வாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்...
மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்கள்...
பணத்துக்கு விலை போனவர்கள்...
- இப்படி நாடே திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது இராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே நகர்) மக்களை.
உழைக்கும் மக்களுக்கு நம் நாட்டில் எப்பொழுதுமே மரியாதை குறைவுதான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் கறுப்பர்கள், படிக்காத முட்டாள்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள், நாகரிகம் அறியாதவர்கள், முரடர்கள், ஏமாளிகள், நம்பத்தகாதவர்கள், குடிகாரர்கள்... இன்னும் என்னென்னவோ. இவற்றோடு ‘பணத்துக்கு வாக்களிப்பவர்கள்’ எனக் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துச் சொல்வதால் அவர்களுக்குப் புதிதாக எந்த மானக்கேடும் ஏற்பட்டு விடப் போவதில்லை.
ஆம், அவர்கள் பணம் வாங்கினார்கள். பணம் வாங்கிக் கொண்டுதான் தினகரனை வெற்றி பெறச் செய்தார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் அவர்கள் பணத்துக்கு விலைபோனார்கள்!
ஆனால், அம்மக்களின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன? அவர்களின் வாழ்க்கை நிலைமை என்ன? இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? இவற்றையெல்லாம் ஆராய வேண்டாவா? இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மக்களாட்சி முறைக்கே அறைகூவல் விடுக்கும் இந்த காசுக்கு வாக்களிக்கும் பிரச்சினையை நாம் சரி செய்ய முடியுமா?