.

செவ்வாய், டிசம்பர் 22, 2015

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையும் சில திகைப்பூட்டும் உண்மைகளும்!



Why Don't Ban PETA India

மிழர்களின் மொழி, பண்பாடு, மரபுசார் அடையாளங்கள் போன்றவற்றை அழிப்பதென்றால் அவனவனுக்கு சர்க்கரைப் பொங்கலாய்த் தித்திக்கிறது! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது பெடா இந்தியா (PETA India) எனும் அமைப்பு.

தமிழர் மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவலை இந்த ஆண்டும் நடத்த விடக்கூடாது எனக் கொடி பிடித்துக் கிளம்பியுள்ள இந்த அமைப்பு, அதற்காகப் புகழ் பெற்ற நடிக-நடிகைகள், துடுப்பாட்ட (கிரிக்கெட்) வீரர்கள் எனப் பலரிடமும் கையொப்பம் திரட்டி வருகிறது (இதுவரை கையொப்பமிட்ட பிரபலங்கள் சிலரின் பெயர்ப் பட்டியல் இங்கே. இவர்களில் சிலரை நீங்கள் தமிழ்த் திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம்; உங்கள் விருப்பத்துக்குரிய துடுப்பாட்ட வீரர்களும் இதில் இருக்கலாம்!). கையொப்பங்கள் திரட்டி முடிந்ததும் நடுவணரசுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்துடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கேட்டால், இவர்கள் உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்களாம்! உண்மையாகவே அப்படித்தானா அல்லது இதில் வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா என்பது அப்புறம். முதலில், ஏறு தழுவல் மீதான தடையை நீட்டிக்க இவர்கள் கூறும் காரணங்களைக் கொஞ்சம் பாருங்களேன்!

“ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளை மாடுகள் மிகவும் கொடூரமான முறையில் உணர்வு இழக்கச் செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்றன. மேலும், வீரர்களால் காளை மாடுகள் துரத்திச் செல்லப்பட்டு உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச் செல்லுதல், கத்தியால் குத்துதல் எனப் பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகின்றன.

பொதுமக்கள், பார்வையாளர்கள் காயம் அடைதல் மற்றும் உயிரிழப்புக்கு உள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. ஆகவே, விலங்குகள் நலன் மற்றும் மனிதப் பாதுகாப்புக் கருதி, காளைகளைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகள் சார்ந்த போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையைத் தொடர வேண்டும்”

இதைப் பார்க்கும்பொழுது எனக்குச் சிரிப்பதா கொதிப்பதா என்றே தெரியவில்லை! நான்காரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் ஏறு தழுவலில் இன்று வரை ‘கத்தி’ எனும் பொருள் பயன்படுத்தப்பட்டதாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா நண்பர்களே?

தவிர விளையாட்டின்பொழுது, கலந்து கொள்ளும் வீரர்கள்தாம் காளைகளால் உதைக்கப்பட்டதையும் குத்தப்பட்டதையும் இழுத்துச் செல்லப்பட்டதையும் நாம் பார்த்திருக்கிறோம். காளைகளை யாராவது அப்படியெல்லாம் செய்து பார்த்திருக்கிறோமா? கேள்வியாவது பட்டிருக்கிறோமா?

இந்த இரண்டு வரிகளிலிருந்தே தெரிகிறது, இந்த அமைப்பினர் ஏறு தழுவல் விளையாட்டைத் தொலைக்காட்சியில் கூடப் பார்த்தது கிடையாது என்பது. இப்படிப்பட்டவர்களின் விண்ணப்பத்தில் சிறிதும் சிந்திக்காமல் கையொப்பமிட்டிருக்கிறார்கள் இத்தனை பெரிய மனிதர்களும்! என்ன இருந்தாலும் தமிழர்கள் விளையாட்டுத்தானே! அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சிந்திக்க வேண்டுமா என்ன?

ஏறு தழுவல் விளையாட்டைக் கண்ணால் கூடப் பார்க்காமல், ஸ்பெயின் நாட்டுக் காளை அடக்கும் போட்டி போலத்தான் இதுவும் இருக்கும் எனக் கண்ணை மூடிக் கொண்டு முடிவெடுத்து இவர்கள் இப்படி ஒரு கோரிக்கையை நடுவணரசு வரை கொண்டு செல்லத் துணிவதைப் பார்க்கும்பொழுது, கடந்த பொங்கலின்பொழுது மேனகா காந்தி உளறியது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

“ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது” என்றார் மேனகா காந்தி அன்றைக்கு. (இது பற்றி அப்பொழுது நான் எழுதிய பதிவு - ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா?). ஒரு நாட்டின் நடுவண் அமைச்சரே இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தால் அதை மற்றவர்கள் நம்பாமல் இருந்தால்தான் வியப்பு. எனவே, ஏறு தழுவல் பற்றி இன்று 'பெடா' இப்படி ஒரு தவறான முடிவுக்கு வரவும், உலகமே போற்றும் தமிழர் வீர விளையாட்டு இன்றைக்கு இப்படி முகாந்திரமே இல்லாத அபாண்டப் பழிகளால் இழிவுபடுத்தப்படவும் மேனகா காந்தியின் பொறுப்பற்ற பேச்சும் காரணமாக இருந்திருக்கலாம் என நம்ப இடமிருக்கிறது. இந்த நாட்டில் நடுவணரசின் அமைச்சர்கள் முதல் தனியார் அமைப்புகள் வரை தமிழர்கள் மீதும் தமிழர்களின் பண்பாடு, வரலாறு, மரபு போன்றவற்றின் மீதும் எந்தளவுக்கு அலட்சியமும் கீழ்த்தரமான பார்வையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இவற்றின் மூலம் மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. 

Bull Embracing Sportsman
பாயும் காளையைக் கட்டித் தழுவும்
தமிழ்க் காளை
இப்படிப்பட்டவர்களுக்கு ‘ஏறு தழுவல்’ என்றால் என்னவெனத் தெரியுமா?... அதிலுள்ள ‘தழுவல்’ எனும் வார்த்தையின் பொருள்தான் புரியுமா?... காளையை அடக்குவதோ கொல்வதோ கொடுமைப்படுத்துவதோ இல்லை, அதைக் கட்டி ‘அணைப்பது’தான் இந்தப் போட்டியின் நோக்கமே என்பதை இவர்கள் அறிவார்களா?... பெற்ற பிள்ளைக்குக் கஞ்சி வார்த்துவிட்டுக் கடன் வாங்கியாவது காளைக்கு ஊட்டம் மிகுந்த உணவுகளைக் கொடுத்துப் போட்டிக்கு ஆயத்தப்படுத்தும் அன்புள்ளங்களை இவர்கள் சந்தித்திருப்பார்களா?... விளையாட்டுத் திடலை விட்டு ஓடிப் போன காளையை, பெற்ற பிள்ளையைத் தொலைத்தது போல் தேடி அலைபவர்களின் கதைகளை இவர்கள் கேட்டிருப்பார்களா?...

இப்படி எதுவுமே தெரியாமல் புரியாமல், தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டாமல், தமிழ் மரபையும் அது சார்ந்த அடையாளங்களையும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இப்படிப்பட்ட வெறி பிடித்த அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?

தெரியாமல்தான் கேட்கிறேன், தமிழ்நாட்டின் ஏறு தழுவலிலும், மாட்டு வண்டிப் பந்தயங்களிலும் மட்டும்தாம் வாயில்லா உயிர்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா முதலான சில மாநிலங்களில் எருமைப் பந்தயம் நடத்தப்படுகிறது. (பார்க்க: Vaina, Uttar Pradesh, Buffalo Race in Kolhapur, Kambala). கேரளாவின் உட்பகுதியிலுள்ள நாட்டுப்புறங்களில் காளைச் சறுக்கல் எனும் விளையாட்டு ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது. மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை என இந்தியாவின் பல இடங்களில் இன்றும் குதிரைப் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் குதிரைகள் எல்லாம் வாயில்லாத உயிரினங்கள் இல்லையா? இவை மட்டும் என்ன பேசும் திறன் படைத்தவையா? அல்லது, இந்த விளையாட்டுக்களிலெல்லாம் பொதுமக்களோ பார்வையாளர்களோ பாதிக்கப்படுவதில்லையா? சொல்லப் போனால், மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடைபெறும் எருமைப் பந்தயத்தில், எருமைகளைக் கட்டுப்படுத்த வீரர்கள் (!) நீண்ட கம்புகளைப் பயன்படுத்துகிறார்கள். [வேண்டுமானால், கீழ்க்காணும் விழியத்தைப் (வீடியோவைப்) பாருங்கள்]. ஆனால், தமிழ்நாட்டு ஏறு தழுவலிலோ வீரர்கள் வெறும் கைகளால் காளைகளைக் கையாள்கிறார்கள். 

இந்த விளையாட்டுக்களைப் பொறுத்த வரை மட்டும், அந்தந்த மாநிலங்களையே தடை செய்யச் சொல்லிக் கெஞ்சுவது, குறிப்பிட்ட சில நெறிமுறைகளோடு தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பது என நீக்குப் போக்காக நடந்து கொள்ளும் இந்தியச் சட்டங்களும், ‘பெடா’ முதலான உயிரின நல அமைப்புகளும் தமிழ்நாட்டு விளையாட்டுக்களை மட்டும் ஒரேயடியாக முடக்கிப் போட ஆலாய்ப் பறப்பது ஏன்? தமிழர்களைப் பார்த்தால் மட்டும் இவர்களுக்கு இளித்தவாயர்களாகத் தெரிகிறதா?

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, இப்படிப் போகிறவன் வருகிறவன் எல்லாம் தமிழர் மரபுகளைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறான் என்றால், அதற்குக் காரணம் நாம்தான்!

ஒவ்வொரு முறை யாராவது இப்படிப் பேசும்பொழுதும் அவர்களுக்கு ஆற அமர விளக்கமளிப்பது, எங்கோ உட்கார்ந்து கொண்டு அவர்கள் சொன்ன பொறுப்பற்ற கருத்துக்கு இங்கே உள்ள நம்மூர்ச் சாலைகளில் மறியல் செய்வது, கொடும்பாவி கொளுத்துவது என இப்படித்தான் நாம் பதில் (response) தருகிறோமே தவிர, சட்டப்படி நாம் இவற்றை எதிர்கொள்வதே இல்லை. அதனால்தான் தமிழர்கள் விதயத்தில் எல்லோரும் குளிர்விட்டுப் போய்த் திரிகிறார்கள்.

எனவே, இனியாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்! இதோ, ஏறு தழுவல் பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாமல் அபாண்டமான பழிகளைச் சுமத்தி இருக்கும் பெடா அமைப்புக்கு எதிராக ‘குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றிப் பொய்யான கருத்துக்களைப் பரப்பி அவர்களையும் அவர்தம் பண்பாட்டையும் இழிவுபடுத்திய’ குற்றத்திற்காக உடனடியாய் வழக்குத் தொடுக்க வேண்டும்! சிந்திக்காமலே இவர்களின் விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பாகச் சட்டப்படி அழைப்பாணை (summon) அனுப்பப்பட வேண்டும்! ஒருமுறையாவது இப்படிச் செய்தால்தான் தமிழர்கள் பற்றியும் தமிழர் பழக்கவழக்கங்கள் பற்றியும் போகிற போக்கில் பேச இனி யாரும் துணிய மாட்டார்கள். தமிழர் பிரச்சினைகளுக்காகப் போராடி வரும் அரசியல் கட்சிகள், தமிழுணர்வு இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் இப்பொழுதே இதற்கு ஆவன செய்ய வேண்டும்!

இல்லாவிட்டால், தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுகிற இந்தப் போக்கு மென்மேலும் பெருகவே செய்யும்! 

கையில் கம்புகளோடு நடத்தப்படும் கோலாப்பூர் எருமைப் பந்தயம் 

(நான் --௨0௫ (21/12/2015) அன்றைய கீற்று இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்).

❀ ❀ ❀ ❀ ❀


படங்கள்: நன்றி ௨. மாலைமலர்.
விழியங்கள்: நன்றி டி.வி-9 குசராத்.
உசாத்துணை: நன்றி விகடன், தமிழ் விக்கிப்பீடியா.

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

13 கருத்துகள்:

  1. //போட்டியின்போது காளை மாடுகள் மிகவும் கொடூரமான முறையில் உணர்வு இழக்கச் செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்றன. மேலும், வீரர்களால் காளை மாடுகள் துரத்திச் செல்லப்பட்டு உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச் செல்லுதல், கத்தியால் குத்துதல் எனப் பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகின்றன//

    உண்மைதான் நண்பரே அவர்கள் ஸ்பெயின் நாட்டு வீர(?)விளையாட்டை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு சொல்லி விட்டார்கள் தாங்கள்தான் தவறாக புரிந்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன் ஹாஹாஹா

    இதற்கு ஆதரவானவர்களில் நடிகைகள் செல்வி. வித்யா பாலன், செல்வி. ரவீணா தாண்டன். செல்வி. ஷில்பா ஷெட்டி அடடே... அடடே... தமிழ்ப் பாரம்பரியத்தை கரைத்துக் குடித்தவர்கள் இவர்கள்
    ஹூம் மானக்கேடு தமிழன் என்றுமே சந்தர்ப்ப நேரங்களில் மட்டும் கூவி விட்டு மறந்து விடுகின்றான்.

    பாக்ஸிங் என்ற பெயரில் மனுஷனை மனுஷன் இரும்புக் கூண்டுக்குள் விட்டு இரும்புக் கம்பிகளை வைத்து அடித்தே கொல்கின்றான் அதை ரசித்து கைதட்ட ஒரு மனுஷ(?)கூட்டம் இதைத் தடுத்து நிறுத்த ஒரு நாதியில்லை.

    சமீபத்தில் ரெண்டு தறுதலைகள் பாட்டு என்ற பெயரில் உலகத்தமிழர்களை உலகமெங்கும் தலைகுனிய வைத்து கேவலப்படுத்தியதே என்னவாயிற்று ? இதுதான் நண்பரே நம்நிலை இதையும் ஆதரித்து குரல் கொடுக்கின்றார்களே அவர்களை என்ன செய்வது ?

    இனிவரும் காலங்களில் உண்மையான தமிழ் உணர்வாளன்
    கண்ணிருந்தும் குருடனாய்..
    காதிருந்தும் செவிடனாய்..
    வாயிருந்தும் ஊமையாய்..
    வாழும் இழிநிலைதான் உருவாகுமோ என்று அச்சமாக இருக்கின்றது

    நல்லதொரு அலசலான கட்டுரை நண்பரே... வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் ஆளாக வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!

      //பாக்ஸிங் என்ற பெயரில் மனுஷனை மனுஷன் இரும்புக் கூண்டுக்குள் விட்டு இரும்புக் கம்பிகளை வைத்து அடித்தே கொல்கின்றான் அதை ரசித்து கைதட்ட ஒரு மனுஷ(?)கூட்டம் இதைத் தடுத்து நிறுத்த ஒரு நாதியில்லை// - நீங்கள் கூறுவது மற்போர் (ரெஸ்லிங்) பற்றி என நினைக்கிறேன். அதில் கலந்து கொள்பவர்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில்தானே கலந்து கொள்கிறார்கள்? ஆனால், மாடுகள் அப்படி இல்லையே! அதனால்தான் எதிர்க்கிறார்கள். வாயில்லா உயிரினங்களை மனிதர்கள் தம் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தக்கூடாது என்பது இவர்கள் வாதம். ஆனால், அப்படிப் பார்க்கப் போனால், நாட்டிலும் உலகிலும் எத்தனையோ நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், அவற்றையெல்லாம் சில நெறிமுறைகளோடு நடத்த இசைவு வழங்கிவிட்டு நம் ஏறு தழுவலை மட்டும் ஒரேயடியாக முடக்க நினைப்பது என்ன நியாயம் என்பதே என் கேள்வி. இந்த வாதத்தை முன்வைத்து யாராவது ஏறு தழுவல் மீதான தடைக்கு எதிராய் இதுவரை வழக்குத் தொடுத்ததுண்டா என்று தெரியவில்லை. இல்லை எனில், இனியாவது செய்தால் நம் மரபார்ந்த இந்த வீர விளையாட்டு காக்கப்படும்.

      எது எப்படியோ, ஏறு தழுவலைத் தடை செய்ய நினைக்கும் தனியார் அமைப்புகளாகட்டும், இந்தியச் சட்டங்களாகட்டும், இந்திய ஆட்சியாளர்களாகட்டும் யாரும் உயிரினங்களின் நலன் குறித்த கவலையால் இதைச் செய்யவில்லை. தமிழர் மரபை அழிக்கும் நோக்கத்துடனே இதைச் செயல்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!

      நீக்கு
    2. ஆம் நண்பரே ரெஸ்லிங்தான் பெயர் தெரியாமல் சொல்லி விட்டேன்

      நீக்கு
  2. தமிழர்களின் அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப்படுவது வேதனைக்குரியது. சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உணர்வார்ந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  3. ஏறு தழுவல் என்பது பழைய நிலப்பிரபுத்துவ மிச்சமுள்ள விளையாட்டு அதை ஒட்டு மொத்த தமிழர்கள் வீர விளையாட்டு என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! நீங்கள் ஏதோ 'முரட்டுக்காளை' போன்ற திரைப்படங்களைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

      ஏறு தழுவல் என்பது உண்மையில் தமிழர்களுடைய உழவுப் பண்பாட்டின் தொன்மையுடைய அடையாளம். இதற்கு மேல் இது பற்றிக் கூற எனக்கு உரிமையில்லை. காரணம், இந்த அரிய கருத்தாக்கத்தை எனக்குத் தெரிவித்தவர் 'ஊமைக்கனவுகள்' வலைப்பூ நடத்தும் நம் விஜு ஜோசப் ஐயா அவர்கள். பழந்தமிழ் நூல்களைக் கரைத்துக் குடித்தவரும், சீரிய சிந்தனையாளருமான அவர் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். விரைவில், இது பற்றி அவர் அருமையான ஒரு கட்டுரையை வழங்க இருக்கிறார். உங்கள் கேள்விக்கு அதில் விடை கிடைக்கும். அப்பொழுது நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      அதே நேரம், ஒருவேளை இந்தக் கூற்றுகள் தவறாக இருந்து, நிலவுடைமையின் மிச்சம்தான் ஏறு தழுவல் என நீங்கள் கூறுவதே சரியாக இருந்தாலும், அதை நாமாக உணர்ந்து இந்த விளையாட்டைப் புறக்கணித்தால்தான் அது நல்ல மாற்றமாகவும் சமூக - பண்பாட்டு வளர்ச்சியாகவும் இருக்குமே தவிர, இப்படி வலுக்கட்டாயமாக இந்த மாற்றத்தைத் திணித்தால் அது மென்மேலும் இதன் மீதுள்ள பிடிப்பை வளர்க்கத்தான் உதவும் இல்லையா? எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படி ஒரு தவறான பழக்கத்தின் அடையாளம் என்று கூறியோ, அதற்காகவோ இந்தத் தடை கொண்டு வரப்படவில்லை, தமிழர் மரபு அடையாளங்களை அழிக்க நினைக்கும் இனவெறியின் காரணமாகவே இவை அமல்படுத்தபடுகின்றன என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

      எது எப்படியோ, உங்களுடைய முறையான, அன்பான மாற்றுக் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
    2. ஐயா! ஏறு தழுவலின் வரலாறு பற்றிய தன் சுவையான கருதுகோளை இதே தளத்தின் முந்தைய பதிவுடைய கருத்துரைப் பகுதியில் ஜோசப் விஜு அவர்கள் பதிந்திருக்கிறார். அதன் சுட்டி இதோ: http://agasivapputhamizh.blogspot.com/2015/01/is-jallikkattu-western-concept.html?showComment=1422285007294#c219710262277820757. முந்தைய கருத்துரையில் இதைக் குறிப்பிட மறந்து விட்டேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்!

      நீக்கு
  4. தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் மறைந்து போக இடமளிக்கக்கூடாது.

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  5. நம் அடையாளங்கள் நம்மிடம் இருந்து பிடுங்கப்படுவது தான் தொடர்ந்து நடைபெறுகிறது.
    நல்ல அலசல், பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசைவான உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அம்மணி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்