தேர்தல் - 2016 (பகுதி - 4)
தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க டாஸ்மாக் கொண்டு வந்தது அ.தி.மு.க! தமிழினப் படுகொலை நேரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றால், அந்தப் படுகொலைக்கு மூலக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்தவர் -இன்றும் அதற்காகப் பெருமையடித்துக் கொள்ளும்- ஜெயலலிதா! ஏழு தமிழர் விடுதலை விவகாரம் தன் கையில் இருந்தபொழுது அதை சாமர்த்தியமாகக் கை கழுவியது தமிழினத்தலைவரின் அரசு என்றால், ஒருபுறம் அவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டே மறுபுறம் சாகக் கிடந்த தகப்பனாரைப் பார்ப்பதற்குக் கூட நளினிக்குச் சிறைவிடுப்பு (parole) தரக்கூடாதென்று உயர்நீதிமன்றத்தில் வாதாடியது ஈழத்தாயின் அரசு!
இவை மட்டுமா? மின் தட்டுப்பாடு, வேளாண்துறைச் (agriculture) சீரழிவு, தமிழ் மீனவர் மீதான தாக்குதல்கள், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நசுக்கப்படுதல், அணு உலைத் திட்டம் - நுண்நொதுமித் (நியூட்ரினோ) திட்டம் எனப் பேரழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுதல், அண்டை மாநிலங்கள் - நடுவணரசு முதல் உலக நாடுகள் வரை யாருமே தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நிலைமை, இயற்கைச் சமநிலையின் சீர்குலைவு என இவ்வளவுக்கும் காரணம், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத தி.மு.க, அ.தி.மு.க அரசுகளே இங்கு திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருவது. எனவே, இத்தனை பிரச்சினைகளும் தீர வேண்டுமானால் அதற்கு உடனடித் தேவை ஆட்சி மாற்றம்! யாருக்கு வாக்களித்தால் அந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஒரே கேள்வி! பதில்?...