தங்கிலீஷ் | நேற்றைய (29.06.2025) "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து காணொளியாக 👇🏽👇🏽👇🏽
திங்கள், ஜூன் 30, 2025
தங்கிலீஷ் | "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து - காணொளி
சனி, ஜூன் 14, 2025
கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்!... - TOI கட்டுரைக்கு என் மொழிபெயர்ப்பு
![]() |
கீழடி - வான்வழிப் பார்வை |
இந்தியாவின் இரண்டாவது நகர்மயமாக்கம்: கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்! கங்கைச் சமவெளிக்கு இணையான பழமை வாய்ந்தது கீழடி என்பது உறுதியாகி விட்டது!
மதுரையில் உள்ள கீழடி அகழ்வாய்வுத் தளம் தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றில் இன்னொரு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் நடத்திய கதிர்க்கரிமக் காலக்கணக்கீட்டால் (Radiocarbon dating), இத்தளம் கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுடன் ஒத்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.
2017-18 அகழ்வாய்வுப் பருவம் முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை தேர்ந்தெடுத்த 29 கதிர்க்கரிம மாதிரிகளுள் (Radiocarbon samples) மிகப் பழமையானது கி.மு.580-ஐச் சேர்ந்ததாகவும் அண்மையிலானது கி.பி.200-ஐச் சேர்ந்ததாகவும் உள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் நகரம் மற்றும் தொழில்மயமான குடியிருப்பு தொடர்ச்சியாக இங்கே செழித்திருந்ததைக் காட்டுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சங்கக் காலத்தைச் சேர்ந்த பெரிய செங்கல் கட்டுமானங்கள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள நகரமயமாக்கலுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
“செங்கல் கட்டுமானங்களுக்கு மேல் கிடைத்த பெரும்பாலான மாதிரிகள் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தையவை. ஆனால் கீழே கிடைத்த மாதிரிகள் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை” என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகரான தொல்லியலாளர் கே.ராஜன் அவர்கள். “இதனால் கீழடி, இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலாகவும் கங்கைச் சமவெளியுடன் இணையாக வைத்துக் கருதத்தக்கதாகவும் அமைந்துள்ளது. கதிர்க்கரிமக் காலக்கணக்கீடு செய்யப்பட்ட 29 மாதிரிகளுள் 12 மாதிரிகள் அசோகன் காலத்துக்கு முந்தையதான கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன.”
மேலும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த இடுகாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு மண்டையோட்டின் மீது முப்பரிமாணத் தொழில்நுட்பத்தையும் (3D technology) உடற்கூற்றளவியல் அளவீடுகளையும் (anthropometric measurements) பயன்படுத்தி ஆராயும் தொல்லியலாளர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் முக அமைப்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேறி இருப்பதாகத் தெரிகிறது.
“அந்த மண்டையோட்டைக் கொண்டு அதற்குரியவரின் வயது, உணவுமுறை, பாலினம், அவருடைய உண்மை முகம் ஆகியவற்றை நாங்கள் மறுகட்டமைப்புச் (reconstruction) செய்வோம்” என்கிறார் ராஜன்.
கி.மு.580-ஐச் சேர்ந்த கீழடி வாழ்க்கை முறையை மறுகட்டமைக்கும் இந்தப் பணிக்காக இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இவற்றுள் பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீசா பல்கலைக்கழகம், சிகாகோவிலுள்ள ஃபீல்டு அருங்காட்சியகம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம், காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), டெக்கன் கல்லூரி உள்ளிட்டவை அடங்கும்.
டெக்கன் கல்லூரி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகளைப் பகுப்பாய்வு (analysis) செய்து வருகிறது. காளைகள், எருமைகள், ஆடுகள், மாடுகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பன்றிகள், மறிமான்கள், புள்ளி மான்கள் ஆகிய விலங்குகளின் எலும்புகள் அகழ்வில் வெளிவந்துள்ளன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மனித மரபணுக்கள் (ancient human DNA), விலங்கு மரபணுக்கள் (animal DNA) ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு கீழடியிலும் கீழடி மண்டலத்தைச் சேர்ந்த கொந்தகை எனும் ஊரிலும் வாழ்ந்த பண்டைய குடிமக்களின் குடிபெயர்ச்சி, இனக்கலப்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
இந்த அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை மூலம் ஒரே தளத்தில் இருந்து 29 காலக் கணிப்புகள் கிடைத்துள்ளன.
கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழி (Tamil-Brahmi) எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், தமிழி எழுத்துமுறையின் தோற்றத்தை கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு இட்டுச் சென்றுள்ளன. இங்கு கிடைத்துள்ள தங்கத்தாலான, தந்தத்தாலான கலைப்பொருட்கள் (artefacts) பண்டைய தமிழர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
“கீழடி, எழுத்தறிவுடன் கூடிய ஒரு நகரமயமான குடியிருப்பாகவும் கலைஞர்களின் சமுகமாகவும் திகழ்ந்ததை இது காட்டுகிறது” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறைத் துணை இயக்குனர் ஆர்.சிவானந்தம் அவர்கள். “இது, கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தையும் மேற்குக் கடற்கரைத் துறைமுகமான முசிறியையும் மதுரை வழியாக இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் அமைந்திருந்த ஒரு தொழிற்சாலை மையம்.” எனினும் இந்நகரத்தின் மூலப் பெயர் இதுவரை தெரியவில்லை.
சங்க இலக்கியங்கள் வெளிநாட்டு வணிகம், நகைகள், மணிக்கற்கள் (gemstones), மாநகரங்கள், தெருக்கள், அரண்மனை போன்ற கட்டடங்கள் பற்றிப் பேசுகின்றன. “அவையெல்லாம் கற்பனைக் கதைகளல்ல, பண்டைத் தமிழரின் உண்மையான வாழ்க்கை என்பதைக் கீழடி நிலைநாட்டிவிட்டது” என்கிறார் இந்தியவியல் ஆராய்ச்சியாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள்.
கீழடியில் சுடுமண்ணாலான, தந்தத்தாலான தாயக்கட்டைகளைச் செவ்வக வடிவிலும் கனச்சதுர வடிவிலும் தொல்லியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். “இவை சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதான கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என்கிறார் பாலகிருஷ்ணன்.
“கி.மு.6-ஆம் நூற்றாண்டு வரலாற்றைக் காட்டுவது கீழடி மட்டுமில்லை. கொடுமணல், பொருந்தல், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகியவற்றிலும் இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த காலக்கணிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன” என்கிறார் ராஜன். “கொற்கையில் கி.மு.785 எனும் காலக் கணிப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம் சங்கக்கால நகரமயமாக்கல் மிகவும் பரந்துபட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.”
கீழடியில் 10 பருவங்களாக அகழ்வாய்வு நடைபெற்று வந்தாலும், 110 ஏக்கர் அளவில் அமைந்த பண்பாட்டுக் குவியல்களுள் ஆய்வாளர்கள் இதுவரை 4% மட்டுமே அகழ்ந்துள்ளனர். எனவே மாநில அரசு அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவிலேயே முதன்முறையாக நிகழ்கள அருங்காட்சியகம் (onsite museum) ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
“பல காலமாகத் தொல்லியல் சார்ந்த அலட்சியத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கீழடி தமிழர்களிடையே ஆர்வத் தீயைப் பற்ற வைத்துள்ளது” என்கிறார் பாலகிருஷ்ணன். “தமிழ்நாட்டின் தொல்லியல் புரிதலை மாற்றிய முதல் தளமே கீழடிதான்” என்கிறார் ராஜன்.
கீழடி சர்ச்சை
கீழடியில் நடந்த முதல் இரண்டு அகழ்வாய்வுகளுக்குத் (2014-2016) தலைமையேற்றவரான தொல்லியலாளர் கே.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் கீழடி கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையில் செயல்பட்டதாக 2023ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துக்கு (ASI) அறிக்கை அளித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ASI இந்தக் காலக்கணிப்பை எதிர்த்தது. இந்த இடத்தைக் கி.மு.300 வரையிலானதாகக் காலக்கணிப்புச் செய்வதுதான் (அதாவது குறைத்து மதிப்பிடுவதுதான்) சரியாக இருக்கும் என்று கூறியதோடு அதற்கேற்ப அறிக்கையைத் திருத்துமாறும் இராமகிருட்டிணனிடம் கோரியது. ஆனால் இராமகிருட்டிணன் தனது கண்டுபிடிப்பில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் (10.06.2025) ஒன்றியப் பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் அவர்கள் இந்த அறிக்கை துறைசார்ந்த வகையில் போதுமான அளவு துணைபுரிவதாக இல்லை என்றும் அறிவியல் சார்ந்த மதிப்பீடுகள் இன்னும் தேவை என்றும் தெரிவித்தார்.
ஏன் கீழடி முக்கியமானது?
- சங்கக் காலத்தைச் (வரலாற்றின் தொடக்கக்காலம்) சேர்ந்த செங்கல் கட்டுமானங்களின் மிச்சங்கள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டின் அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற மற்ற சில அகழ்வாய்வுத் தளங்களைப் போலவே கீழடியிலும்,
- அடுக்குகளுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள்
- தொட்டி போன்ற வசதிகளுடன் கூடிய வடிகால் அமைப்புகள்
- இரட்டைச் சுவர்களுடன் கூடிய உலைகள்
- சுடுமண் உறைகிணறுகள்
எனப் பற்பல வகைகளிலான கட்டுமானங்கள் கிடைத்துள்ளன.
கதிர்க்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) எப்படிச் செயல்படுகிறது?
உயிரினங்கள் காற்றில் உள்ள கரிமத்தை (Carbon) உறிஞ்சுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் கரிமத்துள் கதிர்க்கரிம ஓரகத்தனிமமான (radioactive isotope) C-14-உம் அடங்கும். அதே உயிரினங்கள் இறந்த பிறகு, C-14 உறிஞ்சப்படுவது நின்று அந்த உயிரினம் குறிப்பிட்ட விகிதத்தில் சிதையத் தொடங்கும். ஆகவே எஞ்சியுள்ள C-14 அணுக்களைக் கணக்கிட்டு அந்த உயிரினம் இறந்த காலத்தை மதிப்பீடு செய்ய முடியும். இதற்கு முடுக்கப் பொருண்மை அலைமாலையியல் (Accelerator Mass Spectrometry) எனும் முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் C-14 அணுக்கள் நேரடியாக எண்ணிக் கணக்கிடப்படுகின்றன. வெறும் 1 கிராம் மாதிரியைப் பயன்படுத்தி ±30 ஆண்டுகள் அளவுக்குத் துல்லியமான காலக் கணிப்பை இதன் மூலம் பெறலாம்.
கீழடியில் கண்டெடுத்த பொருட்கள்
- அகழப்பட்ட பரப்பளவு: 90 மீ., நீளம் 60 மீ., அகலம்.
- பொருட்கள்: கண்ணாடி, சிப்பி, தந்தம், முத்து மற்றும் சுடுமண் மணிகள்
- முத்திரைகள்
- தாயக்கட்டைகள்
- அடையாளம் தெரியாத செம்பு நாணயங்கள்
- தங்க நகைகள்.