“உன்னை நீ மேம்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த பழிவாங்கும் முறை” – என்பது இன்றைய புத்துலக வாழ்க்கைமுறையில் பெரிதும் போற்றப்படும் பொன்மொழிகளுள் ஒன்று. இதையே ஒரு கதையாகச் சொன்னால்...? அதுதான் மன்சூரா பீவி அம்மையார் எழுதியுள்ள ‘மம்மது’ புதினம்.
மன்சூரா பீவி அவர்கள் இந்திய அஞ்சல் தொலைவரித் (Postal and Telegraph) துறையில் பணியாற்றியவர். இவர் கணவர் துவிட்டர் புகழ் தமிழறிஞர் நெல்லை க.சித்திக் அவர்கள். அவர் மகுடைத் (Corona) தொற்றால் காலமான பின்னர் அன்னார் பல ஆண்டுகள் உழைத்துத் தொகுத்திருந்த ‘அயற்சொல் அகரமுதலி’ எனும் நூலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார் பீவி அவர்கள். அப்பொழுது அவரைக் கணவரின் கனவை நிறைவேற்றி வைத்த அன்பான மனைவி என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அடுத்து அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்த பிறகுதான் அவர் எப்பேர்ப்பட்ட எழுத்துத்திறம் படைத்தவர் என்பதை அறிய முடிந்தது.
தற்பொழுது பணியோய்வுக்காலத்தில் இருக்கும் பீவி அவர்கள் அடுத்தடுத்துத் தன் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவற்றுள் ஒன்றுதான் மம்மது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களம். வலியகுளத்துவிளை எனும் சிற்றூரில் வாழும் இளைஞன் மம்மதும் காசிமும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இல்லை இல்லை, நண்பர்கள் ஆவதற்கு முயல்பவர்கள். ஆனால் அவர்கள் பழகக்கூடாது என்று தொடக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது இருவர் வீட்டிலிருந்தும்.
ஓரிரு கசப்பான நிகழ்வுகளுக்குப் பின் ஒரேயடியாகப் பிரியும் இந்த நண்பர்கள், தங்கள் 18 வயதில் மீண்டும் சந்திக்கும்பொழுது காசிம் தங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையிலான மருமத்தைத் தெரிவிக்கிறான். நண்பன் மகிழ்வான் என்றெண்ணி அவன் சொல்லும் அந்தச் செய்தி மம்மதின் மொத்த வாழ்வையும் ஒரே நிமையத்தில் புரட்டிப் போட்டு விடுகிறது.
❔ காசிம் சொன்ன அந்த மருமம் என்ன?
❔ மம்மதின் குடும்பத்துக்கும் காசிம் குடும்பத்துக்கும் அப்படி என்ன பகை
❔ மொத்தமாகத் தன்னை நிலைகுலைய வைத்த அந்த உண்மையை மம்மது எப்படி எதிர்கொண்டான்?
- இவற்றுக்கான விடைதான் இந்தப் புனைவு.
வரலாற்றுப் புனைகதைகள், அறிவியல் புனைவுகள் போன்றவற்றையே
அதிகம் படித்த எனக்கு இலக்கியச் சுவை என்பது சிறுகதைகள், கவிதைகள் வாயிலாகத்தான்
அறிமுகம். சமுகப் புதினங்களை நான் அதிகம் படித்ததில்லை. அதனாலோ என்னவோ, இந்தக் கதை
மிக மெதுவாக நகர்வதாய் எனக்குத் தோன்றியது.
ஆனால் என்னதான் மெதுவான நடையாக இருந்தாலும் ஒவ்வொரு
படலத்தின் (chapter) முடிவிலும் அடுத்த
படலத்தில் வரப்போகும் திருப்பத்தை முன்னோட்டிக் காட்டி, தொடர்ந்து படிக்கச் செய்து
விடுகிறார் எழுத்தாளர்.
குமரி மாவட்ட இசுலாமியத் தமிழ்க் குடும்பங்களைப்
பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் அவர்களின் அந்நாளைய வாழ்க்கைமுறை
நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போதுமான பொருளாதார வலிமையும் பள்ளிக்கூடம்
போன்ற பிற வசதிகளும் இருந்தும் தொழிலையே நம்பியிருக்கும் மனப்பான்மையால் கல்வியை அவ்வளவு
பொருட்படுத்தாத போக்கு, கல்வியின்மையாலும் சமுகக் கட்டுப்பாட்டாலும் பெண்களின்
வாழ்க்கை முழுக்க முழுக்க ஆண்களையே சார்ந்திருந்த அவலம், ஆனாலும் கைத்தொழில்
செய்து பொருளாதார அளவிலாவது சொந்தக் காலில் நின்ற – அதுவும் அந்தக் காலத்திலேயே -
குமரி மாவட்டப் பெண்களின் தற்சார்பு, இசுலாமிய மக்களின் திருமணச் சடங்குகள் எனப்
பலவற்றையும் பரப்புரைத் தொனி இல்லாமல் போகிற போக்கில் எடுத்துக்காட்டுகிறார்
நூலாசிரியர்.
அது மட்டுமில்லை, அனைத்துப் பிரிவு மக்களின்
ஒற்றுமையையும் பதிவு செய்துள்ளார். “அவ்வூரில் அனைத்து சமுதாய மக்களும் பொருளாதாரத்தில்
ஒருவரையொருவர் சார்ந்திருந்ததால் அதிகம் சண்டை சச்சரவு வருவதில்லை. .... .... ....
அந்த நெருக்கத்தில் ஒருவரையொருவர் மாமா மாமி சாச்சா சாச்சி பாட்டா என்று முறை
சொல்லியும் மக்கா மக்களே என்று உரிமையுடனும் அழைத்துக் கொள்வார்கள்” என்று அவர்
எழுதியிருப்பது, படிக்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது!
இந்துக்களாக்கப்பட்ட தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களும்
தென்தமிழ்நாட்டில் ஒருவரையொருவர் இப்படி உறவுமுறைப் பெயர் சொல்லி அழைப்பது
ஏற்கெனவே அறிந்ததுதான் என்றாலும் கதைகள் வாயிலாக அது மீண்டும் மீண்டும் பதிவு
செய்யப்படுவதைப் பார்க்கையில் மனம் மகிழ்கிறது!
உரைநடைப் பகுதிக்குப் பொதுத்தமிழ், உரையாடல் பகுதிக்கு
அம்மக்களின் வட்டார வழக்கு என எழுத்தாளர் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள விதம்
கச்சிதம்! ‘வேணாட்டுத் தமிழ்’ எனப்படும் கன்னியாகுமரி வட்டார வழக்குச் சொற்கள்
பற்றி ஆய்வு செய்பவர்கள் இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும். அவ்வளவு சொற்கள்
இதில் கொட்டிக் கிடக்கின்றன!
தொடக்கத்தில் இந்த வட்டார வழக்கு கொஞ்சம் மிரட்சியாக
இருந்தாலும் கதைப்போக்கில் புரிபடவே செய்கிறது. புரிபடுவது மட்டுமில்லை,
புத்தகத்தைப் படித்த கடைசி இரண்டு நாட்களில் என் சிந்தனையோட்டத்தின் மொழியிலும்
இந்தச் சொற்கள் ஆங்காங்கே தலைகாட்டின. அந்தளவுக்கு மனத்தில் நிற்கும்
விதமாக எழுதியிருக்கிறார்.
கதைமாந்தர்களும் இயல்பாகப்
படைக்கப்பட்டுள்ளார்கள். கதைநாயகன் மம்மது ஒன்றும் புரட்சிக்காரன் இல்லை;
எப்பேர்ப்பட்ட இன்னல் வந்தாலும் எதிர்த்து நிற்கும் பெருவீரனும் இல்லை. எல்லாச்
சராசரி மக்களுக்கும் இருக்கக்கூடிய எல்லா வலுவீனங்களும் உள்ள எளிய மனிதன். காசிம்
அந்த மருமத்தைச் சொன்னதும் உடைந்து போகிறான்; அம்மா தங்கைகள் என எல்லாரையும்
வெறுத்து ஒதுங்குகிறான். ஆனால் நோய் வந்து படுக்கையில் வீழ்ந்து எழுந்ததும் கொஞ்ச
நாளுக்கு எல்லாவற்றையும் மறந்து மீண்டும் அம்மாவைப் பார்த்து மகிழ்பவன், பிறகு ஒரு
கட்டத்தில் மீண்டும் சீற்றம் கொள்கிறான்.
உடம்பில் வலு இருந்தால் வீம்பு
காட்டுவதும் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் தழைந்து போவதும் மனித இயல்பு. இது
ஒன்றும் பச்சோந்தித்தனம் இல்லை. இதை உள்ளபடி காட்டுகிறது கதை.
எளிய மக்களின் கனிவார்ந்த அன்பு
கதையின் முதல் படலத்திலிருந்தே (chapter) அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமய வேறுபாடு
இல்லாமல் எல்லா வீட்டுப் பிள்ளைகளையும் “பிள்ளை”யெனவே அழைக்கும் பெண்கள்,
எல்லாவற்றையும் விற்றுத் தெருவுக்கு வந்த பின்னும் உடல்நலமில்லாத முதலாளியைப்
பெற்ற தகப்பனைப் பார்த்துக் கொள்வது போல் கவனித்துக் கொள்ளும் அய்யாக்குட்டி,
குழந்தைகள் வீட்டுக்கு வந்தால் அவர்கள் முகத்தைப் பார்த்தே உருகிப் போகும்
பாத்தக்கண்ணு, அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாமல் ஊர் விட்டு ஊர்
வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முகத்தைக் கூடப் பார்க்காமல் அந்தக் குடும்பத்துப்
பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் இசுமாயில் எனக் கதை முழுவதும்
மனிதர்களின் பேரன்பும் பெருந்தன்மையும் நிறைந்து வழிகின்றன.
மம்மது பிறந்த புதிதில் தாய்ப்பால்
கிடைக்காமல் அல்லல்படும்பொழுது, கிறித்தவப் பெண்மணியான ஏசு மரியாள் அவனுக்குப்
பாலூட்டும் காட்சி இதன் உச்சம்! அதைப் பார்த்துவிட்டு, அவ்வப்பொழுது இதே போல்
வந்து பாலூட்டுமாறு மம்மதின் பாட்டி கேட்க, “உம்மைக்கு பேடி ஒண்ணும் வேண்டாம்!
இன்னி எனக்க ஜெயசீலி கரைஞ்சா இவன் ஓர்ம வந்திரும். என் காலு தன்னைப்போல இங்க வந்து
நிக்கும்” என்பது சிலிர்க்க வைக்கும் இடம்.
மம்மதுக்கும் மெர்சிக்கும்
இடையிலான உறவு நட்பா, காதலா என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்வது நன்றாக
இருக்கிறது! கட்டுப்பாடுகள் மிகுந்த இந்த சமுகத்தில் இரண்டு தூய உள்ளங்களின்
இளம்பருவக் காதல் (calf love) எவ்வளவு அலைக்கழிக்கப்படுகிறது என்பது அணுவளவும் மிகை
இல்லாமல் காட்டப்படுகிறது.
அம்மா, அப்பா மீது வெறுப்பு கொண்டு
மம்மது வீட்டை விட்டு வெளியேறினாலும் சாப்பிடும்பொழுதெல்லாம் அம்மாவின் நினைவு
வருவதை அவனால் தவிர்க்க முடிவதில்லை. எவ்வளவுதான் புறக்காரணிகள் வெறுப்பைத்
தோற்றுவித்தாலும் உண்மை அன்பை மறக்க இயலாத மனித மனத்தை இது படம் பிடித்துக்
காட்டுகிறது. இப்படி நுட்பமான பல உணர்வுகள் கதையோட்டத்தின் ஊடாகத் தன்போக்கில்
பேசப்படுகின்றன.
வீட்டில் ஒருவர் இல்லாவிட்டால் அந்த
உள்ளங்கள் எவ்வளவு துவண்டு போகும் என்பதை விரிவாக எடுத்துக் கூறுபவர் அதே நேரம்,
யார் இல்லாவிட்டாலும் வாழ்க்கை தன்பாட்டுக்குச் செல்லும் என்பதையும் பதிவு செய்யத்
தவறவில்லை.
தன் வாழ்க்கையை இப்படி
ஆக்கியதற்காகப் பழிவாங்கத் துடிக்கும் மம்மது, அந்தப் பழிவாங்கலை யாருக்கும்
எந்தத் துன்பமும் விளைவிக்காமல் எப்படி நேர்மறையாக நிறைவேற்றுகிறான் என்பதுதான்
கதையின் முடிவு. கல்வி வெறுமே பொருள் ஈட்ட மட்டுமில்லை, அது மனிதனை எந்த அளவுக்குப்
பண்படுத்துகிறது என்பது இதன் மூலம் ஆரவாரம் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.
மிக மிக எளிமையான, வழமையான
கதைதான். ஆனால் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய உண்மைகளை உணர்வுகளை எந்த
ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாகப் பதிவு செய்தமைக்காக எழுத்தாளரைப் பாராட்டலாம்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட
வியப்பான ஒன்று...
இந்த நூல் அறிமுகத்தை எழுதுவதற்காக இதன் தொடக்க வரியாக உள்ள பொன்மொழியைச் சொன்னவர் யார் என்று தேடிப் பார்த்தேன். நபிகள் நாயகத்தின் மருமகனார் அலி இப்னு அபி தாலிப் அவர்களின் பெயர் வந்து முன்நிற்கிறது! ஆக, “உன்னை நீ மேம்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த பழிவாங்கும் முறை” என்பது வெறுமே இந்தக் கதைக்கான கரு இல்லை, அதுவே இசுலாமியப் பெருமக்களின் வாழ்க்கைமுறையாக இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
எனவே இந்தக் கதையின் மூலம் தங்கள் வாழ்க்கைமுறையின் ஒரு அரிய பண்புக்கூற்றை இன்றைய தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டலாக முன் வைத்திருக்கிறார் மன்சூரா பீவி அம்மையார்.
அதற்காக அவருக்கு நம் நன்றி!
* * * * *
நூல் விவரங்கள்:
தலைப்பு: மம்மது
ஆசிரியர்: மன்சூரா பீவி
பக்கம்: 230
விலை: ரூ.85/-
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
நூலை வாங்க: https://www.commonfolks.in/books/mansoora-beevi
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!









0 comments:
கருத்துரையிடுக