.

செவ்வாய், செப்டம்பர் 17, 2019

பெரியார் மீண்டும் பிறக்காமலிருக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் சிறப்புப் பதிவு

What should you do if you don't want Periyar to born again?
லகத்தைப் பொறுத்த வரை பெரியார் என்பவர் மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர், பகுத்தறிவாளர், பெண்ணியவாதி, சீர்திருத்தவாதி எனப் பல முகங்கள் கொண்டவர். ஆனால் யாருக்காக இறுதி மூச்சு வரை அவர் போராடினாரோ அந்தத் தமிழ் மக்களிடம் பெரியார் யார் எனக் கேட்டால் உடனே வரும் மறுமொழி “அவர் இறைமறுப்பாளர்” என்பதுதான்.

பெரியார் பற்றிய நம் மக்களின் புரிதல் இவ்வளவுதான்! அதனால்தான் அவரது இறை மறுப்பு நிலைப்பாட்டையே ஒரு பெரிய குற்றச்சாட்டாக இன்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பலர்.

உண்மையில் இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. அப்படிப் பார்த்தால் உலகின் போக்கையே மாற்றிய மாபெரும் அறிஞர்கள், அறிவியலாளர்கள், தலைவர்கள் பலரும் இறை மறுப்பாளர்களே. அதற்காக அவர்கள் எல்லோரையும் நாம் வெறுத்து விட்டோமா?

உலகப் புகழ் பெற்ற போராளியான சே குவேரா இறைமறுப்பாளர்தாம். அதற்காக அவர் படம் பொறித்த கொசுவச்சட்டையை (T-Shirt) நாம் அணிவதில்லையா?

உளவியல் பகுப்பாய்வின் தந்தை (Father of psychoanalysis) எனப் போற்றப்படும் சிகமண்ட்டு பிராய்டு (Sigmund Freud) கடவுள் மறுப்பாளர்தாம். அதற்காக உளவியல் படிக்கும் இறை நம்பிக்கையுள்ள மாணவர்கள் அவருடைய கோட்பாடுகளை, சிந்தனைகளைப் படிக்காமல் புறக்கணித்து விடுகிறார்களா?

கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான பியரி கியூரி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்தாம். அதற்காக நாம் புற்றுநோய் வந்தால் கதிரியக்கப் பண்டுதம் (radioactivity treatment) வேண்டா என்கிறோமா?

“இரந்துதான் (பிச்சை எடுத்துத்தான்) உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில்தான் கடவுள் சிலரை இவ்வுலகில் படைத்திருக்கிறான் என்றால் அப்படிப் படைத்த கடவுளும் அவர்களைப் போலவே இரந்து திரிந்து அழியட்டும்” என்று கடவுளுக்கே தெறுமொழி (சாபம்) இட்டவர் வள்ளுவர். அதற்காகத் திருக்குறளை நாம் தூக்கி எறிந்து விட்டோமா?

உண்மையில் பெரியார் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த தொண்டுகளின் பட்டியல் மிகப் பெரியது! தீண்டாமைக்கு எதிராகப் போராடினார், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார், தேவதாசி முறை ஒழிப்புக்குத் துணை நின்றார், தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தினார், தமிழர்களுக்கென ஒரு தனி அரசியல் பெருவழியை வகுத்தளித்தார், எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுள் நம்பிக்கையை எதிர்த்த பெரியார்தாம் கோடிக்கணக்கான மக்கள் கோயிலுக்குள் சென்று தாங்கள் நம்பும் கடவுளை வழிபடவும் உரிமை பெற்றுத் தந்தார்!

இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். பொறுப்பான அரசியல் தலைவராக அவர் தன் துறைக்கு அளித்த பங்களிப்புகள் இவ்வளவு இருக்க, எப்பொழுது பார்த்தாலும் அவரை இறைமறுப்பாளர் எனும் ஒற்றைப் புள்ளிக்குள்ளேயே சிறை வைக்கப் பார்க்கிறோமே ஏன்?

சே குவேரா, பிராய்டு, கியூரி, திருவள்ளுவர் போன்றோரையெல்லாம் கடவுள் பற்றிய அவர்களின் நிலைப்பாடு குறித்துப் பொருட்படுத்தாமல் துறை சார்ந்த அவர்களின் பங்களிப்பை மட்டும் கருத்தில் கொண்டு கொண்டாடும் நாம் பெரியாரை மட்டும் மீண்டும் மீண்டும் கடவுள் மறுப்பாளர் என ஒதுக்கி வைப்பது ஏன்?

Periyar's Pilliyar Doll Demolishing Riot

நீங்கள் கேட்கலாம், “மற்ற இறைமறுப்பாளர்களைப் போலப் பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதோடு மட்டுமா நிறுத்தினார்? பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமரைச் செருப்பால் அடிப்பது எனக் கடவுள் உருவங்களை இழிவுபடுத்தினாரே! அப்படிப்பட்டவரை மற்ற கடவுள் மறுப்பாளர்களை ஏற்பது போல் எப்படி எளிதில் ஏற்க முடியும்?” என்று.

ஆம்! பெரியார் அப்படியெல்லாம் செய்தார்தான்; மறுக்கவில்லை. ஆனால் ஏன் செய்தார்? கடவுளை இழிவுபடுத்தவா?

நாம் ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமானால் முதலில் அப்படி ஒருவர் இருக்க வேண்டும் அல்லது இருப்பதாக நாம் நம்பவாவது வேண்டும். ஆனால் பெரியாரோ கடவுளே இல்லை எனும் கொள்கை கொண்டவர். இல்லாத ஒருவரை (அல்லது இல்லாதவர் என அவரால் நம்பப்பட்டவரை) அவரால் எப்படி இழிவுபடுத்த முடியும்? இது கேட்கவே மடத்தனமாக இல்லையா?

சிலர், இந்துக்களை, அதிலும் பார்ப்பனர்களைப் புண்படுத்தத்தான் பெரியார் அப்படியெல்லாம் செய்தார் எனக் குற்றம் சுமத்துகிறார்கள்.

எந்தத் தமிழ் மக்களுக்காகப் பெரியார் காலமெல்லாம் பேச்சு, எழுத்து, போராட்டம் என எல்லாவற்றையும் நடத்தி வந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் அன்றும் சரி, இன்றும் சரி தங்களை இந்துக்கள் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களைப் புண்படுத்திப் பெரியாருக்கு என்ன பலன்? அப்படிச் செய்தால் அவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தானே வரும்? அப்புறம் அவர் சொல்வதையெல்லாம் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்?

தவிர, பார்ப்பனர்களைப் புண்படுத்த வேண்டுமானால் அவர்களை மட்டும் நினைவூட்டும் குறியீடுகள் எத்தனையோ இருக்கின்றன; பூணூல், கீதை, மனுநீதி, வேள்விக் குண்டம் எனவெல்லாம். அவற்றில் ஒன்றைத்தான் பெரியார் தேர்ந்தெடுத்திருப்பாரே ஒழிய, தமிழர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் உருவங்கள் மீதா கை வைப்பார்?

ஆக, இவை அனைத்தும் தவறு! உண்மையான காரணம் என்ன தெரியுமா?

பெரியார் கடவுள் இல்லை என்றார்; மக்கள் நம்பவில்லை. கடவுள் நம்பிக்கையும் சமயமும், அவை நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள ஏற்றத்தாழ்வுகளும்தாம் நம் இன்னல்கள் அனைத்துக்கும் காரணம் என்று எடுத்துக் கூறினார். ஆனாலும், கடவுளைப் புறக்கணிக்க மக்கள் ஆயத்தமாக இல்லை; அஞ்சினார்கள். கடவுள் இல்லை என்பதற்குச் சான்றாக அறிவியலாளர்களின் அறிஞர்களின் கூற்றுக்களை மக்களிடையே விளக்கினார். இருந்தும் கடவுள் மீதான அச்சம் மக்களுக்கு விலகவில்லை. எனவேதான் கடவுள் உருவங்களை உடைப்பது, அடிப்பது என்று செயலிலேயே செய்து காட்டினார். இப்படிக் கடவுளை நேரடியாகவே தாக்கியும் தனக்கு எந்தத் துன்பமும் நேரவில்லை என்பதைப் பார்த்தாலாவது கடவுள் சிலைக்கு எந்த ஆற்றலும் இல்லை; அது நம்மை ஒன்றும் செய்யாது என்பதை மக்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கையில் பெரியார் நடத்தியவைதாம் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்.

ஒரு கோட்பாடு தவறு என எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரியாத மக்களுக்கு அதைப் புரிய வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செய்முறை விளக்கங்களே பெரியாரின் கடவுள் உருவத் தாக்குதல்கள்.

இவ்வளவுக்கும் பிறகும் “ஆயிரம் சொன்னாலும், பெரியார் போன்ற கடவுள் மறுப்பாளர் ஒருவரை ஏற்க முடியாது!” என்பவரா நீங்கள்? சரி, அது உங்கள் விருப்பம்! ஆனால் உலகமே போற்றும் மாமனிதரை, தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்வையே தத்தம் செய்த ஈகையாளரைக் கடவுள் நம்பிக்கை அற்றவர் எனும் ஒரு காரணத்துக்காக இவ்வளவு வெறுக்கிறீர்களே! அவர் அப்படி ஆனதற்குக் காரணம் யார் என்பது தெரிந்தால் எவ்வளவு வெறுப்பீர்கள்! யார் அந்தக் காரணர், தெரியுமா?... சொல்லவா?

வேறு யாரும் இல்லை; நீங்களும் நானும்தாம்! உங்கள் பாட்டன், முப்பாட்டனும் என் பாட்டன் முப்பாட்டனும்தாம்!

இது என்ன புதுக் கதை என்கிறீர்களா? கதையில்லை உண்மைதான்.

பெரியார் ஒன்றும் எடுத்த எடுப்பிலேயே கடவுள் நம்பிக்கைக்கு எதிராக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பி விடவில்லை. தன் கண்ணெதிரே நடந்த சாதிய ஏற்றத்தாழ்வுகள், பாலினப் பாகுபாடுகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராகத்தான் முதலில் அவர் செயல்படத் தொடங்கினார். பின்னர் இவற்றையெல்லாம் வலியுறுத்தும் வேதங்கள், தொன்மங்கள் (புராணங்கள்), பட்டாங்குகள் (சாத்திரங்கள்) போன்றவற்றின் மீதும் அவர் பார்வை திரும்பியது. முடிவில் இவற்றையெல்லாம் படைத்தவராக யார் குறிப்பிடப்படுகிறாரோ, யாருடைய பெயரால் இவையெல்லாம் நடக்கின்றனவோ அந்தக் கடவுளின் மீது, அதாவது கடவுள் கோட்பாட்டின் மீது அவருடைய அறச்சீற்றம் நிலைகொண்டது.

ஆக, பெரியாரின் இறைமறுப்பு என்பது சமுகக்கேடுகளைக் கண்டு கொதித்து எழும் அடிப்படை மனிதப்பண்பின் நீட்சிதான். அந்தச் சமுகக்கேடுகள் அவர் காலத்துக்கு முன்பே ஒழிக்கப்பட்டிருந்தால் அவர் கடவுள் மறுப்பாளராக மாற வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. பெரியார் பிறப்பதற்குப் பல காலம் முன்பே இத்தகைய சமுகக்கேடுகளுக்கு எதிராகவெல்லாம் எத்தனையோ பேர் எவ்வளவோ பேசினார்கள், எழுதினார்கள். ஆனால் நாம் திருந்தவில்லை.

“சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ”


“சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே”

“பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ”
 

- என்றெல்லாம் பெரியார் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னரே நம்மைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி கேட்டார்கள் சிவவாக்கியர் முதலான சித்தர்கள் பலர். ஆனால் அவற்றையெல்லாம் நாம் மதிக்கவில்லை.

சாதிப் பாகுபாடு பார்ப்பது தவறு என்று தனக்கு உணர்த்தியதற்காகப் பஞ்சமர் எனும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த வழிப்போக்கரை சிவனாகவே எண்ணிக் காலில் விழுந்து கும்பிட்டார் ஆதி சங்கரர்.

இந்துச் சமயத்தின் எல்லா வழிமுறைகளும் ஏதோ ஒரு வகையில் சாதியத்தை வலியுறுத்துவதாகத்தான் இருக்கின்றன என்பதால் அவை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டுச் செவ்விருமைக் கோட்பாடு (விசிஷ்டாத்துவைதம்) எனும் புதிய கொள்கையையே வடிவமைத்தார் இராமானுசர். பெரியாருக்கு எண்ணூறு ஆண்டுகள் முன்பே அனைத்து சாதியினருக்கும் கோயிலில் நுழையவும் வழிபாடு நடத்தவும் உரிமையும் பெற்றுத் தந்தார்.
Sri Ramanujar
இப்படியெல்லாம் அருளாளர்களும் இறையியலாளர்களும் கூறியபொழுதே நாம் கேட்டிருந்தால் பெரியார் பிறக்கும் முன்பே இந்தச் சமுகத்தின் சாதி, தீண்டாமை, வருணாசிரமம் முதலான இழிவுகள் எல்லாம் ஒழிந்து போயிருக்கும். சராசரி மனிதரான ஈ.வெ.ரா., இறைமறுப்பு போன்ற புரட்சிச் சிந்தனைகள் கொண்ட பெரியாராக மாற வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.

இறை நம்பிக்கையாளர்கள் கடவுளின் பெயரால் சொன்னபொழுதே நாம் திருந்தியிருந்தால் பின்னாளில் பெரியார் வந்து நம் கடவுள்களைச் செருப்பாலடித்துச் சொல்லும் அளவுக்கு நிலைமை போயிருக்காது.

இப்பொழுது சொல்லுங்கள்! தவறு யார் மீது? திருத்த வந்த பெரியார் மீதா? திருந்தாத பிறவிகளான நம் மீதா?

எனவே இனியாவது பெரியாரைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் நாம் திருந்துவோம்! இல்லாவிட்டால் நாம் திருந்தும் வரை பெரியார்கள் பிறந்து கொண்டேதான் இருப்பார்கள்!
❀ ❀ ❀ ❀ ❀
{இன்று (௧௭-௦௯-௨௦௧௯) பெரியார் பிறந்தநாளுக்காக நான் தினச்செய்தி நாளிதழில் எழுதியது}.

படங்கள்: விகடன் இணையக்காட்சி, கருப்பு.

தொடர்புடைய பதிவுகள்:
தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! 
கொள்கையா தமிழர் நலனா, எது முக்கியம்? - சீமானிடம் சில கேள்விகள்!
பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

  1. சிறப்பாக தொகுத்து உள்ளீர்கள், ஐயனின் கோபத்தையும் சேர்த்து...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! திருக்குறளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான குறள் அதுதான்! உங்கள் பாராட்டுக் கண்டு மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  2. அருமையான தொகுப்பு. பின்புலத்துடன் விலக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி! பெயருடன் தெரிவித்திருந்தீர்களானால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எனினும் நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்