.

ஞாயிறு, மே 17, 2015

தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!





நேற்று பார்த்தது போல் இருக்கிறது அந்தக் குருதி கொப்பளிக்கும் காட்சிகளை!

இன்றும் ஓயவில்லை அந்த மரண ஓலமும் அழுகையும்!

இன்னும் காயவில்லை ஒன்றரை லட்சம் பேரைப் பறிகொடுத்த உள்ளக் காயம்!

ஆனால் அதற்குள், இதோ, தமிழினம் அழிக்கப்பட்டு நாளையோடு முழுதாக ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன! 

கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.

ஆக, ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் என்பது ஆறுதலானது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்த நம் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை என்பதே உண்மை!

முதலில், இப்பேர்ப்பட்ட பேரழிப்புக்குப் பின் நாம் அடைந்திருக்க வேண்டிய முதன்மையான முன்னேற்றம் ஒற்றுமை!

ஒன்றில்லை, இரண்டில்லை பத்து நாடுகள் சேர்ந்து நம் இனத்தை அழித்திருக்கின்றன. பதினைந்து நாடுகள் அதற்கு ஆதரவாக நின்றிருக்கின்றன. அதாவது, நாம் வாழும் உலகின் ஒரு கணிசமான பகுதியே நம் அழிவை விரும்புகிறது! இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும்? ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை! சிலர் மே 17, சிலர் மே 18, சிலர் மே 19 என ஆளுக்கொரு நாளில் அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணெதிரே இனத்தையே பலி கொடுத்த பின்னும் தமிழர் நம் ஒற்றுமை இவ்வளவுதான்!

முன்பை விட இப்பொழுதுதான் இன்னும் சாதியப் பிரிவினைகள் வலுப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கூடக் கையில் அவரவர் சாதிக் கட்சியை நினைவூட்டும் நிறத்திலான கயிறுகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் எனத் தெரிய வரும்பொழுது நெஞ்சம் விட்டுப் போகிறது. (நன்றி: ஆனந்த விகடன் இதழ் 26.03.2015).

மக்கள்தான் இப்படி என்றால், இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்களோ இதற்கும் ஒரு படி மேலே போய் திராவிடமா, தமிழ் தேசியமா எனக் கருத்தியல் அடிப்படையில் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கிறார்கள்.

உலகமே தங்களுக்கு எதிராக நிற்கும் நிலையிலும் அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை பற்றித் துளியும் கவலையில்லாமல் நாம் இன்னும் நமக்குள்ளேயே இப்படி இடையறாமல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை விட அடிமுட்டாள்கள் உலகில் வேறு யாராவது இருப்பார்களா?

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௧ (1)

நாம் வாழ்வது தகவல் தொழில்நுட்பக் காலம். உலகின் எந்த மூலையிலிருந்தும் மறுமூலையிலுள்ள மனிதனை நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய, தொலைத்தொடர்பு வசதியின் உச்சக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நினைத்தால் உலகத் தமிழர்கள் அனைவரையும் இணையத்தின் மூலம் ஒரே குழுவாகத் திரட்டி, நமது அறப் போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் எல்லா நாடுகளிலும் ஒரே நாளில் நடத்திப் பன்னாட்டுச் சமூகத்துக்கு நம் கோரிக்கையில் நமக்குள்ள அசைக்க முடியாத உறுதியை உணர்த்தலாம். ஆனால் ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, இந்த அருமையான தொழில்நுட்ப வசதியை நாம் கீச்சகத்தில் (twitter) சண்டை போடுவதற்கும், முகநூலில் நிலைத்தகவல் இடுவதற்கும் தவிர, வேறு எதற்கும் உருப்படியாகப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

எனவே, உடனடித் தேவை ஒற்றுமை! உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அத்தனை பேரையும் ‘ஈழம்’ எனும் ஒற்றைச் சொல்லின் கீழ் திரட்ட வேண்டும். அப்படித் திரட்ட வேண்டுமானால், முதலில் ஈழ ஆதரவு அமைப்புகள் ஒருங்கிணைந்தாக வேண்டும்! தமிழ்நாடு, அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் உள்ள ஈழ ஆதரவு அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டு அமைப்பாகக் கைகோத்து இனப்படுகொலை நினைவேந்தல், மாவீரர் நாள் போன்றவற்றை உலகம் முழுதும் ஒரே நாளில் கடைப்பிடிக்க வேண்டும். பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு என எதுவாக இருந்தாலும் உலகம் முழுக்க ஒரே நாளில் நடத்த வேண்டும்! அப்பொழுதுதான் உலகில் எத்தனை கோடித் தமிழர்கள் இருக்கிறோம், எத்தனை கோடி பேர் இந்தத் தனித் தமிழீழ நாடு எனும் கோரிக்கையை வலியுறுத்துகிறோம் என்பதைப் பன்னாட்டுச் சமூகத்துக்கு உணர்த்த முடியும். இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிக்கு இது மிகவும் எளிமையானதே.

இதை நான் கடந்த ஆண்டு நினைவஞ்சலிப் பதிவிலேயே வலியுறுத்தி இருந்தேன். (பார்க்க: 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!) ஆனால், இன்று வரை அதற்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாத வேதனையுடன் மீண்டும் அதே கோரிக்கையை இங்கு முன்வைக்கிறேன்.

அடுத்தது, அரசியல் தெளிவு!

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௨ (2)

“ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் அதிகாரம் அவர்கள் கைக்கு வர வேண்டும்” என்பதுதான் பிரெஞ்சுப் புரட்சிக் காலம் தொட்டு வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆக, தமிழீழம் கிடைக்க வேண்டுமானால் தமிழர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்.

அதற்காக நாம் உடனே இந்தியப் பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ, ஐ.நா தலைவராகவோ ஆகிவிட முடியாது. ஆனால், குறைந்தது, தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பாவது உண்மையான தமிழர்கள் கைக்கு வந்தாக வேண்டும்!

தி.மு.க கசந்தால் அ.தி.மு.க; அது கசந்தால் மறுபடியும் தி.மு.க என இந்த இரண்டு கட்சிகளுக்கே மீண்டும் மீண்டும் மாறி மாறி வாக்களித்துக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களை இந்த நச்சுச் சுழலிலிருந்து மீட்டு இந்த இரு கட்சிகளும் அல்லாத, உண்மையான தமிழ்த் தலைவர் ஒருவரை ஆட்சியில் அமர்த்தினால்தான் தமிழர்கள் அதிகாரத்துக்கு வந்ததாகப் பொருளாகும். நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தல் அதற்கு நல்ல வாய்ப்பாகத் தென்படுகிறது!

தமிழர்களுக்காகவே உயிர் வாழ்வதாய்க் காலமெல்லாம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் தமிழ் இனத்துக்கே கருணாநிதி மூட்டிய துரோகத் தீ ஈழத்திலாகட்டும், தமிழ் மக்கள் மனத்திலாகட்டும் இன்னும் அணையவில்லை. அதற்குள், இதே நேரம், அ.தி.மு.க-வும் அழிக்க முடியாத ஊழல் கறையால் தலைகுனிந்து நிற்கிறது.

இந்த வழக்கில் தான் விடுதலையானால், உடனே ஆட்சியைக் கலைத்து, தேர்தலை எதிர்கொண்டு, தன் மீது அபாண்டப் பழி சுமத்தும் நோக்கத்திலேயே இப்படி ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டதாகப் பரப்புரை செய்வதன் மூலம் பரிதாப அலையை உண்டாக்கியே மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவார் ஜெயலலிதா என்று ஊடகங்கள் கணித்தன. ஆனால், இதுவரை இந்தியாவிலேயே வேறு எந்தத் தீர்ப்பும் ஏற்படுத்தாத அளவுக்குச் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு அப்படி எந்த ஓர் உதவியையும் அவருக்குச் செய்யுமெனத் தோன்றவில்லை! இவ்வளவு சர்ச்சை மிகுந்த ஒரு தீர்ப்பை வைத்துக் கொண்டு பரிதாப அலை எதையும் ஜெயலலிதாவால் உண்டாக்க முடியாது என்பதே உண்மை. போதாததற்கு, உண்மை முதல்வர் - மக்களின் முதல்வர் என்றெல்லாம் இவர்கள் விளையாடிய அரசியல் மேலாண்மைக் குளறுபடி ஆட்டங்கள் மொத்தத் தமிழ்நாட்டையும் தேக்கமுறச் செய்து மக்களிடம் பெருத்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.

இப்படி இரண்டு கட்சிகளும் மிகுந்த வலுவிழப்பை அடைந்துள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், இந்த நேரம் பார்த்து ‘திராவிடம் - தமிழ் தேசியம்’ என இருவேறு கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழ ஆதரவுத் தலைவர்கள் பிரிந்து நிற்பது மிக மிக மோசமான வரலாற்றுப் பிழை!

தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என திராவிடக் குடும்பத்தின் மற்ற இனத்தினர் யாரும் திராவிடக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நிலையில் தமிழர்கள் மட்டும் அதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏன் தமிழரல்லாத, பிற திராவிட இனங்களில் பிறந்தவர்களை இங்கு ஆள விட வேண்டும் என்கிற தமிழ்தேசியவியலாளர்களின் கேள்விகள் நியாயமானவையே! இதனால், அனைவருக்கும் பொதுவான திராவிடக் கோட்பாட்டைக் கைகழுவி விட்டு இனி தமிழர்கள் தங்களுக்கு மட்டுமே உரித்தான தனி அரசியல் கோட்பாடாகிய ‘தமிழ்தேசிய’க் கோட்பாட்டுக்கு மாற வேண்டும் என்பதும் சரியானதே! ஆனால், அதற்காக இந்த முக்கியமான அரசியல் காலக்கட்டத்தில் வரும் இந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு ஒப்புக் கொள்ள முடியாது!

பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஈழ ஆதரவுக் கட்சிகள் தொடர்ந்து பா.ஜ.க-வுடன் கூட்டணியில் நீடித்தோ அல்லது நடைபெறவிருக்கும் அரசியல் கள மாற்றங்களுக்கேற்பத் தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் புதிதாகக் கூட்டணி அமைத்தோதான் தேர்தலை எதிர்கொள்ளும். எனவே, அவர்களுக்கான வாக்குகளை ஈழ ஆதரவு வாக்குகளாக யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மிச்சமிருக்கும் ஈழ ஆதரவுக் கட்சிகளான ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வாக்குகள்தான் ஈழ ஆதரவாளர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியும்.

ஆனால், இந்த நேரம் பார்த்து, தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் அண்ணன் சீமான் அவர்கள். எனவே, ம.தி.மு.க-வும் இதே முடிவைத்தான் எடுத்தாக வேண்டும்; வேறு வழியில்லை. ஆக, கட்சி - சாதி - சமய - திரைக்கவர்ச்சி வாக்குகள் அனைத்தும் போக மிச்சமிருக்கும் கொஞ்ச ஈழ ஆதரவு வாக்குகளும் இந்தத் தேர்தலில் ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சி என இருவேறு கூறுகளாகச் சிதறடிக்கப்படப் போவதுதான் மிச்சம். இது திரும்பவும் தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வரத்தான் வழி வகுக்கும்.

அதற்கு இடமளிக்காமல், இந்த இருவருமல்லாத புதிய ஆட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கோடிக்கணக்கான தமிழ் மக்களை மகிழ்விக்கும் வகையில் ம.தி.மு.க - நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளும் ஒரே அணியாக இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்! ஈழ ஆதரவாளர்களின், இளைய தலைமுறையினரின் வாக்குகள் ஓரணியில் திரள வகை செய்ய வேண்டும்!

செய்ய வேண்டியது யார்?

இந்தக் காலத்தில் கடமைகளை நினைவூட்டுவது மட்டும் போதவில்லை; அதைச் சிரமேற்கொண்டு செய்ய வேண்டியது யார் என்பதையும் இனங்காட்ட வேண்டி இருக்கிறது. அவ்வகையில், மேற்கண்ட இரண்டு கடமைகளையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டவர்களாகத் தென்படுபவர்கள் தேர்தல் அரசியலைச் சாராத ஈழ ஆதரவு அமைப்பினர்தான்.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு என்பது ஓர் எல்லை வரைக்கும்தான். ஆனால், மக்கள் இயக்கங்களின் செல்வாக்கு அப்படியில்லை; அஃது எல்லை கடந்தது!

“இப்படியெல்லாம் செய்வதால் அவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதை வைத்து அவர்கள் ஒன்றும் தேர்தலில் நிற்கப் போவதில்லை. ஆட்சியைப் பிடிக்கவோ, அதிகாரத்தைக் கைப்பற்றவோ அவர்கள் இதைச் செய்யவில்லை. ஆகையால், அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்” எனப் பொதுமக்கள் கூறுவது தேர்தல் அரசியலைச் சாராத அமைப்புகளைப் பார்த்து மட்டும்தான்.

அண்மைக்காலமாக, மே 17, இளந்தமிழகம் (சேவ் தமிழ்சு), தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இத்தகைய ஒரு நம்பிக்கையைப் பொதுமக்களிடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் நினைத்தால் இவை முடியும்.

ஆகவே, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் உயர்திரு. திருமுருகன் காந்தி அவர்களே, இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்களே, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோ.திவ்யா அவர்களே - சீ.தினேஷ் அவர்களே நீங்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்க வேண்டுமென உங்கள் அனைவரிடமும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

காரணம், அரசியல் கட்சித் தலைவர்களோ, அவர்கள் நண்பர்களோ உலகிலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க முற்பட்டால் குறிப்பிட்ட அந்தக் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்காக அப்படிச் செய்வதாகத்தான் எல்லோரும் கருதுவார்கள். யாரும் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனால், எந்தக் கட்சிச் சார்பும் இல்லாத, தேர்தல் அரசியலிலும் ஈடுபடாத, பொதுமக்களிடமிருந்து வந்திருக்கிறவர்களான நீங்கள் செய்தால் யாரும் அப்படித் தவறாக நினைக்க மாட்டார்கள். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரையும், உலகிலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, பன்னாட்டுச் சமூகத்துக்கு நம் கோரிக்கையின் உறுதியைப் புலப்படுத்த முன்வாருங்கள்!

இரண்டு திராவிடக் கட்சிகளின் கைகளிலும் சிக்கிச் சீரழியும் தமிழினம் அதிலிருந்து தப்ப, உண்மையான தமிழர் ஆட்சி மலர உதவுங்கள்! கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விட மக்கள் நலனே முதன்மையானது என்பதைக் குறிப்பிட்ட தலைவர்கள் இருவருக்கும் புரிய வையுங்கள்! எல்லாக் கட்சிகளும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என ஏதேனும் ஒரு கூட்டணியிலிருந்தபடியே போட்டியிடும் நிலையில் இந்த இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்து ஒரு தனிக் கூட்டணியை அமைத்தால் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத புதிய ஆட்சியை விரும்பும் எத்தனை கோடி மக்களின் வாக்குகள் இவர்களுக்குக் கிடைக்கும் என்பதை மக்கள் தரப்பிலிருந்து நீங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்! அப்படி, ஈழ ஆதரவுக் கூட்டணி ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தால் பன்னாட்டளவில் அஃது ஈழப் பிரச்சினையில் எப்பேர்ப்பட்ட திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள்! இதைச் செய்யத் தவறினால் அதனால் ஈழ ஆதரவாளர் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு மீண்டும் தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆட்சி ஏற்படுவது அவர்களுக்கு ஒப்புதல்தானா எனக் கேளுங்கள்!

நீங்கள் நினைத்தால் இது முடியும்!
நீங்கள் நினைத்தால்தான் இது முடியும்!
நினைப்பீர்களா?
தமிழ்நாட்டு மக்களின் பல காலக் கனவு நிறைவேற உதவுவீர்களா?
துள்ளத் துடிக்கக் கொன்றொழிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் இறுதி விருப்பம் நிறைவேறுவதற்கான இந்தச் சிறு முயற்சியைக் கையிலெடுக்க முன்வருவீர்களா?
முன்வருவீர்கள் எனும் நம்பிக்கையுடன் இந்த ஆண்டு நினைவஞ்சலியை நானும் கடைப்பிடிக்கிறேன் உங்களுடன்! 

(நான் கீற்று இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்).

❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧. பதிவு

தமிழர் நலன் கருதி வெளியிடப்படும் இந்தக் கட்டுரையை கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்! தமிழர் கனவு நிறைவேற உதவுங்கள்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. ஐயா வணக்கம்.

    தமிழினப் படுகொலை நாள் பற்றிய தங்களின் உணர்வோடு ஒன்றுகிறேன்.
    வெறும் அஞ்சலியாய் மட்டும் இல்லாமல், இனி நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன ஒன்றிணைய வேண்டிய தேவை என்ன என்பதை எல்லாம் விளக்கி, தமிழர்களை மனதை உசுப்பும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருப்பது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்.

    கனவு மெய்ப்பட வேண்டும்.

    மெய்ப்படும்.


    நன்றி

    பதிலளிநீக்கு
  2. பொதுவாகவே ஈழக்கட்டுரைகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதே இல்லை. பேசிபேசியே எங்கள் இனத்தை அழித்துவிட்டீர்களே என்ற ஒரு ஈழப்பெண்ணின் துயர்தோய்ந்த பேட்டியை படித்தத்தில் இருந்து மிகுந்த மனவேதனையாக இருந்தது. இனியாவது விடியல் வரட்டும் சகா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசிப் பேசியே இனத்தையே அழித்து விட்டதாக அவர்கள் நம்மைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்; ஆயுதம் ஏந்தியதால்தான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று இங்கு சில உளறித் திரிகின்றன. இரண்டுமே உண்மையில்லை. "உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்" என்று பாதிக்கப்பட்டவர்கள் துயரம் தாளாமல் எழுப்பும் புலம்பல்தான் இவையெல்லாம். அவர்கள் பட்ட கொடுமை தாளாமல் நாம் அவர்களுக்காகக் குரல் கொடுத்தது தமிழர் எனும் முறையிலும், மனிதநேய வகையிலுமான நம் கடமை. அதே போல தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் தூக்கியது அவர்களின் உயிர் வாழும் உரிமை. இரண்டுமே சரியானவைதாம்! நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருந்தால் அதன் விளைவும் சரியாகத்தான் இருந்தாக வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. எனவே, விளைவின் அடிப்படையில் முந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் குறை சொல்வது சரியான பார்வை ஆகாது. ஆகவே, நீங்கள் தயங்காமல் ஈழம் பற்றிய கட்டுரைகளுக்குக் கருத்திடலாம் எச்சரிக்கையுடன்! என் தளத்திலான உங்களுடைய இந்தக் கருத்து அதில் முதலாவதாக இருக்கட்டும்! நன்றி சகா!

      நீக்கு
  3. அருமையான பதிவு நண்பரே! தங்களது உணர்வுகளில் ஒன்றிப் போனோம். தங்களின் கருத்துகளும் மிகவும் நியாயமானவையே. மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி உள்ளீர்கள் பாருங்கள் அது ஒவ்வொரு தமிழனையும் சென்றடைய வேண்டும். சிந்தித்துப் பார்க்க வைக்க வேண்டும். நம்புவோம்! நல்லதே நினைப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டிய அளவுக்கு இதில் சாரம் இருப்பதாகத் தாங்கள் கூறியுள்ள பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா, அம்மணி! காத்திருப்போம்! நல்லது நடக்கும் வரை!

      நீக்கு
  4. பதில்கள்
    1. இதில் நகைச்சுவை எங்கே இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. குழந்தைகளும், பெரியவர்களும், சிறுவர், சிறுமியருமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் துடிக்கத் துடிக்க, குருதி கொப்பளிக்க, கை கால் சிதறிப் பிணமாகக் கிடக்கும் காட்சியைப் பார்த்து, அது பற்றிய பதிவைப் பார்த்து சிரிக்க மிக மிக மிகக் குரூரமான மனப்பான்மை வேண்டும்! நீங்கள் ஒருவேளை அப்படிப்பட்டவரோ? எனில், தாராளமாகச் சிரித்துக் கொள்ளுங்கள்!

      நீக்கு
  5. #கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.#
    கடந்த ஆண்டு நீங்கள் வாக்களிக்காமல் காங்கிரசை வீழ்த்தி பாரதீய ஜனதாகட்சியை ஆட்சிபீடம் ஏற்றினீர்கள். இந்த ஆண்டு இராசபக்சவை நீங்கள் வீழ்த்தவில்லை. இலங்கை மக்கள் இராசபக்சவை வீழ்த்திவிட்டு யுத்தத்தின் போது இராசபக்சவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவை ஆட்சிபீடம் ஏற்றினார்கள்.
    #ஆக ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் #

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் உங்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பாவிட்டாலும் நீங்கள் தமிழினத்தைப் பிரித்துப் பேசுவதிலும், 'இலங்கை' மக்கள் எனக் குறிப்பிடுவதிலிருந்தும் நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதை ஊகிக்க முடிகிறது.

      இலங்கை மக்கள் வேறு, இங்கிருக்கும் தமிழர்கள் வேறு என்பது உங்கள் கருத்தாக இருந்தால் அஃது உங்கள் கருத்து அல்லது உங்களைப் போன்ற சிலரின் கருத்து மட்டும்தான். ஆனால், தமிழர்கள் என்கிற முறையில் பார்க்கும்பொழுது தமிழ்நாடு, இலங்கை மட்டுமல்லாமல் கனடா, ஆத்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா என உலெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றே! அந்தப் பார்வையில்தான் மேற்படி கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் 'இராசபக்சவை வீழ்த்திவிட்டுக் கடைப்பிடிக்கிறோம்' எனவும் எழுதப்பட்டுள்ளது.

      தமிழினத்தைப் பிரித்துப் பேசி உணர்வாளர்களுக்கு இடையில், தமிழர்களுக்கு இடையில் குழப்பம் ஏற்படுத்த உங்களைப் போல் எத்தனை பேர் இணைய உலகில் திரிகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கொஞ்சம் வாலைச் சுருட்டி வையுங்கள்! இல்லையேல் ஒட்ட நறுக்கப்படும்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்