.

திங்கள், செப்டம்பர் 14, 2020

உயிரை மாய்த்துக் கொண்ட என் இனிய இளவல்களே! – இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள்!

Three students committed suicide due to NEET Examination
யிரை மாய்த்துக் கொண்ட என் இனிய தம்பிகளே, தங்கையே!

என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்?
என்ன முடிவு இது?
இதனால் நீங்கள் சாதித்தது என்ன?

இதோ உங்களைப் படாத பாடுபட்டுப் பெற்று வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரைத் துடித்துத் துடித்துக் காலமெல்லாம் கண்ணீர் விடும்படி செய்திருக்கிறீர்கள். இதைத் தவிர நீங்கள் இந்தத் தற்கொலையால் வென்றது என்ன?

நீங்கள் மூன்று பேர் உயிர் விட்டு விட்டதால் இந்திய அரசு இனி மருத்துவப் பொதுநுழைவுத்தேர்வே (NEET) வேண்டா என நிறுத்தி விடப் போகிறதா?...

மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போர்க்கொடி உயர்த்தி நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றப் புது வழி கண்டு விடப் போகிறதா?...

உச்சநீதிமன்றம் தானாக வழக்கெடுத்து இப்படி மாணவர்களின் உயிரையே காவு வாங்கும் அளவுக்குக் கொடுமையான ஒரு தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பி விடப் போகிறதா?...

இப்படி எந்த ஒரு நன்மையும் நடக்கப் போவதில்லை. மாறாக, நடக்கப் போவதெல்லாம் என்னென்ன தெரியுமா?

உயிரின் மதிப்பு தெரியாத கோழைகள் என உங்களை உலகம் தூற்றப் போகிறது. பிள்ளைகளை வளர்க்கத் தெரியாதவர்கள் என உங்கள் பெற்றோரைப் பழிக்கப் போகிறது. ஆம்! எந்தப் பெற்றோர் உங்கள் தேர்வுத் தோல்வியால் தலைகுனிந்து விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்களோ அதே பெற்றோர் காலமெல்லாம் தலைகுனிந்து நிற்கத்தான் உங்களுடைய இந்த முடிவு வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமா?

“மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வில் வெல்லத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தகுதி இல்லை. அதனால்தான் அங்கு தொடர்ச்சியாக இத்தனை மாணவத் தற்கொலைகள்” என நாட்டின் மற்ற மாநிலங்கள் நம் மாணவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றன. நாட்டுக்கே மருத்துவத் தலைநகரமாய் விளங்கும் இம்மண்ணைப் பார்த்து அடிப்படை அளவில் கூட மருத்துவத்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் இப்படி ஏளனமாகச் சிரிக்கத்தான் உங்கள் தற்கொலை உதவியிருக்கிறது.

இது மட்டுமில்லை, “பிடித்த படிப்பு கிடைக்காவிட்டால் சாவதே மேல்” என்கிற ஒரு தவறான எடுத்துக்காட்டை நீங்கள் இதன் மூலம் முன்வைத்திருக்கிறீர்கள். மருத்துவம் மட்டுமின்றி இனி கலை, அறிவியல் என எல்லாப் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு எனச் சட்டம் வந்துவிட்ட நிலையில் உங்களுடைய இந்த முடிவு எத்தனை பேரைத் தற்கொலைக்குத் தூண்டி விடுவதாக இருக்கும் என்பதைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா?

இப்படி நீங்களும் செத்து, பிறரையும் சாகத் தூண்டி, பெற்றோரையும் நடைபிணமாக்கி, பிறந்த மண்ணுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திய உங்கள் தற்கொலை முடிவு சரியா? இதனால் யாருக்கு என்ன பயன்?

மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்பதால் உயிரையே அழித்துக் கொள்ளத் துணிந்த நீங்கள் அதே துணிச்சலுடன் இந்தக் கேடு கெட்ட தேர்வுமுறைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருந்தால் அது பயனுள்ளதாய் இருந்திருக்கும்.

“ஒரு பாடத்திட்டத்தில் படித்த நான் வேறு பாடத்திட்டத்தில் அமைந்த தேர்வில் ஏனடா என் திறமையை உறுதிப்படுத்த வேண்டும்?” என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தால் அஃது உங்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

ஒருவேளை இப்படிப் போராடவெல்லாம் உங்களுக்கு மனமில்லாவிட்டாலும் மருத்துவக் கனவைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு துறையில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாகப் பெரிய அளவில் சாதித்து மற்றவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்க முடியும்.

அப்படிப் பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டாலும் சராசரியாக எளிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் கூட மருத்துவக் கனவில் தோல்யுற்றும் துவண்டு போகாமல் வாழ்க்கையை எதிர்கொண்ட தன்னம்பிக்கைச் சின்னமாக மற்றவர்களுக்கு நீங்கள் திகழ்ந்திருக்க இயலும்.

இப்படி எதையுமே செய்யாமல் வெறுமே உயிரைப் போக்கிக் கொண்டதன் மூலம் நீங்கள் நம் எதிரிகளுக்குத்தான் உதவி செய்திருக்கிறீர்கள், தெரியுமா?

நாட்டிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் நிறைந்தது நம் தமிழ்நாடு. நம் அம்மாவும் அப்பாவும் வியர்வை சிந்திச் செலுத்திய வரிப் பணத்தில் உருவான இந்த வளத்தை மற்ற மாநிலத்தவர்களுக்கு அலுங்காமல் அள்ளிக் கொடுப்பதற்குத்தான் மருத்துவ நுழைவுத்தேர்வு எனும் கபட நாடகத்தை அரங்கேற்றுகிறது இந்திய அரசு. இப்பேர்ப்பட்ட பகல் கொள்ளைக்கு எதிராகத் திமிறி எழ வேண்டிய நீங்கள், அதற்கு மாறாக இப்படிச் செத்து மடிந்தால், மாணவர்களே அது யாருக்கு ஆதாயம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

ஆகவே அன்பிற்கினிய என் தமிழ் உடன்பிறப்புகளே! உங்களை நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

எதற்காகவும் உயிரை மட்டும் விட்டுவிடாதீர்கள்!🙏 காரணம் நம் எதிரிகள் விரும்புவதே அதுதான். தமிழர்கள் வாழவே கூடாது என நினைப்பவர்கள்தாம் காலங்காலமாக இந்த மண்ணை ஆண்டு வருகிறார்கள். எனவே நீங்கள் எதிலும் வெல்ல முடியாவிட்டாலும் கவலையில்லை. வெறுமே இவர்கள் கண் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! அதுவே வெற்றிதான்! மாறாக, உங்கள் உயிரை உரமாக்கித் தமிழ்ப் பகைவர்களை வெற்றி அடையச் செய்யாதீர்கள்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! யாராவது இதைத் தவறான கோணத்தில் புரிந்து கொள்வார்களோ என்று அஞ்சினேன். உங்கள் கருத்து அந்த அச்சத்தைத் துடைத்தது! மிகவும் நன்றி!

      நீக்கு
  2. உங்களின் வேண்டுகோளில் நானும் இணைகிறேன்.
    இளைஞர்கள், தமக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வடிவமைத்துக்கொள்ள முயற்சியை மேற்கொள்ளவேண்டும். வாழ எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. மன உறுதியும், சாதிக்க முடியும் என்ற உணர்வும் ஒருவரை மேம்படுத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ஆனால் இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளைக் கனவு காண மட்டும்தான் ஊக்குவிக்கிறார்களே தவிர, தோல்விகள் வாழ்வில் இயல்பானவை என்பதைக் கற்பிப்பதில்லை. இன்றைய பிள்ளைகள் சிறிய ஏமாற்றங்களைக் கூடத் தாங்க முடியாதவர்களாகவே வளர்கிறார்கள். எனவே தற்கொலை என்பது இவர்கள் நினைப்பது போல் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை, மாறாக எதிர்மறை விளைவுகளைத்தாம் ஏற்படுத்தும் என்பதை இப்படிப்பட்டவர்களுக்குப் புரிய வைக்க விரும்பினேன். தங்கள் இசைவான கருத்துக்கு மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்