.

செவ்வாய், டிசம்பர் 17, 2013

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்!

MDMK-BJP_alliance

பாரதிய ஜனதாவுடனான தலைவர் வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தமிழர் தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான். 

இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது? 

'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!

ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறு புறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள். பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?

பார்க்கப் போனால், இந்த நான்கு தரப்பினரில் பா.ஜ.க ஒரு வகையில் மேலெனவே சொல்லலாம். காரணம், மற்ற மூன்று தரப்பினருக்கும் இருப்பது போலத் தமிழர்களுக்கோ தமிழீழத்துக்கோ எதிரான தனிப்பட்ட விரோதம் எதுவும் பா.ஜ.க-வுக்கு இல்லை.

காங்கிரசின் தமிழ்ப் பகை நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடைசி நேரத்தில், தமிழர்களைக் காப்பாற்ற அமெரிக்கா களமிறங்க இருந்த தறுவாயில், "இஃது என் தனிப்பட்ட விவகாரம். யாரும் தலையிடக்கூடாது!" என்று சோனியா சொல்லித் தடுத்து நிறுத்தியதை நாம் என்றைக்கும் மறந்துவிட முடியாது!

போராட்டத்துக்குப் பெயர் 'போன' பொதுவுடைமைத் தோழர்களின் தமிழீழம் குறித்த நிலைப்பாட்டையும் மேலேயே பார்த்தோம். அது மட்டுமின்றி, மூன்றாவது அணி என்பது எப்பொழுதும் தோல்வி மகுடத்தைத்தான் அணியும் என்பதுதான் வரலாறு. இன்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்த முதல்வர், மேலாண் மேதை (Management Genius) என எப்படியெல்லாம் மோடியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்களோ, அதே போல் இதற்கு முன்பு ஊடகங்களாலும், சமூக - அரசியல் பார்வையாளர்களாலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடப்பட்டவர் சந்திரபாபு நாயுடு. ஆனால், இந்தியா முழுக்க நற்பெயர் வாங்கியிருந்த அவரையும், போதாதற்கு மேற்கொண்டு ஜெயலலிதா, லாலு பிரசாத் எனப் பல மாநில அரசியல் பெருந்தலைகளையும் இணைத்து அமைக்கப்பட்ட மூன்றாவது அணி, அன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் அப்பளமாய் நொறுங்கியது. இவையெல்லாம் நாம் மறக்கக்கூடாதவை!

அடுத்தவர் ஜெயலலிதா. அவரை நம்ப முடியுமா? படாத பாடெல்லாம் பட்டு, தமிழ்நாடு முழுக்கச் சுற்றியலைந்து, காலங் காலமாகத் தமிழினப் பகையாளியாகக் கருதப்பட்ட தனக்குத் தமிழினத் துரோகிக்கு எதிரான வாக்குகள் அனைத்தையும் மொத்தமாக மடைமாற்றி விட்ட வை.கோ அவர்களைக் கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்த ஜெயலலிதா, நாளை பிரதமராக்கி விட்டால் மட்டும் வை.கோ சொல்வதைக் கேட்டுத் தமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தந்துவிடுவாரா? முதலமைச்சராக இருக்கும்பொழுதே தமிழர்களை மதிக்காதவர், பிரதமராகிவிட்டால் நம்மை மதிப்பாரா? தமிழர்கள் அனைவரும் மொத்தமாக வாக்களித்தால் மட்டுமே பிரதமர் பதவியை நினைத்தாவது பார்க்க முடியும் எனும் நிலைமையில் இருக்கும்பொழுதே, அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்திலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கை வைக்கிறாரே, இவரா நாளை பிரதமரானால் தமிழர் தரப்பில் நிற்பார்? சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!

பா.ஜ.க-வினர் மட்டும், ஆட்சி அமைத்த அடுத்த நிமிடம் தமிழீழத்தை நமக்குப் பெற்றுத் தந்துவிட்டுத்தான் ராமர் கோயிலுக்கே போவார்கள் எனச் சொல்லவில்லை. ஆனால், மற்ற மூவரைப் போல் தமிழர்களுக்கோ, தமிழீழத்துக்கோ எதிரான தனிப்பட்ட பகை எதுவும் அவர்களுக்கு இல்லை எனும் நிலையில் அவர்களை விட்டால் நமக்கு வேறு தேர்வு இல்லை இங்கே என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்!

மேலும், அடுத்து பா.ஜ.க ஆட்சியமைக்கப் போகிறதோ இல்லையோ, ஆனால், அப்படி ஓர் எண்ணம் இப்பொழுது நாடெங்குமுள்ள மக்களிடையில் விதைக்கப்பட்டுவிட்டது. "இந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள்தாம் அடுத்த நாடாளுமன்றத்தை முடிவு செய்யப் போகின்றன" என்று கட்சிகளும் ஊடகங்களும் சொல்லிச் சொல்லியே மக்கள் உள்ளத்தில் அந்தக் கருத்தை ஆழப் பதித்து விட்டன. கண்டிப்பாக, இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்காது. நம் மக்களிடையே ஒரு (!) கெட்ட பழக்கம். தகுதியானவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட வெல்பவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அது. தான் வாக்களிக்கும் கட்சி வெற்றி பெறாவிட்டால், தன் வாக்கு வீணாகிவிட்டதாகவும், அது தனக்கு இழுக்கு எனவும் நினைப்பவர்கள் நம் மக்கள். எனவே, 'அடுத்தது பா.ஜ.க-தான்' என்கிற தோற்றத்தை இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதால், பெருவாரியான மக்கள் அந்தக் கட்சிக்குத்தான் வாக்குகளை வாரி வழங்குவார்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில். ஆக, ஏதோ ஒரு வகையில் அடுத்தது பா.ஜ.க-தான் என்று ஓரளவு உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களுடன் நாம் கூட்டணி வைத்தாக வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். காரணம், நடுவண் அமைச்சரவையில் தமிழுணர்வுள்ள கட்சிகள் இல்லாததும், ஏற்கெனவே அதில் பங்கு வகிக்கும் கட்சிகள் தமிழுணர்வுள்ள கட்சிகளாக இல்லாததும்தான் ஈழத் தமிழினப்படுகொலைக்கும் காரணம்; கடந்த நான்கரை ஆண்டுக்காலத் தமிழர் போராட்டம் எதற்குமே பதில் கிடைக்காததற்கும் காரணம். ஆகவே, இந்த முறையாவது, அடுத்து அமையும் நாடாளுமன்றம் தமிழர் சொல்வதைக் கேட்பதாக அமைய வேண்டியது கட்டாயம்.

அப்படி அமையாவிட்டால்... ம.தி.மு.க போன்ற உண்மையான தமிழர் கட்சி எதனோடும் கூட்டணி வைக்காமலே ஒருவேளை அடுத்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துவிட்டால்... அடுத்து நடக்கப்போவது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவின் அடுத்த ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு இலங்கை தன் தமிழர் அழிப்பைச் சாவகாசமாகத் தொடரும். இப்பொழுதே அதற்கான முன்னோட்டமாக, பா.ஜ.க தலைமைகளை நோக்கி இலங்கை தன் காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டதாக முகநூலில் தகவல்கள் பரபரக்கின்றன! இதைத்தான் விரும்புகிறோமா நாம்?

சரி, வை.கோ, சீமான், பழ.நெடுமாறன் என உண்மைத் தமிழுணர்வுக் கட்சிகள் மட்டும் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கலாமே என்றால், சந்திக்கலாம்; ஆனால், வெல்வோமா? அப்படி ஒரு சோதனை செய்து பார்க்கக்கூடிய நிலைமையிலா நாம் இப்பொழுது இருக்கிறோம்?

அங்கே இலங்கையில் நம் மக்கள் ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நரக வேதனை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே நம்பிக்கையான நமது உடனடிக் கடமை, சிங்கள இராணுவக் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் அவர்களை விடுவித்தல், அவர்களுக்குப் பாதுகாப்பும், உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதிகளுடனுமான வாழ்க்கை ஒன்றை அமைத்துத் தருதல். இவற்றை எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகச் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவுதான் நாம் அவர்களைக் காப்பாற்ற முடியும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அங்கு நம் மக்கள் சிலர் பலராகச் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை மென்மேலும் சீரழிவின் உச்சத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திராவிடக் கோட்பாடு, தமிழர் கொள்கை, மதச்சார்பின்மை போன்றவற்றுக்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இவற்றையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் கடைப்பிடித்து, தமிழருக்கு ஆதரவான ஒரு நல்லாட்சியை நாடாளுமன்றத்தில் அமைத்து, அதன் பின் தமிழீழம் பெற்றுத் தருவதற்குள் அங்கு தமிழர் ஒருவரும் மிச்சமிருக்க மாட்டார் அதைப் பெற்றுக்கொள்ள.

மோடியும் இனப்படுகொலையாளிதான். அந்தாளுடன் கூட்டணி வைப்பது தமிழர் கொள்கைக்கு மட்டுமின்றி, மனிதநேயக் கொள்கைக்கே எதிரானதுதான். இவற்றையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம் மக்களைக் காப்பாற்றுவது யார்? ஆயிற்று, தமிழினப் படுகொலை நடந்து முடிந்து நான்கரை ஆண்டுகளுக்கும் மேல். எந்த நாடு வந்து நம் மக்களைக் காப்பாற்றியது? ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை இணைந்து நம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைத்து, இன்று வரை அவர்கள் உயிர் வாழ அரும்பேருதவி ஆற்றி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால், நம் மக்களை மீட்கவோ, நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கவோ, தமிழீழம் பிறக்கவோ இந்த நான்கரை ஆண்டுக்காலத்தில் எந்தப் பெரிய முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. ஐ.நா-வோ அதில் உறுப்பினராயிருக்கும் நாடுகளுள் ஒன்றே ஒன்றோ மனம் வைத்திருந்தால் கூட ஒரே இரவில் தமிழீழத்தை மலரச் செய்திருக்க முடியும். ஆனால், இந்த இவ்...வளவு பெரிய கால இடைவெளியில் அவர்கள் யாரும் அதற்கு முன்வரவில்லை. இனிமேலும் அப்படி முன்வரக்கூடிய அறிகுறியும் ஏதும் தெரியவில்லை. அப்படியிருக்க, நம் மக்களைக் காப்பாற்ற நாம் எப்படியாவது நமக்குச் சாதகமான ஓர் ஆட்சியை இங்கு அமைத்தாக வேண்டியது இன்றியமையாதது இல்லையா? அட, சாதகமாக இல்லாவிட்டாலும், பாதகமாகவாவது இல்லாமல் இருக்க வேண்டாவா? கொள்கையில் உறுதி என்பது உயிரினும் மேலானதுதான். ஆனால், கோடிக்காணக்கான மக்களின் உயிர்க் காப்பு, இன, மான மீட்பு என வரும்பொழுது நடைமுறைச் சாத்தியங்களுக்கு நாம் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது இன்றியமையாதது இல்லையா?

இவையெல்லாம் வெறும் சமாளிப்புகள் என்கிறீர்களா? சூழ்நிலைக்கேற்றாற்போல் மாற்றி மாற்றிப் பேசும் அரசியல் கயவாளித்தனம் என்கிறீர்களா? சொல்லுங்கள்; ஆனால், அப்படிச் சொல்ல வாய் திறக்குமுன், உலகின் மிகக் கொடுமையான ஒரு சூழலில் வாழும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நினைத்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்!

வயிற்றிலிருக்கும் தமிழ்க் குழந்தையைக் கூட விட்டு வைக்காத கொடூரர்களுக்கிடையில், எந்நேரம் என்ன நடக்குமோ என ஒவ்வொரு நிமிடமும் உயிரையும் மானத்தையும் கையில் பிடித்துக்கொண்டு வாழும் நம் தாய்மார்களை நினைத்துப் பார்த்து...

வறுமையும் அதிகாரப் பேய்களின் கொடுமையும் கண்ணெதிரே தன் குடும்பத்தைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருக்கும் நம் அண்ணன் தம்பிகளை நினைத்துப் பார்த்து...

செத்தால் நரகத்துக்குப் போவது என்பதற்கு மாறாகப் பிறவியே நரகத்தில் வாய்த்திருப்பதை உணராத நம் பிஞ்சுக் குழந்தைகளின் களங்கமில்லாப் புன்னகையை நினைத்துப் பார்த்து...

அதன் பிறகு சொல்லுங்கள், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா இல்லையா என்று!

அனைத்து விதமான வசதிகளும், பாதுகாப்பும் நிரம்பிய உயர்மட்டச் சமூகமான சென்னை மாநகரத்தில் வாழும் நமக்கே, நம் பெண் பிள்ளை மாலையில் வீடு திரும்பச் சற்றுத் தாமதமாகிவிட்டால் கொஞ்சம் பதறுகிறதே, தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்துவதைப் பொழுதுபோக்காகவே செய்யக்கூடிய அந்தச் சிங்களச் சமூக அமைப்பில் நம் அக்கா தங்கைகளை ஒரு நாள், இரண்டு நாள் கூட அல்லாமல், நான்கரை ஆண்டுகளாக விட்டு வைத்திருக்கிறோமே, அந்தப் பெண் பிறப்புகளில் ஒருவரையாவது நம் உடன்பிறப்பாக ஒரு நிமிடமாவது நினைத்திருந்தால் நாம் இப்படிக் கூட்டணி குறித்து வக்கணையாக நியாயம் பேசிக் கொண்டிருப்போமா?

அப்படியானால், இங்குள்ள சிறுபான்மையினர் நலன் நமக்கு முக்கியமில்லையா எனக் கேட்டால் முக்கியம்தான்! நம்முடனேயே சாப்பிட்டு, இந்தக் காற்றையே மூச்சிழுத்து, நம்மிடையிலேயே வாழ்கிறவர்களை விட்டுவிட்டு எங்கோ இருப்பவர்களுக்காகக் கடைப்பிடித்தால் அது மனிதநேயம் ஆகாதுதான். ஆனால், இரண்டு தரப்பினருக்குப் பாதிப்பு என வரும்பொழுது அவர்களில் கூடுதலான பாதிப்பு யாருக்கு எனப் பார்த்து அவர்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுவதுதானே நியாயமாக இருக்க முடியும்?

அப்படிப் பார்த்தால், நாளை அமையக்கூடிய பா.ஜ.க ஆட்சியால் பாதிக்கப்பட இருக்கிற நம் சிறுபான்மையின உடன்பிறப்புக்களை விட ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களுக்கு உதவுவதுதானே நம் முதல் கடமை? நன்றாக இருப்பவர்களின் பாதுகாப்பை விடப் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மீட்புதானே முதன்மையானது?

இதை நம் சிறுபான்மையின உடன்பிறப்புகளும் ஏற்றுக்கொள்வார்கள் எனத்தான் நம்புகிறேன். ஏனெனில், பசித்திருப்பவனுக்கு உணவளிப்பதை விடத் தவித்திருப்பவனுக்குத் தண்ணீர் அளிப்பது எவ்வளவு முக்கியமானது என்பது அவர்கள் அறியாததில்லை! 

இந்தியர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதற்காக நேதாஜி அவர்கள் இனப்படுகொலையாளி ஹிட்லருடன் கைகோத்தது சரி எனில், கறுப்பின மக்கள் நலனுக்காகப் பெருந்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் வெள்ளை மாளிகையுடன் கைகுலுக்கியது தவறில்லையெனில், தலைவர் வை.கோ செய்வதும் சரியே!

படம் (௨): நன்றி gjkmedia.com.

(நான் கீற்று இதழில் எழுதிய கட்டுரை).

இந்தப் பதிவைப் பரப்பியும், இது பற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் போன்றோருடன் விவாதித்தும் அடுத்த இந்திய அரசாவது தமிழர் ஆதரவு அரசாக மலர, ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க உதவுவீர்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி நண்பரே! (புது கைப்பேசி வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்!)

      நீக்கு
  2. மோடி தலைமையில் அரசு அமைந்தாலும் தமிழர்கள் பற்றிய அதன் கொள்கைகளில் தாக்கம் செலுத்துபவர்கள் சுப்பிரமணியன் சாமி ,சோ .ராமசாமி ,ராம.கோபாலன் போன்றவர்களே!poன்.ராதாக்ருஷ்ணன் போன்றவர்களின்பேச்செல்லாம் தமிழ்நாட்டோடு சரி!இவ்விஷயத்தில் வை.கோ கவனமுடன் இருப்பது நல்லது !

    பதிலளிநீக்கு
  3. கருணாநிதி போன்றவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் வருமானம் பார்த்து விடுவார்கள்!கலாநிதி மாறனின் எதிர்கால தொழில் வளர்ச்சி கவனத்தில் கொண்டு அதற்கேற்ற துரையைப் பெறவேண்டும் என்பதில் கட்டுமரம் மும்முரமாக இருக்கும் !!

    பதிலளிநீக்கு
  4. ஜெயலலிதா அடக்குமுறையை ஏவினாலும் அது வெளிப்படையாக இருக்கும்!ஆனால் கருணாநிதி கை கொடுத்து கழுத்து அறுப்பார்!சோனியா வுக்காவது பழி தீர்க்க காரணம் என்ற ஒன்று இருந்தது!ஆனால் கருணாநிதி அதற்கு துணை போய் கல்லா கட்டியவர் !

    பதிலளிநீக்கு
  5. ஒன்றுமே வேண்டாம் அய்யா ஞானப்பிரகாசன்

    நாளை பாஜாக வே ஆட்சி அமைத்தாலும், அதில் ஏதோ தமிழர் மற்றும் ஈழத்தமிழர் உரிமைகளைப் பேசி நமக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வெற்றியை வாங்கித்தருவார் என்று பகல் கனவு கான்பதிலிருந்து சற்றே விழகி சிந்தித்து பாருங்கள் – பாஜாக தன்னுடைய ஆட்சியில் அய்யா வைகோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமா அல்லது சுப்ரமணிய சுவாமி போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமா? பதில் நான் சொல்லத் தேவையில்லை. சுப்ரமணிய சுவாமி போன்றவர்களின் ஈழத்தமிழர் நலன் குறித்து, தமிழர் அனைவரும் அறிந்ததே. உங்கள் முடிவை உங்கள் மனசாட்சியே வெறுத்திருக்கும் நிலையில் சமாதானம் செய்ய கிளம்பியிருக்கும் வெற்று வாதங்களை விடுத்து ஆகிற வேலையைப் பாருங்கள். ராஜபக்ஷே ஈழத்தமிழர் படுகொலையை இலங்கையில் நடத்தியது போல இந்தியா முழுதும் முஸ்லிம்களைக் கருவறுக்க மோடியுடன் அன்புள்ள ஐயா வைகோவும் ஒரு காரணமாக அமைய விதி இருந்தால் வரலாறு பதிவு செய்யும்

    இப்படிக்கு

    வைகோ அவர்களை தமிழின பாதுகாவலராக மட்டுமன்றி ஒட்டுமொத்த மனிதகுல அநீதிக்கு எதிரானவர் என்றென்னி ஏமாந்து போய் நிற்கும் ஒரு முஸ்லிம் மதிமுக அனுதாபி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனச்சாட்சிக்கு எதிராக வாதம் செய்ய நான் அரசியலாளன் இல்லை ஐயா! நானும் உங்களைப் போன்ற எளிய மனிதன்தான். நானும் வை.கோ அன்பன் நீங்களும் வை.கோ அன்பர். அவருடைய இந்த முடிவை வேறு வழி இல்லாததால் எடுக்கப்பட்ட, கசப்பான, அரச தந்திர முடிவாக நான் பார்க்கிறேன். நீங்கள் அப்படிப் பார்க்கவில்லை, அவ்வளவுதான். இதற்கு ஏன் என்னைத் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும்படியாகவெல்லாம் எழுதுகிறீர்கள் எனப் புரியவில்லை. உங்களை மட்டுமில்லை, அனைவரையும்தான் சொல்கிறேன்.

      சுப்பிரமணியன் சுவாமியை விட வை.கோ-வுக்குப் பா.ஜ.க-விடம் செல்வாக்கு இல்லைதான். ஒரு பிரச்சினை என வந்தால் இருவரில் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சைத்தான் மோடி முதலானோர் விரும்புவார்கள்; இல்லையெனச் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட ஒரு கூட்டம்தான் நாளை ஆட்சி அமைக்கப் போகிறது எனும் நிலையில் அங்கு நம் ஆளாக வை.கோ அவர்கள் இருந்தால் நமக்குத்தானே அது நல்லது? அதை ஏன் யாரும் புரிந்துகொள்ள மாட்டேன்கிறீர்கள்? அவருக்கு நாம் நிறைய வாக்குகள் அளித்து அவர் ஆதரவு இல்லாமல் நடுவணரசில் பா.ஜ.க ஆட்சியமைக்க முடியாது எனும் அளவுக்கு நாம் அவரை இங்கே வலிமைப்படுத்தினால் அதன் பிறகு சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு பா.ஜ.க வட்டாரத்தில் எடுபடுமா? வை.கோ பேச்சைத்தானே கேட்டாக வேண்டும்? அது நமக்குத்தானே நல்லது? வரவிருக்கும் ஆட்சி மீண்டும் சிறுபான்மையருக்கு எதிராகத் திரும்பாமல் அது தடுக்கும் இல்லையா? இந்தக் கேள்விக்கு ஏன் யாரும் பதில் சொல்ல மாட்டேன்கிறீர்கள்? என் வாதங்கள் வெற்று வாதங்கள் என்பது உண்மையானால், வெறும் சப்பைக்கட்டுகள் என்பது மெய்யானால் அதை உடைக்கும் விதமாகப் பதிலளியுங்களேன்! அதை ஏன் செய்ய மாட்டேன்கிறீர்கள்?

      சுருக்கமாக நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அடுத்து, பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது ஓரளவு உறுதியாகிவிட்டது. அப்படி அமையப் போகும் ஆட்சி, முழுக்க முழுக்க பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் எனும் மதவெறிக் கும்பல்களின் தனிப்பெரும்பான்மை வலிமை கொண்ட ஆட்சியாக இருப்பது நல்லதா, அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தும்படி வை.கோ முதலான இன்ன பிற சிறுபான்மையர் நல விரும்பிகளின் கூட்டாட்சியாக இருப்பது நல்லதா? உண்மையான சிறுபான்மையர் நல விரும்பிகள் சிந்தியுங்கள்!

      நீக்கு
  6. India virkum muslim kalukum ena sambandam irukiradhu........muslimkal nam nattai kollai adikave vandanar koodave nam nattu penkalaium soorai adinar,.....idhil niraya per kattayathin peril payathinal madham mariyarvarkal.....epadi hindu madhathai alladhu adhai pinpatravakalai patriyo kevalamaga pesa mudigiradu...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஏதோ ஒரு கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இசுலாமியர்கள் இந்தியாவைக் கொள்ளையடிக்க வந்தார்கள் என்பது ஒரு பகுதி உண்மை மட்டும்தான். அதுவே முழு உண்மை இல்லை. ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் போல அவர்களும் இந்த நாட்டைக் கொள்ளையடித்தார்கள், அவ்வளவுதான். அவர்கள் மட்டுமே கொள்ளையடிக்கவும் இல்லை; கொள்ளையடிக்க மட்டுமே இங்கு அவர்கள் வரவும் இல்லை. அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் எத்தனையோ காலமாகப் போக்குவரத்துகளும் வணிக அளவிலான கொடுக்கல் வாங்கல்களும் இருந்து வந்துள்ளன. 'அரேபியக் குதிரை' எனும் சொல்லாடல் எப்படி வந்தது, எத்தனை ஆண்டுக் காலமாக அது வழக்கில் உள்ளது என்கிற ஒரு சிறு ஆராய்ச்சியை நீங்கள் செய்து பார்த்தாலே இந்த உண்மையை உணரலாம்.

      போகட்டும், அப்படியே இசுலாமியர்கள் கொள்ளையடிக்க மட்டுமே இங்கு வந்தவர்கள் என வைத்துக் கொண்டாலும் அவர்களில் எத்தனை பேர் இன்றும் உயிரோடு இருக்கிறார்கள் என உங்களால் சொல்ல முடியுமா? என்றைக்கோ இங்கு வந்து குற்றங்கள் புரிந்து விட்டுச் செத்துப் போனவர்களுக்காக, அதற்கு அணுவளவும் தொடர்பில்லாத இன்றைய தலைமுறையினரைப் பழி வாங்க வேண்டும் என்கிறீர்களா? இதைத்தான் இந்து சமயமும் அதன் பெரியவர்களும் கூறிச் சென்றிருக்கிறார்களா?

      கேட்டால், கட்டாயத்தின் பேரில் சமய மாற்றம் செய்யப்பட்டவர்கள் என்பீர்கள். அதுவும் அந்தத் தலைமுறைதான். இந்தத் தலைமுறையில் எத்தனை பேர் அப்படிக் கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாமல் இசுலாமியராக இருக்கிறார்கள்? விடுதலையுள்ள ஒரு நாட்டில் அப்படி விருப்பத்துக்கு மாறாக ஒருவர் ஒரு சமயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என என்ன தேவை? பிடிக்காவிட்டால் அவர்களே சமயம் மாறி விட மாட்டார்களா? நீங்கள் ஏன் அது பற்றிக் கவலைப்படுகிறீர்கள்?

      கட்டாயத்தின் பேரில் சமயம் மாற்றப்பட்டார்கள் என்கிறீர்களே, மீனாட்சிபுரச் சமய மாற்றம் எப்படி நடந்தது? யார் கட்டாயப்படுத்தி நடந்தது? இந்து சமயத்தைத் தாக்குவதற்காகக் கவலைப்படுகிறீர்களே, இந்து சமயம் மக்களை ஒழுங்காக மதித்து நடத்தினால் மக்கள் ஏன் சமயம் மாற வேண்டும்?

      கடைசியாக, எப்படி இந்து சமயத்தையோ அதைப் பின்பற்றியவர்களையோ தவறாகப் பேச முடிகிறது என்று கேட்டுள்ளீர்கள். யாரும், யாரையும் இங்கு தவறாகப் பேசவில்லை. இருப்பதைத்தான் சொல்கிறோம். தவறு என்றால் நீங்கள் சான்றுடன் சுட்டிக் காட்டுங்கள்! திருத்திக் கொள்வதில் தயக்கமில்லை.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்