.

சனி, மே 04, 2013

சாதியம் தமிழ்ப் பண்பாடா? – நடந்து வரும் சாதிக் கலவரங்களையொட்டித் தமிழ் மக்களுக்கு ஒரு கேள்வி!

கோடை வெப்பத்தை விடத் தமிழ்நாட்டை அதிகமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது மரக்காணத்துக் கலவர நெருப்பு! ஒரு நகரத்தில் பற்றிய இந்தச் சாதியத்தீ எங்கே தமிழ்நாடு முழுக்கப் பரவிவிடுமோ எனும் அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

      வன்முறையைத் தூண்டியவை இராமதாசும், காடுவெட்டிக் குருவும் பேசிய பேச்சுக்கள்தான் என்கிறார்கள் பெரும்பான்மையோர், ஊடகத்தினர், நடுநிலையாளர்கள் எல்லாரும்.
“கலவரத்தில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டதே நாங்கள்தான், எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு என்ன பதில் எனக் கேட்கிறார்கள் வன்னியர்கள். ஆக, இரு தரப்பிலும் தவறு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

      எனவே யார் மீது தவறு, மிகுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பன போன்றவற்றை விவாதிப்பது இந்தப் பதிவின் நோக்கமன்று! அதை ஏற்கெனவே பலர் இணையத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

      மாறாக இந்நேரத்தில், தமிழ் மக்கள் அனைவரையும் நோக்கிப் பொதுவான ஒரு கேள்வியை முன்வைப்பது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

சாதியம் தமிழ்ப் பண்பாடா? - இதுதான் அந்தக் கேள்வி!

சாதி என்பது தமிழர்களால் உருவாக்கப்பட்டது கிடையாது என்பது நம் அனைவருக்கும் தெரியும்! அது மட்டுமில்லை, தமிழர்களைப் பிரித்தாள்வதற்காக ஆரியர்களால் புகுத்தப்பட்டதுதான் அது என்பதும் நமக்குத் தெரியும்!

அப்படியிருக்க, ஒருபுறம் “தமிழன்தமிழன் என மார்தட்டிக் கொண்டு, தமிழ் மருத்துவம், தமிழர் அறிவியல், தமிழர் வரலாறு எனவெல்லாம் பெருமை பேசிக்கொண்டு, தமிழீழத்துக்காகப் போராடிக்கொண்டு, மறுபுறம், தமிழர்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் முற்றிலும் எதிரான ஒன்றாக விளங்கும் சாதியத்தையும் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது எந்த வகையான அறிவாளித்தனம் என்பது கொஞ்சம் கூடப் புரியவில்லை!

தி.மு.க, அ.தி.மு.க இரண்டிலும் ஒருவர், ஒரே நேரத்தில் உறுப்பினராக இருக்க முடியுமா?...

ஒரே நேரத்தில் பொதுவுடைமையாளராகவும் அமெரிக்க ஆதரவாளராகவும் ஒருவர் இருக்க முடியுமா?...

இருவேறு மதங்களை ஒரே நேரத்தில் ஒருவரால் பின்பற்ற முடியுமா?...

அப்படியிருக்க, இனவாதியாகவும், சாதிக்காரனாகவும் மட்டும் எப்படி நாம் ஒரே சமயத்தில் இருக்க முடியும்? இன அடையாளமும், சாதி அடையாளமும் எதிரெதிர்த் துருவங்கள்! இனரீதியாக நாம் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சாதி. ஒன்றுகொன்று எதிரான இந்த இரண்டு அடையாளங்களையும் நாம் எப்படி ஒன்றாகச் சுமக்க முடியும்? இது முற்றிலும் முரணானது!! எந்த அளவுக்கு முரணானது என்று கேட்டால், ஈழத் தமிழர்களுக்காகவும் போராடிவிட்டுக் காங்கிரசுக்கும் வாக்களிப்பது போல!!

சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே! மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினால் மட்டும் பண்பாட்டுச் சீரழிவு எனக் கூப்பாடு போடுகிறோமே, ஆங்கிலேயனைப் பின்பற்றினால் மட்டும் பண்பாட்டுச் சீரழிவு, ஆரியர்களால் புகுத்தப்பட்ட சாதியத்தைப் பின்பற்றுவது மட்டும் தமிழ்ப் பண்பாடா?

உலகில் எல்லாச் சமூகத்து மக்களுக்குள்ளும் பிரிவினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவையெல்லாம் அவர்களுக்காக அவர்களே உருவாக்கிக் கொண்டவை. ஆனால் உலகிலேயே நாம் மட்டும்தான், நம்மைப் பிரித்தாள்வதற்காக இன்னோர் இனத்தவர் நம்மிடையே புகுத்திய ஒரு பிரிவினை முறையைத் தெரிந்தே நமது வாழ்வியல் முறையாகவும் அடிப்படைச் சமூகக் கட்டமைப்பாகவும் இன்னும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்! இதை விடப் பித்துக்குளித்தனம் வேறேதும் இருக்க முடியுமா என்பது தெரியவில்லை!

அது மட்டுமில்லை, உலகின் மற்ற சமூகத்து மக்களெல்லாரும், தங்களுக்குள் பல பிரிவினைகள் இருந்தாலும் வெளியிலிருந்து தங்களுக்கு ஓர் ஆபத்து என வந்தால் உடனே தங்களுக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து ஒன்றிணைந்து விடுவார்கள். உலக வரலாற்றின் பல பக்கங்களில் இதைப் பார்க்கலாம். ஆனால் நாம்?...

உலகமே சேர்ந்து நம் இனத்தை ஒழித்துக்கட்டி முழுதாக நான்கு ஆண்டுகள் முடியவில்லை இன்னும். அதற்குள் சாதியின் பெயரால் எத்தனை மோதல்கள், சண்டைகள், கலவரங்கள் நிகழ்த்தி விட்டோம்!!

தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அந்தப் படுகொலை உலகின் முதல் இனப்படுகொலையன்று! மனிதன் எனும் இந்த விந்தை உயிரினம் தோன்றிய காலந்தொட்டு இந்த உலகம் இனப்படுகொலைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இதுவரை நடந்த மற்ற இனப்படுகொலைகளுக்கும் தமிழினப் படுகொலைக்கும் பெரிய ஒரு வேறுபாடு இருக்கிறது!... மற்ற இனப்படுகொலைகள், ஓர் இனத்தின் மீது மற்ற ‘ஓர் இனத்தாலோ, ‘சில இனங்களாலோ தொடுக்கப்பட்ட தாக்குதல்களின் விளைவுகள். ஆனால், தமிழினத்தின் மீதான இனப்படுகொலைத் தாக்குதல் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து நடத்திய அட்டூழியம்! இந்த வேறுபாட்டை நாம் என்றைக்காவது உணர்ந்திருக்கிறோமா?

நினைத்துப் பாருங்கள்! இந்தியாவும் சீனமும் என்றைக்காவது ஒத்துப் போயிருக்கின்றனவா?...

அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளும், ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகளும் என்றைக்காவது ஒரு பிரச்சினையில் ஒரே முடிவை எடுத்திருக்கின்றனவா?...

இசுரேலும் ஈரானும் என்றைக்காவது ஒரே அணியில் நின்றிருக்கின்றனவா?...

பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்குமான வரலாற்றுப் பகைமை நாம் அறியாததா?...

ஆனால் இப்படி, ஒன்றுக்கொன்று ஒப்புக்காகக் கூட ஒத்துப்  போகாத இந்த நாடுகள் அனைத்தும் தமிழினத்தை அழிப்பதற்காக மட்டும் ஒரே அணியில் திரண்டன! உலகின் எத்தனையோ நாடுகளில் தனிநாடு போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட. அவற்றையெல்லாம் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தாங்களாகவோ தங்கள் நட்பு நாடுகளின் துணையுடனோதான் சமாளிக்கின்றன. ஆனால், தமிழர்கள் தனிநாடு கேட்டால் மட்டும் இப்படி இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வங்கதேசம் என ஒன்பது நாடுகள் சேர்ந்து வந்து தாக்குகின்றன! அதைக் கியூபா, வெனிசுலா, இசுரேல், ஈரான் என ஏராளமான நாடுகள் ஆதரிக்கின்றன! தமிழர்கள் தனிநாடு அடைந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் உலகமே விழிப்பாக இருக்கிறது! எனில், தமிழர்களின் உண்மையான எதிரிகள் யார்? சிங்களர்களா?... அமெரிக்கர்களா?... சீனர்களா?... இல்லை, மொத்த உலகநாடுகளும்தான்! நம்ப முடியாத அளவுக்குப் பிரம்மாண்டமாக இருந்தாலும் இது உண்மை!

ஆனால், இப்படி ஒட்டுமொத்த உலகமும் நமக்கு எதிராக இருக்கும் நிலையிலும், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நாம் இன்னும் நமக்குள் சாதிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்! இதை விட இழிவான ஒரு செயல் இருக்க முடியுமா? இதை விடக் கீழ்த்தரமான ஒரு நிலைப்பாடு இருக்க முடியுமா? இதைக் காட்டிலும் ஒரு முட்டாள்தனத்தை நாம் நம் அடுத்த தலைமுறைக்குக் கற்பித்துவிட முடியுமா?

இதே ஈழப் பிரச்சினைக்காக, பற்பல ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்களும், ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர்களும், பாடுபட்டதாகக் காட்டிக் கொண்டவர்களும் செய்ய இயலாத ஒரு மாபெரும் புரட்சியைச் சில நாட்களுக்கு முன்புதான் நம் கண்ணெதிரே நடத்திக் காட்டினார்கள் நம் மாணவச் செல்வங்கள்! இந்தியா, இலங்கை, அமெரிக்கா எனப் பல நாடுகளையும் எதிர்த்து அவர்கள் நடாத்திய அந்த அறப்போர் உண்மையிலேயே எதிர்பாராத அளவில், எதிர்பாராத மட்டங்களில் பல கிடுகிடுப்புகளை ஏற்படுத்தியது. “இதோ தமிழீழம் மலர்ந்து விடும்! அப்பேர்ப்பட்ட விடுதலைப்புலிப் படையால் சாதிக்க முடியாததை இந்த மாணவப்புலிப் படை சாதித்து விடும்! எனும் நம்பிக்கைப் பொறி அப்பொழுது பலர் உள்ளங்களிலும் ஒருமுறையேனும் தெறித்தது உண்மை! “தமிழ்நாட்டில் எழுச்சி ஏற்பட்டுவிட்டது! தமிழர்களுக்கு உண்மை புரிந்துவிட்டது! இனி இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனக் கடந்த பல ஆண்டுகளாக ஈழப் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வை விதைத்து வந்த பல நல்லுள்ளங்கள் ஆறுதல் பெற்றன!

ஆனால் அந்த நம்பிக்கைகளையும், ஆறுதல்களையும் சிதறடிக்கும் வகையில், ஓர் ஒழுங்குக்கு வந்து கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பார்வையை மழுங்கடிக்கும் விதத்தில், மீண்டும் அனைத்தையும் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது இந்த ‘மரக்காணக் கலவரம்!

நாம் இதே நிலைப்பாட்டில் தொடர்ந்தால், வருங்காலத் தலைமுறை தங்களைத் தமிழர் எனச் சொல்லிக்கொள்ளவே கண்டிப்பாக வெட்கப்படும்! மீறிச் சொல்லிக் கொண்டால், “என்ன!... இத்தனை நாடுகள் ஒன்று சேர்ந்து உங்கள் இனத்தை அழித்தும் உங்கள் முன்னோர்கள் ஒற்றுமைப்படாமல் தங்களுக்குள் சண்டயிட்டுக் கொண்டிருந்தார்களா! எனக் காறித் துப்புவார்கள் மற்றவர்கள்.

எனவே நண்பர்களே! இனியாவது சாதிகளைத் தூக்கி எறிவோம்! தமிழராக ஒருங்கிணைவோம்! நம்மை ஆள்வதற்காக மற்றவர்கள் நமக்குள் கற்பித்த வேறுபாடுகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் மும்முரத்தில் மொத்த இனத்தையும் பலி கொடுக்கும் மூடத்தனத்துக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைப்போம்! இனப் பிரிவினையின் அடையாளத்தையும், இனத்தின் அடையாளத்தையும் ஒருசேர அணிந்து கொண்டு திரியும் பித்துக்குளித்தனத்துக்கு இனிமேலாவது முழுக்கு போடுவோம்!

இல்லாவிட்டால், இப்பொழுது சீனன் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறான். ஈழத்தில் குடியிருக்கவே தொடங்கிவிட்டான். இன்னும் சில ஆண்டுகளில் இங்கேயும் வாழ வந்துவிடுவான். அப்பொழுது ‘சிங்யா மிங்யா... யோவா நாவா... என ஏதேனும் ஒரு பெயரில் தன்னையும் ஒரு சாதியாக அவன் இங்கே அறிவித்துக் கொள்வான். பின்னர், தான்தான் உயர்ச்சாதி இங்குள்ள மற்ற மேல் சாதியினர் அனைவரும் தனக்கு அடுத்தபடிதான். மற்ற சாதியினர் அவர்களுக்கும் கீழே என்பான். இப்படி ஒரு சாதி முறையில்தான் இந்த உலகத்தையே சீனக் கடவுள் படைத்ததாகவும் சொல்வான்.

நாம் அதையும் நம்பி, அப்பொழுதும் நமக்குக் கீழ் உள்ள சாதியில் பிறந்த தமிழர்களைக் கீழ்த்தரமாகவும், நமக்கு மேல் உள்ள சாதியில் பிறந்த தமிழர்களை வன்மத்தோடும் அணுகிக் கொண்டிருப்போம்!
*********
(நான் கீற்று இதழில் எழுதிய கட்டுரை).


 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. இந்த பதிவை என்னுடைய வலை தளத்திலும் பதிவிட விரும்புகின்றேன் sornabharath.blogspot.in email:bkcjem@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாக! ஆனால், கனிவு கூர்ந்து இந்த வலைப்பக்கத்தின் முகவரியைக் குறிப்பிடுங்கள் நண்பரே!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்