பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றன. அதுவும், கேள்விப்படும்பொழுதே பதறிக் கைவிரல்களை நடுங்கச் செய்யும் அளவுக்குக் கொடூரமான வன்முறைகள்!
தில்லியில் ஜோதிசிங் (நிர்பயா), கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிசா, சேலத்தில் வினுப்பிரியா, சென்னையில் சுவாதி எனப் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில காலமாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நாகரிகம் எனப் பீற்றிக் கொள்ளும் இம்மண்ணில் அதே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அபாயகரமான சூழலில் இன்றைய பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், நாம் வாழும் சமூகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மாறிய பின்பும் இதே சமூகத்தில் வாழும் நாம் நம் பெண் / ஆண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அப்படி என்ன மாற்றத்தை வளர்ப்பு முறையில் கொண்டு வந்தோம்?...