.

வியாழன், ஆகஸ்ட் 09, 2018

மரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்!

Traditional lifestyle and Healer Baskar, the charlatan
ரபுசார் வாழ்வியல் (Traditional Lifestyle) எனும் சொல்லாட்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் வீட்டிலேயே உயூடியூபைப் பார்த்து மகப்பேற்றுக்கு (பிரசவத்துக்கு) முயல, கிருத்திகா எனும் அந்தப் பெண் துடிதுடித்துப் பலியான கொடுமை அண்மையில் திருப்பூரில் நடந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது பேசுபொருள் அஃது இல்லை. இது நடந்த சில நாட்களிலேயே ‘வீட்டிலேயே மகப்பேறு பார்ப்பது எப்படி?’ என ஒரே நாள் பயிற்சி வகுப்பில் கற்றுத் தந்து விடுவதாக விளம்பரம் செய்திருக்கிறார் இணையப் பெரும் புகழ் ஈலர் பாசுகர் (Healer Bhaskar)! இப்பொழுது அவரைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை.

இயற்கை சார் மருத்துவம், இயற்கை சார் அறிவியல், இயற்கை சார் தொழில்நுட்பம் என இயற்கையை ஒட்டி ஒரு மாபெரும் நாகரிகத்தையே கட்டமைத்தவர்கள் தமிழர்கள். ஆகவே பழந்தமிழர்களின் இயற்கை சார் வாழ்வியலுக்கு, மரபார்ந்த வாழ்க்கை முறைக்கு மாறுவது என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் நமக்குத் தேவையில்லை. ஆனால் இன்று நாம் கடைப்பிடிக்க முயலும் வீட்டு மகப்பேறு (home birth) உண்மையிலேயே நம் மரபைச் சார்ந்த இயற்கை வழிமுறைதானா? ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவ முறைதானா? இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை காண்பதே திருப்பூர் கிருத்திகா போல் மேற்கொண்டு யாரும் உயிரிழக்காமல் தடுக்கும். அதற்கான சிறு முயற்சியே இப்பதிவு.

இதற்குப் பெயர் மரபு வழி மருத்துவமா?

இன்று ஈலர் பாசுகரைக் கைது செய்தவுடன் “மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தியதற்காகக் கைது நடவடிக்கையா?” எனப் பலரும் எகிறிக் குதிக்கிறார்கள். எது மரபு வழி மருத்துவம்? ஈலர் பாசுகர் வலியுறுத்துவது மரபு வழி மருத்துவமா? அப்படிச் சொன்னால், ஒன்று – நீங்கள் தமிழர் மரபு வழி மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது, ஈலர் பாசுகரின் நூல் எதையுமே படிக்காதவராக இருக்க வேண்டும்.

ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவமோ, இயற்கை மருத்துவமோ இல்லை; ‘மருந்தில்லா மருத்துவம்’! “மருந்து என்பதே உடம்புக்குத் தேவையில்லை. எப்பேர்ப்பட்ட நோய் வந்தாலும் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை உடம்புக்கு உண்டு” என்பதுதான் ஈலர் பாசுகரின் அடிப்படையான மருத்துவக் கொள்கை! (பார்க்க ஈலர் பாசுகர் எழுதிய ‘அனாடமிக் தெரபி’ எனப்படும் ‘செவிவழித் தொடு சிகிச்சை’).

இது சரியா? உடம்புக்கு அப்படித் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உண்டு என்றால் எதற்காக அந்தக் காலத்திலேயே சித்தர்கள் வகை வகையாக இத்தனை மருந்துகளைக் கண்டுபிடித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்? ஆங்கில மருத்துவர்கள்தாம் நம்மிடம் பணம் பிடுங்குவதற்காகத் தேவையில்லாமல் ஏராளமான மருந்துகளை நம் தலையில் கட்டுகிறார்கள் என ஈலர் பாசுகர் சொல்கிறார். அது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். நான் கேட்பது ஆங்கில மருத்துவர்களைப் பற்றியோ, பிற மருத்துவ இயல்களைச் சார்ந்த இந்தக் கால மருத்துவர்களைப் பற்றியோ இல்லை; தமிழ் மருத்துவ முன்னோடிகளான சித்தர்களைப் பற்றி.

Lots of Siddha medicines

நோயே வராமல் வாழ யோகாசனம்; நோய் வந்தாலும் மருந்தே இல்லாமல் தீர்த்துக் கொள்ள வருமப் பண்டுதம் (வரும சிகிச்சை); அதிலும் சரியாகா விட்டால் ஒவ்வொரு நோய்க்கும் விதவிதமான மருந்துகள், மாத்திரைகள், சூரணங்கள், இலேகியங்கள், பற்பங்கள்; இப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அத்தனை நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடித்து வைத்து, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களுக்கும் நாமே மருந்து கண்டுபிடித்துக் கொள்ள ஏற்றவாறு முறையான மருத்துவ இயலையும் வகுத்து வைத்து விட்டுச் சென்ற நம் சித்தர்கள் பித்தர்களா? அல்லது எந்தப் பெருநிறுவனங்களுக்குச் (corporates) செம்பு தூக்க, எந்த இல்லுமினாட்டிகளுக்கு விசிறி வீசச் சித்தர்கள் இவற்றை நம் தலையில் கட்டினார்கள்?

‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று முழங்கிய சித்தர்களின் மரபில் வந்த நாம், ‘மருந்து என்பதே உடம்புக்குத் தேவை இல்லை’ என்பவரை மரபு வழி மருத்துவர் எனச் சொன்னால், அதை விட நம் மரபுக்கும் நம் முன்னோடிகளுக்கும் நாம் இழைக்கக்கூடிய இரண்டகம் (துரோகம்) வேறு ஏதாவது இருக்க முடியுமா? இதை மரபு வழி மருத்துவம் எனச் சொன்னால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே கடைப்பிடிக்கப்பட்டு வரும் சித்த மருத்துவத்தை என்ன பெயர் சொல்லி நாம் அழைப்பது?

ஈலர் பாசுகருடைய மருத்துவ முறையின் அழகு!

அதற்காக, மருந்தில்லா மருத்துவம் போன்ற புதிய முறைகளுக்கு நாம் மாறவே கூடாது என்பதில்லை. தாராளமாக மாறலாம். முன்பே கூறியது போல் யோகாசனம், வருமப் பண்டுதம், அக்குப்பஞ்சர் என எத்தனையோ பேர் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மருந்தில்லா மருத்துவ முறைகள் பல உள்ளன. அவற்றுக்கு மாறுவதில் தவறில்லை. ஆனால் ஈலர் பாசுகரின் மருந்தில்லா மருத்துவம் இப்படிப்பட்டதா?

ஈலர் பாசுகர் என்ன சொல்கிறார்? “நாக்குதான் மருத்துவர்; சுவைதான் மருந்து. உங்கள் நாக்கு எப்பொழுது எந்தச் சுவையை அதிகம் கேட்கிறதோ அப்பொழுது, அந்தச் சுவை கொண்ட உணவு வகைகளைப் போதுமான அளவுக்குச் சாப்பிடுங்கள். நோய் குணமாகி விடும்” என்கிறார். எப்படி எனக் கேட்டால், உடம்புக்கு என அறிவு உள்ளதாம்! நம் உடம்புக்கு எப்பொழுது எது தேவை என்பது அதற்கே தெரியுமாம்!

நீரிழிவு வந்தால் இனிப்புச் சாப்பிடக்கூடாது என்பது அலோபதி, சித்தம், ஆயுர்வேதம் என எல்லா மருத்துவர்களும் சொல்லும் அடிப்படைக் கட்டுப்பாடு. காரணம், கணையம் சரியாக வேலை செய்யாமல் இன்சுலின் சுரக்காத காரணத்தால் ஏற்படும் நோய் அது. எனவே மீண்டும் கணையம் சரியாக வேலை செய்யும் வரை இனிப்பைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

ஆனால் இவரோ, “கணையம் செயல்படாமல் போவது என்பது எங்கோ ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழும். மற்றபடி, இன்று நீரிழிவு நோயாளிகள் எனச் சொல்லப்படும் யாருக்கும் கணையத்தில் கோளாறே கிடையாது. சாப்பிடும் உணவு முறையில்தான் கோளாறு. சாப்பிடும்பொழுது தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது, வேக வேகமாகச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் உணவில் இருக்கும் பெரும்பாலான சர்க்கரை கெட்ட சர்க்கரையாக மாறுகிறது. கணையம் நல்ல சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் கொடுக்கும்; கெட்ட சர்க்கரைக்குக் கொடுக்காது. இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இன்சுலின் சுரக்கவில்லை என்றவுடன் கணையம் கெட்டுப் போய்விட்டது என்கிறோம். இது தவறு! கவனச் சிதறல்கள் ஏதும் ஏற்படாமல் முழுக் கவனத்தையும் உணவின் மீது வைத்து, நன்றாக மென்று, நிறுத்தி, சுவைத்துச் சாப்பிட்டால் போதும். உணவில் இருக்கும் எல்லாச் சர்க்கரையும் நல்ல சர்க்கரையாக மாறி விடும்; கணையமும் இன்சுலினைச் சரியாகச் சுரக்கும்; எல்லாச் சர்க்கரையும் சரியாகச் செரிமானமாகிக் குருதியில் கலக்கும்; நீரிழிவு நோய் போய் விடும்” என்கிறார்.

என்ன தலை கிறுகிறுக்கிறதா? இப்படி ஒவ்வொரு நோய் பற்றியும் பக்கம் பக்கமாய் உளறித் தள்ளியிருக்கிறார் மனிதர். மொத்தம் 320 பக்கங்கள்! முழுவதும் படித்துப் பாருங்கள்! கிறுகிறுப்பென்ன, கிறுக்கே பிடிக்கும்! சளி, இருமல், தும்மல், தலைவலி தொடங்கி ஆத்துமா, காசம், புற்று நோய், எயிட்சு என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதாக நூலின் தொடக்கத்தில் பட்டியலிடுபவர், கடைசியில் அத்தனை நோய்களுக்குமான தீர்வாகச் சொல்வது இதைத்தான் – அதாவது, “உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ அதைக் கவனச்சிதறல் இல்லாமல், போதும் எனத் தோன்றுகிற வரைக்கும் சாப்பிடுங்கள்! இருமல் முதல் எயிட்சு வரை அத்தனையும் பறந்து விடும்” என்கிறார்.

அறிவு என்பது எலிப் புழுக்கை அளவு இருப்பவனாவது இதை நம்புவானா? காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தை குளிர்பானம் கேட்டால் என்ன செய்வீர்கள்? ‘குழந்தையின் உடம்புக்கு இப்பொழுது அது தேவைப்படுகிறது. அதனால்தான் கேட்கிறது’ என வாங்கிக் கொடுத்து விடுவீர்களா? நடுக்குச் சுரம்தான் (ஜன்னி) வரும்! வயிற்றுப்புண் (ulcer) வந்த எத்தனையோ பேர் நாக்கு விரும்புகிறதே என்பதற்காக ஒரே ஒரு நாள் கார வகைகளைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.

எந்த நோய்க்கு எதைச் சாப்பிடக்கூடாதோ அதைத் தவறிச் சாப்பிட்டு விட்டாலே நோய் தீவிரமாகும்; உடம்பு பாடாய்ப் படுத்தும் என்பது நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பட்டுத் தெளிந்த, கண்கூடான உண்மை. அதையே ஒருவர் தலைகீழாக மாற்றிச் சொல்கிறார் என்றால், அவர் கடைப்பிடிக்கச் சொல்வது மரபு வழி மருத்துவமா, இயற்கை சார் மருத்துவமா என்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்; முதலில் அது மருத்துவமா? அட, அதைக் கூட விடுங்கள்! நல்ல மனநிலையில் இருக்கிற ஒருவர் பேசக்கூடிய பேச்சா இது?

இப்படிச் சுற்றி வளைத்து இவர் சொல்ல வருவது என்ன? கவனச் சிதறல்கள் நிறைந்த, துரித வேகத்திலான இயந்திரமய வாழ்க்கை முறைதான் எல்லா நோய்களுக்கும் காரணம் என்பதுதானே? அப்படிப்பட்ட வாழ்க்கை முறை இப்பொழுதுதானே நிலவுகிறது? நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிடையாதே! அன்றைக்குத் தொலைக்காட்சி போன்ற கவனச் சிதறல்கள் இல்லையே! காலையில் வேக வேகமாக அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் ஓடும் வாழ்க்கை முறை இல்லையே! அப்பொழுது இந்த நோய்களெல்லாம் எப்படி வந்தன?

அட, நீரிழிவு, உதிரக் கொதிப்பு போன்றவையெல்லாம் அந்தக் காலத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை கொண்ட பணக்காரர்களுக்குத்தான் வந்தன என்றே வைத்துக் கொள்வோம். மற்ற நோய்கள்...? எத்தனையோ ஏழைகள் ஆத்துமா, வயிற்றுப் புண், எலும்புருக்கி, புற்று நோய் போன்றவற்றால் அன்றும் பாதிக்கப்பட்டுத்தானே இருந்தார்கள்? அவர்களுக்கு அவை எப்படி வந்தன? சிந்திக்க வேண்டாவா?

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. அதற்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணங்களும் மாறுபடும். ஒருவருக்குப் போதுமான உணவு கிடைக்காததால் வயிற்று வலி வரும்; இன்னொருவருக்கு அளவுக்கு மீறி உணவு உண்பதால் வரும். சிலருக்குக் கொழுப்புக் காரணமாக இதயக் கோளாறு ஏற்படும்; சிலருக்கு மன அழுத்தத்தினாலேயே கூட அஃது உண்டாகும். எத்தனையோ பேர், தலைமுறை வழி நோய்களால் (hereditary diseases) தாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர், உறவுக்குள்ளே மணம் புரிந்த பெற்றோருக்குப் பிறந்ததால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி அவரவர் வாழ்க்கைமுறை, நிலைமைக்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணிகளும் எவ்வளவோ மாறுபடும். அப்படியிருக்க, வாய்க்குப் பிடித்ததை, கவன ஒருமைப்பாட்டோடு, போதும் போதும் என்கிற அளவுக்கு வளைத்துக் கட்டித் தின்றால் உலகில் உள்ள அத்தனை பேருக்கும் அத்தனை நோய்களும் குணமாகி விடும் என்பது எப்பேர்ப்பட்ட பித்துக்குளித்தனம்! எந்தளவுக்கு உச்சக்கட்ட முட்டாளாக இருந்தால் ஒருவர் இப்படி ஒரு கூற்றைத் துணிந்து வெளியில் வந்து சொல்வார் என்றுதான் இந்த நூலை முதன் முதலில் படிக்கும்பொழுது எனக்குத் தோன்றியது. ஆனால் இன்று இவர் அடைந்திருக்கும் புகழையும் செல்வாக்கையும் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது.

“பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்” என்கிறார் வள்ளுவப் பெருமான். ஆனால் இந்த அளவுக்குப் பயனே இல்லாத ஒரு கூற்றைச் சொல்லி ஒருவர் இந்த அளவுக்குப் புகழும் பொருளும் ஈட்ட முடிகிறது என்றால், அந்த அளவுக்கு அறிவில் சீர்கெட்டுப் போயிருக்கிறதா நம் இனம் என மெய்யாகவே எனக்கு மிகவும் அச்சமாயிருக்கிறது. சீமான், பி.ஆர்.பாண்டியன் என நான் பெரிதும் மதிக்கும் பலர் கூட ஈலர் பாசுகரை ஆதரிப்பது தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.

ஆக, ஈலர் பாசுகர் மரபு வழி மருத்துவரும் இல்லை; அவர் சொல்லும் மருத்துவம் நம் மரபைச் சேர்ந்ததும் இல்லை; அப்படியே, மரபுக்கு ஒவ்வாதது என்றாலும் முயன்றாவது பார்க்கலாமே என நினைத்தால் கூட அவர் சொல்லும் எதுவுமே ஏற்கக்கூடியதாகவும் இல்லை.

அடுத்தது, வீட்டிலேயே மகப்பேறு என்பது.

இன்றைய வீட்டு மகப்பேறு (home birth) தமிழர் மரபு முறையா?

அறுவை முறை மகப்பேறு (சிசேரியன்) எனும் பெயரில் இந்த ஆங்கில மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளை எத்தனை கொடுமையானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நான் பார்த்த வரை, சென்னையில் 90-களுக்குப் பிறகு ஒருவருக்குக் கூட இவர்கள் இயற்கையான மகப்பேறு நடக்க விடவில்லை. இது தொடர்பாக ‘மெர்சல்’ படத்தில் வந்த அந்தக் காட்சி முற்றிலும் உண்மை. அதில் “இன்னிக்கு நீ எப்படி சிசேரியன்னு சொன்னா பயப்படறியோ, அதே மாதிரி, இன்னும் முப்பது வருசம் கழிச்சு நார்மல் டெலிவரின்னு சொன்னா பயப்படுவாங்க” என்பார் S.J.சூர்யா. அதுதான் இன்றைய நிலைமை.

Patient will be shocked for normal delivery in another 30 years

அதற்காக ஒரேயடியாய், வீட்டிலேயே இனி மகப்பேறு பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம் இல்லையா? உடனே, “அந்தக் காலத்தில்...” என அதே பல்லவியைப் பாடாதீர்கள்! அந்தக் காலத்து மருத்துவச்சிகளின் திறமை இன்று உங்களுக்கு உண்டா?

கருவுற்ற தாயின் உடல்மொழியை வைத்தே பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்று சொல்லும் பாட்டிமார்கள் அன்று இருந்தார்கள்; இன்று இருக்கிறார்களா? முக வாட்டம், உடல் பொலிவு போன்றவற்றை வைத்து, குழந்தை பிறக்கும் நாளை முன்கூட்டியே சொல்லக்கூடிய திறமையாளர்கள் அன்று உண்டு; இன்று உண்டா? காலக்கெடு கடந்த பின்னும் இடுப்பு வலி வராவிட்டால் வரவழைக்கவும், குழந்தை பிறந்த பின் மீண்டும் உடம்பைப் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யவும் பல கைமருந்துச் செய்முறைகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன; நமக்குத் தெரியுமா? மகப்பேற்றின்பொழுது குழந்தையின் தலை திரும்பியிருந்தால் அதைச் சரியாக வரவழைக்கும் நுட்பம் அவர்கள் அறிந்திருந்தார்கள்; நாம் அறிவோமா அதை?

வருடி (scanner), வெற்றிடக் கோப்பை (vacuum cup) என எதுவுமே இல்லாமல் இவை செய்யக்கூடிய எல்லாவற்றையும் வெறுமே தங்கள் கைகளாலும் பட்டறிவாலும் செய்து முடித்தவர்கள் அன்றைய நம் பாட்டிமார்கள், மருத்துவச்சிகள். அவர்களின் இந்தத் திறமையில், நுட்பத்தில், கைப்பக்குவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நமக்கு உண்டா? அல்லது, ஒரே நாள் பயிற்சி வகுப்பிலோ, உயூடியு காணொலிகள் (YouTube videos) மூலமோ இந்தத் திறமைகள் அனைத்தையும் வரவழைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறீர்களா?

உலகமே போற்றி வணங்க வேண்டிய இத்தகைய நம் முன்னோரின் திறமைகளை ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டு, இன்று ஆங்கில மருத்துவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்றவுடன் மீண்டும் வீட்டிலேயே பிள்ளை பெற்றுக் கொள்கிறேன் எனப் புறப்பட்டால், குறிப்பிட்ட நுட்பங்களை அறியாமல் மகப்பேற்றின்பொழுது நேரும் சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி? மரபு வழி மகப்பேற்றின் உயிர் காக்கும் அறிவியலையும் நுட்பத்தையும் தொலைத்து விட்டு மரபு வழிக்குத் திரும்புவது எப்படி முடியும்?

அப்படியே நீங்கள் வீட்டில் பிள்ளை பெற்றுக் கொண்டாலும் அதற்குப் பெயர் மரபுசார் வழிமுறையா? வழி வழியாக வந்த நம் மகப்பேறு இயல் மருத்துவ நுட்பங்கள் ஒன்றையுமே கடைப்பிடிக்காமல், வெறுமே வீட்டில் பிள்ளை பெற்றுக் கொள்வதால் மட்டுமே அது மரபு வழி மகப்பேறு ஆகி விடுமா? சிந்தித்துப் பாருங்கள்!

எனில், இதற்குத் தீர்வுதான் என்ன?

இதற்கு ஒரே வழி, மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவதுதான்; மருத்துவர்கள் தேவையில்லாமல் அறுவை முறை மகப்பேற்றை மேற்கொண்டால் உரிய தண்டனை கிடைக்கும்படி சட்டத்தை இறுக்குவதுதான். அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்படி ஆட்சியாளர்களை வலியுறுத்துவதுதான் மருத்துவமனையிலேயே இயற்கையான மகப்பேற்றுக்கான வசதி நமக்குக் கிடைக்க வழி செய்யும். அதுதான் தாய்-சேய் இருவருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

எனவே ஈலர் பாசுகர் போன்ற அரைவேக்காடுகளை நம்பாமல், உண்மையான சித்த மருத்துவர்கள், யோகா ஆசிரியர்கள் போன்றோரை அடையாளம் கண்டு, அவர்கள் காட்டும் வழியில் இயற்கை வாழ்வியலுக்குத் திரும்புவோம். கொள்ளையாய்ப் பணம் அள்ள வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் அறுவை முறை மகப்பேற்றைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களைத் தண்டிக்கவும், அறப்புறம்பான வழியில் நடை போடும் இன்றைய மருத்துவ உலகை நெறிப்படுத்தவும் சட்டம் கொண்டு வரச் சொல்லி ஆட்சியாளர்களை வற்புறுத்துவோம்!

அதுவே நம் அனைவருக்குமான உடல் – மன நலத்தைப் பாதுகாக்கும் சரியான வழிமுறையாகவும் வாழ்வியலாகவும் இருக்க முடியும்! 
❀ ❀ ❀ ❀ ❀
(நான் கீற்று இதழில் ௮-௮-௨௦௧௮ அன்று எழுதியது)

படம்: நன்றி தமிழ் ஒன் இந்தியா, மின்னம்பலம், பிக்சபே, தேனாண்டாள் பிலிம்சு. 

நூல் இணைப்பு: நன்றி வலைத்தமிழ்.

தொடர்புடைய பதிவுகள்:
நண்டு ஊருது... நரி ஊருது...! - மழலையர் விளையாட்டா, மருத்துவ அறிவியலா?

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து விழிப்புணர்வு பிறக்க உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

 1. நல்ல தீர்வைத்தான் சொல்லி உள்ளீர்கள்... மக்களுக்கு தெளிவு பிறந்தால் நல்லது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம் போல் இந்த முறையும் தாங்களே முதல்வராக வந்து கருத்திட்டிருக்கிறீர்கள் ஐயா! தங்கள் நட்புப் பராமரிப்புக் கண்டு மிகவும் வியக்கிறேன்! மிகுந்த மகிழ்ச்சி! ஈலர் பாசுகர் போன்றோரின் சொல் மாயையில் சிக்கியோர் தெளிவார்களா என்பது ஐயமே! எனினும் இனி யாரும் புதிதாகச் சிக்காமலாவது இருக்க இஃது உதவும் என நம்புகிறேன்! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 2. நான் ஹீலர் பாஸ்கரின் நூல் ஒன்றினை வாசித்திருக்கிறேன் மருந்தில்லா வைத்தியம் எனக்கூறுவதுகேட்பதற்கு நன்றாக இருப்பினும் உடலில் உபாதைகள் வரும்போது மருத்துவரிடம்செல்லாதவர் இருக்க முடியுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியாகக் கேட்டீர்கள் ஐயா! ஆனால் மருத்துவரிடம் செல்லவே கூடாது என்பதுதான் அவர் அறிவுரைகளின் அடிப்படையே. அலோபதியோ, சித்தமோ, ஆயுர்வேதமோ ஏதேனும் ஒரு துறை மருத்துவத்தைக் குறை சொன்னால் கூட ஏற்கலாம். ஆனால் எல்லா மருத்துவ முறைகளுமே வீண் என்றால், "இதுவரை உலகில் பிறந்த அத்தனை பேரும் முட்டாள்; நான் மட்டும்தான் அறிவாளி" என்கிற போக்குத்தானே அது? அஃது ஏற்புடையதா?

   இசைவான கருத்துக்கு நன்றி ஐயா!

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வெகுநாள் கழித்துத் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி! பாராட்டுக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 4. நல்ல கருத்துக்கள் அடங்கிய கட்டுரை சகோ.

  உண்மையிலேயே எந்த மருத்துவமும் தாழ்ந்ததல்ல. ஆங்கில மருத்துவம் வணிகமயமாகிப் போனதால், ஒரு சில மருத்துவர்களின் தவறுகளால், மருந்துகளைத் தயாரிக்கும் சில நிறுவனங்களின் ஊழலினால், மாஃபியா கும்பலினால் அதன் மீது ஒரு வெறுப்பும், நம்பகத்தன்மையும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு மக்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள் இவரைப் போன்ற போலிகள். ஆங்கிலமருத்துவம் உட்பட.

  இப்படிப்பட்டச்சூழலில் நல்ல மருத்துவரை அடையாளம் காண்பது என்பதே பெரும்பாடாகத்தான் இருக்கிறது.

  இயற்கை மூலிகைகள் சார்ந்த மருத்துவ முறைகள் ஆகச் சிறந்தவையாக இருந்தாலும், அதிலும் கூடத் தற்போது முன்பு போல் நிவாரணம் கிடைப்பது கொஞ்சம் அரிதாகியிருக்கிறதோ என்றே தோன்றுகிறது. காரணங்கள் குன்றிப் போன நில வளம், சுற்றுச்சூழல் மாசு, மாசுபட்ட நீர் (நீர் எங்கே இருக்கிறது?!!!!!!!) போன்ற பலவிதக் காரணங்களால் மூலிகைகளின் வினைபுரிதலிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. நானும் இதைக் குறித்து அறிய வேண்டும் என்று நினைப்பதுண்டு.

  நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை. நம் மக்கள் இது போன்ற போலிகளை நம்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே! என்ற அச்சமும் கூடவே வருகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், எத்தனைப் புகார்கள் வெளிப்படையாகவே வந்தாலும், படித்தவர்களே ஒரு ஆனந்த சாமியின் பின்னால் போகவில்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோ! அதே நேரம், கருத்தை வெளியிடத் தாமதமானமைக்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   //என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், எத்தனைப் புகார்கள் வெளிப்படையாகவே வந்தாலும், படித்தவர்களே ஒரு ஆனந்த சாமியின் பின்னால் போகவில்லையா// - நன்றாகச் சொன்னீர்கள்! என் ஆற்றாமையும் இதுவே. ஈலர் பாசுகரின் விதயத்திலும் ஏமாறுபவர்கள் பெரும்பாலும் படித்தவர்களே! நம் கல்விமுறை வெறுமே ஊழியர்களைத்தாம் உருவாக்குகிறதே ஒழிய பகுத்தறிவைப் புகட்டுவதில்லை. அதனால் ஏற்படும் பல தீய விளைவுகளுள் இதுவும் ஒன்று. என்ன செய்வது!

   இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் கூட இன்றைய சுற்றுசூழல் சீர்கேட்டின் காரணமாய்ப் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் உரிய குணத்தை நாம் பெற முடிவதில்லையோ எனும் உங்கள் ஐயம் எனக்கும் வெகுநாட்களாக உண்டு. தவிர மூலிகை மருந்துகளில் கூட்டாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள், மிளகு போன்றவை வேளாண் பயிர்களாக இருப்பதாலும், இவற்றைப் பதப்படுத்த உழவர்கள் மேற்கொள்ளும் செயற்கை முறைகள் காரணமாகவும் மருந்தே நஞ்சாகிறதோ எனும் ஐயமும் ஏற்படுகிறது.

   எப்படியோ மக்கள் விழிப்புணர்வடைந்தால் சரி! தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ!

   நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்