.

செவ்வாய், நவம்பர் 07, 2023

நேற்று தமிழீழம்... இன்று பாலத்தீனம்! - தீர்வுதான் என்ன?

Bombing at Israel-Palestine War

ஒரு சிக்கலுக்கான தீர்வு ஒரு முறையாவது நடைமுறைக்குக் கொண்டு வரப்படாத வரை
அதை மீண்டும் மீண்டும் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அப்படி ஒரு நினைவூட்டல்தான் இது!

றுபடியும் இனப்படுகொலை! இந்த முறை தெருவில் ஓடுவது இசுலாமியர் உதிரம்! கொன்று குவித்து ஈன வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இசுரேல்! கூடச் சேர்ந்து ஆடுகிறது எப்பொழுதும் போல் அமெரிக்கா!

இசுரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் அப்படி என்னதான் சிக்கல்? ஏன் இந்தப் போர்? இப்படிக் கேட்பவர்கள் பேராசிரியர் ராசன் குறை எழுதியுள்ள “ஆரிய மாயையும், இசுரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள்” எனும் கட்டுரையைப் படிக்கலாம். மற்றவர்கள் மேற்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடரலாம்.

பாலத்தீன மக்களும் உலக மக்களும்

பாலத்தீனத்தில் பதினைந்து நிமையங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் பதற வைக்கின்றன. ஆனால் “போரை நிறுத்துங்கள்” என அறிக்கை மட்டும் விட்டுவிட்டுப் பல் குத்திக் கொண்டிருக்கிறார்கள் உலகத் தலைவர்கள். இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ எனச் சொல்லும் அளவுக்குக் கூட மனிதத்தன்மை இல்லாத இவர்களின் வெற்று அறிக்கைகள் இசுரேலின் ஒரே ஒரு சன்னத்தைக் (bullet) கூடத் தடுத்து நிறுத்தாது என்பது இவர்களுக்கும் தெரியும்; தங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக இவர்கள் அறிக்கை விடவில்லை என்பது இசுரேலுக்கும் தெரியும்.

உலகம் முழுக்க மக்கள் இந்தக் கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் 22 அன்று வெளிவந்த ஒரு தகவலின்படி இரண்டே நாட்களில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, செர்மனி, பெல்ச்சியம், கிரீசு, சுவீடன், கனடா, இத்தாலி, இந்தியா என உலகம் முழுதும் 23 நாடுகளில் மக்கள் பெருந்திரளாகக் கூடி இசுரேலைக் கண்டித்தும் பாலத்தீனத்துக்கு ஆதரவாகவும் போராடியிருக்கிறார்கள்.

செய்தி ஊடகங்கள் உண்மையை மறைத்தாலும் மக்கள் ஊடகமான சமுகத்தளங்களில் வாய்மை இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. இதோ கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்!


பார்த்தீர்களா? லண்டனில் மட்டும் ஒரே நேரத்தில் மூன்று லட்சம் பேர் திரண்டு போராடியிருக்கிறார்கள். போராட்டங்களுள் மிகப் பெரும்பாலானவை அந்நாடுகளின் தலைநகரங்களில் நடந்தவை! அதுவும் சும்மா இல்லை, ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு நடத்திய பெரிய போராட்டங்கள்! ஒரே நாட்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட நகரங்களிலும் போராட்டங்கள்! இசுரேலுக்கு வால் பிடிக்கும் அமெரிக்காவிலேயே நான்கு முக்கிய நகரங்களில் போராட்டங்கள்!

வெறும் இசுலாமியர்கள் மட்டுமில்லை, பல தரப்பு மக்களும் இப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் அமெரிக்கத் தலைநகரான வாசிங்டனில் போராடியவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள்ளேயே புகுந்து போராடிக் கைதாகி இருக்கிறார்கள். இவர்கள் யார் எனப் பார்த்தால், யூதர்கள். ஆம், எந்த யூத மதத்தைச் சேர்ந்த இசுரேலியர்கள் இந்த இனப்படுகொலையை நடத்துகிறார்களோ அதே யூத மதத்தைச் சேர்ந்த அமெரிக்கர்கள் மற்றவர்களை விட ஒரு படி மேலேயே போய்ப் போராடியிருக்கிறார்கள்!

இப்படி உலகெங்கும், பல்வேறு தரப்பினரும், பெருந்திரளாகப் போராடியும் இசுரேலும் இனப்படுகொலையைக் கைவிடவில்லை, பிற நாடுகளும் இசுரேலுக்கு எதிராக எந்தப் பெரிய நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவும் இல்லை. காரணம் என்ன?

மக்கள் போராட்டங்களை மதிக்காத உலக நாடுகள்

பாலத்தீனத்துக்கான இந்தப் போராட்டம் மட்டுமில்லை, அண்மைக்காலமாகவே மக்கள் போராட்டங்கள் எதையும் எந்த நாட்டு அரசும் மதிப்பது கிடையாது. நாம் பள்ளிப்பாடத்தில் படித்திருக்கிறோம், “பிரெஞ்சுப் புரட்சி, ரசியப் புரட்சி போன்றவை எளிய பொதுமக்களால் பாட்டாளிச் சமுகத்தினரால் நடத்தப்பட்டு மன்னராட்சியையே அகற்றின. மக்களாட்சியை மலர வைத்தன” என்று. ஆனால் அது அந்தக் காலம்.

இன்று அது போல் பொதுமக்கள் ஒரு நாட்டுக்கு எதிராக ஆய்தத்தைத் தூக்கினால் உடனே எல்லா நாடுகளும் அந்த நாட்டு அரசுக்கு ஆதரவாகச் சேர்ந்து கொள்கின்றன. போராடும் மக்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துகின்றன. அந்நாட்டு அரசுக்குப் பணம், பொருள், ஆய்தம் எல்லாவற்றையும் வழங்கிப் போராளிகளைக் கொன்று ஒழித்து விடுகின்றன.

சரியென, அறவழியில் போராடினாலும் போராட்டத்துக்குள் போலிப் போராளிகளை ஊடுருவச் செய்கிறது அரசு. அவர்கள் மூலம் வன்முறையை நிகழ்த்தி அறவழிப் போராட்டம் தீவிரவாதச் செயல்பாடாக நிறம் மாற்றி நீர்க்கச் செய்யப்படுகிறது.

எனவே ஆய்தப் போராட்டமோ அறவழிப் போராட்டமோ, எந்த வழியில் போனாலும் எளிய பொதுமக்களான நாம் அனைத்து வல்லமைகளும் பொருந்திய அரசு எனும் மாபெரும் நிறுவனத்தின் சுண்டுவிரலைக் கூடத் தொட முடியாது என்பதுதான் இன்றைக்குக் கண்கூடான உண்மை!

என்னதான் செய்வது?

இத்தகைய சூழலில் பொதுமக்களான நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆய்தம்... அணுக்குண்டுகளைக் கையில் வைத்திருக்கும் அரசுகள் கூட இன்றும் அஞ்சி நடுங்கும் ஒற்றை ஆய்தம்... வாக்குரிமை!

ஆனால் அதைத் தோற்கடிக்கவும் அரசுகள் காலங்காலமாக ஒரு வழிமுறையைக் கையாண்டு வருகின்றன. அதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி!

நினைத்துப் பாருங்களேன், இட்லரால் எப்படி அவ்வளவு பெரிய இனப்படுகொலையை நடத்த முடிந்தது? ஒரே நாட்டுக்குள் ஒரு தரப்பு மக்கள் மீது இனப்படுகொலையை ஏவினால் மற்ற தரப்பினர் தனக்கு எதிராகத் திரண்டு எழுவார்கள் என்ற அச்சம் அவனுக்கு வரவில்லையே, ஏன்? அதற்கேற்றாற் போல் மக்களும் அப்படித் திரளவில்லையே, ஏன்? காரணம் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடும் முன்னரே மக்களைச் சிறுபான்மை – பெரும்பான்மை என இருகூறுகளாக இட்லர் பிரித்து விட்டான் என்பதுதான். இது ஒரு வகையான, உள்நாட்டு அளவிலான பிரித்தாளும் சூழ்ச்சி. இனம், மதம், நிறம் போன்ற அடையாளங்கள் இங்கே மக்களைப் பிரிக்கப் பயன்படுகின்றன.

இதே போல் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அன்றைய வியட்நாம் முதல் இன்றைய பாலத்தீனம் வரை அந்நாடு முன்னின்றோ பின்னின்றோ நடத்திய எந்தப் படையெடுப்புக்கும் ஆட்சியாளர்கள் சொல்லும் காரணம் உண்மையானது இல்லை என அந்நாட்டு மக்களுக்கே தெரியும். ஆய்த விற்பனைக்காக, அதிகாரப் போட்டிக்காக, இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க, வெளிநாட்டில் படைத்தளம் நிறுவ – இப்படிப்பட்ட ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் தங்கள் நாடு இந்தப் படை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதே ஒழிய உண்மையில் இவற்றுள் எதுவும் உள்நாட்டுப் பாதுகாப்புக்காகவோ உலக அமைதிக்காகவோ இல்லை என்பதை அமெரிக்கர்கள் அறிவார்கள்.

ஆனால் இதற்கான எதிர்வினையை அவர்கள் தேர்தலில் காட்ட முடியுமா? பாலத்தீன விதயத்தில் பைடனின் நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடிய இதே மக்கள் இதற்காக அடுத்த தேர்தலில் அவருக்கு எதிராக வாக்களித்து விடுவார்களா? மாட்டார்கள்!

காரணம், தங்கள் நாட்டு ஆட்சியாளர் தங்கள் நாட்டில் எந்தெந்தச் சிக்கல்களையெல்லாம் கவனித்தார், எத்தகைய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தார், மக்களை எப்படி நடத்தினார் எனப் பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் அவரை மீண்டும் தேர்ந்தெடுப்பதா வேண்டாவா என்கிற முடிவுக்கு மக்கள் வர இயலுமே தவிர வெறுமே அவருடைய வெளியுறவுக் கொள்கையை மட்டும் முன்வைத்து அதை அவர்கள் தீர்மானிக்க முடியாது. எனவே இதுவும் ஒரு வகையான, பன்னாட்டு அளவிலான பிரித்தாளும் சூழ்ச்சிதான். நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் இங்கே மக்களைப் பிரிக்கப் பயன்படுகின்றன.

ஆக, வாக்குரிமை எப்பேர்ப்பட்ட பேராய்தமாக இருந்தாலும் இந்த இரண்டு விதமான பிரித்தாளும் சூழ்ச்சிகளால் அது ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு விடுகிறது!

தீர்வுதான் என்ன?

இதற்கு ஒரே தீர்வு, இப்படி எந்த வகையிலும் பிரித்தாள இயலாதபடி உலக மக்கள் அனைவரும் ஒரே மனிதக் கூட்டமாக மாறுவதுதான். அதற்கு ஒரே வழி, உலக நாடுகளுக்கு இடையிலான அத்தனை எல்லைக்கோடுகளையும் அழிப்பது மட்டுமே!

“அட! இதற்குத்தான் இத்தனை பக்கம் நீட்டி முழக்கினாயா?” என நீங்கள் நினைக்கலாம்.

ஆம், இது ஒன்றும் புதிய தீர்வு இல்லைதான். பல காலமாகப் பலரும் சொல்லி வருவதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, சிறந்த தமிழினப் பற்றாளரும் நடிகருமான சத்தியராசு அவர்கள் செவ்வி (interview) ஒன்றில் இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்வாக இதை முன்மொழிந்திருந்தார்.

ஆனால் ஒரு சிக்கலுக்கான தீர்வு ஒரு முறையாவது நடைமுறைப்படுத்தப்படாதவரை அதை மீண்டும் மீண்டும் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு நினைவூட்டலாகத்தான் இதை எழுதுகிறேன்.

உலகத் தோழர்களே! நினைத்துப் பாருங்கள், நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் இல்லாமல் போனால் எப்படி இருக்கும்?

எல்லையில்லா உலகம்!

World is in our hands
நாடுகளுக்கு இடையில் எல்லைகள் இல்லாவிட்டால் உலகம் முழுதும் ஒரே தேசமாக மாறி விடும். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் என்கிற பேச்சே இனி இருக்காது. இந்தியா-பாக்கித்தானம் சிக்கல், ரசியா-அமெரிக்கா சிக்கல், சீனம்-திபெத் சிக்கல் என எதுவும் இருக்காது. எல்லா நாட்டு எல்லைச் சிக்கல்களும் ஒரே சொடுக்கில் மாயமாகும்.

போரே கிடையாது என்பதால் போருக்கான ஆய்தங்களும் படைத் தளவாடங்களும் கூட இனி தேவைப்பட மாட்டா. வேண்டுமானால் கலவரங்கள் ஏற்பட்டால் அடக்கத் தொய்வச் சன்னங்கள் (Rubber bullets), கண்ணீர்ப் புகைக் குண்டுகள் போன்றவற்றை மட்டும் வைத்துக் கொண்டு பேரழிவு ஆய்தங்கள் எல்லாவற்றையும் விண்வெளியில் வீசியெறிந்து விடலாம். உக்கிரேன் போர், பாலத்தீன இனப்படுகொலை எல்லாம் உடனடியாக முடிவுக்கு வரும்.

உலக மக்கள் அனைவருக்கும் ஒரே குடியுரிமைதான் இருக்கும். ஆத்திரேலியர், கனடியர், சப்பானியர் என்பதெல்லாம் போய் அனைவரும் இந்தப் ‘பூமியின் குடிமக்கள்’ ஆகி விடுவோம். அந்த நாடு வேதியியல் ஆய்தம் செய்கிறது, இந்த நாடு உயிரி ஆய்தம் செய்கிறது எனவெல்லாம் பொய்க் குற்றம் சாட்டி இனி யாரும் எந்த மக்கள் மீதும் போரையோ இனப்படுகொலையையோ ஏவ முடியாது. அதாவது தேசிய எல்லைக்கோடுகளைப் பயன்படுத்தி மக்களைப் பிரித்தாள இயலாது.

உலகம் முழுவதும் ஒரே ஆட்சிதான் நிலவும். அதுவும் உலகக் குடிமக்கள் அனைவரும் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதாக இருக்கும். இனம், மதம், நிறம் என எந்தப் பெயரிலாவது சிறுபான்மை மக்களை அரசு நசுக்க நினைத்தால் சமுக ஊடகங்கள் மூலம் உண்மை எடுத்துரைக்கப்பட்டு உலகெங்கும் உள்ள குடிமக்களின் எதிர்ப்புக்கு அரசு ஆளாக வேண்டி வரும். அது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்கும். அதாவது அடையாளங்கள் மூலம் மக்களைப் பிரித்தாள்வதும் இனி நடக்காது.

நாடுகளே இல்லை என்பதால் நாடற்றவர்கள் (Refugees) எனவும் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஈழத் தமிழர்கள், பாலத்தீன அரபியர்கள், ரோகிங்கிய இசுலாமியர்கள், சிரிய மக்கள் என உலகம் முழுதும் உள்ள 3 கோடியே 53 லட்சம் ஏதிலியர்களின்¹  கண்ணீரை ஒரே நாளில் துடைத்து விடலாம்.

நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி, வல்லரசுப் போட்டி அனைத்தும் ஒழிந்து விடும். அவரவர் குடும்பம், தெரு, ஊர் போன்றவற்றின் தேவைக்கும் வளர்ச்சிக்கும் மட்டும் மக்கள் உழைத்தால் போதும். நாட்டை வல்லரசாக்க வேண்டும், முன்னணிக்குக் கொண்டு வர வேண்டும் எனவெல்லாம் சொல்லி யாரும் மக்களின் உழைப்பைச் சுரண்ட முடியாது. இதன் மூலம் சீனம், வட கொரியா போன்ற நாடுகளின் மக்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே அடிமைகள் போல் நடத்தப்படுவது மாறும்.

யாருக்குமே தேச அடையாளம் இல்லாமல் போவதால் யாருமே இனி தனித்தேசம் கோரிப் போராட மாட்டார்கள். உலகில் நடந்து வரும் தனிநாட்டுப் போராட்டங்கள் அத்தனையும் ஒரே நொடியில் கைவிடப்படும். ஆய்தப் போராளிகள் அனைவரும் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்புவர். தீவிரவாதி என முத்திரை குத்திப் போராளிகளைக் கொன்று குவிப்பது ஒழியும்.

எல்லைக்கோடுகளே இல்லை என்பதால் இனி யாருக்கும் கடவுச்சீட்டு (Passport), புகவுச்சீட்டு (Visa) எதுவும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் உலகின் எந்த மூலைக்கும் போகலாம், வரலாம், பணியில் சேரலாம், தொழில் தொடங்கலாம். இதன் மூலம் உலகம் முழுதும் தலை விரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம் வெகு விரைவில் தீரும். தென்னாப்பிரிக்கா முதல் அமெரிக்கா வரை உலகெங்கும் வேலையின்றித் தவிக்கும் 20 கோடியே 80 லட்சம் பேரின்²  வாழ்க்கை வளம் பெறும்.

தேசம் என்கிற கட்டமைப்பே காணாமல் போவதால் தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் நாடுகள் செலவிடும் பூதகரத்தொகை மிச்சமாகும். 2021ஆம் ஆண்டுக் கணக்குப்படி படைப்பிரிவுக்காக (military) மட்டும் உலக நாடுகள் செலவிடும் தொகை 2.1 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்!³ அதாவது இன்றைய இந்திய மதிப்பில் இது கோடானு கோடியே எழுபத்து நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்!!! நம் கற்பனைக்கும் எட்டாத இவ்வளவு தொகையும் மிச்சமானால் இதைக் கல்வி, வறுமை ஒழிப்பு, நல்வாழ்வு, ஆய்வு மற்றும் முன்னேற்றம் (R & D) போன்றவற்றுக்காகச் செலவிட்டு உலக மக்கள் அனைவருக்கும் பசி, பிணி, கல்வியின்மை போன்ற எந்தக் குறைபாடும் இல்லாத வாழ்வை வழங்க முடியும். உணவு, உடை, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் பூமியிலுள்ள அனைவருக்கும் கிடைக்கிற கனவு உலகம் நனவாகும்.

ஒரே ஆட்சிதான் உலகம் முழுமைக்கும் பொறுப்பு என்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இனியும் ஆட்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தித் தப்பிப்பது நடக்காது. தன் நாட்டுக் குப்பையை இன்னொரு நாட்டில் கொட்டி விட்டுச் சுற்றுச்சூழலைப் பேணி விட்டதாகக் கணக்குக் காட்டுவது, இந்த நாட்டில் நிறுவ முடியாத இயற்கைக்கு எதிரான தொழிற்சாலையை இன்னொரு நாட்டில் நிறுவுவது எனவெல்லாம் இனி ஏமாற்ற முடியாது. சுற்றுச்சூழலுக்கு எதிராக உலகின் எந்த மூலையில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் உலக மக்களின் ஒருமித்த எதிர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆக, ‘எல்லையில்லா உலகம்’ எனும் இந்தத் திட்டம் மனிதர்களை மட்டுமில்லை இந்த மொத்தப் பூமியையும் இதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி வாழ வைப்பதற்கான பெருவழி!

இவையெல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகள்தாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தால் அரசியல், பொருளியல், சமுகம், தனி மனித வாழ்க்கை முறை என அத்தனை மட்டங்களிலும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மனிதக்குல வாழ்வியலிலேயே அடுத்த கட்டப் பாய்ச்சலாகத் திகழும். ஆனால் இது நடக்குமா?

செயல்படுத்துவது எப்படி?

“இதெல்லாம் நடக்கிற கதையா? நாடுகள் எப்படி இதற்கு ஒப்புக் கொள்ளும்? தங்கள் கையிலிருக்கும் வானளாவிய அதிகாரத்தை மக்கள் கையில் தூக்கிக் கொடுக்க ஆட்சியாளர்கள் எப்படி முன்வருவார்கள்? இது வெறும் கனவு” – இப்படி நீங்கள் நினைக்கலாம். இல்லை, இது நடக்கும்!

‘எல்லையில்லா உலகம்’ எனும் இந்தத் திட்டத்தை உலகில் மொத்தம் மூன்று முக்கிய தரப்பினர் ஆதரிப்பர்.

முதலாமவர்கள் பெருவணிக நிறுவன முதலாளிகள் (Corporates).

தற்பொழுதுள்ள உலக அமைப்பில் பெருவணிக நிறுவனங்கள் எந்த நாட்டில் தொழில் தொடங்கினாலும், அது சரியான தொழிலோ தவறான தொழிலோ, ஆட்சியாளர்களுக்குக் கையூட்டாக ஒரு பங்கை ஒதுக்காமல் தொடங்க முடிவதில்லை. எல்லையில்லா உலகம் அமைந்தால் நாட்டுக்கு நாடு இப்படிக் கையூட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதால் நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தொகை நிறுவனங்களுக்கு மிச்சம். இதனால் கட்டாயம் பெருமுதலாளிகள் இத்திட்டத்தை ஆதரிப்பார்கள்.

“ஓ! அப்படியானால் பெருமுதலாளிகளுக்காகத்தான் இவ்வளவு பெரிய திட்டமா? பெருவணிகர்களின் கைக்கூலியே!” என உடனே திட்டத் தொடங்கி விடாதீர்கள். இதன் இன்னொரு பக்கத்தைப் பாருங்கள்!

இன்றைக்கு இயற்கைக்குப் புறம்பானது, மக்கள் நலனுக்கு எதிரானது என ஒரு நாட்டில் விரட்டியடிக்கப்படும் தொழிலைப் பெருவணிக நிறுவனங்கள் வேறு நாட்டில் அந்த நாட்டு ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு மீண்டும் தொடங்குகின்றன இல்லையா? அத்தகைய மோசடிகளை எல்லையில்லா உலகத்தில் செய்யவே முடியாது. காரணம், உலகம் முழுவதும் ஒரே ஆட்சி. முன்பே சொன்னது போல், ஒருமுறை ஒரு தொழில் தவறானது என முடக்கப்பட்டால் பூமிப் பந்தின் வேறு எந்த இடத்திலும் அதை மீண்டும் தொடங்க முடியாது.

ஆக, இந்தத் திட்டம் பெருவணிக நிறுவனங்கள் இன்னும் இன்னும் தங்கள் தொழிலாட்சியை உலகம் முழுதும் விரிவுபடுத்தவும் உதவும்; அதே நேரம் இன்று செய்வது போல் மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான எந்தத் தவறான தொழிலையும் அவர்கள் செய்ய விடாமல் கடிவாளமிடவும் கைகொடுக்கும். இதனால் இரண்டாமவர்களாகச் சமுக ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தை ஆதரிப்பார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள், மக்கள் நலப் போராளிகள், அரசு சாரா அமைப்பினர் (NGO) எனச் சமுக ஆர்வலர்கள் உலகெங்கும் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். பெருவணிக நிறுவனங்களிடமிருந்தும் அரசுகளிடமிருந்தும் மக்களைக் காக்கவும் நீதியை நிலைநாட்டவும் வாழ்நாளெல்லாம் போராடிக் கொண்டே இருக்கும் இவர்களுக்கு இந்த இரு தரப்பினரையுமே வழிக்குக் கொண்டு வருகிற இத்திட்டம் கட்டாயம் பிடிக்கும்.

ஆனால் இப்படி உலகம் முழுவதும் ஒரே தேசம், ஒரே ஆட்சி என்பது அதிகாரக் குவிப்புக்கு வழி வகுக்கும் என அவர்கள் தயங்கலாம். படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் இந்நேரம் அது தோன்றியிருக்கும். ஆனால் அப்படி இல்லை.

இன்றைய உலகம் இடத்தின் அடிப்படையில் – அதாவது நாடுகளாக – பிரிக்கப்பட்டிருப்பதால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற மக்கள் சார்பாளர்களும் (people representatives) இடத்தின் அடிப்படையிலேயே – அதாவது தொகுதிவாரியாக – மக்களைச் சார்பு (representation) செய்கிறார்கள். நாடு என்கிற அமைப்பே இல்லாவிட்டால் மக்கள் சார்பாளர்கள் இனம், மதம், நிறம் போன்ற வாழ்வியல் அடையாளங்களின் அடிப்படையில் மக்களைச் சார்பு செய்வார்கள். எனவே இன்றைக்கு மாநிலம், மாவட்டம் என இடத்தின் பெயரில் மக்களைப் பிரித்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது போல இனி வாழ்வியல் அடையாளங்களின் பெயரில் மக்களைப் பகுத்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இயலும். அதிகாரக் குவிப்புக்கு இதில் இடமில்லை.

உலக அரசியலையெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கும் நம் சமுக ஆர்வலர்களுக்கு இது புரியாதது இல்லை என்பதால் கண்டிப்பாக இத்திட்டத்துக்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.

மூன்றாமவர்கள் வேறு யாரும் இல்லை, உலகெங்கும் வாழும் பொது மக்களான நாம்தாம்.

எளிய குடிமக்களின் அன்றாடச் சோற்றுச் சிக்கல் முதல் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற பன்னாட்டுச் சிக்கல்கள் வரை அனைத்துக்கும் முடிவு கட்டும் இந்தத் திட்டம் உலக மக்கள் எல்லோருக்கும் பிடிக்கவே செய்யும். பசி, பிணி, போர், இனப்படுகொலை போன்ற எதுவுமே இல்லாத, மனிதக்குல வரலாறே இதுவரை காணாத ஒரு வாழ்வைப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு உலகப் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வரவேற்பு அளிப்பார்கள்.

மொத்தத்தில் ஆட்சியாளர்கள் மட்டும்தான் இந்தத் திட்டத்தை விரும்ப மாட்டார்களே தவிர, அவர்களையே பின்னின்று இயக்கும் இவ்வுலகின் உண்மையான ஆட்சியாளர்களான பெருமுதலாளிகள், அந்தப் பெருமுதலாளிகளையே தண்ணீர் குடிக்க வைக்கும் சமுக ஆர்வலர்கள், உலகெங்கும் உள்ள 800 கோடிப் பொதுமக்கள் என மற்ற அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் இந்தத் திட்டத்துக்கு உறுதியாய்க் கிடைக்கும்!

இது எப்படிப் பாலத்தீன இனப்படுகொலையை நிறுத்தும்?

கண்டிப்பாக இது உடனடித் தீர்வு இல்லைதான். அதே நேரம் பாலத்தீன இனப்படுகொலையும் இப்பொழுது புதிதாகத் தொடங்கியது இல்லை. 75 ஆண்டுகளாக அன்றாடம் உயிர்க் காவு கேட்கும் குருதி வரலாறு அது. இப்பொழுது அது உச்சத்தைத் தொட்டிருக்கிறது, அவ்வளவுதான். எனவே உச்சநிலை மாறினாலும் அதன் பின் வழக்கம் போல் நடக்கக்கூடிய, ஓசையில்லாத ஓர் இனப்படுகொலை அங்கு தொடரத்தான் போகிறது. அதை நிறுத்த இந்த எல்லையில்லா உலகத் திட்டம் வழி வகுக்கும். பாலத்தீனத்துக்கு மட்டுமில்லை முன்பே சொன்னது போல் ஈழம், மியான்மர், சூடான் எனப் பல நாடுகளில் நடந்து வரும் இனப்படுகொலைகள், போர்கள், ஆய்தப் போராட்டங்கள் அனைத்துக்கும் இது முற்றிலுமாக முடிவுரை எழுதும்!

எனவே உலக மக்களே ஒன்று கூடுங்கள்! நாடு, நாட்டுப்பற்று எனும் பெயர்களால் நாம் ஏமாந்ததும் போதும்; அரசு, ஆட்சி எனும் பெயர்களில் இவர்கள் ஆண்டு கிழித்ததும் போதும்! இந்தப் பூமியையே வாழத் தகுதியில்லாத இடமாக மாற்றியதுதான் ஆட்சியாளர்களின் இத்தனை காலச் சாதனை! அரசுகளின் கையிலிருந்து அதிகாரத்தை மீட்போம்! உண்மையான மக்களாட்சியை உலகம் முழுக்க வார்ப்போம்!

புதியதோர் உலகம் செய்வோம்! – கெட்ட 
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!

– பாவேந்தர் பாரதிதாசன்

❀ ❀ ❀ ❀ ❀

(நான் கீற்று இதழில் ௭-௧௧-௨௦௨௩ அன்று எழுதியது)

படங்கள்: நன்றி 1) முகமது இப்ராகிம், 2) சன்னூன்028.

அடிக்குறிப்புகள்:

¹ Refugee Statistics - Global Trends At-a-Glance
² WESO Trends 2023
³ Trends in World Military Expenditure, 2021
⁴ Demographics of the world 

தொடர்புடைய பதிவுகள்:

 மீண்டும் 2009?... 
 ஏன் இரசியாவை ஆதரிக்கக்கூடாது? 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

0 comments:

கருத்துரையிடுக

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்