உறவு தந்த கண்ணீரோடு காலம் வகுத்த பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன். இருங்கள்! சாலையோரத்தில் ஏதோ மின்னுகிறதே? நெருங்கி, குனிந்து கையில் எடுத்துப் பார்த்தால்... ஓ! இது... இது... ஒரு விண்மீன்!!!
எப்படிக் கீழே விழுந்தது?! அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். முட்டாள் நான்! உதிர்ந்த தடம் தெரியுமா என்ன?
கையிலிருந்த விண்மீனை மறுபடியும் பார்த்தேன். ஆறு கரங்களோடு ஒளிப்பிழம்பாய்த் தகதகத்தது! அதன் மேலே ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்து ஊதினேன். பளிச்சென இரு விழிகள் திறந்தன. மிரண்டு போனேன்!
எப்படிக் கீழே விழுந்தாய்? அதனிடமே கேட்டேன். சோகமாக என்னையே பார்த்தது. வாய் ஏதும் இல்லை. எப்படி மறுமொழி சொல்ல முடியும்!
அக்கம் பக்கம் பார்த்தேன். யாருமில்லை. சட்டைப்பையில் போட்டுக் கொண்டு, திரும்பி வீடு நோக்கி நடந்தேன்; ஒரு முடிவோடு.
நுழைவாயில் இரும்புக்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். வீட்டுக்குள்ளே போன பின் தலையை மட்டும் வெளியே நீட்டிச் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஈ காக்கை இல்லை. கதவைச் சாத்தி இரண்டு தாழ்ப்பாள்களையும் போட்டேன்.
வலப்பக்கம் பார்த்தேன். மகள் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவர்க்கடிகாரத்தில் மணி ஒன்று. இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாள்? கேட்க வந்ததைக் கட்டுப்படுத்திக் கொண்டு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டேன்.
சட்டைப்பையிலிருந்து அதை வெளியே எடுத்தேன். அறை முழுவதும் விளக்கே இல்லாமல் ஒளிர்ந்தது. சட்டைப்பையில் இருந்தபொழுது வெளிச்சம் தெரியவில்லையே? நாம் ஒளித்து வைப்பதை உணர்ந்து தன்னைத் தானே அணைத்துக் கொள்கிறதோ!
எங்கே வைப்பது இதை? சுவரில் மாட்டலாம் என்றால் துளையிட வேண்டும். மேசையில் வைக்கலாம் என்றால்... சேச்சே! சரி வராது. சிந்தித்தபடி நாற்காலியில் அமர்ந்தேன். கூரைச் சுவர் முழுக்கப் பரவிக் கிடந்த செயற்கை வானம் தென்பட்டது. இணையத்தில் வாங்கிய மாபெரும் சுவரொட்டி (wallpaper).
நாற்காலியை அறையின் நடுப்பகுதிக்கு எடுத்துப் போட்டு, முட்டியில் கையூன்றியபடி கடினப்பட்டு மேலேறி, நுனி விரல்களில் நின்றபடி படாதபாடுபட்டு உடலைச் சமன் செய்து, எப்படியோ எட்டி உயர்ந்து ஒட்டி விட்டேன் அதைக் கூரையில். இரவில் மட்டும் மினுங்கும் செயற்கை விண்மீன்களுக்கு இடையே இப்பொழுது இதுவும். ஆனால் பெரிதாக, மிகப் பெரிதாகத் தனித்துத் தெரிந்தது. யாராவது கேட்டால்? அ... சொல்லிக் கொள்ளலாம்.
போர்த்திக் கொண்டு படுத்தேன். அறை முழுக்க ஒளியை உமிழ்ந்தபடி அது என்னையே பார்த்தது. நான் அதையே பார்த்திருந்தேன். எப்பொழுது உறங்கிப் போனேன்? தெரியவில்லை.
திடீரெனத் தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தபொழுது கூரைச் சுவரில் அது இல்லை. பதறி எழுந்தேன். நேர் கீழே இருந்த நாற்காலியின் சாய்மான விளிம்பில் நின்றபடி சாளரம் வழியே கொட்டக் கொட்டப் பார்த்துக் கொண்டிருந்தது.
எங்கே பார்க்கிறது? நானும் பார்த்தேன். நீல வானம் பரந்து விரிந்து தெரிந்தது. கடிகாரம் பார்த்தேன். நாலரை. இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலரத் தொடங்கி விடும். விண்மீனைப் பார்த்தேன். அதன் கண்களில் சோகம் கூடியிருந்தது. ஒளி மிகவும் குறைந்திருந்தது. சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு எழுந்து அதனை நெருங்கினேன்.
மொட்டைமாடி வந்து விட்டேன். கையைத் திறந்தேன். விண்மீனும் கண்ணைத் திறந்தது. வானத்தைப் பார்த்ததும் இன்னும் விழிகளை அகலத் திறந்தது. அதன் ஒளி கூடியது. என் உதடுகளில் கீற்றாக ஒரு புன்னகை.
ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து விண்மீனின் மையப்பகுதியைப் பிடித்துக் கொண்டேன். மூச்சை இழுத்துப் பிடித்து முடிந்த அளவுக்குக் கையை வேகமாகக் கரகரவெனச் சுழற்றி வானை நோக்கி வீசி எறிந்தேன்.
விண்மீன் வானோக்கி எகிறியது!! கீழே விழுந்து விடுமோ? அஞ்சியபடி பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை. அது போனது... போனது... போய்க் கொண்டே இருந்தது. ஒரு புள்ளியில் என் கண்ணை விட்டு மறைந்தது.
சிறிது நேரம் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாடியிலிருந்து இறங்கினேன். வீட்டுக்குள் போனதும் இப்பொழுதும் வலப்பக்கம் பார்த்தேன். அவள் அறையில் விளக்கு எரியவில்லை.
மெல்லமாக மிக மிக மெல்லமாகக் கதவைத் திறந்து பார்த்தேன். அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். கதவை விரியத் திறந்து அருகில் நெருங்கி குனிந்து பார்த்தேன். வாயருகே என்னவோ போலிருந்தது. தொட்டுப் பார்த்தால் எச்சில். தற்செயலாய் என் இடக்கை என் மார்புமுடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. சை! குழந்தையில் என் மார் மீது படுத்துத் தூங்கியபொழுது எச்சில் விட்டால் அவள் வாயைத் துடைத்து விட்ட கையோடு என் மார்பு நனைந்திருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்வேனே? அதே நினைவு.
அவள் மேசை நோக்கி நடந்தேன். என் சட்டைப்பைக்குள் கைவிட்டேன். ஒளித்து வைத்திருந்த அவளுடைய கடவுச்சீட்டை (Passport) மேசை மீது வைத்தேன். திரும்பி நடந்து அவள் அருகில் வந்து பார்த்தேன். குண்டுக்கட்டாக உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்திருந்தாள். பக்கத்திலிருந்த தொலை இயக்கியை (Remote control) எடுத்து அறைப்பதனியின் (Air conditioner) குளிர்ச்சியை மட்டுப்படுத்தினேன். விறுவிறுவெனத் திரும்பி நடந்து என் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டேன்.
விரல்நுனியில் ஒட்டியிருந்தன விண்மீனின் துகள்களும் மகளின் எச்சில் மணமும். இவை போதும்!
- பன்னாட்டுப் பெண்குழந்தை நாள் சிறப்புச் சிறுகதை
படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.