.

சனி, பிப்ரவரி 20, 2021

English ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை! - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம்

Do not use Grantha in Tamil


"வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்" என்ற என் கட்டுரையில் தமிழிலேயே ஜகர, ஸகர ஒலிகள் உண்டு என்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். முடிவில் "தமிழிலேயே இப்படி ஜ, ஸ எல்லாம் இருக்கிறது என்றால் ஏன் கிரந்த எழுத்துக்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்டு அதற்கான விடையைத் தனிப்பதிவாக எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன். இதோ உலகத் தாய்மொழி நாளின் சிறப்புப் பதிவாக அக்கட்டுரை பின்வருமாறு! 
 
☟    ☟    ☟ 

“இங்கிலீசை நாம் ஏன் ‘ஆங்கிலம்’ எனக் குறிப்பிடுகிறோம்?” அண்மையில் பெண் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி இது. அடுத்த சில நாட்களில் இதே போன்ற ஒரு கேள்வியைப் புகழ் பெற்ற கேள்வி-விடை இணையத்தளமான கோராவிலும் காண நேர்ந்தது.

பெரும்பாலானோர் ஆங்கிலம் என்பது இங்கிலீசுக்குத் தமிழர்கள் வைத்துள்ள பெயர் என நினைக்கிறார்கள்; இல்லை. அது இங்கிலீசு என்பதன் ஒலிபெயர்ப்பு (transliteration). ஒலிபெயர்ப்புக்கும் மொழிபெயர்ப்புக்கும் வேறுபாடு தெரியாததால் தமிழர்கள் நாம் இப்பொழுது எந்த நிலைமைக்குச் சென்றிருக்கிறோம் தெரியுமா நண்பர்களே? சொல்கிறேன். அதற்கு முன் இந்த இரண்டுக்குமான வேறுபாட்டைப் பார்த்து விடுவோம்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு சொல்லின் பொருள் என்ன என்பதை ஆராய்ந்து நம் மொழியின் சொல்லால் அதைக் குறிப்பிடுவது. எ.டு.: Computer = கணினி.

மாறாக ஒலிபெயர்ப்பு என்பது சொல்லின் பலுக்கலை (pronunciation) மட்டும் நம் மொழிக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வது. எ.டு.: Finland = பின்லாந்து.

ஏன் அப்படி ஒவ்வொரு சொல்லுக்கு வெவ்வேறு நிலைப்பாடு எனக் கேட்டால், அதுதான் இலக்கணம். இலக்கண வரையறைகளின்படி, பொதுப் பெயர்ச்சொற்களை மட்டும்தாம் நாம் மொழிபெயர்க்கலாம். சிறப்புப் பெயர்ச்சொற்களை ஒலிபெயர்க்க மட்டும்தாம் செய்ய வேண்டுமே ஒழிய மொழிபெயர்க்கக் கூடாது.

அதென்ன, பொதுப் பெயர்ச்சொல் – சிறப்புப் பெயர்ச்சொல் எனக் கேட்கிறீர்களா? அதைப் புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் இலக்கணம் புரட்ட வேண்டும். அடடே, உடனே தத்தலைப் (tab) புரட்டி விடாதீர்கள்! கொஞ்சமே கொஞ்சம்தான்.

பெயர்ச்சொற்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானவை பொதுப் பெயர்ச்சொல் (Common Noun), சிறப்புப் பெயர்ச்சொல் (Proper Noun) ஆகிய இரண்டு. “தமிழ் நம் தாய்மொழி” – இதில் தமிழ் என்பதும் பெயர்ச்சொல்தான், தாய்மொழி என்பதும் பெயர்ச்சொல்தான். ஆனால் தமிழ் என்பது அந்த ஒரே ஒரு மொழியை மட்டுமே குறிக்கப் பயன்படும் சொல். அதனால் அது சிறப்புப் பெயர்ச்சொல். ஆனால் தாய்மொழி எனும் சொல்லால் உலகில் உள்ள எல்லாருடைய தாய்மொழியையுமே குறிப்பிடலாம். ஆகவே அது பொதுப் பெயர்ச்சொல்.

இப்படிப்பட்ட சில அடிப்படை வரையறைகள் இருப்பதால்தான் பல்வேறு குழப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன. அமெரிக்கா எந்த மொழியில் எழுதினாலும் அமெரிக்காதான்; மோதி எத்தனை நாட்டுக்குப் போனாலும் எல்லா நாடுகளிலும் பெயர் மோதிதான்; கூகுள் எத்தனை மொழிகளில் சேவை வழங்கினாலும் அத்தனை மொழிகளிலும் அதன் பெயர் கூகுள்தான். ஆக, பேசுபுக்கை முகநூல் எனச் சொல்லக்கூடாது என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்வீர்கள் இல்லையா? காரணம், அது தனிப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயர் – சிறப்புப் பெயர்ச்சொல்.

“அப்படியே இருந்தாலும் ‘ஃபேஸ்புக்’, ‘இங்கிலீஷ்’ என்றுதானே எழுத வேண்டும்? அதென்ன பேசுபுக்கு, ஆங்கிலம்?” எனக் கேட்கிறீர்களா? அப்படி வாருங்கள்! இப்பொழுதுதான் கட்டுரையின் பேசுபொருளுக்கே வந்திருக்கிறோம். சிறப்புப் பெயர்ச்சொல்லை மொழிபெயர்க்கக் கூடாது ஒலிபெயர்ப்புதான் செய்ய வேண்டும் என இலக்கண வரையறை இருப்பது போலவே எப்படி ஒலிபெயர்ப்புச் செய்ய வேண்டும் என்பதற்கும் சில இலக்கணங்கள், கட்டுப்பாடுகள் உண்டு.

திருவல்லிக்கேணியை ஆங்கிலத்தில் Triplicane என்றார்கள் ஆங்கிலேயர்கள். ஏன், Thiruvallikeni என்றே எழுத முடியாதா? முடியும்; ஆனால் மாட்டார்கள். அவரவர் மொழியின் ஒலிப்புமுறை, எழுத்திலக்கணம் போன்றவற்றுக்கு ஏற்ப உருமாற்றித்தான் பிற மொழிச் சொற்களைத் தங்கள் மொழியில் ஏற்றுக் கொள்வார்கள். இந்தியின் ருபையா ஆங்கிலத்தில் Rupees ஆவதும், ஆங்கிலத்தின் Camera பிரெஞ்சில் Caméra ஆவதும் இதனால்தான். English தமிழில் ஆங்கிலம் ஆவதற்குக் காரணமும் இதுவே. இதுதான் உலகெங்கும் உள்ள வழக்கம்.

இது தெரியாத நாம், உலகிலுள்ள எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் ஒலிப்பு மாறாமல் அப்படிக்கு அப்படியே எழுத வேண்டும் எனத் தமிழைப் போட்டுக் குதறி எடுத்துக் கொண்டிருக்கிறோம். லக்ஷ்மணஸ்வாமி, ஸ்ம்ருதி இரானி, பிஸ்ஸா ஹட், ஸ்ப்ளெண்டர் பிளஸ், ஜார்ஜ் புஷ், பஹல்பூர் என எல்லாமே நமக்கு இம்மியும் மாறாமல் அப்படியே எழுதியாக வேண்டும். இதற்கெனவே கிரந்த எழுத்துக்களை வேறு வைத்திருக்கிறோம்.

கிரந்த எழுத்துக்கள் உண்மையில் தமிழ் எழுத்துக்களே அல்ல. வடமொழியை எழுதத் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வரிவடிவமே கிரந்தம். பிற மொழிச் சொற்களைத் தமிழில் ஒலிப்பு மாறாமல் எழுதுவதற்கெனவே அதிலிருந்து ஷ, ஜ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ஆகிய ஆறு எழுத்துக்களை மட்டும் தமிழில் கலந்து பயன்படுத்தி வருகிறோம். உலகிலேயே மற்ற மொழிகளின் சொற்களை அதே ஒலிப்பில் எழுதுவதற்காக இப்படி வேற்றுமொழி எழுத்துக்களைத் தன் மொழியில் கலந்து பயன்படுத்தும் ஒரே இனம் நாமாகத்தான் இருப்போம்.

கொடுமை என்னவென்றால், இப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லி, முதன் முதலில் ஒலிபெயர்ப்பு இலக்கணத்தை வரையறுத்த உலகின் முன்னோடி மொழிகளுள் ஒன்று தமிழ்!
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார் தொல்காப்பியர். “பிறமொழிச் சொற்களை நம் மொழியில் எழுதுவதாயிருந்தால் அந்த மொழிக்குரிய எழுத்துக்களைத் தவிர்த்து விட்டு நம் மொழிக்குரிய எழுத்துக்களைப் பயன்படுத்தி மட்டுமே எழுத வேண்டும்” என்று அன்றைக்கே தெள்ளத் தெளிவாக இலக்கணம் வகுத்திருக்கிறார். ஆனால் அப்பேர்ப்பட்ட மொழியையே இன்று அதற்கு முற்றிலும் நேர்மாறாகச் செயல்படுத்திச் சிதைத்துச் சின்னபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆம், இது ஒரு மொழிச் சிதைவு! மற்ற மொழிகள் போலவே தமிழுக்கும் எழுத்திலக்கணம் இருக்கிறது. என்னென்ன எழுத்துக்கள் சொல்லின் தொடக்கத்தில் இடம்பெற வேண்டும்? என்னென்ன எழுத்துக்கள் சொல்லின் முடிவில் இடம்பெறக் கூடாது? எந்த எழுத்தின் பக்கத்தில் எந்த எழுத்து வர வேண்டும்? எந்த எழுத்து வரக்கூடாது? இப்படிப் பல இலக்கண நெறிகள் தமிழில் இருக்கின்றன. இவை அனைத்தையும் தூக்கி அடித்துவிட்டு அடுத்த மொழியின் சொல் ஒலி அணுவளவு கூட மாறி விடக்கூடாது என்பதை மட்டுமே மனதில் வைத்து எழுதுகிறோம். அதற்காகத் தமிழை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம்.

இதற்குக் காரணம் என்ன? உலகில் மற்ற எல்லா இனத்தவர்களும் தங்கள் மொழிக்கேற்பப் பிறமொழிச் சொற்களை மாற்றிப் பயன்படுத்தும்பொழுது நாம் மட்டும் ஏன் இப்படித் தலைகீழாய் நடக்கிறோம்?

இதை அறிய வேண்டுமானால், இந்திய வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்!

இந்தியாவில் பார்ப்பனர் செல்வாக்குப் பெற்ற பின்பும் நாட்டு விடுதலைக்கு முன்புமான இடைப்பட்ட காலக்கட்டத்தில் – அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக – இங்கே ஆட்சிமுறையாக (governance) இருந்தது வருணாசிரமம்தான்; நீதிமுறையாக (Law & Order) இருந்தது மனுநீதிதான்.

வெறும் இனக் குழுக்களாக வாழ்ந்து வந்த இந்திய மக்களிடம் கடவுளின் பெயரால் வருணாசிரமத்தைப் புகுத்திய பார்ப்பனர்கள் இந்த மக்களை சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று பிரித்தார்கள். இவர்களில் சூத்திரனும் பஞ்சமனும் கீழ்சாதிகளைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சுவடியைத் தொட்டாலே தீட்டு என்று கூறி அவர்களுக்குக் கல்வியே இல்லாமல் செய்தார்கள். சத்திரியனிடமும் வைசியனிடமும் “உங்களுக்குக் கணக்கு வழக்குப் பார்க்கத்தான் நாங்கள் இருக்கிறோமே! நீங்கள் எதற்காகப் படிப்பு, எழுத்து என்று நேரத்தை வீணாக்குகிறீர்கள்? போய் உங்கள் தொழிலையும் பொழுதுபோக்கையும் பார்த்துக் கொண்டு குதூகலமாக இருங்கள்” என்று கூறி அவர்களையும் படிக்காத தற்குறிகளாக்கினார்கள்.

விளைவு? கல்வி என்பது பார்ப்பனர் எனும் குறிப்பிட்ட ஓர் இனத்தவரின் தனியுடைமையாக மாறியது. படிப்பு தொடர்பான விதயங்களில் பார்ப்பனர்கள் வைத்ததே சட்டம், அவர்கள் எழுதியதே இலக்கணம் என்றாகிப் போனது. மொழிகள் அவர்களின் தனிச் சொத்துக்களாகிப் போயின.

சரியாக இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பார்ப்பனர்கள் தங்கள் விருப்ப மொழியான சமற்கிருதத்தின் சொற்களையும் எழுத்துக்களையும் தமிழில் கலந்தார்கள். கேட்டதற்கு, சமற்கிருதம் தேவமொழி என்றார்கள்.

“நீங்கள்தான் கடலைத் தாண்டினால் தீட்டுப் பட்டு விடும் என்று அஞ்சிப் பக்கத்து நாட்டுக்குக் கூடப் போகாமல் குண்டுச் சட்டியிலேயே குதிரை ஓட்டுபவர்களாயிற்றே! நீங்கள் எப்பொழுது தேவ உலகத்துக்கு நேரில் போய்ப் பார்த்தீர்கள்?” என்று திருப்பிக் கேட்கத் தெரியவில்லை படிக்காத நம் முட்டாள் மன்னர்களுக்கு. பார்ப்பனர்கள் அளந்த கதையை நம்பி, சமற்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதிப் படிக்கும்பொழுது பலுக்கல் (pronunciation) தவறாகிப் போனால் கடவுளின் சீற்றத்துக்கு ஆளாக நேருமோ என்று அஞ்சிச் சொல் கலப்பு, எழுத்துக் கலப்பு என்று எல்லா மொழிச் சிதைப்புகளுக்கும் வழி விட்டார்கள்.

இதனால் வடக்கே காசுமீரம் முதல் தெற்கே இலங்கை வரை கொடி பறக்க ஆண்டு கொண்டிருந்த தமிழ் சிதைந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு எனப் பல்வேறு தனி மொழிகளாக உருமாறியது. மொழிக் கலப்பின் இந்தப் பெரும் பாதிப்பைக் கண்ட தமிழ்நாட்டு மக்கள் மட்டும் மிகத் தாமதமாக விழித்துக் கொண்டு கிரந்த எழுத்துக்களைக் கொஞ்சம் தள்ளியே வைத்தார்கள்.

கிரந்த எழுத்துக்களை நாம் எவ்வளவுதான் தாராளமாகப் பயன்படுத்தினாலும் இந்தியாவின் மற்ற மொழிகளைப் போல் அவற்றை நம் அரிச்சுவடிக்குள் சேர்க்காமல் இன்றும் ஒதுக்கியே வைத்திருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் இந்த எச்சரிக்கை உணர்வுதான்.

ஆனால் என்னதான் ஒதுக்கி வைத்தாலும், கிரந்த எழுத்துப் பயன்பாட்டை முற்றிலும் நாம் விட்டு விடவில்லை. மற்ற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்பொழுது தமிழ் அரிச்சுவடியிலேயே இல்லாத இந்தச் சிறப்பு எழுத்துக்களைப் பயன்படுத்தியாவது பலுக்கல் மாறாமல் எழுதி விட வேண்டும் என்றுதான் இன்றும் நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறோம். நம் ஊடகங்களும் அப்படித்தான் தமிழை எழுதுகின்றன.

இதனால்தான் ஒலிபெயர்ப்பு என்றால் என்ன என்பதே நம் மக்களுக்கு அறிமுகமாகாமல் போய் விட்டது. உலகின் வேறெந்த நாட்டிலும் இப்படிப் பிற மொழிகளுக்காகத் தங்கள் மொழியில் வேற்று எழுத்துக்களைக் கலந்து எழுதும் வழக்கம் இல்லை. அதனால் பிற மொழிச் சொற்களைத் தங்கள் மொழியில் எழுதும்பொழுது தங்கள் மொழியின் எழுத்துக்களுக்கும் இலக்கணத்துக்கும் ஏற்றபடி ஒலிபெயர்த்து எழுதுவது எப்படி எனத் தெரிந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. இதனால் இயல்பாகவே அவர்களுக்கு ஒலிபெயர்ப்பு இலக்கணம் அறிமுகமாகி விடுகிறது. ஆனால் கிரந்த எழுத்துப் பயன்பாடு என்கிற ஒன்று இருப்பதன் காரணமாக இங்கே நமக்கு இதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது.

நம்முடைய இந்த அறியாமை இப்பொழுது எங்கே போய் நிற்கிறது தெரியுமா நண்பர்களே? ஒலிபெயர்ப்பு இலக்கணம் தெரியாததால் இதுவரை தமிழை மட்டுமே கெடுத்துக் கொண்டிருந்த நாம் இப்பொழுது ஆங்கிலத்தையும் கெடுக்கத் தொடங்கி விட்டோம்!

நம்மில் பெரும்பாலானோர் தமிழ் மொழியின் பெயரை ஆங்கிலத்தில் Thamizh என்றுதான் எழுதுகிறோம். இது முற்றிலும் தவறு!

ஆங்கிலத்தில் ழகர ஒலியே கிடையாது. எனவே அதற்கு நெருங்கிய ஒலி வடிவமான L-ஐத்தான் பயன்படுத்த வேண்டும். தலைசிறந்த தமிழறிஞர்களுள் ஒருவரான செம்மொழிப் போராளி சி.இலக்குவனார் அவர்கள் பிரெஞ்சில் Z-உம் H-உம் சேர்ந்து வரும் இடங்கள் ழகரமாக ஒலிக்கப்படுவதால் அந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் ழகரத்தை எழுதப் பரிந்துரைத்தார். ஆனால் இது ழகரத்தை ஆங்கிலத்தில் எழுதிக் காட்டியே ஆக வேண்டிய கட்டாயம் வரும்பொழுது உதவத்தான். அதாவது அரிதான பயன்பாடுகளுக்கு. ஆனால் இன்று நாம் அதையே இயல்பான பயன்பாடாக மாற்றிக் கொண்டு விட்டோம். zha என்றால் ழ-தான் என ஏதோ ஆங்கில இலக்கணத்திலேயே இருப்பது போல நாம் கண்டபடி அதைப் பயன்படுத்துகிறோம்.

ஒலிபெயர்ப்பு இலக்கணம் அறியாததால் ஏற்படும் குழப்பத்தின் உச்சக்கட்டம் இது! ஆறு கிரந்த எழுத்துக்களை வைத்துக் கொண்டு எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் தமிழில் அதை ஒலிப்பு மாறாமல் எழுதியே பழகிய நாம் அதே போல் இன்று பிற மொழிகளையும் கையாளப் பார்க்கிறோம்.

ஆங்கிலத்தில் நாம் செய்யும் இந்தச் சிதைப்பு வெளியுலகுக்குத் தெரிந்தால் நம் மொழி அறிவைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படி ஒலிபெயர்ப்பு என்கிற அடிப்படை இலக்கண நெறிமுறை ஒன்றைத் தெரிந்து கொள்ளவே விடாமல் தடுக்கும் இந்த கிரந்த எழுத்துக்கள் நமக்குத் தேவையா?

உலகில் மற்ற எல்லாரும் தங்கள் ஒலிப்புமுறைக்கு ஏற்பவே பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தும்பொழுது நாம் மட்டும் எல்லா மொழிகளுக்கேற்பவும் நம் மொழியை வளைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தமிழ் மட்டும் என்ன உலகிலேயே அவ்வளவு மட்டமான மொழியா?

எந்தக் காலத்திலோ யாரோ நம் மொழியை அழிப்பதற்காக உள்ளே நுழைத்த இந்தக் கெடுதியை இன்றும் நாம் சுமந்து கொண்டு அலைய வேண்டுமா?


முன்பு போல் இல்லை. தமிழ் இன்று உலகமொழி. ஆர்வர்டு (Harvard), தொராந்தோ (Toronto) என உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைய இருக்கின்றன. உலகெங்கும் தமிழ் இறக்கைகள் விரிய இருக்கின்றன. தமிழரல்லாத மற்ற இனத்தவரும் இனி நம் மொழியைக் கற்க இருக்கிறார்கள். அப்படி அவர்கள் கற்கும்பொழுது உலகில் வேறு யாரிடமும் இல்லாத இப்படி ஒரு விந்தையான (indifferent) ஒலிபெயர்ப்பு முறையை நாம் மட்டும் கடைப்பிடிப்பது தெரிந்தால் நம்மைப் பற்றியும் நம் மொழியைப் பற்றியும் என்ன நினைப்பார்கள்?

எனவே உலகளவில் நம்மைத் தலைகுனிய வைக்கும் இந்த கிரந்த எழுத்துக்களைத் தூக்கி எறிவோம்!
தமிழைத் தமிழால் எழுதுவோம்! 
தமிழாய் எழுதுவோம்! 
❀ ❀ ❀ ❀ ❀
(நான் 11.08.2019 நாளிட்ட ‘தினச்செய்தி’ நாளிதழில்  எழுதியது, சில மாற்றங்களுடன்)
 
கட்டுரையின் கருத்து பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கிரந்த எழுத்துப் பயன்பாட்டை ஒழிக்க உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

13 கருத்துகள்:

  1. தமிழைத் தமிழால் எழுதுவோம்!
    தமிழாய் எழுதுவோம்!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு !

    நான் கடந்த 22 ஆண்டுகளாக

    கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து

    தமிழில் தான் எழுதி வருகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! வருக வருக தனித்தமிழ் ஆர்வலர் கொழுமம் ஆதி அவர்களே!
      இதுதான் நம் வலைப்பூவில் நீங்கள் இடும் முதல் கருத்து என நினைக்கிறேன். உங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ச்சி! கிரந்த எழுத்துக்கள் மட்டுமல்ல நீங்கள் ஆங்கிலம், சமற்கிருதம் எனத் தமிழில் கலந்துள்ள அயல்மொழிச் சொற்களையும் தவிர்த்து எழுதுபவர் மட்டுமில்லை பேச்சிலும் கடைப்பிடிப்பவர் மட்டுமில்லை உங்கள் குழந்தையையும் அந்தச் செவ்வழியிலேயே வளர்க்கும் பெருந்தமிழ்த் திருமனார், பல அரிய தமிழ்த் தொண்டுகளை மேற்கொள்ளும் தமிழ்ச் செயற்பாட்டாளர் என்பதை அறிவேன். உங்கள் பாராட்டு எனக்கான ஏற்பிசைவு! நனி நன்றி!

      நீக்கு
    2. மிகப்பயனுள்ள தகவலை தந்தமைகு சிறம் தாதி வணகுகிறேன்...இதில் பிழை இலாமல் தட்டசு செய்ய முடியவிலை..🙏🙏🙏

      நீக்கு
    3. நாம் வழக்கமாக கூறி வரும் சமற்கிரதம் கலது பேசி வரும் சில சொற்களும் அதகு நிகற் ஆன தமிழ் சொற்கள் கூறினால் நன்றாக இருகும்

      நீக்கு
    4. உங்கள் முதல் வருகைக்கு என் அன்பான வரவேற்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் தேவா அவர்களே! உங்கள் கருத்தை வெளியிட இவ்வளவு தாமதமானமைக்கு மிகவும் வருந்துகிறேன்!

      சிரம் தாழ்த்தியெல்லாம் வணங்க வேண்டா! உங்களைப் போல் தமிழார்வமுள்ளவர்களின் ஒரு சிறு பாராட்டே நிறைவானது. மற்றபடி பிழை இல்லாமல் தட்டெழுதுவது அவ்வளவு கடினமில்லை. நீங்கள் தட்டெழுத எந்தக் கருவியை, எந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைச் சொன்னால் உதவ ஆர்வமாக இருக்கிறேன்.

      நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சமற்கிருதச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பட்டியலை நீங்கள் இங்கு காணலாம் - https://bit.ly/3d7FhWr

      ஆனால் இஃதொரு சிறு பட்டியல் மட்டுமே! இதில் சில தமிழ்ச் சொற்களும் தெரியாமல் சமற்கிருதம் என்று கருதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம். எனவே எவையெல்லாம் உண்மையிலேயே சமற்கிருதச் சொற்கள் என்பதை அறிய ஒரே வழி பாவாணர் ஐயாவின் ’செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’யை நாடுவதுதான். இந்திய மொழிகளிலேயே மாபெரும் அகராதி இது. மொத்தம் 12 மடலங்களும் 31 தொகுதிகளும் கொண்ட இந்தப் பெருந்திரள் தொகுப்பு நூலில் ’அயற்சொல் மடலம்’ என ஒரு தனிப்பிரிவே எழுதியிருக்கிறார் பாவாணர். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களுக்கான இந்த அகராதி உங்கள் தேவையைச் சரியாகத் தணிக்கும் எனத் திடமாக நம்புகிறேன். மூன்று பாகங்கள் கொண்ட அந்த மடலத்தின் இணைப்புகள் இதோ:

      முதல் பாகம் - http://www.tamilvu.org/ta/library-ldpam-ldpam10-ldpam101-html-ldpam101ind-266954

      இரண்டாம் பாகம் - http://www.tamilvu.org/ta/library-ldpam-ldpam10-ldpam102-html-ldpam102ind-268131

      மூன்றாம் பாகம் - http://www.tamilvu.org/ta/library-ldpam-ldpam10-ldpam103-html-ldpam103ind-269274

      தொடர்ந்து வாருங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைத் தாருங்கள்!

      நீக்கு
  3. சரியான நாளில் அருமையான விழிப்புணர்வுப் பதிவு.

    பதிலளிநீக்கு
  4. "சிறப்புப் பெயர்ச்சொல்லை மொழிபெயர்க்கக் கூடாது" என்று நான் மற்றவர்க்குச் சொன்னாலும்
    பேசுபுக்கு தான் சரி என்று அறிந்திருக்கவில்லை. அதுபோல, Tamil என்றுதான் பயன்படுத்தினாலும் pazham என்று பயன்படுத்துகிறேன்.
    தேவையான பதிவிற்கும் கற்றல் வாய்ப்பிற்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் பாராட்டுக்கு மிக்க நன்றி கிரேசு அவர்களே!

      //"சிறப்புப் பெயர்ச்சொல்லை மொழிபெயர்க்கக் கூடாது" என்று நான் மற்றவர்க்குச் சொன்னாலும் பேசுபுக்குதான் சரி என்று அறிந்திருக்கவில்லை// - அதனாலென்ன அம்மணி! இதெல்லாம் எல்லாருக்கும் நடப்பதுதான். நானும் இந்தக் கட்டுரை எழுதிய பின்புதான் அன்றாட மொழிப் பயன்பாட்டில் இதற்கு முரணாகப் பல சொற்களை நான் பயன்படுத்துகிறேன் என்பதை உணர்ந்து திருத்திக் கொண்டேன்.

      //Tamil என்றுதான் பயன்படுத்தினாலும் pazham என்று பயன்படுத்துகிறேன்// - அட இது தேவலாம் அம்மணி! பெயரிலேயே ழகரம் வருபவர்கள் என்ன செய்வார்கள்? எடுத்துக்காட்டாக என் (தம்பி) மகள் பெயர் மகிழினி. இதைப் படிவங்களில் Magailini என எழுதினால் நம்மவர்களே தவறாகத்தான் படிப்பார்கள். Magizhini என எழுதினால்தான் சரியாகப் படிப்பார்கள். அப்படிப் பழக்கி விடப்பட்டிருக்கிறோம் நாம்! என்ன செய்வது! :-D

      மற்றபடி உங்களுக்குக் கற்பிக்கும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை. எனினும் உங்கள் அன்புக்கு நனி நன்றி!

      நீக்கு
    2. மிக்க நன்றி ஐயா. ஃபேஸ்புக் இனி பேசுபுக்கு ..என்னவாயிற்று இவளுக்கு என்று நினைப்பார்கள். ஆனாலும் தவறுகளைத் திருத்தத்தானே வேண்டும்.
      //இதற்கு முரணாகப் பல சொற்களை நான் பயன்படுத்துகிறேன் என்பதை உணர்ந்து திருத்திக் கொண்டேன்.// அருமை ஐயா! நானும் முயற்சி செய்கிறேன்.

      மகிழினிக்கு வாழ்த்துகள்! அழகான பெயர். //இதைப் படிவங்களில் Magailini என எழுதினால் நம்மவர்களே தவறாகத்தான் படிப்பார்கள்.//ஆமாம். அழகான பெயரைத் தவறாக உச்சரித்து கடுப்பேற்றுவார்கள்.
      //மற்றபடி உங்களுக்குக் கற்பிக்கும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை.// ஆகா! நான் மிகச் சிறியவள்..கற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.
      நன்றி ஐயா.

      நீக்கு
    3. உங்கள் கருத்தை வெளியிட இவ்வளவு தாமதமானமைக்கு மிகவும் வருந்துகிறேன்!

      //ஃபேஸ்புக் இனி பேசுபுக்கு ..என்னவாயிற்று இவளுக்கு என்று நினைப்பார்கள். ஆனாலும் தவறுகளைத் திருத்தத்தானே வேண்டும்// - ஆகா! எத்தனை பேர் இப்படி முன்வருவார்கள்!!! நன்றி அம்மணி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்