அடிப்படையில் நான் ஆதார் அடையாளத் திட்டத்துக்கு எதிரி. எனக்கு மட்டுமில்லை, அனைவரும் ஆதார் அட்டை பெற்றுக் கொண்டாக வேண்டும் எனும் அரசின் இந்தக் கட்டாயப் போக்கு பெரும்பாலும் யாருக்குமே பிடிக்கவில்லை. வெறுமே பெயர், ஊர், படம் ஆகியவை மட்டும் என்றால் கவலையில்லை; மாறாகக் கைக்கோடுகள் (finger impression), கருவிழிக் கோடுகள் (Iris impression) போன்ற உயிரியளவியல் தகவல்கள் (biometric informations) வரை நம்மைப் பற்றிய அடிப்படை விவரங்களையே ஒட்டுமொத்தமாக ஒப்படைப்பது என்பது நம்மையே நாம் இன்னொருவருக்கு எழுதித் தருவதற்குச் சமம்.
அதுவும் அரசிடம் இந்தத் தகவல்களைத் தருவது என்றால் கூடப் போனால் போகிறது என அரை மனதாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால், ஆதார் அட்டைக்காக நம்மைப் பற்றிய இத்தகவல்களையெல்லாம் திரட்டுவது ஒரு தனியார் நிறுவனம்! ஒரு தனியார் நிறுவனத்தை நம்பி நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அளித்து விட வேண்டும் என அரசு வற்புறுத்துவது வெட்ட வெளிப்படையான தனிமனித அத்துமீறல்! இது உலகின் மிகப் பெரிய உயிரியளவியல் அடையாளத் திட்டம் (World’s Largest Biometric ID program) என்கிறது மத்திய அரசு. ஆனால் இது உலகின் மிகப் பெரும் பட்டப்பகல் தகவல் கொள்ளை (World’s Largest Daylight Data Robbery) என்பதுதான் சரி. “உன்னைக் கொள்ளையடிக்க ஒரு நிறுவனத்தைப் பணியமர்த்தியிருக்கிறேன். அதற்கு ஒத்துழைப்புக் கொடு” என அரசே மக்களை வெளிப்படையாக மிரட்டும் செயல் இது.
ஆனால் இப்படி ஆயிரம்தான் சொன்னாலும், இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடெங்கும் எவ்வளவுதான் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றமே திரும்பத் திரும்பச் சொன்னாலும் அன்றாட வாழ்க்கையை நடத்தவே இன்றியமையாத ஒன்றாக ஆதார் அட்டை இன்று மாற்றப்பட்டிருக்கிறது என்பதே கண்கூடான உண்மை!
வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டுமா – ஆதார் அட்டை கொடு! எரிவளி மானியம் (LPG subsidy) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! வாடிக்கையாளர் அடையாள நிரலக அட்டை (SIM) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! அவ்வளவு ஏன், சாக வேண்டுமா – அதற்கும் ஆதார் அட்டை கொடு என்கிறது இந்நாடு. எனவே எதிர்காலத்தில் பாதிப்பு வருகிறதோ இல்லையோ, நிகழ்காலத்தில் சிக்கலின்றி வாழ வேண்டுமே என்பதற்காகவாவது மக்கள் ஆதார் அட்டையைப் பெற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஆனால், இப்படி ஏற்றுக் கொண்டு போவதில் பெரும்பான்மை மனிதர்களுக்கு இடைஞ்சல் ஏதும் இல்லை. முதியவர்களும் மாற்றுத் திறனாளிகளும் அவர்கள் குடும்பத்தினரும் இதற்காகப் படும் பாடுகள்தாம் கொடுமை! நாட்டில் முதியவர்கள் எத்தனையோ கோடிப் பேர் இருக்கிறார்கள். முதுமை காரணமாகக் கண் சரியாகத் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள், எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியாதவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், தமது கை – கால் – பார்வை போன்றவற்றைத் தமது விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாதவர்கள், படுக்கையை விட்டே எழ இயலாதவர்கள் என எத்தனையோ வித விதமான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.
ஆனால், “நீ எப்படி வேண்டுமானால் இருக்கலாம். உனக்கு எப்பேர்ப்பட்ட பாதிப்பு வேண்டுமானாலும் இருக்கலாம். அதெல்லாம் உன் தனிப்பட்ட சிக்கல். ஆதார் அட்டை பெற்றாக வேண்டும் என்றால் பெற்றாகத்தான் வேண்டும். இல்லாவிட்டால், நீ செத்தால் உனக்கு இறப்புச் சான்றிதழ் கூடக் கிடையாது” என்கிறது மத்திய அரசு. எனவே, உடற்கழிவு வெளியேறுவதைக் கூட உணர முடியாத முதியவர்கள், சிறு அதிர்வு ஏற்பட்டால் கூடப் பெரும் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் போன்றோரைக் கூட ஆதார் மையங்களுக்கு எப்பாடு பட்டாவது இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.
நானும் வீட்டை விட்டு வெளியேற இயலாத அளவுக்கு மாற்றுத் திறனாளி என்பதால் எனக்கும் இதே சிக்கல். சொல்லப் போனால், ஆதார் திட்டம் அமல்படுத்தப்படும் முன்பே அது பற்றி ஆனந்த விகடனில் படித்து விட்டு, “இது மிகவும் ஆபத்தான திட்டம். இதில் யாரும் பதிவு செய்து கொள்ளாதீர்கள்!” என்று அனைவரையும் எச்சரித்துக் கொண்டிருந்தவன் நான்; (வழக்கம் போல், என் பேச்சை யாரும் கேட்கவில்லை என்பது தனிக்கதை :-)). ஆனால் குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளைப் பெறக்கூட இனி ஆதார் இன்றியமையாதது என்றவுடன் ஆதார் அட்டை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கும் ஏற்பட்டது.
எனக்காக ஆதார் சேவையை வீட்டுக்கே வரவழைக்க என் அப்பாவும் தம்பியும் பல வகைகளிலும் முயன்றார்கள். ஆனால் அரசுப் பொறி அணுவளவும் அசையவில்லை. அட்டவணையிடப்பட்ட தனியார் வங்கி (Scheduled Bank) ஒன்று எனக்காக இச்சேவையை அளிக்க முன்வந்தது. ஆனால் 1500 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்ற அவர்களை அதன் பிறகு பிடிக்கவும் முடியவில்லை; ஆதாரும் கிடைக்கவில்லை!
என்னைப் போல் இப்படி எத்தனை பேர் எவ்வளவு தொகைகளை ஏமாந்தார்களோ தெரியாது. ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தி இரும்புச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளையோ, முதியவர்களையோ நினைத்துப் பார்த்துச் சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆதார் சேவை இணையத்தளத்தில் (uidai.gov.in) ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து கொள்வதற்காக (Aadhaar Enrollment) விண்ணப்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளதுதான். ஆனால் அதன் மூலம் விண்ணப்பித்தால் ‘உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது’ என்று காட்ட மட்டும்தான் செய்கிறதே தவிர, அதன் பிறகு யாரும் தொடர்பு கொள்வதோ வீட்டுக்கு வருவதோ இல்லை.
மாநில அரசும் இதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஏற்பாடு ஏதும் செய்யாவிட்டாலும், போனால் போகிறது எனச் சென்னையில் மட்டும் இதற்காக ஒரு சிறப்புச் சேவையை வழங்கி வருகிறது. ஆம்! தமிழ்நாடு அரசு தனது அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் (Arasu Cable TV Corporation) மூலம் நடமாடும் ஆதார் சேவை (Mobile Aadhaar Service) வசதியை வழங்கி வருகிறது.