ஏன் இது ‘அகச்
சிவப்புத் தமிழ்’?
காரணங்கள் பல...
கோபத்தின் நிறம்
சிவப்பு
இது, ஈழத்
தமிழுணர்வாளன் ஒருவனின் கோபம் சொல்வது!
இரத்தத்தின் நிறம்
சிவப்பு
இது, உலக மக்கள்
அனைவரையும் உடன்பிறப்புக்களாய் நினைப்பவன் தன் இரத்தத்திலிருந்து எழுதுவது!
காதல் சின்னம் சிவப்பு
இது, தமிழ் மீது கொண்ட
காதலால் மலர்ந்தது!
வீரத்தின் நிறம்
சிவப்பு
இது, தமிழர்தம்
புறத்திணைப் பெருமை பேசுவது!
வெட்கத்தின் நிறம்
சிவப்பு
இது, சமயத்தில்
அகத்திணை மணமும் வீசுவது!
எச்சரிக்கையின் நிறம்
சிவப்பு
இது, சமூக ஆர்வலன்
ஒருவன்
சக மனிதர்களுக்காக
நடும் எச்சரிக்கைப் பலகை!
நெருப்பின் நிறம்
சிவப்பு
இது, நீதியை நிலைநாட்ட
மதுரையை எரித்தது போக
மிச்சமிருந்த தீயில்
தொட்டு எழுதும் பதிவு!
பொதுவுடைமையின் நிறம்
சிவப்பு
இது, அனைவருக்கும்
அனைத்தும் கிடைக்க
விருப்பு கொண்ட ஒருவனின்
சிவப்பு முனைப்பு!
புரட்சியின் நிறம்
சிவப்பு
இது, புரட்சி மணக்கும்
கருத்துக்களின் தொகுப்பு!
‘செம்மை’ என்றால் சிவப்பு
இது, செம்மையானவற்றை
மட்டுமே வழங்க வேண்டும் எனும்
எண்ணத்தின் வண்ணம்!
பிழை சுட்டும் நிறம் சிவப்பு
இது, உலகத்தைப் பிழை
திருத்த
ஓர் அடிக்கோட்டு
முயற்சி!
அதே நேரம்,
பிஞ்சுக் குழந்தைகளின்
கனி வாய் சிவப்பு
இது, அதுபோல் வளரும்
எழுத்தாளன் ஒருவனின் மழலைமொழி!
அகச் சிவப்புக்
கதிர்கள் சிவப்பு
இது, அவை போல்
தெரிந்தும் மறைந்தும்
ஊடுருவியும் கடந்தும்
தன் கருத்துக்கள் பரவ
வேண்டும் எனும்
விழைவின் வெளிப்பாடு!
விடுதலைப்புலிகளின்
கொடி சிவப்பு
இது, அவர்கள்தம்
ஆதரவாளனின் இணையமுகம்!
எல்லாவற்றுக்கும்
மேலாக,
தமிழின் நிறமே சிவப்பு!
இருபத்தோராம்
நூற்றாண்டுப் புலவனொருவன்
புகன்றது போல்
‘செம்மொழி’ என்பதால் மட்டுமில்லை,
காலங்காலமாகப் பலர்
-அண்மையில் கூட ஒன்றரை
இலட்சம் பேர்-
இந்த மொழிக்காக
உயிரைக்
கொடுத்திருப்பதாலும்தான்!
ஆதலினால்,
இது ‘அகச் சிவப்புத்
தமிழ்’!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
0 comments:
கருத்துரையிடுக