மேத்தியூ ரசல் லீ |
மேத்யூ லீ - ஈழத் தமிழர்களுக்காக ஐ.நா-வில் ஒலி
பொதுவாக, நமக்கு ஈழப் பிரச்சினைக்காகப் போராடும் தமிழ்த் தலைவர்களைத்தான் தெரியும். ஆனால் ஐ.நா, மனித உரிமை ஆணையம் போன்ற, இதற்கான தொடர்புடைய இடங்களில் குரல் கொடுக்கும் வெளிநாட்டு மனிதநேயர்கள் பலரை நமக்குத் தெரியாது.
அப்படி, ஐ.நா-வுக்கு உள்ளே இருந்தபடியே ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த மனிதநேயரும், ஊடகப் போராளியுமான மேத்யூ லீ அவர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறது ஐ.நா!
இன்னர் சிட்டி பிரசு எனும் இணைய இதழை நடத்தி வந்த மேத்யூ லீ அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஐதி, புருண்டி, சூடான், ஏமன் என உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் எல்லா மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தவர்.
இவரைப் பற்றி இனியொரு தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில், ஐக்கிய நாடுகள் அவைப் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் தலைமை மேலாண் (நிர்வாக) அலுவலராகச் செயல்பட்டவரான விஜய் நம்பியார் நடத்திய சரணடைவு நாடகத்தை உலகத்திற்கு வெளிப்படுத்தியவர் மேத்யூ லீ என்றும், ஐக்கிய நாடுகள் அவை இலங்கையில் நடத்திய போர்க்குற்ற விசாரணை என்ற ஏமாற்று வித்தையை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்து, அதற்காகப் பல ஆபத்துக்களைச் சந்தித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சேனல் 4-ஐ விடக் கூடுதலான தகவல்களை மேத்யூ லீ ஊடகங்களுக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளது.
“போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையை இராணுவரீதியாகத் தலைமை தாங்கி நேரடியாக நடத்தியவர்களில் ஒருவனுமான சவேந்திர சில்வாவுக்கு இலங்கையின் உதவி வாழ்விடப் பிரதிநிதிப் பதவியை ஐ.நா அளித்தபொழுது ஐ.நா-வின் இதயத்தில் மிதித்துக் கேள்வி கேட்டவர் மேத்தியூ லீ. ஐக்கிய நாடுகள் அவையின் உள்ளேயே அவர் கேள்விகளால் வேள்வி செய்தார். பான் கீ மூன் முதற்கொண்டு அனைவரும் மேத்தியூ லீ-ஐக் கண்டு அஞ்சினர். ஐ.நா-வின் உள்ளே அநீதிகளுக்கு எதிராக நெருப்பாக எரிந்தவர் அவர். இன்றைக்கு வன்னிப் படுகொலைகள் போர்க்குற்றம் என்றும் இனப்படுகொலை என்றும் சான்றுகளோடு பேச முடிகிறது என்றால் அதற்கு முதன்மையான பங்காற்றியவர்களில் மேத்தியூ லீ-யும் ஒருவர்” எனத் தொடர்கிறது அந்தக் கட்டுரை. (கட்டுரையை முழுமையாகப் படிக்க: ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த மத்தியூ லீயை ஐ.நா பலவந்தமாக வெளியேற்றியது!)
ஐ.நா-வின் முதன்மையான அலுவலர்களுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் உள்ள தொடர்பு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் ஐ.நா-வில் திட்டமிட்டு நடத்தி வந்த சூழ்ச்சிகள், ஐ.நா-வின் உயர்மட்ட ஊழல்கள் போன்றவற்றுக்கு எதிராக மேத்யூ லீ தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்ததை எதிர்கொள்ள முடியாத ஐ.நா அலுவலகம் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ஆம் நாளன்று அவரை ஐ.நா-வை விட்டே வெளியேற்றியுள்ளது. இதனால் அவருடைய இன்னர் சிட்டி இதழும் முடக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக, ஐ.நா-வின் உள்ளேயே அலுவலகம் வைத்திருக்கவும், ஐ.நா அலுவலகத்தின் உள்ளகத் தகவல்களைத் திரட்டவும் உரிமை அளிக்கப்பட்டிருந்த அவரை அங்கியைக் கழற்றி, அடையாள அட்டையைப் பறித்து மிகவும் தரக்குறைவான முறையில் வெளியேற்றியிருக்கிறது ஐக்கிய நாடுகள் அவை. ஆம்! உலக நாடுகளில் மனித உரிமையை நிலைநாட்டவே பிறப்பெடுத்ததாகக் காட்டிக் கொள்ளும் அதே ஐ.நா-தான் மனித உரிமைகளுக்குத் தோள் கொடுத்ததற்காக ஒருவர் மீது இப்படி மனித உரிமைகளுக்கும் நாகரிகத்துக்கும் புறம்பான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களே! தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து இன்று தன் அங்கீகாரத்தையே இழந்து நிற்கும் இவருக்குத் துணை நிற்க வேண்டியது நம் கடமை இல்லையா? தமிழர் உரிமை பற்றிக் கேள்வி எழுப்பியதற்காகத் தன்னுடைய உரிமைகளை இழந்து மானக்கேட்டுக்கு ஆளாக்கப்பட்டு நிற்கும் இவருக்கு உதவி புரிய வேண்டிய நன்றிக்கடன் நமக்கு உள்ளது இல்லையா?
இதோ, உலகப் பிரச்சினைகள் பலவற்றுக்காகவும் கையொப்ப இயக்கம் நடத்தும் சேஞ்சு இணையத்தளத்தில், மேத்யூ லீக்காகவும் ஒரு கையொப்ப இயக்கம். அவரையும் அவருடைய ஊடகத்தையும் மீண்டும் இயங்க விடுமாறு ஐ.நா தலைமையைக் கோரும் ஒரு விண்ணப்பம்தான் இது, வேறொன்றுமில்லை! இதில் கையொப்பம் இடுவீர்களா? தமிழர்க்காக இயங்கிய அந்த மனிதநேயருக்குக் கை கொடுப்பீர்களா? சொல்லப் போனால், இது நாம் அவருக்குச் செய்யும் உதவியில்லை; தமிழர்களாகிய நாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி! அது கூட இல்லை, உலகின் எந்த மூலையில் மனித உரிமை மீறப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவதையே குறியாக கொண்ட மேத்தியூ லீக்காக நாம் இடும் இந்தக் கையொப்பம் உலகெங்கும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி!
ஆம்! இதில் கையொப்பமிட நீங்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; வெறும் மனிதராக இருந்தால் கூடப் போதும்! உலகெங்கும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுக் கண்ணீரும் செந்நீரும் சிந்தும் பல்லாயிரக்கணக்கான சக மனிதர்களின் பெயரால் கேட்கிறேன், இதைச் செய்கிறீர்களா நண்பர்களே?! இதோ அதற்கான இணைப்பு கீழே:
மேத்யூ லீ அவர்களுக்காக ஈழ மண்ணில் நடாத்தப்பட்ட போராட்டம்:
மேத்யூ லீ அவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடாத்தப்பட்ட போராட்டம்:
❀ ❀ ❀ ❀ ❀
நன்றி:
தகவல்: இனியொரு, சேஞ்சு.
படங்கள்: இனியொரு, மே பதினேழு இயக்கம்.
இந்தப் பதிவைக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம்
மற்றவர்களுடனும் பகிர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கும் பிற நாட்டு மக்களுக்கும் உதவலாமே?