“உன்னை நீ மேம்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த பழிவாங்கும் முறை” – என்பது இன்றைய புத்துலக வாழ்க்கைமுறையில் பெரிதும் போற்றப்படும் பொன்மொழிகளுள் ஒன்று. இதையே ஒரு கதையாகச் சொன்னால்...? அதுதான் மன்சூரா பீவி அம்மையார் எழுதியுள்ள ‘மம்மது’ புதினம்.
மன்சூரா பீவி அவர்கள் இந்திய அஞ்சல் தொலைவரித் (Postal and Telegraph) துறையில் பணியாற்றியவர். இவர் கணவர் துவிட்டர் புகழ் தமிழறிஞர் நெல்லை க.சித்திக் அவர்கள். அவர் மகுடைத் (Corona) தொற்றால் காலமான பின்னர் அன்னார் பல ஆண்டுகள் உழைத்துத் தொகுத்திருந்த ‘அயற்சொல் அகரமுதலி’ எனும் நூலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார் பீவி அவர்கள். அப்பொழுது அவரைக் கணவரின் கனவை நிறைவேற்றி வைத்த அன்பான மனைவி என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அடுத்து அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்த பிறகுதான் அவர் எப்பேர்ப்பட்ட எழுத்துத்திறம் படைத்தவர் என்பதை அறிய முடிந்தது.
தற்பொழுது பணியோய்வுக்காலத்தில் இருக்கும் பீவி அவர்கள் அடுத்தடுத்துத் தன் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவற்றுள் ஒன்றுதான் மம்மது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களம். வலியகுளத்துவிளை எனும் சிற்றூரில் வாழும் இளைஞன் மம்மதும் காசிமும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இல்லை இல்லை, நண்பர்கள் ஆவதற்கு முயல்பவர்கள். ஆனால் அவர்கள் பழகக்கூடாது என்று தொடக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது இருவர் வீட்டிலிருந்தும்.
ஓரிரு கசப்பான நிகழ்வுகளுக்குப் பின் ஒரேயடியாகப் பிரியும் இந்த நண்பர்கள், தங்கள் 18 வயதில் மீண்டும் சந்திக்கும்பொழுது காசிம் தங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையிலான மருமத்தைத் தெரிவிக்கிறான். நண்பன் மகிழ்வான் என்றெண்ணி அவன் சொல்லும் அந்தச் செய்தி மம்மதின் மொத்த வாழ்வையும் ஒரே நிமையத்தில் புரட்டிப் போட்டு விடுகிறது.
❔ காசிம் சொன்ன அந்த மருமம் என்ன?
❔ மம்மதின் குடும்பத்துக்கும் காசிம் குடும்பத்துக்கும் அப்படி என்ன பகை
❔ மொத்தமாகத் தன்னை நிலைகுலைய வைத்த அந்த உண்மையை மம்மது எப்படி எதிர்கொண்டான்?












