரண்டு ஆண்டுகள் பாடுபட்டு நூலகம் அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சிறுவர் நூல்களை இந்த நூலகத்தில் காலமான தந்தையின் நினைவாக ஒரு குடும்பத்தினர் அன்பளிப்பு செய்துள்ளனர்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! தங்களைத் தற்காத்துக் கொள்வதே பெரிய காரியமாக இருக்கும் நிலையிலும், ஈழத் தமிழர்கள் இப்படித் தமிழ்ச் சேவை புரிந்து வருவது... என்ன சொல்ல?... அவர்களின் ஈடிணையற்ற தமிழ்ப் பற்றுக்குத் தலைவணங்குகிறேன்!

   உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பகீரதன் அவர்களே! தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் இவற்றைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

   நீக்கு
 7. அருமையான பதிவு. ஆனால் தாமதமான என் கருத்துரை. என் குழந்தைகளுக்கு தினமும் இரவு கதைகள் சொல்வேன். அவர்களுக்குக் கதை சொல்லி, கதை கேட்பதிலும், கதை படிப்பதிலும் உள்ள சுவையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த விருப்பம். நான் சிறு வயதில் படித்த சிறுவர் இலக்கியம்தான் இப்பொழுது நான் கதை சொல்வதற்கு உதவுகிறது. சில சமயங்களில் நான் படித்த மாதிரி புத்தகங்கள் இப்பொழுது என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்று யோசித்தது உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என் குழந்தைகளுக்கு தினமும் இரவு கதைகள் சொல்வேன். அவர்களுக்குக் கதை சொல்லி, கதை கேட்பதிலும், கதை படிப்பதிலும் உள்ள சுவையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த விருப்பம்// - ஆகா! உங்களுடைய இந்த வரிகளைப் படிப்பதற்கே வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கிறது அம்மணி! நீங்கள் செய்து வருவது உண்மையிலேயே பெரிய தமிழ்த் தொண்டு! தொடர்ந்து செய்யுங்கள்!

   //சில சமயங்களில் நான் படித்த மாதிரி புத்தகங்கள் இப்பொழுது என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்று யோசித்தது உண்டு// - கவலைப்படாதீர்கள்! நம்மைப் போன்றவர்கள் சிறுவயதில் படித்த பழைய சிறுவர் இதழ்கள் அவ்வப்பொழுது இணையத்தில் கிடைக்கின்றன. நான் சேகரித்து வைத்திருக்கிறேன். அப்புறமாய் உங்களுக்கு அனுப்ப முயல்கிறேன். மேலும், இணையத்தில் சிறுவர் இதழ்களும் நிறைய இருக்கின்றன. அவற்றின் இணைப்புகளையும் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

   உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் இவற்றைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

   நீக்கு
  2. கூகுள்+ மூலம் கோப்புறைகளையும் அனுப்ப இயலும் என்று நினைத்து, உங்களுக்குச் சிறுவர் கதைநூல்களை அனுப்புவதாகச் சொல்லிவிட்டேன். ஆனால், கூகுள்+இல் அப்படியொரு வசதியே இல்லை என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கீழ்க்காணும் படிவம் வாயிலாக எனக்கு அனுப்பி வையுங்கள் உடன்பிறப்பே, உடனே என்னிடமுள்ள நூல்களை அனுப்பி வைக்கிறேன்!

   நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (87) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (35) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (21) இனம் (44) ஈழம் (43) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கவிஞர் தாமரை (1) கவிதை (17) காங்கிரஸ் (6) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (10) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (29) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (2) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (1) திரையுலகம் (8) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (10) நிகழ்வுகள் (2) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (5) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (21) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (1) போட்டி (1) போர் (1) போராட்டம் (9) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மணிவண்ணன் (1) மதிப்புரை (3) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (5) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்