நேற்று காலை சாந்தா மிஸ் இறந்துவிட்டார்! 😢
யார் சாந்தா மிஸ் எனக் கேட்கிறீர்களா?
என் கோப்பையைக் காலி செய்த ஆசிரியர்!
மூன்றாம் வகுப்பு முடிக்கும் தறுவாயில் எனக்குக் காலில் வழக்கம் போல் எலும்புமுறிவு. அதன் பின் பள்ளிக்கு அனுப்ப அஞ்சிய அம்மா, நான்காம் வகுப்பு கற்பிப்பதற்காகப் பின் தெருவில் இருந்த ஆசிரியர் சாந்தா அவர்களை நாடினார். யாருக்கும் தனி வகுப்பு நடத்தாத அவர், அம்மாவின் வேண்டுகோளுக்காக எனக்கு மட்டும் நடத்த முன்வந்தார்.
முதல் நாள் வகுப்பில், சாந்தா மிஸ் என் திறனைச் சோதிக்க விரும்பிக் குட்டியாக ஒரு தேர்வு நடத்தினார். சிற்சில கேள்விகள்தாம். ஆனால் சரியாக விடையளிக்காத நான், அதெல்லாம் தெரியாவிட்டாலும் தமிழில் எனக்கு எல்லாம் தெரியும் என்று திமிராகப் பேசினேன்.
மாற்றுத்திறனாளி என்பதால் என்னைச் சிறுவயதிலிருந்தே எல்லாரும் கொஞ்சம் மிகையாகவே பாராட்டுவார்கள். “பிரகாசுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை”, “அவன் சொன்னால் சரியாக இருக்கும்” என்றெல்லாம் பாராட்டு மழையில் நனைந்து நனைந்து அந்த வயதிலேயே தலையில் முளைத்திருந்த கொம்பு அப்படிப் பேச வைத்தது.
உடனே சாந்தா மிஸ் என் குறிப்பேட்டை (Notebook) வாங்கினார்; ஐந்தாறு தமிழ்ச்சொற்களை எழுதிக் கொடுத்து “இதுக்கெல்லாம் விடை எழுதி வை. இதோ வரேன்” என்றுவிட்டு உள்ளே போனார். பார்த்தால், எல்லாம் அருஞ்சொற்பொருள் கேள்விகள். தமிழில் எல்லாம் தெரியும் என்று நினைத்தவனுக்கு அந்தச் சொற்கள் சில புதிதாக இருந்தன. இருந்தாலும் தெரிந்த வரையில் எல்லாவற்றுக்கும் விடை எழுதினேன். ‘மரை’ என்று அவர் கேட்டிருக்க, அது மான் என்பது கூடத் தெரியாமல் திருகாணி (screw) என்று நினைத்துக்கொண்டு விடை எழுதியதை இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
வந்து பார்த்தார். திருத்தித் திருப்பித் தந்தார். ஒன்றோ இரண்டோதான் சரியாக எழுதியிருந்தேன், மற்ற அனைத்தும் தவறு! எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை அன்றோடு அழிந்தது.
ஒரு அடி இல்லாமல், ஒற்றைக் கடுஞ்சொல் சிந்தாமல், வெகு நயமான முறையில், நான் யார் என்பதை எனக்கே ஒரு கண்ணாடி போல எதிரொளித்துக் காட்டிய ஆசிரியர் சாந்தா அவர்களின் திறமை என்னை அண்ணாந்து பார்க்க வைத்தது.
கோப்பை காலியாக இருந்தால்தான் தேநீரை நிரப்ப முடியும் என்பார்கள். கல்வி கற்பதற்கான அடிப்படைத் தகுதியை எடுத்துரைக்கும் சென் (Zen) கதை அது. அப்படி, சேர்ந்த முதல் நாளே என் கோப்பையைக் காலி செய்துவிட்டு எனக்குப் பாடம் நடத்தத் தொடங்கியவர் சாந்தா மிஸ்.
அதுவரை படித்துக் கொண்டிருந்த நான் அன்றிலிருந்துதான் கற்கத் தொடங்கினேன்.
முதல் நாள்தான் என்றில்லை, ஒருநாளும் என்னிடம் அவர் ஒரு சுடுசொல் கூடப் பயன்படுத்தியதாக நினைவில்லை. எப்படிச் சொன்னால் எனக்குப் புரியும் என்பது அவருக்குத் தெரியும். அதற்கேற்பக் கற்பிப்பார். கண்டிப்பும் கிடையாது, ஒரேயடியாகக் கனிவாகப் பேசிக் கொஞ்சுகிற பழக்கமும் கிடையாது. இரண்டும் கலந்த ஒரு சமநிலையில் எப்பொழுதும் இருப்பார்.
எப்பொழுதும் பாடம்தான் என்றில்லை. சனிக்கிழமையானால் தொலைக்காட்சியில் இந்திப் படம் ஓடும். கொஞ்ச நேரம் படம் பார்க்கச் சொல்வார். மிகச் சிறிது நேரம் கதைப்புத்தகங்களும் படிக்கத் தருவார்.
சாந்தா மிஸ்ஸுக்கு இராமதுரை, சிறீராம் என இரண்டு பிள்ளைகள். இருவருமே என்னை விட மிகவும் மூத்தவர்கள். அங்குதான் எனக்குச் சிறார் இதழான ‘கோகுலம்’ அறிமுகமானது. பூந்தளிர், ராணி காமிக்சு எனப் பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதிய படைப்புகளை மட்டுமே படித்துக் கனவுலகிலேயே மிதந்து கொண்டிருந்த எனக்கு, சிறுவர்களாலும் எழுத முடியும் என்கிற எண்ணத்தை விதைத்தது அந்த இதழ்தான். அந்த வகையில் சாந்தா மிஸ் வீட்டில் அறிமுகமான கோகுலம்தான் என் வாழ்க்கையையே தீர்மானித்தது என்றால் அது துளியும் மிகையில்லை.
ஓரீர் ஆண்டுகள்தாம் அவரிடம் படிக்க வாய்த்தது. அதன் பின், ஏதோ காரணங்களால் மீண்டும் படிப்பு நின்று போனது.
அம்மாவின் இடைவிடாத முயற்சியால், சில ஆண்டுகள் கழித்து, தனித்தேர்வராக 8ஆம் வகுப்பு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் குறைந்தது 5ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்பது நெறிமுறை. அப்பொழுது சாந்தா மிஸ்தான், “இந்த மாணவன் என்னிடம் 5ஆம் வகுப்பு வரை படித்தவன். இவனுக்கு 8ஆம் வகுப்புத் தேர்வு எழுதத் தகுதி உண்டு. அரசுப்பள்ளி ஆசிரியர் எனும் முறையில் நான் சான்றளிக்கிறேன்” என்று கைப்பட எழுதித் தந்தார். அதை இன்னும் என் தகுதிச்சான்றிதழ்களுள் ஒன்றாகப் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.
பின்னர் ஓரிரு முறை வீட்டுக்கு வருகை தந்தார். அதன் பின், பல ஆண்டுகள் தொடர்பு விட்டுப் போனாலும் தன் மகன் திருமணத்துக்காக மறவாமல் வந்து அவர் அழைப்பிதழ் வைத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.
அதன் பின் நான் அவரைப் பார்க்கவில்லை. இனி பார்க்கவும் இயலாது! ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் என் வாழ்வில் மிக முக்கியமானது என்பது மட்டும் மறக்காது!
நன்றி
சாந்தா மிஸ்!🙏
படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.