.

திங்கள், ஜனவரி 29, 2018

சங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன?

Vijayendra Saraswathy Insulting Tamil Goddess and Respecting Indian National Anthem
ங்கர மட இளைய பீடாதிபதி விஜயேந்திர சரசுவதி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருப்பது தமிழ் மக்கள் அனைவரையும் கொதிக்கச் செய்திருக்கிறது.

அதே நேரம், தமிழ்த்தாயை அவர் அவமதிக்கவே இல்லை; கடவுளாக மதித்து நடந்து கொண்டார் எனவும், ஆண்டாள் சர்ச்சையை மறக்கடிக்கவே இது ஊதிப் பெருக்கப்படுகிறது எனவும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்த விளக்கங்களைத் தோலுரித்து உள்ளே இருக்கும் உண்மை நிறத்தை வெளிக்காட்டவே வினா-விடை பாணியிலான இப்பதிவு! அறத்தின் துணிவிருந்தால் திறத்தின் உரமிருந்தால் எதிர்த் தரப்பு இதற்கு விடையளித்துப் பார்க்கட்டும்!

கேள்வி-௧: தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விசயேந்திரர் எழுந்து நிற்காதது தற்செயலாகக் கூட இருக்கலாமே? அதை ஏன் ஒரு பிரச்சினையாக ஆக்க வேண்டும்?

எதிர்வாதம்: ஒருமுறை நடந்தால்தான் தற்செயல். மீண்டும் மீண்டும் திட்டமிட்டுச் செய்வதைத் தற்செயல் என எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? தமிழை இங்கு காலம் காலமாக இழிவுபடுத்தி வருபவர்கள் யார், தமிழை ‘நீச பாசை’, ‘பைசாச பாசை’ என்றெல்லாம் சொன்னவர்கள் யார், தமிழ்நாட்டில் தமிழர்கள் கட்டிய தமிழ்க் கோயில்களிலிருந்து தமிழைப் புறம் தள்ளி நந்தனாரோடு சேர்த்து வெளியில் நிறுத்தியவர்கள் யார் என்பவையெல்லாம் இங்கு அனைவருக்குமே தெரிந்தவைதாம். இப்படியெல்லாம் ஆண்டாண்டுக் காலமாகத் தமிழை இழிவுபடுத்திய பார்ப்பனிய வெறியர்களின் தலைமைச் செயலகமாகத் திகழும் சங்கர மடம் இதற்கு முன்பும் இப்படிப் பலமுறை தமிழைக் கண்ணியக்குறைவாக நடத்தியிருக்கிறது என ஒரு பட்டியலே இடுகிறார் திராவிடர் கழகத் தோழர் கலி.பூங்குன்றன் அவர்கள். அந்த விழியம் இதோ!


இப்படித் திட்டமிட்டே திரும்பத் திரும்பத் தமிழை இழிவுபடுத்தியவர்கள் இந்த முறை மட்டும் தற்செயலாகச் செய்து விட்டார்கள் எனச் சொன்னால் நம்புவதற்குத் தமிழர்கள் என்ன, இன்னும் படிக்காத மூடக் கூட்டமாகவா திரிகிறார்கள்?

கேள்வி-௨: இது தொடர்பாக சங்கர மடம் அளித்த விளக்கத்தை ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது?

எதிர்வாதம்: ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால் ஏற்பதில் யாருக்கும் தயக்கம் இல்லை. இது தொடர்பான சங்கர மடத்தின் விளக்கங்கள் என இரண்டு அறிக்கைகளை இதுவரை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஒன்றில், “தமிழ்த்தாய் வாழ்த்தின்பொழுது சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் மரபு இல்லை. கடவுள் வாழ்த்தின்பொழுது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தியான நிலையில் இருப்பது வழக்கம். அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்தின்பொழுதும் கடவுள் வாழ்த்து முறையைப் பின்பற்றி தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், தேசிய கீதத்தின்பொழுதும் சங்கராச்சாரி தியான நிலையில்தானே இருந்திருக்க வேண்டும்?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கும் வழக்கம் இல்லாததால், தியானத்தில் இருந்தார் என்றால், தேசிய கீதத்துக்கும் அவர் தியானத்தில்தானே இருந்திருக்க வேண்டும்? ஏன் எழுந்து நின்றார்? அந்த மரபு மட்டும் உண்டா? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு மாதிரியும் தேசிய கீதத்துக்கு வேறு மாதிரியும் என இரு வேறு மரபுகளைக் கடைப்பிடிக்கிறார்களா சங்கராச்சாரிகள்?

எங்கே இப்படிக் கேட்டு விடப் போகிறார்களோ என்றுதான், அடுத்த அறிக்கையில், “காஞ்சி பீடாதிபதிகள் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்பொழுது அமர்ந்த நிலையில் தியானத்தில் இருப்பதும் தேசிய கீதம் பாடும்பொழுது தேசத்துக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்துவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது” என்று ஒரே போடாகப் போட்டு விட்டது சங்கர மடம். (கூடவே, “தமிழ்த்தாய் வாழ்த்தை இறை வாழ்த்துக்கு நிகராகக் கருதி, அமர்ந்த நிலையில் தியானத்தில் இருந்து பீடாதிபதிகள் தமிழ்த்தாய்க்கு மரியாதை அளிப்பர்” என்றும் குறிப்பிட்டிருக்கிறது).

அட அறிவு கெட்டவர்களே, உலகையே துறந்து பற்றற்ற நிலையில் இருக்க வேண்டிய சங்கராச்சாரி பதவிக்கு தேசமாவது மண்ணாவது! கடவுள் வாழ்த்துக்கே எழுந்து நிற்க மாட்டோம் என்ற கொள்கை உடையவர்கள், தேசிய கீதத்தின்பொழுது மட்டும் எங்கே உள்ளே தள்ளி விடுவார்களோ என்று அஞ்சி நடுங்கி எழுந்து நிற்கிறார்கள் என்றால் இவர்களா துறவிகள்? இவர்களா ஞானிகள்?

சரி மரபு, மரபு என்கிறீர்களே, எல்லாவற்றிலும் நீங்கள் மரபின்படிதான் நடந்து கொள்கிறீர்களா?

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாகச் சிறைக்குப் போன உங்கள் சங்கராச்சாரியார் கூடவே தன் தண்டத்தையும் எடுத்துச் சென்றாரே அஃது எந்த மரபு?

வழி வழியாக சங்கராச்சாரியார்கள் போற்றிப் பாதுகாத்து வரும் தண்டத்தை, சங்கராச்சாரியார்களின் பிரதிபிம்பமாகவே வணங்கப்படும் உச்சக்கட்டப் புனிதப் பொருளைப் போயும் போயும் சிறைக்குள் எடுத்துச் சென்றாரே உங்கள் ஜெயேந்திரர் அது எந்த வகையான மரபைச் சேர்ந்தது?

இந்துச் சமயத்தில் காவி நிறத்துக்கு என ஒரு புனிதத்தன்மை உண்டு. துறவிகளைத் தவிர வேறு யாரும் காவி உடுத்தக்கூடாது என்கிற கட்டுப்பாடும் உண்டு. அதனால்தான் ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் கூட, அந்த நேரத்தில் தாங்கள் துறவற வாழ்வையே கடைப்பிடித்தாலும், தற்காலிகத் துறவிகளான தங்களுக்கு எப்பொழுதும் துறவிகளாக வாழ்பவர்களைப் போல் ஆடை அணியும் தகுதி கிடையாது என்பதால் கருப்பு ஆடை அணிகிறார்கள்.

அப்பேர்ப்பட்ட புனிதமான காவி ஆடையை அணிந்து கொண்டு நீதிமன்றப் படியேறி, குற்றவாளிக் கூண்டில் நின்றாரே உங்கள் மடாதிபதி! அப்பொழுது எங்கே போயின உங்கள் மரபும் வழக்கமும்?

சரி, அப்படியே இந்த விளக்கங்களையெல்லாம் உண்மை என ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துவது போல், தமிழ்த்தாயின் திருவுருவத்தின் முன்பாக வந்து மன்னிப்புக் கேட்பதில் இளைய சங்கராச்சாரிக்கு என்ன தயக்கம்? இவர்கள்தான் தமிழ்த்தாயைக் கடவுளுக்கு நிகராகக் கருதுபவர்களாயிற்றே! கடவுள் முன்பு வந்து மன்னிப்புக் கேட்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

ஆக, இந்த விளக்கங்கள் எல்லாம் அசல் பொய்யில் பொரித்தெடுக்கப்பட்ட அறிக்கைப் பலகாரங்கள் என்பதே உண்மை. எத்தனை கங்கையில் நீராடினாலும், தமிழைக் கீழ்மையாகக் கருதும் மன அழுக்கு இன்னும் இவர்களிடமிருந்து அகலவில்லை; அதனால்தான் தமிழ்த்தாயை அவமதிப்பதையே ஒரு மரபாக இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதுதான் இத்தகைய பொய்யறிக்கைகள் மூலம் மேலும் மேலும் உறுதியாகிறது.

Tamils Reaction for the explanation of Kanchi Kamakoti Peetham on Vijayendra Saraswathy's disrespect to Tamil Anthem

கேள்வி-௩: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து மட்டும் கேட்டால் சரி. கூடவே அவர் தேசிய கீதத்துக்கு ஏன் எழுந்து நின்றார் என்றும் கேட்கிறார்களே! எனில், இப்பொழுது என்ன பிரச்சினை, தமிழுக்கு மதிப்பளிக்காததா அல்லது நாட்டுக்கு மதிப்பளித்ததா?

எதிர்வாதம்: தமிழ்த்தாய் வாழ்த்தின்பொழுது தியானம் செய்து கொண்டிருந்த சங்கராச்சாரி தேசிய கீதத்தின்பொழுதும் தியானமே செய்து கொண்டிருந்திருந்தால் இவர் வழக்கமே இதுதான் போலும் என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டு போயிருப்பார்கள். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டும் தியான நிலையைக் கடைப்பிடித்தவர் தேசிய கீதத்துக்கு மட்டும் துள்ளி எழுந்து நின்றதால்தான் வேண்டுமெனவே இவர் தமிழ்த்தாயை அவமதிக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. எனவேதான் இதைப் பற்றிப் பேசும்பொழுது அதைப் பற்றியும் சேர்த்துக் கேள்வி எழுப்ப வேண்டி வருகிறது.

உடனே தமிழர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள், தேசத்துக்கு எதிரானவர்கள், தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்ததைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள் எனவெல்லாம் பேசுவது திட்டமிட்டுப் பிரச்சினையைத் திசை திருப்பும் வேலை.

ஓர் இடத்தில் வணக்கத்துக்குரிய இரண்டு நிகழ்வுகள் அரங்கேற்றப்படும்பொழுது, அங்குள்ள அனைவரும் இரண்டுக்குமே ஒரே மரியாதையை வழங்கும்பொழுது, ஒருவர் மட்டும் மாறுபட்டு நடந்தால், அவரிடம்தாம் “ஏன் இப்படிப் பாகுபாடாக நடந்து கொள்கிறீர்கள்?” எனக் கேட்க வேண்டும். மாறாக, அவரைக் கேள்வி எழுப்புவதற்காக இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பேசுபவரைப் போய்ப் பிரிவினைவாதி என்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும்தான் நடக்கும்.

கேள்வி-௪: வைரமுத்துச் சர்ச்சையைத் திசை திருப்புவதற்காகத்தான் விஜயேந்திரரின் இந்தச் செயல் பெரிதுபடுத்தப்படுகிறது எனச் சொல்கிறார்களே?

எதிர்வாதம்: அதை ஏன் அப்படிப் பார்க்க வேண்டும்? தன்னைப் பெருமைப்படுத்தி எழுதிய வைரமுத்தை இந்து சமயவாதிகள் மன்னிப்புக் கேட்கச் சொல்லி மனம் நோகத் துன்புறுத்தியது அந்த ஆண்டாளுக்கே பொறுக்காததால்தான் இன்று இந்துச் சமயத் தலைவரே மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைமைக்கு அவர் தள்ளியிருக்கிறார் எனவும் எடுத்துக் கொள்ளலாமே!

பொதுவாக, கவிஞர்கள் வாக்கு பலிக்கும் என்பது நம்பிக்கை. அவர்கள் வாழ்த்திப் பாடினால் பாடப்படுபவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் எனவும், தூற்றிப் பாடினால் அழிந்து போவார்கள் எனவும் சொல்வதுண்டு. அப்படிப் பாடுவதற்கெனவே பா வகைகள் கூடத் தமிழில் உள்ளன. அதிலும், வைரமுத்து தொடர்பாக ஏற்கெனவே அப்படி ஒரு நம்பிக்கை உண்டு.

நல்ல கதையமைப்பு, சிறப்பான இசை என எல்லாம் இருந்தும், பாரதிராஜாவின் ‘காதல் காவியம்’ படம் தோல்வியடையக் காரணம், அதில் “விலகிப் போனால் எனது சதங்கை விதவையாகிப் போகுமே” என்று கவிப்பேரரசு அமங்கலமாக எழுதியதால்தான் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உண்டு.

வைரமுத்து இதை மறுத்தாலும், இது பற்றி அறிந்த எளிய மக்கள் வாக்குப் பலிதம் கொண்ட கவிஞர் என்றே அவரை நம்புகிறார்கள். அப்பேர்ப்பட்டவரைத் ‘தாசி’ என்கிற ஒரு சொல்லுக்காகப் பொல்லாத பேச்செல்லாம் பேசி, இதற்கு மேலும் ஒரு கவிஞனை இழிவுபடுத்த முடியுமா என்கிற அளவுக்கு ஏசி, “ஆண்டாளே வந்து சொல்லட்டும். நான் மன்னிப்புக் கேட்கிறேன்” என்று மனம் வெதும்பிச் சொல்ல வைத்தார்கள். அவருடைய அந்த வாக்கைப் பலிக்கச் செய்ய – வைரமுத்து எழுதியது தவறில்லை என்பதை இவர்களுக்கு உரைக்க வைக்க – ஆண்டாளே நடத்திய திருவிளையாடலாக இதை ஏன் புரிந்து கொள்ளக்கூடாது? அதனால்தானே வைரமுத்துப் பிரச்சினை ஓய்வதற்குள்ளாகவே அவரை மன்னிப்புக் கேட்கச் சொன்னவர்களின் சமயத் தலைவரே இன்று மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது?

Vairamuthu and Aandal, the two great poets

மேலும் ‘தமிழ் எதிர்ப்புப் போராட்டம்’ நடத்தப் போவதாகத் தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கொக்கரித்த எச்.ராஜா, தன் தமிழ் – தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கு வலுத்து வரும் எதிர்ப்புகள் கண்டு அஞ்சி, தனக்கும் தமிழுணர்வு இருப்பதாகக் காட்டிக் கொள்ளப் போலி விழா நடத்த முயன்றதால் சீற்றம் கொண்ட தமிழ்த்தாய், தனது வாழ்த்துப் பாடல் தொடர்பாகவே இவ்வளவு பெரிய சர்ச்சை பிறக்கச் செய்து அந்த விழாவே நீர்த்துப் போகும்படி செய்து விட்டார் என்பதாகக் கூட நினைத்துக் கொள்ளலாமே!

இறை நம்பிக்கை, மொழிக்கென இருக்கும் இறைமைத்தன்மை, பாவம், புண்ணியம் போன்ற நம்பிக்கைகளெல்லாம் கொண்டவர்கள்தாமே இவர்கள்? எனில், இதையும் இவர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதுதானே முறை? இதுவே, சங்கராச்சாரி விவகாரம் முன்னதாகவும் வைரமுத்து விவகாரம் பின்னதாகவும் நடந்திருந்தால் இவர்கள் அப்படித்தானே சொல்லியிருப்பார்கள்? இப்பொழுது மட்டும் மாற்றிச் சொல்வானேன்?

இப்படியெல்லாம், இயல்பான உலக நிகழ்வுகளைக் கடவுள் செயல் என நம்பும் வகையில் பொருத்தமாக முடிச்சிட்டுப் பீதிகரமாக விளக்கம் அளிக்க எங்களுக்கும் தெரியும். ஆனால், தேவையில்லை. முறையாகவே விடையளிக்கலாம்.

இப்பொழுது விஜயேந்திரர் எழுந்து ‘நிற்காததைக்’ கண்டிக்கிற அத்தனை பேரும் ஆண்டாள் சர்ச்சையின்பொழுது வைரமுத்து சார்பில் ‘நின்றவர்கள்’ மட்டுமேதாம் என்றால், அந்த விவகாரத்தை மழுங்கடிப்பதற்காகத்தான் இது பெரிதுபடுத்தப்படுகிறது எனச் சொல்லலாம். ஆனால், அந்தச் சர்ச்சையில் வைரமுத்துக்கு எதிராகப் பேசியவர்கள், எந்தக் கருத்துமே சொல்லாதவர்கள் கூட இந்தப் பிரச்சினையில் விஜயேந்திரருக்கு எதிராகத் தங்கள் நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், இந்து சமயத் தலைவர்களான மதுரை ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்றோர் கூட, சங்கர மடம் மேற்படி விளக்கங்களை அளித்த பின்னும் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், விஜயேந்திரர் செய்தது தவறென்றே தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, வைரமுத்து சர்ச்சையைத் திசை திருப்பும் நோக்கில் இந்தச் சர்ச்சை எழுப்பப்படவில்லை; அப்படிச் சொல்லி இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்பதே சரி!

கேள்வி-௫: அப்படியானால் வைரமுத்தைத் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் வந்து மன்னிப்புக் கோரச் சொன்னது போலவே இப்பொழுது விசயேந்திரரும் வலியுறுத்தப்படுவது ஏன்?

எதிர்வாதம்: அந்த ஓர் ஒற்றுமை இந்த இரண்டு பிரச்சினைகளிலும் இருப்பது உண்மைதான். ஆனால், அந்த ஒன்றை மட்டுமே வைத்து இதை ஒரு பழிவாங்கல் போலச் சித்தரிப்பது பொருந்தாது.

ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவர் மனத்தைப் புண்படுத்தி விட்டால், அவர் வருத்தம் தெரிவித்தவுடன், அத்தோடு அந்தப் பிரச்சினையை விட்டு விட வேண்டும். அதுதான் வழக்கம். மாறாக, வைரமுத்து அவர்கள் வருத்தம் தெரிவித்த பின்னும் கோயிலுக்கு வந்து மன்னிப்புக் கோரியாக வேண்டும் என்று வற்புறுத்தி, தவறான ஓர் எடுத்துக்காட்டை ஏற்படுத்தினார்கள் இந்துச் சமயவாதிகள். ஆகவே, அதையொட்டி நடக்கும் இந்தப் பிரச்சினையிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஒரு சமூகத்தின் நடைமுறை, நாகரிகம், பழக்க வழக்கம் போன்றவையெல்லாம் ஒருவரைப் பார்த்து மற்றவர் கற்றுக் கொள்வதுதானே? எனவே, இது இயல்பானது.

கேள்வி-௬: அப்படிப் பார்த்தாலும், நேற்று அவர்கள் வைரமுத்தை மன்னிப்புக் கோரும்படி வற்புறுத்தியது போல் இன்று இவர்கள் விசயேந்திரரை மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்துகிறார்கள், அவ்வளவுதானே? ஆக, இரண்டும் ஒன்றுதானே? அவர்கள் அன்று செய்தது தவறென்றால், இவர்கள் இன்று செய்வதும் தவறுதானே?

எதிர்வாதம்: இல்லை! ஆண்டாள் விவகாரத்தைப் பொறுத்த வரை, வைரமுத்து தொடக்கத்திலேயே வருத்தம் தெரிவித்து விட்டார். ஆனாலும் போதாதென்று மன்னிப்புக் கோரச் சொன்னார்கள். ஆனால், விசயேந்திரரோ இன்று வரை தன் செய்கைக்காக எவ்வித வருத்தமும் தெரிவிக்காததோடு, செய்தது சரிதான் என்று ஆள் வைத்து அறிக்கை விடுகிறார். அதனால்தான் பிரச்சினை பெரிதாகிறது; கண்டனங்கள் தொடர்கின்றன.

குற்றம் சாட்டப்பட்டவர் வருத்தம் தெரிவித்த பின்னரும் நாக்கை அறுப்பேன், தலையை வெட்டுவேன் என மிரட்டி மன்னிப்புக் கேட்கச் சொல்வதற்கும், செய்த தவற்றை நியாப்படுத்திப் பேசுபவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி அமைதியான போராட்டங்கள் மூலம் அழுத்தம் தருவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு. இரண்டும் ஒன்றல்ல!

கேள்வி-௭: விசயேந்திரர் தமிழ்த்தாயை மதித்தால் என்ன, மதிக்காவிட்டால் என்ன? அவர் ஒருவர் மதிப்பதிலும் மதிக்காததிலுமா தமிழின் மதிப்பு அடங்கியிருக்கிறது?

எதிர்வாதம்: அடுத்தவர்களுக்கு மதிப்பளிக்க மனமில்லாதவர்கள் பல காலமாகவே சொல்லும் சாக்குதான் இது. அதாவது, தான் ஒருவர் மரியாதை அளிப்பதாலோ அளிக்காமல் விடுவதாலோ எதிராளியின் மதிப்பு கூடப் போவதோ குறையப் போவதோ இல்லை; அவர் மதிப்பு இவற்றையெல்லாம் தாண்டிப் பன்மடங்கு உயர்ந்தது எனச் சொல்வதெல்லாம், இப்படி எதிராளியை உயர்த்திப் பேசியாவது தான் அவருக்குத் தர வேண்டிய மரியாதையைத் தராமல் தவிர்க்க முடியுமா எனப் பார்ப்பதற்காகச் செய்யும் ஆகக் கீழ்த்தரமான முயற்சி.

ஆனால், இந்தச் சாக்குகளையெல்லாம் தமிழர்கள் சொன்னால் எடுபடுமா? இந்தியப் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவரை எதிர்த்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே தமிழர்கள், அவர்களை ஏன் அவசர அவசரமாகப் பிடித்துச் சிறையில் அடைக்க வேண்டும்? ஆனானப்பட்ட பாரதப் பிரதமரின் மரியாதை நூறு இருநூறு பேர் செய்யும் அவமதிப்பால் குலைந்து விடுமா?

ஆக, இவையெல்லாம் வெற்று வாதங்கள். ஒவ்வொரு சமூகத்திலும் போற்றுதலுக்குரிய அடையாளங்கள், மதிப்புமிகு பழக்க வழக்கங்கள் எனச் சில இருக்கின்றன. அவற்றை அந்தச் சமூகத்தில் இருக்கும் அனைவரும் மதிப்பதுதான் நாகரிகம்.

கேள்வி-௮: இது மரியாதையைக் கேட்டு வாங்குவது போல் இல்லையா?

எதிர்வாதம்: தனி மனிதர் ஒருவர் தனக்கான மரியாதையைத் தானே கேட்டுப் பெற்றால்தான் அஃது இழிவு. மொழி, நாடு, இனம், பண்பாடு போன்றவை பொதுவானவை. இவற்றுக்கெல்லாம் யாராவது மரியாதை தரத் தவறினால் கண்டனங்கள் எழத்தான் செய்யும். அதற்குப் பெயர் மரியாதையைக் கேட்டு வாங்குவது இல்லை; மரியாதை தெரியாதவர்களுக்கு அதைக் கற்பிக்கும் முயற்சி!

கேள்வி-௯: இதே நிகழ்ச்சியில்தான் தமிழ்ப் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், சங்கராச்சாரியார் நடந்து கொண்ட விதம் பற்றி அவர் ஏதும் எதிர்ப்புக் காட்டவில்லையே? அதற்காக அவரை யாரும் ஏதும் சொல்லவில்லையே?

எதிர்வாதம்: திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவரா சாலமன் பாப்பையாவா என்று திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சி அமைக்கும் அளவுக்குக் குறள் தொண்டு – தமிழ்த் தொண்டு – புரிந்தவர் பேராசிரியர் அவர்கள். அப்பேர்ப்பட்டவர் சங்கராச்சாரியின் செயலைக் கண்டிக்காததோடு, நிகழ்ச்சியில் பேசும்பொழுது தமிழ்த்தாய்க்கு மதிப்பளிக்காத சங்கராச்சாரியின் திருவடிகளுக்கு வணக்கம் கூறி உரையைத் தொடங்கியது மிகக் கடுமையான கண்டனத்துக்குரியது!

பாப்பையா அவர்கள் தன்னால் தமிழ் வளர்ந்ததை விடத் தமிழால் தான் வளர்ந்தது எத்தனை மடங்கு அதிகம் என்பதை நினைத்துப் பார்த்தல் வேண்டும். தன்னை வளர்த்த தமிழ்த்தாய்க்கு அவமரியாதை எனும்பொழுது ஒன்று, அவர் தட்டிக் கேட்டிருக்க வேண்டும்; முடியாவிட்டால், அந்த இடத்திலிருந்து வெளியேறியாவது இருக்க வேண்டும். இரண்டையுமே செய்யாமல், அவமரியாதை செய்தவனைக் காலைத் தொட்டுக் கும்பிடுவதாகக் கூறி அவர் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்! இது தமிழுக்கு அவர் இழைத்திருக்கும் பெரும் துரோகம்! அவருடைய தமிழ் சார்ந்த பெருவாழ்வில் இஃது அழிக்க முடியாத கரும்புள்ளியாக என்றும் நிலைக்கும். தமிழ் மக்கள் என்றும் இதை மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

கேள்வி-௧௦: ஒருவேளை கடைசி வரை சங்கராச்சாரி மன்னிப்புக் கேட்காவிட்டால்?...

எதிர்வாதம்: அதற்கென்ன செய்ய முடியும்? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து, தமிழையே மதிக்காமல் திரியும் இந்தக் கும்பலுக்கு, தமிழ் மீதான அவர்களின் காழ்ப்புணர்வை வெளிக்காட்ட நமக்காவது தமிழ்த்தாய் என ஒருவர் இருக்கிறார். ஆனால், அவர்கள் பெரிதும் விரும்பிப் போற்றும் சமஸ்கிருதத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்ட அவர்களுக்கு சமஸ்கிருதத் தாய் என ஒருவர் இல்லையே! மதிப்போ அவமதிப்போ எதுவாக இருந்தாலும் அதை அவர்கள் நம் மொழியின் தாய் மீதுதானே காட்டியாக வேண்டும்! ஆகவே, அவர்கள் தரத்துக்கு அவர்களால் முடிந்ததைக் காட்டுகிறார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.


ஆக, எப்படிப் பார்த்தாலும் எந்தக் கோணத்திலிருந்து ஆராய்ந்தாலும் விசயேந்திர சரசுவதி செய்தது தவறே! அவர் மன்னிப்புக் கோரியே தீர வேண்டும்! அதுதான் முறை!

மாறாக, “இவ்வளவு சொன்னப்புறமும், ‘இல்ல... நீங்க தப்பாப் புரிஞ்சுண்டேள்’” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால், அல்லது கள்ள அமைதி காத்து நடந்ததை மறக்கடிக்க முயன்றால், இன்றில்லா விட்டாலும் பிற்காலத்தில் இது தொடர்பாகப் பெரும் தலைக்குனிவை அவர் சந்திக்க நேரிடும்.

நாளைக்கே தமிழ் உணர்வு மிக்க சீமான் போன்றவர்கள் தமிழ்நாட்டை ஆள வந்துவிட்டால், கண்டிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிப்பது தொடர்பான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டே தீரும். அப்பொழுது, இன்று எப்படித் தண்டனைக்கு அஞ்சி தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றாரோ அதே போல் நாளை தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் எழுந்து நிற்க வேண்டியிருக்கும்.

அப்பொழுது மக்கள் காறித் துப்புவார்கள்! “அன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கும் மரபே கிடையாது என்று அறிக்கை அளித்து விட்டு, இன்று சட்டத்துக்கு மிரண்டு எழுந்து நிற்கிறான் பார்!” என எள்ளி நகையாடுவார்கள்! “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு மாதிரியும் தேசிய கீதத்துக்கு வேறு மாதிரியும் என நீங்கள் கடைப்பிடித்து வந்த இரு வேறு வகையான மரியாதை முறைகளும் வழக்கங்களும் இப்பொழுது எங்கே போயின?” என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் விதமாய்க் கேட்பார்கள்!

அப்படி ஒரு நிலைமை வராமல் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது, தற்பொழுதே மன்னிப்புக் கேட்டு விட்டு, இப்பொழுது முதலே சங்கராச்சாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கத் தொடங்குவது அவர்களுக்கு நல்லது! 

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி புதிய தலைமுறை இணையத்தளம், கீச்சர் ஆயிரத்தில் ஒருவன், கலைப்பூங்கா.

விழியம்: நன்றி நியூசு 7 தமிழ்.

தொடர்புடைய பதிவுகள்: 
இந்திய அரசின் விருதுகளை ஏற்பது பெருமையா இழிவா? - தமிழ் ஆளுமைகள், போராளிகள் பார்வைக்கு!

தேர்தல் - 2016 (3) | பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை!

தொடர்புடைய வெளியிணைப்புகள்: 
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான எல்லாச் சர்ச்சைகள் கேள்விகளுக்குமான விடைகள்! - கட்டாயம் அறிய வேண்டிய அரிய தகவல்கள்

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. மிக சிறப்பாக அலசி உள்ளீர்கள். தமிழ், தமிழ்நாடு பெரிதும் காயப்படுவது தமிழர்களால். பாப்பையா போன்றோர் தமிழால் வாழ்வும் பெருமையும் அடைந்தவர்கள். அவர்களுக்கு ஏன் சிறிதும் சுய மரியாதை இல்லாமல் பலருடன் தொடர்பு வைத்திருந்த ஒருவன் காலை வணங்க வேண்டும். அவன் எதாவது தமிழுக்கு தமிழருக்கு செய்தானா என்று பார்க்க கூட அறிவு கண் இல்லையா. இவரை போல் இன்னொருவர் இளையராஜா. இந்த அவாள்கள் எவ்வளவு இழிவு செய்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பர். பலருடன் தொடர்பு கொண்டு , அவர்கள் இனத்து பெண்ணே சங்கரச்சாரி பற்றி எழுதியும் , இவர்கள் அவர்கள் மேல் மதிப்பு கொண்டு இருப்பது இவர்களுக்கு வேறு எதோ ஆதாயத்திற்காக என்று என்ன தோன்றுகிறது. வேதனை என்னவென்றால் இவர்களிடம் தமிழ் ஒட்டி கொண்டு இருப்பது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லாத நண்பரின் பாராட்டுக்கு மிக்க நன்றி!

      //இவரை போல் இன்னொருவர் இளையராஜா. இந்த அவாள்கள் எவ்வளவு இழிவு செய்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பர்// - சற்று மாறுபடுகிறேன். எவ்வளவு இழிவு செய்தாலும் ஏற்பவரில்லை இளையராசா. அவரை இவர்கள் இன்னும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தத் தொடங்கவில்லை. அதனால் இன்னும் பார்ப்பனிய, இந்து சமய வாழ்க்கை முறையை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் மிகுந்த தற்பெருமையாளர். இந்து சமயவாதிகளோ பார்ப்பனர்களோ வட இந்தியர்களோ தனிப்பட்ட முறையில் அவரைச் சீண்டினால் தெரியும், இளையராசாவின் மறுமுகம் அவர்களுக்கு.

      மற்றபடி, நீங்கள் கூறும் அனைத்துமே மிக மிக உண்மை! ஆனால் எதையும் பெயருடன் தெரிவிப்பது நல்லது.

      நீக்கு
  2. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் வேதனையினை ஏற்படுத்திவிட்ட நிகழ்வு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! ஆனால், நம் வேதனையை அவர்கள் மதிப்பதாய் இல்லை. குருமூர்த்தி ‘துக்ளக்’கில் எழுதி இருப்பதைப் பார்த்தீர்களா? குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறோமாம். பார்ப்போம்! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு, தமிழுக்குத் தவிர.

      தங்கள் உணர்வார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. /
    நாளைக்கே தமிழ் உணர்வு மிக்க சீமான் போன்றவர்கள் தமிழ்நாட்டை ஆள வந்துவிட்டால், கண்டிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிப்பது தொடர்பான கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் / ஏனோ எனக்கு சிரிப்பு வந்தது


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. எனக்கு "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு!" எனும் பாட்டு நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  4. மிகவும் வருந்தத்தக்கவிடயம் இது .சிந்திக்கத்தூண்டும் சிறப்பான பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! நம் வருத்தங்கள் மாறும் காலமும் வரும். காத்திருப்போம்!

      நீக்கு
  5. சமகாலப் பிரச்சனைகளைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களை முன்வைத்துள்ளீர்கள். முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பல எதிர்வாதங்களில் நியாயமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ஐயா! முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாத பதிவிலும், அதிலுள்ள நியாயமான கருத்துக்களுக்காகப் பாராட்டுத் தெரிவிக்கும் உங்கள் அன்பிற்கு நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்