“இதோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்!” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர்.
அங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால் ஆர்வத்தோடு அமர்ந்த செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடங்கினர்.
“சார், இந்தப் புது கிரகத்தை பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”
“இந்தக் கிரகம் பூமியிலேயிருந்து கிட்டத்தட்ட 3000 ஒளியாண்டுகள் தொலைவில இருக்கு. இதுக்கு ஒரு நிலாவும் இருக்கு. ரொம்பப் பெரிய கிரகம்...” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,
“சார்! இது வரைக்கும் எத்தனையோ புதிய கிரகங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. இந்தக் கிரகத்துல என்ன சிறப்புன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
“கண்டிப்பா! இது வரைக்கும் நாம 1317 கிரகங்களை கண்டுபிடிச்சிருக்கோம். ஆனா, அதுல எதிலேயுமே உயிரினங்கள் இல்லை. ஆனா, இந்த கிரகம் அப்படி இல்ல... லொக் லொக்...” என்ற அவர் தண்ணீரை எடுத்துக் குடிக்க, ஆர்வம் தாங்காத ஊடகர்கள் நாற்காலியின் நுனிக்கு வந்து,
“என்ன சார், சொல்றீங்க! அப்படீன்னா இந்த கிரகத்துல உயிரினங்கள் இருக்கா?” என்று கேட்டனர்.