‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக் (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.
இங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.
இவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை! இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.
எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.
கமல் காட்டும் முத்திரை
சர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன்ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.