“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.
“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.
“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,
“சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.
ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...
ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட!
ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.
அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?...
**********
இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.
“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.
“சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,
“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”
வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,
“ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,
“ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.
“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.