நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!
உங்கள் அனைவருக்கும் நேச வணக்கம்!
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை; இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து நம் யாருக்கும் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உலகத்தின் அத்தனை கோடி கண்களுக்கும் முன்னதாகத்தான் அந்தச் சகிக்க முடியாத கொடுமை அரங்கேறியது. ஆனால், அதை இனப்படுகொலையாக இல்லாவிட்டாலும், குறைந்தது போர்க் குற்றமாக ஏற்கக் கூட இன்று வரை எந்த நாடும் முன்வரவில்லை. சரி, என்னதான் நடந்தது என விசாரிக்கவாவது செய்யுங்கள் என்றால் அதற்கும் இது வரை எந்த ஒரு முயற்சியும் முன்னெடுக்கப்படாமலே இதோ ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டன.
நடந்தது இனப்படுகொலையோ, போர்க் குற்றமோ, போரோ, எவ்வளவுதான் குறைத்துச் சொல்வதாக இருந்தாலும் அங்கே ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதற்கொரு நீதி விசாரணை வேண்டும்! சிங்கம், புலி, குரங்கு, கோட்டான், மயில், மந்தி என அஃறிணை உயிரினங்கள் கொல்லப்பட்டால் கூட அது குறித்து முறையாக விசாரித்துக் குற்றவாளியைத் தண்டிக்கும் இந்த நாகரிக சமூகத்தில் ஒன்றரை இலட்சம் மனித உயிர்கள் கொல்லப்பட்டிருப்பது பற்றி விசாரிக்காமல் இருப்பதை விட அட்டூழியம் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, நடந்த கொடுமைக்குப் பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாகவே தமிழர்களாகிய நாம் பல வகைகளிலும் போராடி வருகிறோம்.
இந்நிலையில்தான், இது பற்றிப் ‘பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை’ கோரி நாடு கடந்த தமிழீழ அரசு உலகளாவிய கையொப்ப இயக்கம் (signature campaign) ஒன்றைத் தொடங்கியுள்ளது. குறைந்தது பத்து இலட்சம் பேரிடம் கையொப்பம் வாங்கும் இந்த முயற்சி தொடங்கி வாரக்கணக்கில் ஆகியும் இது வரை ஏழு இலட்சம் கையொப்பங்கள் மட்டும்தான் பதிவாகியுள்ளன!
செந்தமிழ்ச் சொந்தங்களே! சிந்தித்துப் பாருங்கள்! உலகெங்கும் பத்துக் கோடிப் பேரைக் கொண்ட இனம் என மார் தட்டும் நாம், இணையத்தில் இரண்டு கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், வெறும் பத்து இலட்சம் கையொப்பங்களைத் திரட்ட முடியாவிட்டால் - அதுவும் இனத்தின் வரலாறு காணாத பேரழிப்புக்கு நீதி கோரும் இந்த இன்றியமையாத கோரிக்கைக்காகவே திரட்ட முடியாவிட்டால் - அதை விட மானக்கேடு நமக்கு வேறு என்ன இருக்க முடியும்? இதற்காகக் கூட ஒன்று சேராவிட்டால் நாம் வேறு எதற்காக ஒன்றுபடப் போகிறோம்?
நண்பர்களே! இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில் (வரும் சூலை 15 கையொப்பமிடக் கடைசி நாள்) இந்தக் குறுகிய காலக்கட்டத்துக்குள் நமக்குத் தேவைப்படுவதோ மேலும் மூன்று இலட்சம் கையொப்பங்கள்! ஆனால், காலம் இன்னும் கடந்து விடவில்லை. நாம் நினைத்தால் இன்றைக்கு இருக்கும் சமூக வலைத்தள வசதிக்கு இந்தச் செய்தியை இரண்டே நாளில் உலகம் முழுக்கப் பரப்ப முடியும்!
தோழர்களே! கை கொடுங்கள்! நீங்கள் செய்ய வேண்டியவையெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று – கீழ்க்காணும் சுட்டியைச் (link) சொடுக்கி நீங்களும் உங்கள் கையொப்பத்தை உடனடியாகப் பதிவு செய்ய முன் வாருங்கள்!
சொடுக்குக: http://www.tgte-icc.org/
இரண்டாவது, இந்தச் செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி அவர்களையும் கையொப்பமிடச் செய்யுங்கள்!
தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும், இந்த முயற்சி இன்னும் பெரிதாக வெற்றியடையாததைப் பார்த்தால், இது பற்றி நம் மக்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்குமோ எனத் தோன்றுகிறது. எனவே, இது பற்றிச் சில விளக்கங்களை இங்கே அளிக்க விரும்புகிறேன்!
இப்படிப்பட்ட முயற்சிகள் பலனளிக்குமா?
ஏற்கெனவே இது போன்ற சில கையொப்ப இயக்கங்கள் நடத்தப்பட்டதும், பின்னர் அவை என்ன ஆயின என்றே தெரியாமல் போனதும் உண்மைதான். ஆனால், இந்த முறை, இந்தக் கையொப்ப இயக்கத்தை நடத்துவது நாடு கடந்த தமிழீழ அரசு! ஈழத் தமிழர்களுக்காக வெளிநாடு வாழ் தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு அமைச்சரவை, பிரதமர் முதலியோருடன் ஓர் அரசு போலவே கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஓர் இயக்கம். இதற்கான உறுப்பினர்கள் கூடப் பன்னாட்டு அளவில் தேர்தல்கள் நடத்தி முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களே ஈழத் தமிழர்கள்தாம் என்பதால் ஐ.நா-விடம் நேரிடையாகக் கோரிக்கை விடுப்பது முதலான முயற்சிகளை முன்னெடுக்க இவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அமைப்பினரே நேரடியாக இந்தக் கையொப்பங்களை ஐ.நா-வில் தாக்கல் செய்ய இருக்கின்றனர். எனவே, “அட, எப்போ பார்த்தாலும் இவங்களுக்கு இதே வேலையாப் போச்சுப்பா” எனச் சலித்துக் கொள்ளாமல், இந்த முறை இந்தக் கையொப்ப இயக்கத்தில் நீங்கள் தாராளமாக நம்பிக்கையுடன் கையொப்பமிடலாம் தோழர்களே!
இதில் கையொப்பமிடுவதால் ஏதேனும் சட்டச் சிக்கலோ ஆபத்தோ வருமா?
இப்படி ஓர் ஐயமும் நம் மக்களுக்கு இருக்கலாம். ஈழப் பிரச்சினை மிகவும் நுட்பமான சட்டச் சிக்கல்கள் நிறைந்தது என்பதால், ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் கோரிக்கைகள் மீதும் எவ்வளவுதான் பரிவும் ஆதரவும் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் பொதுவெளியில் அவற்றைக் காட்டிக் கொள்ளப் பெரும்பாலோர் தயங்குகின்றனர். ஆனால், இந்தக் கையொப்ப இயக்கத்தைப் பொறுத்த வரை, இது வெளிப்படையாக, உலகளாவிய அளவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஆத்திரேலியா, கனடா, மலேசியா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலிருந்தும் இது வரை இலட்சக்கணக்கானோர் கையொப்பமிட்டு விட்டார்கள். ஆனால், எந்த நாட்டு அரசிடமிருந்தும் இது வரை இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதை நடத்தும் இயக்கம் எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட இயக்கமும் கிடையாது. எனவே, இதில் கையொப்பமிடுவதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை!
கையொப்பம் இடுவது எப்படி?
மிகவும் எளிது!
1. முதலில், மேற்கண்ட சுட்டியைச் (http://www.tgte-icc.org) சொடுக்குங்கள். இணையத்தளப் பக்கம் ஒன்று வரும்.
2. அந்தப் பக்கத்தில் ஒரு படிவம் இருக்கும். அதில் முதல் கட்டத்தில் உங்கள் பெயரை நிரப்புங்கள்.
3. அடுத்த கட்டத்தில், உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருந்தால் கொடுங்கள்; இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள்.
4. அடுத்த கட்டத்தை அழுத்தினால் ஒரு பட்டியல் திறக்கும். அதில் உங்கள் நாட்டைத் தேர்வு செய்யுங்கள்.
5. அதற்கு அடுத்து ஓர் எண் இருக்கும். அதை அடுத்து உள்ள கட்டத்தில் அந்த எண்ணை நிரப்புங்கள்.
6. இப்பொழுது Submit பொத்தானை அழுத்துங்கள்.
அவ்வளவுதான், தமிழ் இனத்துக்கான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய பத்து இலட்சம் பேரில் நீங்களும் ஒருவராக ஆகி விட்டீர்கள்!
கையொப்ப இயக்கம் பற்றி நாடு கடந்த தமிழீழ அரசு அமைச்சரின் நேர்காணல்
தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட நம் அண்ணன் – தம்பிகள் சிந்திய குருதிக்கு...
தமிழச்சியாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக நட்ட நடுத்தெருவில் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நம் அக்கா – தங்கைகள் வடித்த கண்ணீருக்கு...
தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறக்க இருந்த ஒரே காரணத்துக்காக வயிற்றிலேயே அழிக்கப்பட்ட நம் கருக் குழந்தைகளின் உலகறியாக் கதறலுக்கு...
நீதி வேண்டும்!...
நியாயம் வேண்டும்!...
நீங்கள் மனம் வைத்தால் அது கிடைக்கும்!
❀
❀ ❀ ❀ ❀
அருள் கூர்ந்து இந்தப் பதிவைப் பரப்பி இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி வெற்றியடைய உதவுங்கள்!