.

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

உங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


Innocent Girls who lost their lives because of Men's Cruelty

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றன. அதுவும், கேள்விப்படும்பொழுதே பதறிக் கைவிரல்களை நடுங்கச் செய்யும் அளவுக்குக் கொடூரமான வன்முறைகள்!

தில்லியில் ஜோதிசிங் (நிர்பயா), கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிசா, சேலத்தில் வினுப்பிரியா, சென்னையில் சுவாதி எனப் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில காலமாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நாகரிகம் எனப் பீற்றிக் கொள்ளும் இம்மண்ணில் அதே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அபாயகரமான சூழலில் இன்றைய பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், நாம் வாழும் சமூகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மாறிய பின்பும் இதே சமூகத்தில் வாழும் நாம் நம் பெண் / ஆண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அப்படி என்ன மாற்றத்தை வளர்ப்பு முறையில் கொண்டு வந்தோம்?...

ஒரு நிமிடம்!... குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமைதானே என நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால், வெறுமே இராம்குமார்களைப் பிடித்து உள்ளே தள்ளுவதாலோ இன்ன பிற குண்டர்களைக் கைது செய்வதாலோ புதுப் புதுச் சட்டங்களைக் கொண்டு வருவதாலோ மட்டும் பெண்களுக்கு எதிராக எந்த வன்முறையும் நடக்காமல் தடுத்து விட முடியுமா? அட, தொடர்ச்சியாக எத்தனையோ வன்முறைத் தாக்குதல்கள் பெண்களுக்கு எதிராக நடந்தும் இந்த அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லைதான். ஆனால் அதற்காக, நம் வீட்டுப் பிள்ளை இன்னொரு தொடர்வண்டி நிலையத்தில் இதே போல் வெட்டுப்பட்டுக் கிடந்தால் “எல்லாம் இந்த அரசாங்கதால வந்த வினைம்மா! நான் என்ன செய்யறது” என வெட்கமில்லாமல் அவளிடம் போய் ஒப்பாரி வைக்க முடியுமா? நம் பிள்ளைகளைப் பாதுகாக்கத் தேவையானவற்றை நாம் செய்துவிட்டும் அப்படி ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்தால் நாம் அரசையும் ஆட்சியாளர்களையும் குறை சொல்லித் திரியலாம். ஆனால், நம் கடமையை நாம் நிறைவேற்றாமலே அரசின் மீதும் காவல்துறை மீதும் பழி போட்டுத் தப்பிக்க நினைப்பது கேடு கெட்ட இழிசெயல் இல்லையா?

சரி, இப்பொழுது நாம் என்னதான் செய்ய வேண்டும்?... இதற்குப் பதில் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. மழை பெய்தால் குடை பிடித்துக் கொண்டு போக வேண்டும் எனத் தெரிகிறது; குளிரடித்தால் வியர்வை அங்கி (sweater) மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அறிவு நமக்கு இருக்கிறது; ஆனால், சக மனிதர்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் தற்காப்புக் கலைகளைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவு நமக்கு ஏன் இல்லை?

‘ப்பூ, இவ்வளவுதானா? இதைச் சொல்லவா இவ்வளவு பீடிகை?’ என நினைக்காதீர்கள்! மாறாக, உங்களுக்குத் தெரிந்த மனிதர்களில் தற்காப்புக் கலை தெரிந்தவர்கள் எத்தனை பேர் என ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்! இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் 90% பேர் இதற்குச் சுழியம் (zero) முதல் ஆகக்கூடி ஐந்து வரையிலான எண்ணைத்தான் விடையாக அளிப்பீர்கள் என நம்புகிறேன். வீட்டில் திருமணம், காதுகுத்து என வந்தால் ஆயிரக்கணக்கில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கிறோம். அத்தனை சொந்தங்கள், நண்பர்கள் நமக்கு இருக்கிறார்கள். ஆனால், அந்த ஆயிரக்கணக்கானோரில் தற்காப்புக் கலை தெரிந்தவர்கள் நான்கைந்து பேர் கூட இல்லை. காரணம், நம் சமூகத்தில் இந்தக் கலையைப் பயின்றவர்கள் எண்ணிக்கை அந்தளவுக்குக் குறைவு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே ‘வாளொடு’ முன்தோன்றிய மூத்தகுடி”யில் இன்று வீரத்தின் நிலைமை இதுதான்.

The Ancient Tamil Lady who drove out the Tiger just with a winnow
காதல் சார்ந்த இல்வாழ்வை அகம் என்றும், வீரம் சார்ந்த பொதுவாழ்வைப் புறம் என்றும் வாழ்வையே இருபெரும் கூறுகளாகப் பிரித்து உலக நாகரிகங்களுக்கெல்லாம் உயர்தனிப்பெரும் நாகரிகமாய் வாழ்ந்து வழிகாட்டிய தமிழன் இன்று காதல் எது, காமம் எது எனக் கூடப் புரியாமல் அல்லாடுகிறான்; காதலை ஏற்க மறுத்தால் பெண் மீது அமிலத்தை வீசுகிறான். வேங்கைப்புலியையே வெறும் முறத்தால் விரட்டி அடித்த தமிழச்சியோ இன்று சக மனிதனின் தாக்குதலிலிருந்து கூடத் தப்பத் தெரியாமல் செத்து மடிகிறாள். இதுவா வாழ்க்கைமுறை?... நாமா தமிழர்கள்?... சிந்தியுங்கள் நண்பர்களே! அகநானூற்றையும் புறநானூற்றையும் வாங்கி வீட்டில் அடுக்கி வைத்தாலோ, செயலிகளாகத் தரவிறக்கிச் சேமித்துக் கொண்டாலோ மட்டும் போதாது. படித்து, அவற்றின்படி நடக்கக் கொஞ்சம் முயற்சியாவது செய்ய வேண்டும்!

இசையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே பாடக் கற்றுக் கொள்வதைப் போல, ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே வரையக் கற்றுக் கொள்வதைப் போல வீரக்கலைகளையும் அவற்றில் ஆர்வம் உடையவர்கள் மட்டும் கற்றுக் கொள்ளட்டுமே என நாம் நினைக்கிறோம். ஆனால், ஆபத்துகள் என்பவை அந்தச் சிலருக்கு மட்டுமே வருபவை அல்ல என்பதுதான் மிக எளிமையான உண்மை. அவை பொதுவானவை. எனவே, ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான கலைகளும் அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை!

நினைத்துப் பாருங்கள், கணினி இயக்கத் தெரிந்த சுவாதிக்குக் கொஞ்சம் கராத்தேவும் தெரிந்திருந்தால் இராம்குமாரிடமிருந்து அவர் தப்பித்திருக்க வாய்ப்பு உண்டு இல்லையா? அல்லது, அன்று அதே தொடர்வண்டி நிலையத்தில் அந்தக் கொடூரக் கொலையைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருராவது தற்காப்புக் கலை தெரிந்தவராக இருந்திருந்தால், கண்ணெதிரே அப்படி ஒரு கொடுமை நடப்பதை அவர் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும் இல்லையா? ஜோதிசிங்கோ (நிர்பயா) அவர் கூட இருந்த அந்த ஆண் நண்பரோ, இருவரில் ஒருவராவது வீரக்கலை ஒன்றையாவது தெரிந்து வைத்திருந்தால் நாட்டையே நடுநடுங்கச் செய்த அந்தக் கொடூரம் நடந்திருக்குமா? மீண்டும் மீண்டும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து விட்டுக் கடைசியில் அமிலம் குடிக்க வைத்தே கொன்றிருக்கிறானே அண்மையில் சிவ்சங்கர் என்கிற ஓர் இழிபிறவி, அந்தக் கொடூரம்தான் நிகழ்ந்திருக்குமா?

பெண்களுக்கு நாம் ஒன்று கரண்டி பிடிக்கக் கற்றுத் தருகிறோம் அல்லது கணினி இயக்கக் கற்றுத் தருகிறோம்; ஆனால், கூடவே களரியோ கராத்தேவோ கற்றுத் தர மாட்டேன்கிறோமே ஏன்? அங்கே நிற்காதே, இங்கே பார்க்காதே, இப்படி ஆடை அணியாதே, அப்படி நடந்து பழகாதே எனவெல்லாம் பெண்களைச் சிறுமிகளாக இருக்கும்பொழுதிலிருந்தே வலிக்க வலிக்கச் செதுக்கிச் செதுக்கியே வளர்க்கிறோம். பெண்ணின் ஒவ்வோர் அசைவுக்கும் இயக்கத்துக்கும் அந்த அளவுக்குத் துல்லியமாக இலக்கணம் (!) வகுத்து, அதற்குப் பாதுகாப்பைக் காரணமாகக் காட்டுகிறோம். ஆக, இந்த சமூகத்தில் பெண்ணுக்கு எப்பொழுது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது பெற்றோருக்கே நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், பெற்றோர்கள் சொல்லும் அத்தனையையும் இம்மி பிறழாமல் கடைப்பிடித்தாலும் பெண்களுக்கு இந்த சமூகத்தில் ஆபத்துகள் நிகழாமல் இல்லை. எனில், இப்படியெல்லாம் கண் சிமிட்டுவது தொடங்கி கட்டையில் போவது வரைக்கும் இத்தனை கட்டுப்பாடுகளைப் பெண்களுக்குப் போடுவதற்குப் பதில் நல்லதொரு தற்காப்புக் கலை ஒன்றை அவர்களுக்குப் பயிற்றுவித்து வளர்த்தால் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் அஞ்சாமல் தன் விருப்பப்படியும், அதே நேரம் பாதுகாப்பாகவும் பெண்கள் வாழ முடியும் இல்லையா? அதற்கான ஏற்பாட்டை நாம் ஏன் செய்வதில்லை?!

பெண் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, ஆண் பிள்ளைகளுக்கும் நம் சமூகத்தில் பெரிய பாதுகாப்பு ஏதும் கிடையாது. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதெல்லாம் அந்தக் காலம். இன்று கூட்டமாக வந்து தாக்கும் கூலிப்படையினரிடமிருந்தும், வீச்சரிவாள் முதல் வென்டட்டா துப்பாக்கி வரை அனைத்து விதமான ஆயுதங்களுடனும் உலவும் சமூக எதிரிகளிடமிருந்தும் தப்பிக்க வெறும் நெஞ்சுரம் மட்டும் போதுமானதாக இல்லை. சுவாதியைப் போலவே உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் பேருந்து நிலையத்தில் அத்தனை பேர் கண் முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் ஆண்தான்; கடந்த மாதம் சென்னையில், இதே போல் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட வழக்குரைஞர் ரவியும் ஆண்தான். பெண்களைக் குறி வைக்கும் கேடு கெட்டவர்கள் முதலில் கட்டம் கட்டுவது உடன் வரும் ஆண்களைத்தான். அப்படிப்பட்ட சூழலில் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு, உடன் வரும் பெண்ணையும் காப்பாற்ற வேண்டிய ஆணுக்கு நாம் என்ன பாதுகாப்பு வழிமுறையைக் கற்றுக் கொடுத்து வளர்க்கிறோம்? ஒன்றுமே இல்லை.

“தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்” என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இங்கே தற்காப்புக் கலை பயின்றே தீர வேண்டிய இன்றியமையாத் தேவையும் நமக்கு இருக்கிறது; அந்தத் தேவையை நிறைவேற்றப் போதுமான கண்டுபிடிப்புகளும் - அதாவது பல்வேறு தற்காப்புக் கலைகளும் - இருக்கின்றன. அவற்றைப் பயில்வதற்குப் போதுமான வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. ஊர்ப் (கிராமப்) பகுதிகளில் இன்றளவும் களரி, சிலம்பம் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். நகரப் பகுதிகளிலோ பற்பல இடங்களில் சிறிதும் பெரிதுமாக கராத்தே பயிற்சிக்கூடங்கள் காணப்படுகின்றன. இருந்தும், நாம் இன்னும் நம் பிள்ளைகளுக்குத் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்க மறுப்பது ஏன்? நம் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் நமக்கே இல்லாத அக்கறை யாரோ ஒரு ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும், தொடர்வண்டிக்காகக் காத்திருக்கும் வழிப்போக்கர்களுக்கும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

“அந்தக் காலத்திலெல்லாம் இப்படிக் கராத்தேவும் குங்பூவும் சொல்லிக் கொடுத்தா வளர்த்தார்கள்” என்று உடனே வெட்டிக்கதை பேச வேண்டா! போர்க்கலை பழகுதல் என்பது தமிழர்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. பண்டைய தமிழகத்தில் பெரிய அளவில் போர் ஏதாவது வந்தால் வீட்டுக்கு ஒருவர் போருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்ட கதைகளை நாம் படித்திருக்கிறோம். இதற்குப் பொருள் என்ன? எல்லா வீடுகளிலும் போர்க்கலை தெரிந்தவர், ஆயுதம் சுழற்றப் பயின்றவர் ஒருவராவது இருந்திருக்கிறார் என்பதுதானே?

Velu Nachiyar the only Indian ruler who won back her lost empire from British
வீர மங்கை வேலு நாச்சியார்

அட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டிப் போவானேன்? நம் தாத்தா, அப்பா காலத்து நிலைமை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! அந்தக் காலத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, சிறிதும் பெரிதுமாகச் சில பல ஆயுதங்களைக் கையாளும் இலாவகம் கைவரப் பெற்றவர்களாகவே இருந்தார்கள். காரணம், அன்று உழவுத்தொழிலே முதன்மையான வேலையாக இருந்தது. காடு கழனி வேலைகள் நிறைய இருந்தன. அவை அனைத்துக்கும் பல ஆயுதங்கள் தேவைப்பட்டன. ஆண்கள் மரம் வெட்டுதல், இளநீர் - நுங்கு சீவுதல், ஆடு - கோழி அறுத்தல் என்று முரட்டுத்தனமான பற்பல வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர். பெண்களும் ஆண்களுக்குச் சளைத்தவர்களாக இல்லை. விறகு பிளத்தல், கதிர் அறுத்தல், களை எடுத்தல் எனப் பல முரட்டு வேலைகளை அவர்களும் செய்து பழகியவர்களாகவே இருந்தார்கள். இதனால் கோடரி, அரிவாள், பலவிதமான கத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது அவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. தொடர்ந்து இத்தகைய முரட்டுத்தனமான வேலைகளைச் செய்து பழகியதால் யாருக்கும் எந்த ஆயுதத்துக்கும் அஞ்சாத துணிச்சலும் அந்தக் காலத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய் சொல்வது போல எப்பொழுதும் அரிவாளும் கையுமாக அலைந்த கைகள் அவை.

ஆனால், இந்தக் காலம் அப்படியா? விழிய (வீடியோ) விளையாட்டுகளில் மட்டுமே குருதி பார்த்துப் பழகிய விழிகள், கணினியின் தட்டெழுத்துப் பலகையைத் தட்டுவதை விடப் பெரிய முரட்டு வேலை எதையும் செய்தறியாத விரல்கள், அடுப்பில் இருப்பதைக் கரித்துணி பிடித்து இறக்குவதால் உணரப்படும் சூட்டைக் கூடக் கண்டறிய வாய்ப்பின்றி முற்றிலும் நெகிழிப் (plastic) பிடிகள் வைத்த பாத்திரங்களுடனே புழங்கும் கைகள் என இப்படி வளரும் இன்றைய தலைமுறைக்கு எங்கிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறமும் துணிவும்?

எனவே, தற்காப்புக் கலைகள் இன்றி இனி நமக்கு இங்கு பாதுகாப்பான வாழ்வு என்பது இல்லை என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே, பெற்றோர்கள் அனைவரும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு வீரக்கலையைக் கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டும்!

பெற்றோர்கள் மட்டுமில்லை, வெறுமே சமூக எதிரிகளைப் பிடித்துச் சில காலம் சிறையில் வைப்பதாலோ, காவல்துறையினர் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ மட்டும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது என்பதை ஆட்சியாளர்களும் உணர வேண்டிய வேளை இது. எனவே, மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு வரையான எல்லா அரசு - தனியார்க் கல்விக்கூடங்களிலும் கட்டாயத் தற்காப்புக் கலைப் பயிற்சியைக் கற்பிக்க அரசு முன் வர வேண்டும்! அதே நேரம், சமூக எதிரிகள் என்பவர்கள் யாரும் வேற்றுக் கோள் மனிதர்கள் கிடையாது. அவர்களும் இதே சமூகத்திலிருந்து பிறந்தெழுந்து வருபவர்கள்தாம். எனவே, அவர்களை எதிர்த்து அடித்து வீழ்த்தும் வல்லமையைப் பொதுமக்களுக்குத் தருவது என்பது தற்காலிகத் தீர்வு மட்டும்தானே தவிர அதுவே நிரந்தரத் தீர்வு ஆகி விடாது. இந்தப் பிரச்சினைக்கு உண்மையான, நிரந்தரமான தீர்வு என்பது சமூக எதிரிகளே உருவாகாத நிலையை ஏற்படுத்துவதுதான். அதற்கு யோகக்கலை கற்பித்தல் அருமையான வழிமுறையாக இருக்கும். எனவே, அதே மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு வரை எல்லாக் கல்விக்கூடங்களிலும் இலவச யோகப் பயிற்சி வகுப்புகளையும் தொடங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்!

பெண்களின் எந்தெந்த உரிமைகளுக்காகவோ போராடும் மகளிர் அமைப்புகள் பெண்களின் அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தக்கூடிய மேற்படி ஏற்பாடுகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அழுத்தம் தர முன்வர வேண்டும்!

புறநானூற்று வீரத்தை மீண்டும் புதுப்பிப்போம்!
புதியதொரு தமிழ்நிலம் செய்வோம்!

(இது பின்னர் கீற்று தளத்தில் -- அன்று வெளிவந்தது)


❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி  ௧) தமிழ் ஒன் இந்தியா, தினமணி, ௨) பேரூராட்சிகள் இயக்ககம் - தமிழ்நாடு அரசு, ) தமிழ்மணம்.

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து நம் சகோதர சகோதரிகள் பாதுகாப்பாக வாழ உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

12 கருத்துகள்:

  1. இபுஞா சகா சரியாகச் சொன்னீர்கள். அப்படியே நான் நினைப்பதை, அடிக்கடிச் சொல்லுவதை இங்கு பதிந்திருக்கின்றீர்கள். பெண்கள் பாதுகாப்புக் கலை கற்றுக் கொள்ள வேண்டும். இதை முன்பே எங்கள் தளத்தில் பாலியல் கொடுமை பற்றி எழுதிய போது குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் உங்களைப் போன்று இவ்வளவு அழகாக முந்தைய தமிழர்கள் எப்படி இருந்தார்கள் என்ற உதாரணங்கள் கொடுக்கவில்லை.

    அது போன்று குழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு பதிவில் சொல்லி வரும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றிச் ஒரு பதிவில் சொல்லிய போதும் எழுதிய நினைவு. பெண் குழந்தைகளை நம் சமூகம் சரியான முறையில் வளர்ப்பதில்லை என்பதே எனது கருத்து. அதாவது ஓடாதே, பொட்டைப் பிள்ளை, நாளைக்குக் கல்யாணம் செய்துகொடுக்கணும் குதிக்காதே, கர்ப்பப்பை பாதிக்கப்படும், பள்ளியில், கல்லூரியில் விளையாட்டுகளில் பங்கு பெற வேண்டாம், முதுகுப் பிரச்சனை வந்துவிடும், எலும்பு முறிவு ஏற்படும்....பாரம் தூக்காதே....அடி வயிறு, கர்பப்பை பாதிக்கப்படும்...வயதிற்கு வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்....மாதாந்திரத்தொந்தரவுகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு கேட்காதீர்கள் சகா. இப்படியே சொல்லிச் சொல்லி பெண் என்றாலே திருமணம் என்ற ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே வளர்க்கப்படுகிறார்கள். மன தைரியம் கூட இல்லாமல் தான் வளர்க்கப்படுகிறார்கள். பொத்திப் பொத்தி வளர்க்கப்படுகிறார்கள். பெண் குழந்தை கணினித் துறையில் வேலை செய்யும் போது பல மணி நேரங்கள் உட்கார்ந்தே வேலை செய்வதால் உடம்பின் எடை கூடும், தொப்பை போடும் என்பதெல்லாம் வேறு விஷயம்..அதைக் குறித்துப் பெற்றோருக்கு எந்தக் கவலையும் இல்லை இருக்கவே இருக்கிறது பணத்தைக் கொட்டி உடற்பயிற்சிக் கூடங்கள் என்ற வியாபாரம். ஆனல் அது நல்லதல்ல என்றும்,இயற்கைக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு செய்யப்படும் அதைவிட மிகச் சிறந்த பயிற்சிகள் இருக்கின்றன என்று சிந்திப்பதில்லை.

    பள்ளியில் முதலில் விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி என்பதே இப்போது இல்லையே. நாங்கள் படித்த காலத்தில் விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. உடற்பயிற்சி காலையில் பிரார்த்தனை நடந்ததும் செய்ய வேண்டும். பள்ளி முழுவதும் அதாவது கடினமான ஒன்று அல்ல. நம் உடம்பை அன்றைய நாளுக்குத் தயார்ப்படுத்தும் உடற்பயிற்சிகள்-வார்ம் அப்-

    விளையாட்டுகள் உண்டு. குழுக்கள் உண்டு. எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். பெண் குழந்தைகள் என்றில்லை ஆண் குழந்தைகளும் தற்காப்புக் கலை பயின்றே ஆக வேண்டும்.

    இதில் முக்கியமான ஒன்றும் கற்பிக்கப்படுகிறது. தற்காப்புக் கலை வகுப்பில் சில குத்துகள், உதைகளைச் சிறு குழந்தைகள் மனப்பக்குவம் இல்லாமல், தன் தோழர்களுடன் சிறு சிறு சண்டை வரும் போது உபயோகித்து உயிருக்கே ஆபத்தி நேர்வதான சம்பவங்கள் நடந்ததுண்டு. எனவே ஆரம்பத்திலேயே அந்த வகுப்புகளில் மனவளக் கலையும் போதிக்க வேண்டும். இங்கு ஒரு சில தற்காப்புக் கலை ஆசிரியர்களே கற்றுக் கொடுக்கிறார்கள். இந்தச் சண்டைகளை தேவைப்படும் போது மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். நம் ஊரில் எதுவுமே முறையாகச் செய்யப்படுவதில்லை. இந்தக் கலைகள் கற்றல் குறைப்பாட்டிற்கும் உறு துணையாக இருக்கும் என்றால் மிகையல்ல.

    இன்னும் நிறைய பேசலாம் தான்...நல்ல பதிவு சகா. என் மனக் கருத்தை நீங்கள் மிக அருமையாகப் பதிந்திருக்கின்றீர்கள். பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அளவுக்கு விளக்கமாக நீங்கள் கருத்திட்டிருப்பதிலிருந்தே எந்த அளவுக்கு உங்கள் கருத்தை நான் எதிரொலித்திருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள முடிகிறது சகோ. பெண்கள் பிரச்சினையில், பெண் ஒருவரின் கருத்தையே நான் சரியாக எதிரொலித்திருக்கிறேன் என்பது மிக்க மகிழ்ச்சி!

      //முன்பே எங்கள் தளத்தில் பாலியல் கொடுமை பற்றி எழுதிய போது குறிப்பிட்டிருக்கிறோம்// - முன்னோடி என்றால் சும்மாவா!

      பெண் குழந்தைகள் வளர்ப்பில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் கூறியிருக்கும் அனைத்தும் சரியே! என் வீட்டிலும் நான் நிறையவே பார்த்திருக்கிறேன். அதுவும் இந்தப் பாட்டிகள் செய்யும் அக்கப்போர் தாங்க முடியாதது! சின்னஞ் சிறுமிகளாக இருந்தால் கூடச் சரி, அவர்கள் எப்படிப் படுத்து உறங்க வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் எனவெல்லாம் கூடக் கட்டுப்பாடுகள் இடுவார்கள். பெரியவர்கள் எது சொன்னாலும் திருவாக்காக எடுத்துக் கொண்டு பின்பற்றி வந்த நான் பின்னாளில் அவர்களையே அதட்டும் அளவுக்குத் தலைகீழாய் மாற இது மிக முதன்மையான காரணம் என்றால், அது மிகையில்லை.

      ஆனால், பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் இடக் காரணமே ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என விட்டேற்றியாக வளர்ப்பதுதான் என்கிற ஒரு கோணமும் உண்டு. காரணம், ஆண்களுக்கும் இப்படிச் சில கட்டுப்பாடுகள் இருந்தால், அவர்கள் பெண்களைச் சீண்ட அஞ்சுவார்கள். எனவே, பெண் பிள்ளைகளுக்கு இயல்பாகவே சமூகத்தில் பாதுகாப்பான சூழல் நிலவும். அதனால் அவர்களை இந்த அளவுக்குக் கட்டுப்படுத்தி வளர்க்க வேண்டிய தேவை இருக்காது. என்ன சொல்ல... இது பல காலப் பெரும் பிரச்சினை. இன்னும் சில பதிவுகள் தேவை. அப்புறமாய் எழுதுகிறேன்.

      தற்காப்புக் கலைகளைச் சிறுவர்கள் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடிய வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால், எல்லாவற்றிலும் நன்மை - தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது எனும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதையும் பார்க்க வேண்டும். தற்காப்புக் கலை கற்பிப்பவர்கள் அவற்றை இன்றியமையாத் தேவை ஏற்பட்டாலொழியப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லித்தான் கற்பிக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் அதைப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல முடியாதுதான். அதற்காகத்தான் ஐந்து வயதிலிருந்தே கற்றுக் கொடுக்கச் சொல்லுகிறேன். அந்தப் பிஞ்சு மனத்தில் இடப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக அவர்கள் மீற முடியாது என நம்புகிறேன்.

      நீங்கள் கூறுவது போல விளையாட்டு வகுப்பு முன்பெல்லாம் கட்டாய வகுப்பாக இருந்ததுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் பள்ளிக்குப் போன தொண்ணூறுகளிலேயே அது மாறி விட்டது. மனிதர்கள் எல்லாருக்குமே படிப்பு தொடர்பான திறமைகள்தாம் இருக்க வேண்டும் என வெளிநாடுகளின் ஏவல் பதுமையான இன்றைய இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம். சிலருக்குப் படிப்பு தொடர்பான துறைகளில் திறமை இருக்கும்; சிலருக்கு விளையாட்டுத் திறமை இருக்கும்; சிலருக்குக் கலைத்துறைகளில் திறமை இருக்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் விளையாட்டுக்கு என்று தனி வகுப்பு வைத்தார்கள். ஆண்டு விழாக்களில் தவறாமல் சிறுவர்களைக் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்தார்கள். ஆனால், இன்றைய இந்தியாவுக்கு விளையாட்டு வீரர்களோ, கலைஞர்களோ தேவையில்லை. வெறும் அலுவலகக் கணக்கர்களும், கணிப்பொறியாளர்களும் மட்டும்தாம் தேவை.

      மிக்க நன்றி சகோ!

      நீக்கு
    2. சகா இன்று நீங்கள் மீண்டும் இப்பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களின் பதில் கருத்தைக் காண நேர்ந்தது. தங்களின் கருத்தில் இறுதி வரி நச்! அதான் நம் இந்தியாவுக்கு....என்று தொடங்கும் வரி!!! உண்மையே! அருமை!

      நீக்கு
    3. ஓ! மிக்க நன்றி சகோ! என் வலைப்பூ எவ்வளவுதான் பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றாலும் அதில் நம் பதிவுலக நண்பர்களின் பார்வைகள் குறைவே என்கிற வருத்தம் எனக்கு என்றுமே உண்டு. நம் ‘கணினித் தமிழ்ச் சங்கம்’ வாட்சப்புக் குழுவில் சகோதரி செயசித்திரா அவர்கள் பாலியல் தாக்குதல்கள் குறித்துக் கொஞ்சம் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்ததால் அவருக்கும் இன்ன பிற பதிவுலக அன்பர்களுக்கும் இந்தப் பதிவைக் கொண்டு சேர்க்கும் விதமாக இதை அங்கே பகிர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பாராட்டுக்கு நன்றி! மகிழ்ச்சி!

      நீக்கு

  2. "புறநானூற்று வீரத்தை மீண்டும் புதுப்பிப்போம்!
    புதியதொரு தமிழ்நிலம் செய்வோம்!" என்ற கருத்தை
    ஏற்றுக்கொள்கிறேன்.
    சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு!
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    பதிலளிநீக்கு
  3. ஆக..தற்காப்பு கலை கற்று இருந்தால் பாதுகாப்பான வாழ்வு இருக்கும்..அப்படி என்றால் !வேலை கிடைக்காமல் கஞ்சிக்கு செத்தவர்கள் எல்லாம் தற்காப்பு கலையை கற்றால் வாழ்வு பாதுகாப்பாக இருக்குமா....???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்குமே இடம் - பொருள் ஏவல் எனச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன நண்பரே! நீங்கள் சொல்வது பொருளியல் தொடர்பான பாதுகாப்பை. இந்தக் கட்டுரையோ முழுக்க முழுக்க தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான பாதுகாப்பை. பதிவின் மையக் கருத்துக்கு ஏற்பக் கருத்துரைக்க வேண்டுகிறேன். நன்றி!

      நீக்கு
    2. எல்லா பெண்களும் தற்காப்பு கலை பயில முடியுமா...????

      நீக்கு
    3. நல்ல கேள்விதான் நண்பரே! எல்லாராலும் முடியாதுதான். ஆனால், முடிந்தவர்கள் எத்தனை பேர் பயின்றிருக்கிறார்கள்? மேலும், இதுவே நிலையான தீர்வு என்று நான் சொல்லவில்லை. ஆண்கள் திருந்த வேண்டும். பெண்களை உடம்பாகப் பார்க்கும் மனப்பான்மை மாற வேண்டும். இன்னும் எவ்வளவோ உண்டு. ஆனால், நாளுக்கு நாள் கூடி வரும் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு இஃது ஒரு உடனடி மருந்தாக அமையுமே என்றுதான் பரிந்துரைக்கிறேன், வேறொன்றுமில்லை.

      நீக்கு
  4. துப்பாக்கியை எல்லோருக்கும் கொடுத்தால் பாதுகாப்பு நாடும் வல்லரசு ஆகிவிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நக்கலான கருத்துக்கு நன்றி! உருப்படியாக வேறு ஏதாவது வேலை இருந்தால் போய்ப் பாருங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்