.

வியாழன், மே 02, 2019

ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!

6th Birthday of your AgaSivappuThamizh
லகத் தமிழ் உள்ளங்களே, ‘அகச் சிவப்புத் தமிழின்’ ஆறாவது பிறந்தநாள் பதிவுக்கு உங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன்!

ஆம், நண்பர்களே! உங்கள் அன்புக்குகந்த இந்த வலைமனை ஏப்ரல் 23, 2019 அன்று ஆறு ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் நுழைந்து விட்டது. அதையொட்டி ஆறாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டில் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுக்குப் பந்தி வைக்க வந்திருக்கிறேன். முதலாவதாகப் புள்ளிவிவரங்கள். 



பதிவுகள்
கருத்துக்கள்
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 -
ஏப்ரல் 2019
13
120
38949+
-183
மொத்தம்
125
1525
3,09,565+
2009
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.
▽ எண்ணிக்கையில் இறக்கம்.


நம் நேச(ர்) நாடுகள் :-P 

 
உள்ளீடு
பக்கக்காட்சிகள்
இந்தியா
132003
அமெரிக்கா
81228
இரசியா
14411
பிரான்சு
8641
ஐக்கிய அரபு நாடுகள்
5734
ஆறாமாண்டில் அதிகம் படிக்கப்பட்ட ஐந்து பதிவுகள்

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (12016 பார்வைகள்)

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (11361 பார்வைகள்)

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள் (10856 பார்வைகள்)

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? (9739 பார்வைகள்)

தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! (7460 பார்வைகள்)

வழக்கமாக, அதிகம் பார்வையிடப்பட்ட முதல் ஐந்து பதிவுகளைப் பட்டியலிடும்பொழுது அந்தப் பதிவுகள் எழுதப்பட்ட நேரம், அவை கடந்து வந்த வழி, ஈட்டிய வெற்றி குறித்தெல்லாம் எழுதுவேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் எழுதவில்லை. காரணம், இவை அனைத்துமே பழைய பதிவுகள். போன ஆண்டு நான் எழுதிய எந்தப் பதிவும் பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை sad

போன ஆண்டு நான் எழுதிய பதிவுகளே மிகவும் குறைவுதான். அதுவும் மிகவும் இடைவெளி விட்டு. இதனால் முந்தைய ஆண்டு (2017-18) ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்ற நம் தளம் போன ஆண்டு (2017-18) அதில் பாதியைக் கூட எட்டவில்லை.

இருப்பினும் வலைப்பூவின் தொடக்க ஆண்டுகளில் 20, 30 எனப் பதிவுகள் எழுதிப் பெற்ற பார்வைகளைக் காட்டிலும் இது கூடுதல்தான். அன்று அத்தனை பதிவுகள் வெளியிட்டு முப்பதாயிரம், முப்பத்தையாயிரம் எனக் கிடைத்த பார்வைகள் இன்று வெறும் 13 பதிவுகளை வெளியிட்டும் சற்றேறக்குறைய அதே அளவிலான பார்வைகளை ஈட்டுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு இன்று இந்தத் தளம் மக்களிடையே போய்ச் சேர்ந்திருப்பதுதான் என நினைக்கிறேன். புதிதாக ஏதும் எழுதாவிட்டாலும் முன்பு எழுதிய பதிவுகள் அடைந்த புகழ் தொடர்ந்து இந்தத் தளத்துக்கு மக்களை அழைத்து வந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் பார்க்கையில் நானும் ஏதோ பயனுள்ள வகையில் எழுதித்தான் இருக்கிறேன் என எண்ணி மகிழ்கிறேன்.

இறங்குமுகப் பயணத்திலும் சில மறக்க முடியா நினைவுகள்

கடந்த ஆண்டுப் பதிவுலகப் பயணம் இப்படி இறங்குமுகமாக இருந்தாலும், சில மறக்க முடியா நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை. வெற்றி என்பது வெறும் பார்வை எண்ணிக்கையில் மட்டும் இல்லை அன்றோ? அதைத் தாண்டி வேறு சில வெற்றிகளை இந்தாண்டு சந்தித்தேன். கூடவே, வழக்கம் போல் சில கசப்பான நிகழ்வுகளும் உண்டு. உண்மையில், இவற்றைப் பதிவு செய்யவே இந்தப் பிறந்தநாள் பதிவு.

கடந்த ஆண்டு நெஞ்சை நொறுங்கச் செய்த முதல் நிகழ்வு ஸ்டெர்லைட் படுகொலை. அந்தப் படுகொலையை விடப் பெருங்கொடுமை, அதைத் தட்டிக் கேட்டவர்களே கூட “மக்கள் வரம்பு மீறவில்லை. எனவே சுட்டது தவறு” என்பதாகவே திரும்பத் திரும்ப வாதாடியதுதான். இது, “மக்கள் வரம்பு மீறியிருந்தால் சுட்டது சரியே” என மறைமுகமாகச் சொல்வது போல் இருந்தது. எனவே இது தவறு; மக்கள் வன்முறையில் இறங்கினால் கூட அதை இரப்பர்க் குண்டு, கண்ணீர்ப் புகை போன்றவற்றின் மூலம் அடக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய, சுட்டுக் கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி ‘ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!’ என்ற பதிவை எழுதினேன்.

இதைத் துவிட்டரில் படித்துவிட்டு, நான் பெரிதும் வியக்கும் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) அவர்கள் தன் நண்பர்களுக்கும் பகிர, அதுவரை துவிட்டரில் என்னுடைய வேறெந்த வலைப்பதிவும் பெறாத அளவுக்கு 55 விருப்பக்குறிகளும் 69 மறுகீச்சுகளும் பெற்றுப் பரவலான கவனத்தை ஈர்த்தது இப்பதிவு.

இத்தோடன்றி, பதிவுலகத் தோழர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்கள் ‘மக்களைக் கொலை செய்ய அரசுக்கு உரிமை இருக்கிறதா?’ எனும் தலைப்பில் இதைக் காணொலியாக வெளியிட அஃது ஏறக்குறைய 2000 பார்வைகளைப் பெற்றது. 

 
ஆனால் இவற்றையெல்லாம் விட, இனியாவது அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் மக்கள் அதை எதிர்த்துச் சரியான கேள்விகளை எழுப்ப இப்பதிவு ஒரு சிறு தூண்டுதலாக அமைந்தால், அப்படி ஒரு மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் அதுவே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவை ஒட்டி சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசியவாதிகள் – திராவிடவாதிகள் சொற்போர் மீண்டும் உச்சம் அடைந்தது. தமிழினப் படுகொலையின்பொழுது கருணாநிதி நடந்து கொண்ட விதத்தை நினைவூட்டித் தமிழ்த் தேசியவாதிகள் மீண்டும் திட்ட, அதை எதிர்த்துத் திராவிடவாதிகள் பச்சையான புளுகுகளை அவிழ்த்து விட மிகவும் கீழ்த்தரமாகப் போனது.

எனவே கருணாநிதி மீதான இந்தக் குற்றச்சாட்டை முறையாக எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்தால் இந்தப் பழி அவரை விட்டு நீங்கும் என்பதைச் சொல்லும் விதமாய்க் ‘கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?’ எனும் கட்டுரையை எழுதினேன். உண்மையிலேயே உளமார்ந்த அக்கறையோடு எழுதிய இந்தப் பதிவைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் துவிட்டரில் பெரும்படையாய் வந்து சண்டை பிடித்தார்கள் திராவிடவாதிகள். எவ்வளவு பேசினாலும் என்னை மடக்க முடியவில்லை என்றானதும் தங்கள் மனதில் இருந்த சாக்கடையையும் என் மேலே வாரி வீசி விட்டுப் போனார்கள்.

பச்சைப் பொய்களையே எதிர்வாதங்களாய் முன்வைத்த இவர்களின் பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், யாருக்காக இதை எழுதினோமோ அவர்களே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, அந்த அளவுக்குத் தவறான கோணத்தில் எழுதி விட்டோமோ என்று வருந்தினேன். அந்த நேரத்தில்தான் வந்தது அந்த மடல்! தலைசிறந்த பெரியாரியவாதியும் முதிர்ந்த பகுத்தறிவாளருமான ‘கீற்று’ இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு “இதை ஏன் கீற்றிற்கு அனுப்பவில்லை, தோழர்?” என்று உரிமையோடு கேட்டிருந்தார்.

Keetru Nandhan mail for ask that why I did not send the "Solution for the treacherous accusation against Karunanidhi" article to Keetru

அவருடைய அந்த மடல் இந்தக் கட்டுரையால் எனக்கு ஏற்பட்ட அத்தனை காயங்களையும் ஒரு நொடியில் போக்கியது. திராவிட இயக்கச் சிந்தனைகளில் வெகுவாக ஊறியவர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பற்றையெல்லாம் நன்கறிந்தவர் நந்தன் அவர்கள். அவரே இந்தக் கட்டுரை தன் இதழில் வெளிவந்திருக்க வேண்டும் என விரும்பிக் கேட்கிறார் என்றால் அதை விட ஒரு நற்சான்றிதழ் இதற்குத் தேவையில்லை. இது தமிழ்த் தேசியச் சார்புத்தன்மை காரணமாகவோ கருணாநிதி மீதான காழ்ப்புணர்வு காரணமாகவோ எழுதப்பட்டது இல்லை; ஈழ இரண்டகக் (துரோகக்) குற்றச்சாட்டை முறையாகத் தி.மு.க., எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டதுதான் என்பதற்கு நந்தன் அவர்களின் அந்த ஒரு வரி மடலே போதுமானது.

இதற்கு அப்புறம் செப்டம்பர், அக்டோபர் மாதமெல்லாம் அலுவல்கள் மூச்சு முட்ட இருந்ததால் புதிதாக ஏதும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஏற்கெனவே பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று இடம்பெற்று வலைப்பூவில் அதுவரை வெளியிடாமல் வைத்திருந்த ‘தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற கட்டுரையை மேலும் செழுமையூட்டி ‘உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.

இதன் முதல் பாகத்தைப் படித்து விட்டுத் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான இராம.கி., எனும் இராமசாமி கிருஷ்ணன் ஐயா பாராட்டியிருந்தது எனக்குப் புளகாங்கிதத்தை (goose bumps) ஏற்படுத்தியது. தமிழில் அரிதினும் அரிதான வரலாற்று ஆராய்ச்சிகளையும் கற்பனைக்கும் எட்டாத சொல்லாய்வுகளையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற ‘வளவு’ இராம.கி., அவர்கள் நான் கொண்டாடும் அறிஞர்களில் ஒருவர். அவரே இந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் அதை விடச் சிலிர்ப்பான ஒரு பாராட்டும் இதற்குக் கிடைத்தது. இதோ நீங்களே அதைப் பாருங்கள் கீழே! 

Unforgettable feedback received for "Place of the mother tongue in Tamil lifestyle (1/2)" article

தமிழ்ப் பயன்பாடு குறித்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டுத் தன் தமிழ்ப் பயன்பாட்டுத் திறனை ஒருவர் சோதித்துப் பார்த்துக் கொள்கிறார் என்றால் அதை விட எழுதியவனுக்கு நிறைவு தருவது வேறென்ன இருக்க முடியும்? தங்கள் எழுத்து மக்களின் மனதில், வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எழுதும் ஒவ்வொருவரின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு! அதையே இக்கட்டுரை சாதித்து விட்டது எனும்பொழுது இதை விடப் பெரிய வெற்றி வேறு எதுவுமே இல்லை. இதுவரை நான் எழுதியவற்றிலேயே மாபெரும் வெற்றி பெற்ற படைப்பு இதுதான் என்பேன்.

இதன் பின், கடந்த பிப்ரவரி மாதம் எழுதிய ‘தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்! - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்!’ பதிவை ‘2019 தி.மு.க., தேர்தல் அறிக்கைக் குழுவினர்’ படித்து விட்டுத் தனிப்பட மின்மடல் அனுப்பியிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

“2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்களும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்” என்று ஸ்டாலின் அறிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே முடிவெடுத்து விட்டேன், நானும் அனுப்புவதாக. ஈழ இனப்படுகொலையில் தி.மு.க., செய்த இரண்டகத்தால் அவர்கள் மீது மாறா வெறுப்புக் கொண்ட கோடிக்கணக்கான தமிழர்களில் ஒருவனான நான் திடீரென இப்படி ஒரு முடிவுக்கு வரக் காரணம் உண்டு. இந்த நேரத்தில் யாரும் தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பைத் தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தாவிட்டால் நாளைக்கே இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் “எங்கள் தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் பொறுப்பையே நாங்கள் மக்களிடம் ஒப்படைத்தும் யாருமே தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை” எனக் கூசாமல் சொல்வார்கள் என்பதால்தான்.

அதனால்தான் பரிந்துரைகளை ஸ்டாலின் சொன்னபடி மின்னஞ்சலில் அனுப்பியது மட்டுமின்றித் துவிட்டரிலும் குறிப்பிட்ட சிட்டையின் (tag) கீழ் பொதுப் பார்வைக்கு வைத்தேன். அதுவும் போதாதென்று என்றும் இது நிலையாக மக்கள் பார்வைக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே வலைமனையிலும் பதிந்தேன்.

ஆனால் எதிர்பாராத வகையில், மின்மடலைப் படித்ததோடு மட்டும் நில்லாமல் வலைமனைக்கும் வந்து பார்வையிட்ட தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக் குழுவினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தனிப்பட்ட முறையில் விரிவாக மறுமடல் எழுதியது உண்மையாகவே மிகவும் வியப்பை அளித்தது. யார் எது சொன்னாலும் மதித்துச் செவிமடுக்கும் கட்சி எனத் தி.மு.க., பற்றி மற்றவர்கள் சொல்வது வெற்றுப் புகழ்ச்சியில்லை போலும் என்று தோன்ற வைத்தது.

பொதுவாகப் பெரிய பெரிய எழுத்தாளர்கள்தாம் “இந்த நூல் அந்தப் பதிப்பகத்தார் கேட்டதால் எழுதியது... அந்த நூல் இந்த இதழினர் கேட்டதால் எழுதியது” எனவெல்லாம் குறிப்பிடுவார்கள். ஆனால் என்னை நானே மீண்டும் மீண்டும் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் விதமாக என் வாழ்விலும் அப்படி ஒன்று நடந்தது! அதைத்தான் அடுத்துக் குறிப்பிடப் போகிறேன். அதுவும் ஒரு மின்மடல்தான். இதோ கீழே பாருங்கள்! 

Keetru Nandhan asked me to write an article for Keetru - One of the Best Moment in my life

இப்படியெல்லாம் என் வாழ்க்கையிலும் நடக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை! ஆனானப்பட்ட ‘கீற்று’ ஆசிரியர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்கிறார் என்றவுடன் “மவனே, எழுத்தாளனாயிட்டேடா நீ!” என்று யாரோ என் முதுகில் தட்டுவது போல் இருந்தது.

கோரிக்கை என அவர் குறிப்பிட்டாலும் அதை மாபெரும் பெருமிதமாகச் (கௌரவம்) சிரமேற்கொண்டு நான் எழுதியதுதான் ‘ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்’ எனும் பதிவு. படித்துவிட்டு நந்தன் அவர்கள் மிகவும் பாராட்டியிருந்தார்.

இவற்றுக்கிடையில் போன ஆண்டில் இரண்டு போன்மிகளையும் (memes) வெளியிட்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இணையவுலகையே ஆட்சி செய்பவை போன்மிகளும் வாரல்களும்தாம் (trolls). நானும் கூட முன்பு சிலமுறை வெளியிட்டிருக்கிறேன். இருந்தாலும் முன் எப்பொழுதையும் விடக் கடந்த ஆண்டு இவை அதிகம் கொடி கட்டிப் பறந்ததால், அந்தத் தாக்கம் காரணமாக நானும் இரண்டு வெளியிட்டேன். சமூக ஊடகங்களில் மட்டுமே நான் பகிர்ந்து கொண்ட அவை இப்பொழுது இங்கே உங்கள் பார்வைக்கு! 




ஏப்ரல் 2018-19 எனும் இக்காலக்கட்டத்தில் பதிவுலகம் இரண்டு இழப்புகளைச் சந்தித்தது. முதலாவது ‘எனது எண்ணங்கள்’ தி.தமிழ் இளங்கோ அவர்களின் மறைவு. பலமுறை நம் வலைமனைக்கு வந்து அவர் கருத்திட்டிருக்கிறார். கடந்த ஐந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் பதிவில் கூட வந்து வாழ்த்தியிருந்தார். ஆனால் இந்த ஓராண்டுக்குள் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் வருந்துகிறேன்! அவருக்கு என் அன்பார்ந்த அஞ்சலி!

அடுத்தது ‘வலைச்சரம்’ சீனா ஐயா அவர்களின் இறப்பு.

பொதுவாக யாருடைய வலைமனையையும் தொடர்ந்து படிக்கிற, கருத்துரைக்கிற வழக்கம் எனக்குக் கிடையாது. அதையும் மீறி இன்று தமிழ்ப் பதிவுலகில் என்னை நான்கு பேருக்குத் தெரியும் என்றால் அதற்கு முக்கிய காரணம் வலைச்சரம் இதழும் அதில் என்னைப் பற்றி நம் நண்பர்கள் எழுதியதும்தாம். உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ப் பதிவுலகை ஒரே குடும்பம் போல இறுகப் பிணைத்த அரும்பெருமைக்கு உரியது வலைச்சரம். அதை நிறுவிய ‘அன்பின்’ சீனா ஐயாவோடு எனக்குத் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் இப்பேர்ப்பட்ட ஒரு சாதனையை நிகழ்த்திய அம்மாமனிதரின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை என்னால் உணர முடிகிறது. ஐயாவுக்கு எனது உளமார்ந்த அஞ்சலி!

அதே நேரம், உலகத் தமிழ்ப் பதிவர்களுக்கான ஒரு பெரும் வலைப்பின்னலாகச் (network) செயல்பட்ட அவரது வலைச்சரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்பதையும் இங்கே வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தொழில்நுட்பம் சார்ந்தோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ இதற்கு என்னால் ஆகக் கூடியது ஏதும் இருப்பின் தயங்காமல் கேளுங்கள், கட்டாயம் கை கொடுக்க ஓடோடி வருவேன் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவை தவிர, இன்னோர் இழப்பும் போன ஆண்டு நடந்தது – கூகுள் பிளசின் மூடுவிழா. சக மனிதர்களை நம்பாமல் சமூக ஊடகங்களையே நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு இது பெரிய அடி! அகச் சிவப்புத் தமிழுக்கு வரும் பார்வைகளில் சரிபாதி கூகுள் பிளசிலிருந்துதான். அது அப்படியே பறிபோய் விட்டது. தவிர, ஏறக்குறைய இருநூறு தொடருநர்களையும் (followers) இழந்து விட்டேன் (அதனால்தான் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டு திடீர் இறக்கம்). தனிப்பட்ட இந்தப் பாதிப்புகளைத் தாண்டி மெய்யாகவே கூகுள் பிளசின் இந்த மூடுவிழா கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மூடப்படும் செய்தி முந்தைய ஆண்டே தெரியும்; என்றைக்கு மூடப்படப் போகிறது என்பதும் முன்பே தெரியும். அப்பொழுதெல்லாம் ஏதும் தோன்றவில்லை. ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இரவு, படுத்த பின் ஏனோ கொஞ்சம் வேதனையாக இருந்தது, ஒரு நல்ல நண்பனைப் பிரிவது போல. அப்பொழுது உடனே எழுந்து கூகுள் பிளசில் எழுதிய கடைசி வரிகள் இவை.

My last post in G+

வருந்தத்தக்க இத்தகைய நிகழ்வுகளுக்கிடையில் நடந்த ஒரே நல்லது, எனக்கு மிகவும் பிடித்தமான பதிவரும் அருமை நண்பருமான சகா ‘மகிழ்நிறை’ மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்தது (மூன்றாம் பிறந்தநாள் பதிவில் கூட இதையேதான் சொல்லியிருந்தேன். நான் சொன்ன நேரமோ என்னவோ மறுபடியும் பதிவுலகை விட்டுப் போய்விட்டார் அவர். இந்த முறை அப்படிச் செய்ய மாட்டார் என நம்புகிறேன்).

கலைக்குடும்பம் எனக் கேள்விப்பட்டிருப்போம். அது போல, எனக்குத் தெரிந்த ‘பதிவர் குடும்பம்’ மைதிலி அவர்களுடையது. அவரும் அவர் கணவர் கஸ்தூரிரங்கன் அவர்களும் மட்டுமில்லை அவர்கள்தம் மூத்த மகள் நிறைமதிவதனா அவர்கள் கூடப் பதிவர்தாம். ‘மைதிலியின் புன்னகை’ எனும் வலைப்பூவை நடத்தி வரும் தமிழ்ப் பதிவுலகின் குட்டிப் பதிவர்களுள் ஒருவர்! ஓரிரு வாரங்களுக்கு முன் அவருடன் பேசியில் உரையாடினேன். பொதுவாகக் குழந்தைகளோடு பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையோடு நிறையவே பேசினேன். கூடவே மீண்டும் அவர் பதிவு எழுத வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். “நீங்க சொல்லிட்டீங்கள்ல, எழுதிட வேண்டியதுதான்” என்று அவர் தோரணையாகச் சொன்னதை மிகவும் ரசித்தேன். தவிர, “பரவாயில்ல, நீங்க கொஞ்சம் எல்லாத்தைப் பத்தியும் நல்லாப் பேசறீங்க” என்ற அவர் பாராட்டை இப்பொழுது கூட நினைத்து நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்து விட்டதால் அவரது ‘புன்னகை’யும் மறுபடி பூக்கும் என நம்புவோம்.

நன்றிக்குரியோர்!

வாட்சப், உயூடியூபு என உலகமே வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்ட இக்காலத்திலும் இந்த வலைமனைகளைத் தேடி வந்து பெருமையூட்டும் தமிழ்ப் பறவைகள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை ஆதரித்து வரும் பழைய, புதிய அகத்தினர்கள்...

தாங்கள் விரும்பிப் படிக்கும் வலைமனைகளின் பட்டியலில் இந்த மனைக்கும் ஒரு மணை அளித்துக் கவனம் ஏற்படுத்தித் தரும் எனதன்புப் பதிவுலக நண்பர்கள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டு, அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைப்பதன் மூலம் என்னைச் செதுக்கி வரும் கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்கள்...

இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவி புரிந்த ஊக்கமளித்த என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள்...

என்னை அடக்க முயல்வதாக நினைத்து மீண்டும் மீண்டும் கொம்பு சீவி விடும் என் பகைச் செல்வத்துக்குரிய எதிரிகள்...

தளத்துக்குப் பார்வைகள் கிடைக்க வகை செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

தளத்தின் உயர்வும் தாழ்வும் அறிந்து சரி செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம்...

பதிவுகளை அழகூட்டும் படங்களையும் அவற்றை மெருகூட்டும் சேவைகளையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்கள்...

பதிவுகளின் தரத்தை உயர்த்த உரிய தகவல்களை அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாய், தமிழ் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை நமக்குத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருவதோடு கடந்த ஆண்டு முதல் பொருளாதார முக்கியத்தையும் நமக்கு அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினர்...

ஆகிய அனைவருக்கும்...

இன்னும் யாரையாவது இங்கு நான் குறிப்பிடத் தவறியிருந்தால் அவர்களுக்கும்...

Thanks

காணிக்கை!

தண்டவாளத் தொடரியைப் போல்
ஒரு கட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்த
என் சிந்தனை ஊர்திக்கு
இறக்கை பொருத்திப் பறக்க வைத்தவன்...

ஒரு விதயத்தை
இத்தனை கோணங்களில் பார்க்க இயலுமா
இவ்வளவு ஆழமாக அலச இயலுமா
இப்படியெல்லாம் கூடப் பேச இயலுமா
என என்னை வியக்க வைத்தவன்...
தன்னோடு சேர்த்து என்னையும் இவ்வழிகளில்
நடக்க வைத்தவன்...

என் எழுத்துக்களில் தென்படுவதாக
இன்று பிறர் குறிப்பிடும்
நுட்பத்துக்கும் செறிவுக்கும் காரணமானவன்...
உடன் பிறவாத் தம்பி...
உளம் பிரியாத் தோழன்...
உணர்வால் குடும்ப உறுப்பினன்...
அஷ்வின் சத்யா அவர்களுக்கு
இந்த ஆண்டு பெற்ற
வலைப்பதிவு வெற்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!


படங்கள்: நன்றி அலேசியோடெவேச்சி, எழுத்து.காம்.
காணொலி: நன்றி எஸ்.பி.எஸ் மீடியா

முந்தைய ஆண்டுகளில்:
ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!  
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. ஒவ்வொரு விளக்கமும் அருமை...

    தங்களின் ஈடுபாடு மிகவும் சிறப்பு...

    பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. ஏழாண்டும் கடந்து நெடுங்காலம் தொடர வாழ்த்துகள்.
    இலங்கை, இந்திய, உலக சிறப்புகளைப் பகிர்ந்து பல துறைசார் அறிவைப் பகிரும் தங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இலங்கை, இந்திய, உலக சிறப்புகளைப் பகிர்ந்து பல துறைசார் அறிவைப் பகிரும்...// - உண்மையிலேயே இது மிகவும் பெரிய பாராட்டு! மிக்க நன்றி ஐயா! உங்கள் வாழ்த்து கண்டும் மகிழ்ச்சி!

      நீக்கு
  3. பிரமிப்பாக உள்ளது. உங்கள் தளத்திற்குள் வந்தால் ஏதோவொரு நவீன திரையரங்கத்திற்குள் வந்தது போலவே உள்ளது. எல்லாவிதங்களிலும் சிறப்பு. ஆறாம் ஆண்டுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் தளத்திற்குள் வந்தால் ஏதோவொரு நவீன திரையரங்கத்திற்குள் வந்தது போலவே உள்ளது// - ஐயா, இப்படி ஒரு பாராட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை. வடிவமைப்புக்காக நான் பெறும் முதல் பாராட்டு இது. மிக மிக மகிழ்ச்சி! தங்கள் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! முன்பு அடிக்கடி உங்கள் தளத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அண்மைக்காலமாக வர இயலவில்லை. மீண்டும் வருகிறேன். மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  5. சரியான அலசல். மதிப்பீடு. சுயமதிப்பீடு என்றும் நம்மை முன்னுக்கு இட்டுச்செல்லும் என்பதை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். உங்கள் எழுத்துக்கள் மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுத்தருள வேண்டுகிறேன் ஐயா! உங்கள் கருத்தை வெளியிடத் தாமதமாகி விட்டது. உங்கள் வாழ்த்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி ஐயா!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்